Saturday, November 15, 2014

நீ எனக்கு ட்ரபுள் கொடுக்கிற!

பின்பு அவர், 'நான் கடவுளுக்கு அஞ்சுவதில்லை. மக்களையும் மதிப்பதில்லை. என்றாலும் இக்கைம்பெண் எனக்கு தொல்லை கொடுத்துக்கொண்டிருப்பதால் நான் இவருக்கு நீதி வழங்குவேன். இல்லையானால் இவர் என் உயிரை வாங்கிக்கொண்டேயிருப்பார்' என்று தமக்குள்ளே சொல்லிக் கொண்டார். (காண். லூக்கா 18:1-8).

மனந்தளராமல் செபம் செய்வதற்கு இயேசு தரும் எடுத்துக்காட்டாக லூக்கா நற்செய்தியாளர் எழுதும் பகுதியே இது.

நீதியற்ற நடுவரின் மனக்குமுறலை இன்றைய நாளில் நாம் சிந்திப்போம்.

அவரின் இரண்டு குணநலன்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன:

அ. அவர் கடவுளுக்கு அஞ்சுவதில்லை.
ஆ. மக்களையும் மதிப்பதில்லை.

இவர் அந்தப் பெண்ணைப் பற்றிப் புலும்புவது இரண்டு:

அ. அவர் தொல்லை கொடுத்துக்கொண்டிருக்கிறார்.
ஆ. அவர் உயிரை வாங்கிக்கொண்டே இருக்கிறார்.

ரத்தக்கண்ணீர் திரைப்படத்தில் எம்.ஆர். ராதா, 'டிவன்ட்டி ஃபோர் அவர்ஸ் நீ எனக்கு ட்ரபுள் கொடுக்கிற!' என்று தன் அம்மாவைக் கடிந்து கொள்வார். 'ஆமா! இப்ப நான் கல்யாணம் பண்ணிக்கணும்! அதுக்காக நீ தினமும் வந்து எனக்குத் தொல்லை கொடுக்குற!' என்று தொடர்வார்.

நாம் போய்க்கின்ற ஒரு பயணத்தில் குறுக்கே எது வந்தாலும் அதை நம் மூளை தொந்தரவு எனக்கருதுகிறது. அது நிஜமாக நாம் செய்யும் பயணம் என்றாலும் சரி, நம் எண்ண ஓட்டம் செய்யும் பயணம் என்றாலும் சரி, நாம் செய்து கொண்டிருக்கும் ஏதோ ஒரு வேலை என்ற பயணம் என்றாலும் சரி.

யூடியுபில் நாம் ஒரு வீடியோவைத் தொடுக்கு செய்தால் வீடியோ வருவதற்குப் பதில் விளம்பரம் வந்தால் அது ஒரு தொல்லை. நாம் கூகுளில் ஒரு பக்கத்தைத் திறக்க, நாம் விரும்பும் பக்கம் திறக்காமல் வேறொரு தளத்திற்கு நாம் மாற்றப்பட்டால் அது ஒரு தொல்லை. அவசரமாக ஒரு மின்னஞ்சல்; அனுப்ப நாம் மெயில்பாக்ஸை திறக்க, 'நான் திறப்பேனா!' எனச் சுற்றிக் கொண்டிருக்கும் வட்டம் ஒரு தொல்லை. இரவில் தூங்கிக் கொண்டிருக்கும் போது 'டிங்! டிங்!' என அடிக்கும் நாம் இராக்கோழி நண்பர்களின் வாட்ஸ் ஆப் அலர்ட், காலையில் அடிக்கும் அலார்ம் ஒரு தொல்லை. காலையில் ஒரு முக்கியமானவரோடு பேச வேண்டி அலைபேசியை எடுத்தால், நைட்டோடு நைட்டாக நம் காலர் டியூன் புதுப்பிக்கப்பட்டு நம் பேலன்ஸ் 0.10 எனக்காட்டினால் அது ஒரு தொல்லை. நாம் சாப்பிடும்போது தட்டப்படும் கதவு, டிவி பார்த்துக் கொண்டிருக்கும் போது வரும் 'கிரெடிட் கார்டு வேண்டுமா?' என்ற அழைப்பு. கதவைப் பூட்டிக் கொண்டிருக்கும் போது வரும் 'கேபிள் டிவி காரர்'. இப்படி நாம் சந்திக்கும் தொல்லைகள் ஏராளம்.

நாம் அன்றாடம் ரசித்து ஏங்கும் ஒன்றே சில நேரங்களில் தொல்லையாக மாறிவிடுவது உண்டு. 'இப்போது பேச மாட்டாளா! அப்போது பேச மாட்டாளா!' என ஏங்கும் காதலியின் குரல் திருமணத்திற்குப் பின், 'ஏன்டி! உன் எஃப்.எம்அ ஆஃப் பண்ணவே மாட்டியா?' என்று கேட்கும் அளவிற்கு மாறிவிட்டால், முதல் நாள் புதிய பங்குத் தளத்திற்குப் பக்கத்தில் கடந்து செல்லும் ஒருவரைக் கூட 'அண்ணே! வாங்க ஒரு கப் காஃபி சாப்பிட்டுப் போங்க!' என்ற அருட்பணியாளர், 'எப்பப் பார்த்தாலும் இவனுகளுக்கு வேற வேலையில்லை. தட்டிக்கிட்டே இருப்பானுக! என்று தலைதுவட்டிக் கொண்டே வந்து கதவு திறந்தால் அங்கே அடுத்தவர் தொல்லையாக மாறிவிட்டார் என்றே அர்த்தம்.

தொல்லை யாருக்கு வரும்?

மேலே காணும் நீதியற்ற நடுவர் போல இருப்பவருக்கு. அதாவது எனக்குக் கடவுளும் வேண்டாம், மனிதர்களும் வேண்டாம் என்று சொல்பவர்களுக்கு எல்லாமே தொல்லையாக மாறிவிடும்.

தொல்லையாக ஒன்றை நாம் நினைக்காமல் இருக்க நமக்கு இருக்க வேண்டியது நிறைய பொறுமை. அப்புறம் கொஞ்சம் நகைச்சுவை உணர்வு. இந்த இரண்டும் தான் நான் எனக்கு அடிக்கடிக் கொடுத்துக் கொள்ளும் மருந்து.


1 comment:

  1. இன்றையப் பதிவில் வரும் இந்த நீதியற்ற நடுவர் தான் 'இப்படிப்பட்டவர்தான்' என்று உணர்ந்திருப்பது பெரிய விஷயம்.அதற்கும் மேல் அந்தக்கைம்பெண்ணுக்கு உதவுவது,அது எக்காரணத்திற்காக இருப்பினும் போற்றப்பட வேண்டிய விஷயமே!இவர் இப்படித்தான் என்று யார்மீதும் 'லேபிள்' குத்தும் உரிமை நமக்கில்லை என்பதைத்தான் இது உணர்த்துகிறது.இவரை வைத்து இறைவனின் இரக்கத்தை அளப்பது மிக ஆறுதலான விஷயம்.மற்றபடி இந்தத் தொல்லை எல்லாம் இந்த 'multitasking personalities' களுக்குத்தான்; என் போன்ற மிகச்சாதாரணமானவர்களுக்கில்லை என்பது ....எல்லாவற்றையும்விட மகிழ்ச்சிதரும் , ஆறுதலான விஷயம்....ஒத்துக்கொள்வீர்களா ஃபாதர்?

    ReplyDelete