Wednesday, November 26, 2014

இதெல்லாம் ரொம்ப சகஜம்!

இன்று வகுப்பில் என் நண்பன் ஒருவன் சோகமாக அமர்ந்திருந்தான். தனக்கு இங்கே இருக்கப் பிடிக்கவில்லை எனவும், தன்னை யாரும் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள் எனவும் புலம்பிக் கொண்டிருந்தவனின் கண்கள் திடீரென கலங்க ஆரம்பித்து விட்டன. என்னவென்று விசாரித்த போது, இன்று காலையில் அவனது பேருந்து நிறுத்தத்தில் நின்ற ஒரு பேருந்தில் ஏற முற்பட்ட போது இரண்டு பேர் சேர்ந்து அவனை வெளியே தள்ளியிருக்கிறார்கள். ஏனென்று அவனுக்கும் புரியவில்லை. எனக்கும் புரியவில்லை. அவனிடம் இருப்பதும் டிக்கெட் தான். அவர்களிடம் இருப்பதும் டிக்கெட் தான்.

ரோம் நகரில் இதெல்லாம் ரொம்ப சகஜம். நாம் பேருந்தில் ஏறினாலும் நாம் சுமந்து கொண்டிருக்கும் பேக்பேக் தெரியாமல் மற்றவர் மேல் இடிக்க, அவர் நம்மைத் திரும்பிப் பார்த்து, நாம் இத்தாலியர் இல்லையென்றால் நம்மை அவர் ஒரு முறை இடிப்பார். இத்தாலியர் என்றால் புன்முறவல் பூப்பார்.

அவனுக்கு என்ன ஆறுதல் சொல்ல என்று எனக்குத் தெரியவில்லை.

'என்னை மற்றவர்கள் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள்!' என்ற உணர்வு நம்மை ஒரேயடியாகச் சாய்த்து விடுகிறது.

மற்றவர்களை நாம் ஏன் ஏற்றுக்கொள்ள மறுக்கிறோம்.

முதல் காரணம் 'என்னிடம் எல்லாம் இருக்கிறது. ஆக, எனக்கு யாரும் தேவையில்லை' என்ற மனோபாவம். இரண்டாவதாக, பயம். மற்றவர்களைக் குறித்துப் பயம் இருந்தாலும் நாம் அவர்களை ஏற்றுக்கொள்வதில்லை.

இங்குள்ள மக்களுக்கு தங்கள் நிறத்தைத் தவிர வேறு நிறத்தைக் கண்டாலோ, தங்கள் மொழியைத் தவிர வேறு மொழியைக் கேட்டாலோ பயம் தொற்றிக் கொள்கிறது. மொத்தமாகக் கூடி வந்து கூச்சல் போட ஆரம்பித்து விடுவார்கள்.

மனிதர்கள் மற்றவர்களிடம் ஒரு குறையைக் கண்டு அதை வைத்து தங்களை நிறைவாக எண்ணிக் கொள்கிறார்கள் என்பதே விந்தையாக இருக்கிறது.


1 comment:

  1. பல சமயங்களில் சிலர் தங்களிடம் இல்லாத நல்ல குணமோ,திறயையோ,ஒரு பொருளோ பிறரிடம் பார்க்கையில் பொறாமை காரணமாக அவர்களை ஒதுக்குகிறார்கள்.நாளடைவில் அது inferiority complex ஆக மாறி அதையே superior ஆகக் காண்பிக்க வேண்டாத செயல்களில் ஈடுபடுகிறார்கள்.இவர்களைப் பார்த்து நாம் பரிதாபம் தான் படமுடியும்.நம்மையும் பிறரையும் இருப்பதுபோல் ஏற்றுக்கொள்ள வரம் கேட்போம் இறைவனிடம்!

    ReplyDelete