Friday, November 7, 2014

தப்பினால் தப்பில்லை!

முதலாவதாக வந்தவரிடம், 'நீர் என் தலைவரிடம் எவ்வளவு கடன்பட்டிருக்கிறீர்?' என்று கேட்டார். அதற்கு அவர், 'நூறு குடம் எண்ணெய்' என்றார். வீட்டுப் பொறுப்பாளர் அவரிடம், 'இதோ உம் கடன் சீட்டு. உட்கார்ந்து ஐம்பது என்று உடனே எழுதும்!' என்றார். பின்பு அடுத்தவரிடம், 'நீர் எவ்வளவு கடன்பட்டிருக்கிறீர்?' என்று கேட்டார். அதற்கு அவர், 'நூறு மூடை கோதுமை' என்றார். அவர், 'இதோ உம் கடன் சீட்டு. உட்கார்ந்து எண்பது என்று எழுதும்!' என்றார். (காண் லூக்கா 16:1-8)

மறையுரை வைக்கக் கடினமாக இருக்கும் ஒருசில விவிலியப் பகுதிகளில் மேற்காணும் நற்செய்தியும் ஒன்று.

'சொகுசு வாழ்க்கை வாழ வேண்டும் என்ற எண்ணம் திருட்டுக்கு வழிவகுக்கின்றது' என்று பேசிய ஒரு உளவியல் அறிஞரின் செய்தியை தினத்தந்தி டிவியில் இன்று பார்த்தேன். அதில் 'தப்பினால் தப்பில்லை' என்னும் சுஜாதாவின் வரியைக் குறிப்பிட்டார் அவர். அதாவது நாம் தவறு செய்வதை யாரும் பார்க்கவில்லை என்று நாம் தப்பினால் அது தவறு இல்லை என்று நாம் நினைக்கத் தொடங்கிவிட்டோம்.

வண்டியில் செல்கிறோம். சாலையைக் கடக்க வேண்டும். ரெட் சிக்னல் இருக்கின்றது. ஆனால் வேறு வாகனமும் இல்லை. டிராஃபிக் கான்ஸ்டபிளும் இல்லை. சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு ரெட் சிக்னலை மதிக்காமல் செல்கின்றோம். யாரும் பார்க்கவில்லையென்றாலோ, நம் தவறுக்கு 'ஃபைன்' போடவில்லை என்றாலோ நாம் செய்வது சரி என்று நம் மனதிற்குச் சொல்லிக் கொடுக்கத் தொடங்குகிறோம். காலப்போக்கில் இந்த மனது என்ன செய்யும்? நாம் இப்படி சொல்லிக் கொடுப்பதை எல்லா இடத்திலும் 'அப்ளை' செய்ய ஆரம்பிக்கும்! 'ஆசிரியர் பார்க்காத நேரம் பார்த்து எழுது!' 'யாரும் பார்க்காத நேரம் கணக்கை மாற்றி எழுது!' 'அவர் அசந்த நேரம் அவரின் பையை எடு!' - இப்படியாக ஒரு பழக்கத்தை நாம் விட மறுத்தாலும் பின்னாளில் அந்தப் பழக்கம் நம்மை விட மறுக்கின்றது.

மேற்காணும் நற்செய்திப் பகுதியில் வீட்டுப் பொறுப்பாளர் செய்தது சரியா? தவறா? என்று இன்றும் நிறையப் பேர் எழுதிக் கொண்டுதான் இருக்கின்றார்கள். இயேசு அந்த வீட்டுப் பொறுப்பாளரின் முன்மதியைப் பாராட்டுகின்றார். அதாவது, ஏதோ ஒரு வகையில் அந்த பொறுப்பாளர் தன் எதிர்காலத்தை நல்ல முறையில் அமைத்துக் கொள்ளப் பார்க்கிறார். நம்மிடம் இருக்கும் பணம் மற்றும் பொருட்களை வைத்து விண்ணரசை சம்பாதித்துக் கொள்ள வேண்டும் என்பதே இயேசுவின் போதனையாக இங்கு இருக்கின்றது.



1 comment:

  1. திராட்சைத்தோட்டத்திற்கு வேலைக்கு ஆளெடுத்த தலைவர் பற்றிய பகுதி போலவே இன்றையப் பகுதியும் விவாத்த்துக்குட்பட்டது. ' தப்பினால் தப்பில்லை' .சுஜாதா கூறியிருப்பினும் அதுவும் நெற்றியைச் சுருக்க வைக்கும் ஒரு சொற்றொடர்தான்.தன்னிடமுள்ள முன்மதியையும்,பணத்தையும் வைத்து ஒருவர் தன் எதிர்காலத்தை நல்ல முறையில் அமைத்துக்கொள்ளலாமெனில் அவை இரண்டுமே இல்லாதோர் என்ன செய்வர்? தெளிவான ஒரு பதிலை எதிர்பார்க்கலாமா தந்தையிடம்? நன்றி!...

    ReplyDelete