Wednesday, March 11, 2015

கடின இதயம்!

சகாய மாதா நவநாட்களிலோ, அல்லது செபஸ்தியார் நவநாட்களிலோ நீங்கள் பங்கேற்றிருக்கிறீர்களா?

இந்த நவநாள் செபங்களில் தொடக்கமாக இருப்பது திருப்பாடல் 95. பழைய மொழிபெயர்ப்பில் இதன் எண் 94.

இதுதான் நாளை நாம் வாசிக்கவிருக்கும் திருப்பாடல்.

'வாருங்கள்! ஆண்டவரைப் புகழ்ந்து பாடுங்கள்!
அவரே நம் கடவுள்! நாமோ அவரது மேய்ச்சலின் மக்கள்.
நாம் அவர் பேணிக்காக்கும் ஆடுகள்.'

வாருங்கள்...புகழ்வோம் என்று வெற்றி ஆர்ப்பரிப்போடு தொடங்கும் பாடல், உங்கள் இதயங்களை நீங்கள் கடினப்படுத்திக் கொண்டதால் 'நான் அளிக்கும் இளைப்பாற்றியை அடைய மாட்டீர்கள்!' என்று சோகத்தோடு முடிவடையும்.

இந்தப் பாடலும், நாளைய எரேமியா நூல் முதல் வாசகமும் சொல்வது இதுதான்: ஆண்டவர் தன் மக்களை தன் சொந்தம் என உரிமை கொண்டாடினாலும், அவர்கள் அவரின் பேச்சைக் கேட்டு நடந்து கொள்ள மறுத்துவிடுகின்றனர்.

நம்ம கடவுள் தான! நம்மள என்ன செஞ்சிடப் போறார்? - என்ற மனநிலையா?

அல்லது

கடவுள் நெருங்கி வந்துவிட்டதால் மிகச் சாதாரணமாகிப் போனாரா?

'உங்கள் இதயங்களைக் கடினப்படுத்திக்கொள்ளாதீர்கள்!' என்கிறார் ஆண்டவர்.

'கடின இதயம்!' - விவிலியத்தில் அடிக்கடி பயன்படுத்தப்படும் ஒரு சொல்லாடல் இது. இதை 'இறுகிய சிந்தனை!' என்றும் மொழிபெயர்க்கலாம். ஏனெனில் இதயம்தான் சிந்தனைகளைக் கொண்டுள்ளது என்பது பழைய ஏற்பாட்டுப் புரிதல்.

நம் சிந்தனை இறுகிவிடும்போது நம்மால் கடவுளையும் முழுமையாகப் பார்க்க முடிவதில்லை. மற்றவர்களையும் முழுமையாகப் பார்க்க முடிவதில்லை.


1 comment:

  1. பல சமயங்களில் தூரத்திலிருக்கும் ஒரு பொருளோ, நபரோ( நமக்கு நெருக்கமானவராயிருப்பினும்கூட) நமக்குத் தரும் ஒரு fascination பக்கத்தில் வரும்போது மறைந்து விடுகிறது.இதைத்தான் "familiarity brings contempt"... என்று கூறுகிறார்கள்.ஆனால் இது நம் இறைவனுக்கும் பொருந்துமா என்ன? அவர் நம்மருகில் வர,வர நாம் பனியாகவும்,மெழுகாகவும் உருகியல்லவா போகவேண்டும்? நம் இதயக்கதவுகளை அகலமாகத் திறந்து வைப்போம்; அங்கே நம் பூதக்கண்களால் காண இயலாத இறைவனை மட்டுமின்றி, நம் வாழ்க்கைக்கு பொருள் தரும் அத்தனை பேரையும் கொலு வைப்போம்.எந்த விதக்கடினமும் காணாமல் போய்விடும்.....நல்ல சிந்தனை!!!

    ReplyDelete