Tuesday, March 24, 2015

ஓர் உடலை எனக்கு தந்தீர்!

'பலியையும் காணிக்கையையும் நீர் விரும்பவில்லை.
ஆனால் ஓர் உடலை எனக்கு அமைத்துத் தந்தீர்.'

... ... ...

'என் கடவுளே, உமது திருவுளத்தை நிறைவேற்ற, இதோ வருகின்றேன்!'

(எபிரேயர் 10:5,9)

நாசரேத்தூர் மரியாளுக்கு கபிரியேல் வானதூதர் வாழ்த்து சொன்ன 'மங்கள வார்த்தை திருநாளை' நாம் கொண்டாடுகின்றோம்.

'வார்த்தை மனுவுருவானார். நம்மிடையே குடிகொண்டார்' (யோவான் 1:14) என்னும் நற்செய்தி வாக்கு நிறைவேறிய நாள் இது.

கண்ணுக்குப் புலப்படாத கடவுள், கண்ணுக்குப் புலப்படும் உருவம் பெறுகின்றார். மனிதர்களின் வாழ்க்கையில் இது எந்த அளவுக்கு முக்கியமோ. அந்த அளவுக்கு கடவுளின் வாழ்க்கையிலும் இது முக்கியம். ஏனெனில், இந்த நிகழ்வின் வழியாக கடவுள் தன்னையே குறுக்கிக் கொள்ள வேண்டும். கடவுளின் 'எல்லாம் வல்ல தன்மை' குறையத் தொடங்கும்.

கடவுள் மனிதனாகப் பிறந்தார் என்று நாம் ஒட்டுமொத்தமாகச் சொன்னாலும், கொஞ்சம் பிரித்துப் பார்த்தால் கடவுள் ஒரு 'ஆணாக', ஒரு 'யூதனாக', ஒரு 'தச்சனின் குடும்பத்தில்', மத்திய கிழக்கு ஆசியாவில் உள்ள ஒரு சிறிய 'கிராமத்தில்', 'அரமேய' மொழி பேசுபவராக, 'விருத்தசேதனம்' செய்யப்பட்டவராக பிறக்கின்றார். இந்த அடையாளங்களெல்லாம் கடவுளின் தன்மையை குறைக்கத் தானே செய்கின்றன!

கடவுள் ஏன் ஆணாக மட்டுமே இருக்க வேண்டும்?

அவர் வெள்ளை நிறத்தில், யூதனாகப் பிறந்திருப்பதற்குப் பதில், கொஞ்சம் 'கலரா' நம்ம ஊருல பிறந்திருந்தா என்ன நடக்கும்?

கடவுள்-மனிதன் 'அரமேய' மொழி பேசியதால் மற்ற மொழிகளுக்கெல்லாம் மதிப்பில்லையா?

கடவுள் மனிதனாக மாறிய நிகழ்வு எந்த அளவிற்கு மீட்பு கொண்டு வந்தது என நினைக்கிறோமோ, அதை விட பன்மடங்கு வரலாற்றில் ரத்தமும், கண்ணீரும் ஓடக் காரணமாக இருந்திருக்கின்றது. இந்த ஒரு கடவுள்-மனிதனுக்காக எத்தனை உயிர்கள் அழிக்கப்பட்டன! எவ்வளவு வன்முறைகள் கையாளப்பட்டன! எவ்வளவு கலாச்சாரங்கள் 'பேய்கள்' என்று சொல்லப்பட்டு கருவறுக்கப்பட்டன!

'கடவுள் இல்லாமல் நாம் வாழமுடியும்!' என்ற ஒரு நிலைக்கு மனித இனம் இன்று உயர்ந்து நிற்கின்றது. இது பெருமையான விஷயம். நமக்கு மட்டுமல்ல. கடவுளுக்கும்தான் பெருமை.

கடவுளின் பிரசன்னம் மங்களம் கொண்டுவந்ததாக நம்புகிறோம்.

இந்த மங்களம் அந்தக் கடவுளைப் பின்பற்றும் ஒவ்வொருவரின் வார்த்தையிலும், வாழ்க்கையிலும் இருந்தால்தான்...

'வார்த்தை மனுவுருவானார். நம்மிடையே குடிகொண்டார்!'



1 comment:

  1. இறைமகன் தன் மக்கள் மீது இருந்த பாசத்தை நிரூபிக்க அவர் தன்னை ஒரு சாமான்யனாக குறுக்கிக் கொண்டார் என்பது பெரிய விஷயம் தான்.ஆனால் அதற்கும் மேலாக இன்றையப் பதிவு எனக்குச் சொல்வது 'கபிரியேல்' என்னும் வானதூதர் மரியாவுக்கு உரைத்த மகிழ்ச்சி மிக்க 'மங்கள' வார்த்தையும், அவர் மரியாவுக்கு ஏற்பட்ட மனக்கலக்கத்தைப் போக்கிய விதமும்தான்.நம்மருகில் உள்ளவர்களின் முகத்தில் புன்னகையை வரவழைப்பதென்பது பெரிய விஷயம். நாம் ஏன் அப்படிப்பட்ட ஒரு பெரிய விஷயத்தை செய்யும் 'கபிரியேல்' களாக மாறக்கூடாது? முயற்சிப்போம்; நம்மருகில் இருப்பவர்களை 'அன்னை மரியாள்களாகப்' பார்ப்போம்.....அவர்களின் வாழ்க்கையில் மங்களம் சேர்ப்போம்.....

    ReplyDelete