Friday, March 13, 2015

விடியும் வரை பெண்ணழகு!

'எப்ராயிமே! உன்னை நான் என்ன செய்வேன்?
யூதாவே! உன்னை நான் என்ன செய்வேன்?
உங்கள் அன்பு காலைநேர மேகம் போலவும்
கதிரவனைக் கண்ட பனிபோலவும் மறைந்துபோகிறதே!'
(ஓசேயா 6:4)

மற்ற இறைவாக்கினர்களை விட ஓசேயா இரண்டு விதங்களில் வேறுபட்டவர். எப்படி?

1. யாவே இறைவனை கணவனாகவும், இஸ்ரயேலை மனைவியாகவும் சித்தரிப்பது இவர் மட்டுமே. இறைவனுக்கும், மனிதருக்குமான உறவு கணவன்-மனைவி உறவு போலவும் இருக்கலாம் என்ற புதிய சிந்தனைக்கு வழிவகுப்பவர் இவர். ஆiகாயல், இவரை 'அன்பின் அல்லது காதலின் இறைவாக்கினர்' என்றும் அழைப்பர்.

2. ஆலய ஆன்மீகத்தை உடைத்தெறிந்து, இறைவாக்கு ஆன்மீகத்திற்கு வித்திட்டவர். ஆன்மீகம் என்பது ஆலயத்திலோ, ஆலயத்தின் திருப்பண்ட அறையிலோ முடங்கிக் கிடப்பது அன்று. மாறாக, வீதிகளில் மக்கள் படும் அவலங்களைக் கண்டு அதற்கு தீர்வு காண்பது. இந்த இறைவாக்கினர் ஓசேயாதான் 'பலியை அன்று, இரக்கத்தையே விரும்புகிறேன்!' என்று இயேசு அடிக்கடிப் பயன்படுத்தும் இறைவாக்கைச் சொன்னவர்.

நாளைய முதல் வாசகம் மூன்று இயற்கை உருவகங்களைக் கொண்டுள்ளது.

இந்த நாட்களில் இத்தாலியில் காலநிலை மாற்றம் நடந்து கொண்டிருக்கிறது. நடுக்கும் குளிர் மறைந்து, மரங்கள் தங்களையே புதிய இலைகளாலும், பூக்களாலும் அலங்கரிக்கத் தொடங்கியிருக்கின்றன. புதிய இலைகள், புதிய மலர்கள் என வசந்தகாலத்தின் வாசல் மிக அழகாக இருக்கின்றது.

ஓசேயா சொல்லும் மூன்று உருவகங்கள் எவை?

1. 'அவருடைய புறப்பாடு புலரும் பொழுது போல திண்ணமானது!'
'As certain as the rising of the Sun' - ஆங்கிலத்தில் உள்ள சொலவடை நாம் அறிந்ததே. ஷேக்ஸ்பியர் இதை அழகாகத் தன் கவிதையில் பயன்படுத்துகின்றார்:

'உனக்கு நீயே உண்மையாக இரு!
இரவும் பகலும் போல அது தொடரட்டும்!'

அதாவது, அந்தக்கால மக்கள் காலநிலைகளை சூரியனின் இருப்பிடத்தை வைத்தே கணித்தார்கள். எங்க அய்யாமை லட்சுமியம்மாள் கூட கடைசிவரை அப்படித் தான் மணி பார்த்தார். அந்தக்கால மக்களுக்கு உறுதியாகத் தெரிந்தது சூரியனின் உதயம் மட்டும்தான். ஆக, கடவுளின் வருகை திண்ணம். இந்த உருவகத்தை மற்றொரு நிலையிலும் பார்க்கலாம். அதாவது, இருளை அழிக்க வரும் கதிரவன் திண்ணமாய் வருவதுபோல, உலகின் இருளை அகற்ற இறைவன் என்னும் சூரியன் வருவார்.

2. 'முன்பனிக்கால (இலையுதிர்கால) மழைபோலவும்,
நிலத்தை நனைக்கும் இளவேனிற்கால மாரிபோலவும்,
அவர் நம்மிடம் வருவார்'

இந்த இரண்டாம் உருவகத்தில் இறைவனின் வருகை ஏற்படுத்தும் மாற்றத்தைச் சொல்கின்றார் ஓசேயா. இலையுதிர்காலம் அல்லது முன்பனிக்காலத்தின் மழைதான் மரங்களின் பெரும்பாலான இலைகளை உதிர்க்கின்றது. அதே மழைதான் இளவேனிற்காலம் அல்லது வசந்தகாலத்தில் மரங்களைத் துளிர்க்க வைக்கிறது. ஆக, அழிப்பவரும் அவரே. ஆக்குபவரும் அவரே. காயப்படுத்துபவரும் அவரே. கட்டுப்போடுபவரும் அவரே.

3. காலைநேர மேகம் போல, கதிரவனைக் கண்ட பனிபோல
காலைநேர மேகமும், கதிரவனைக் கண்ட பனியும் எளிதில் மறையக் கூடியவை. இஸ்ரயேல் கடவுளிடம் காட்டும் அன்பும், பிரமாணிக்கமும் எளிதில் மறைந்து விடுவதாக இருக்கின்றது. இதுவும் ஒரு கணவன்-மனைவி உருவகம் தான். 'விடிகாலை விண்ணழகு! விடியும் வரை பெண்ணழகு!' என்ற தமிழ்த்திரைப்படப் பாடல் நினைவிருக்கிறதா. விடிய விடிய ரசிக்கும் மனைவி விடிந்தவுடன் கோபத்திற்கும், எரிச்சலுக்கும் காரணமானவராக மாறிவிடுகிறார். இஸ்ரயேலின் பிரமாணிக்கம் அப்படித்தான் இருந்தது. தனக்குத் தேவை இருந்தபோது மட்டும் கடவுளைப் பயன்படுத்திக்கொண்டு, தேவை முடிந்தவுடன், வேறு தெய்வங்களைத் தேடிப் போய்விடுகின்றனர் இஸ்ரயேலர் மக்கள். இன்றைக்குக் கடவுள் நம் 'பார்ட்டைம்' பார்ட்னராக மட்டுமே இருக்கின்றார் என்றால் இந்த உருவகம் நமக்கும் பொருந்தும்!

2 comments:

  1. Anonymous3/13/2015

    Yesu nice reflection. It's useful for the sermon

    ReplyDelete
  2. இன்றையப் பதிவு...அத்தனை அழகு.ஒரு கவித்துவத்தோடு இருப்பதை உணர்ந்தேன்.'அன்பின்' அற்பாயுசை விவரிக்கும் இடங்கள் மனதை நெகிழவைக்கின்றன.முன்பனி காலத்தில் இலைகளை உதிர்க்கச் செய்யும் அதே மழைதான் இளவேனிற்காலத்தில் மரங்களைத் துளிர்க்கச்செய்கிறது என்ற இயற்கையின் நியதியை " அழிப்பவரும் அவரே;ஆக்குபவரும் அவரே. காயப்படுத்துபவரும் அவரே; கட்டுப்போடுபவரும் அவரே" என்ற சத்திய வார்த்தைகளோடு ஒப்பிட்டிருப்பது மனதைத் தாலாட்டுகிறது. மனத்தை வருடும் பதிவு....

    ReplyDelete