Wednesday, March 25, 2015

உன்பெயர் ஆபிராம் அன்று!

இனி உன்பெயர் ஆபிராம் அன்று.
'ஆபிரகாம்' என்ற பெயரால் நீ அழைக்கப்படுவாய்.
ஏனெனில் எண்ணற்ற நாடுகளுக்கு உன்னை நான் மூதாதையராக்கிறேன்.
(தொடக்கநூல் 17:5)

தமிழ் மொழியின் அழகுக்கு இந்த வாக்கியம் ஒரு எடுத்துக்காட்டு:

'உன்பெயர் ஆபிராம் அன்று'

இந்த வாக்கியத்தை 'உன் பெயர் ஆபிரகாம் இல்லை' என்றும் புரிந்து கொள்ளலாம்.

'உன் பெயர் அன்று ஆபிராம், ஆனால் இன்று அல்ல' என்றும் புரிந்து கொள்ளலாம்.

'பெயர் மாற்றம்' என்பது விவிலியத்தில் பரவலாகக் காணப்படும் ஒரு இலக்கிய உத்தி. அதாவது. கடவுளைச் சந்தித்தபின் ஒருவரில் ஏற்படும் மாற்றத்தைக் குறிப்பதற்கான வெளி அடையாளமாக இந்த உத்தி பயன்படுத்தப்படுகிறது. கடவுளால் மட்டுமன்றி மற்றவர்களாலும் பெயர்கள் மாற்றப்பட்டிருக்கின்றன என்பதையும் பதிவு செய்துவிடுவோம்.

எத்தனை பேர் இப்படி பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்கள் என்று ஆய்வு செய்தபோது 15 பேருக்கு பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது:

ஆபிராம் - ஆபிரகாம், அசாரியா - அபத்நேகோ, தானியேல் - பெல்தசார், எலியாக்கிம் - எகோயாக்கிம், கிதியோன் - யெருபால், அனனியா - சத்ராக்கு, ஒசேயா - யோசுவா, யாக்கோபு - இஸ்ரயேல், யோசேப்பு - சபனெத்பெனேயா, லோஅம்மி - அம்மி, லோருகாமா - ருகாமா, மத்தனியா - செதேக்கியா, மிசாயேல் - மேசாக்கு, சாராய் - சாரா, சீமோன் - பேதுரு.

'ஆபிராம்' - 'ஆபிரகாம்' என மாறும் படலமே நாளைய முதல் வாசகம்.

'ஆபிராம்' என்றால் 'மேன்மையான' அல்லது 'மேன்மைப்படுத்தப்பட்ட தந்தை' என்பது பொருள். ஆனால், இவர் இந்தப் பெயருக்குப் பொருத்தமானவராக இல்லை. இவருக்கென்று குழந்தை இல்லாததால் 'தந்தை பாக்கியம்' இல்லாதவராகவே இவர் இருக்கின்றார். கண் தெரியாத ஒருவரை 'கண்ணாயிரம்' என்று அழைப்பது எப்படி பொருத்தமில்லாததாக இருக்குமோ, அப்படித்தான் இருக்கிறது 'ஆபிராம்' என்னும் பெயர்.

'ஆபிரகாம்' என்றால் 'பலரின் தந்தை' என்பது பொருள். அதாவது, வெறும் உடல்ரீதியான தந்தையாக இல்லாமல், உணர்வு ரீதியாக அல்லது உறவு ரீதியாக பலருக்கும் இவர் தந்தையாக இருப்பார் என்பதே இந்த வார்த்தையின் உட்பொருள். இந்தப் பெயர் இவருக்குப் பொருந்தும் என கடவுள் பிள்ளைப்பேற்றை இவருக்கு வாக்களிக்கவும் செய்கிறார்.

நம் பெற்றோர் நமக்கு இட்ட பெயர் ஒருபக்கம் இருந்தாலும், நம் உள்மனம் நமக்கென்று ஒரு பெயரை வைக்கும். அதுதான் கடவுள் நமக்கு வைக்கும் பெயர். அந்தப் பெயர் ஒரு காரணப்பெயர். அந்தப் பெயரைக் கண்டுபிடிப்பதும், அதன்படி வாழ்வதும் நம் முயற்சியாக இருக்கலாமே!


2 comments:

  1. 'விசுவாசத்தின் தந்தை'....அவர் 'அபிராம்' என்றாலும் சரி, 'அபிரகாம்' என்றாலும் சரி..அவரை நினைத்தாலே நமக்கு வருவது ஒரு 'தந்தை- பிள்ளைகளுக்குரிய பாசம்தான்.இவர் பெயர் சொல்லும் முன்பே நம் கண்முன் தெரிவது 'கடற்கரை மணலும்,வானத்து விண்மீன்களும்'தான்.நம் பெற்றோர் நமக்கிட்ட பெயர் நம் குணாதிசயத்திற்குப் பொருந்தலாம்; பொருந்தாமலும் போகலாம்.பிடித்திருக்கலாம்; பிடிக்காமலும் போகலாம். தந்தையின் சொற்களில் ஒரு 'நல்ல' பெயர் தேர்ந்தெடுத்து அந்தப் பெயருக்குப் பெருமை சேர்க்கும் வகையில் வாழ்க்கையை அமைக்கலாமே!.... ஆனால் எத்துணை பேரால் இத்தகைய பெயர் மாற்றத்தை ஒத்துக்கொள்ள முடியும்? யோசிக்க வேண்டிய விஷயமே!

    ReplyDelete
  2. மிக சிறந்த முரையிலான தெலிவுப்படுத்தல்

    ReplyDelete