Sunday, November 2, 2014

ஒரு கண்ணாமூச்சி ஆட்டம்!

'யார் புனிதர்கள்? - நாம் எல்லாருமே புனிதர்கள்' என்று நேற்றைய தினம் பதிவைத் தொடங்கியது போல, 'யார் இறந்தவர்கள்? - நாம் அனைவருமே இறந்தவர்கள்' என்று தொடங்கினால் எவ்வளவு அபத்தமாக இருக்கும்.

நாளை இறந்த ஆன்மாக்களின் திருநாளைக் கொண்டாடுகிறோம். இன்றைக்கு நாம் கொண்டாடியவர்களும் இறந்தவர்களே. ஆனால் இன்று நாம் கொண்டாடுபவர்கள் கடவுளின் பிரசன்னத்தில் இருப்பவர்கள். நாளை நாம் கொண்டாடுபவர்கள் பாதி வழியில் நிற்பவர்கள். இதை 'உத்தரிக்கிற நிலை' என்று அழைக்கின்றது கத்தோலிக்கப் போதனை. ஆனால் இந்தப் போதனையின் கருத்து இன்று ரொம்பவே மாறியிருக்கிறது.

(இன்னும் கொஞ்ச நாள் போனால் 'இறப்புக்குப் பின் வாழ்வு இல்லை' என்று சொல்லவும் வாய்ப்பு இருக்கிறது!)

ஒரு கிறிஸ்தவராக அல்லாமல் நாளைய தினத்தைப் பற்றிச் சிந்தித்தால் எப்படி இருக்கும் என்ற கேள்விக்குப் பதிலே இன்றைய நம் பதிவு.

கிறிஸ்தவராக இல்லையென்றால் உடனடியாக ஒரு இந்துவாகவா என என் மூளை எத்தனிக்கிறது. ஆனால் அதுவும் சிறப்பானதாகத் தெரியவில்லை. எதையும் சாராமல் இறப்பைப் பற்றிச் சிந்தித்தால் இறந்தவர்கள் தான் என் நினைவிற்கு வருகிறார்கள்.

நான் நேருக்கு நேர் சந்தித்த முதல் இறப்பு இது.

ஒரு பங்குத் தளத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது அருட்சகோதரி ஒருவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருப்பதாகவும் அவருக்கு தினமும் நற்கருணை கொடுக்க வேண்டும் என்றும் சொன்னார்கள். ஒவ்வொரு நாளும் நான் பார்க்கும் போது அவர் தன் இறுதி நிமிடங்களை எண்ணிக் கொண்டிருந்தார் என்பது தெரிந்தது. என் உடன் வந்த அருட்சகோதரி ஒவ்வொரு முறையும் என்னுடன் வரும்போதெல்லாம் அவரோடு எதாவது பேசுங்கள் என்று சொல்வார். எனக்கு என்ன பேசுவதென்றே தெரியவில்லை. நீங்கள் அந்த இடத்தில் இருந்தால் என்ன பேசியிருப்பீர்கள்? அவருக்கு எப்படி ஆறுதல் சொல்ல முடியும்? 'ஏன் எனக்கு மட்டும் இப்படி!' என்று கேட்டால் நான் என்ன பதில் சொல்வேன். ஒரு நாள் மதியம் அந்த மருத்துவமனையிலிருந்து ஃபோன். 'உடனே வாருங்கள்!' எங்கோ போய்க்கொண்டிருந்த நான் அப்படியே திரும்பி அங்கு சென்றேன். நான் பார்த்துக் கொண்டே இருக்க அவர் தன் இறுதி மூச்சை விட்டுக்கொண்டிருந்தார். வெளியில் இருந்து பார்க்கும் நான் இதை எளிதாக எழுதி விடுகிறேன். ஆனால் அவருக்கு ஏன் அப்படி என்று இன்னும் என்னால் பதில் கண்டுபிடிக்க முடியவில்லை. என் வயதுதான் இருக்கும் அவருக்கு. என்னைப் போலவே கனவுகள் கண்டிருப்பார். என்னைப் போலவே சிரித்திருப்பார், அழுதிருப்பார். ஆனால் இன்று!

இறப்பு என்பது ஒரு கண்ணாமூச்சி ஆட்டம் போன்றது. நம் கண்களில் அது துணியைக் கட்டிவிடுகின்றது. இறப்பவருக்கு மட்டுமல்ல. அவரைச் சுற்றியிருக்கும் அனைவருக்கும். இது ஒரு விநோதமான விளையாட்டு. எல்லாரும் கண்களைக் கட்டிக் கொண்டு ஒருவரையொருவர் தேடிக் கொண்டே இருக்கிறோம்.

நாம் யாருமே இறக்க விரும்புவதில்லை. 'இதைவிட நல்ல மோட்சம் இருக்கிறது!' என்று விவிலியம் சொன்னாலும், 'அங்கே அழுகை இராது! கண்ணீர் இராது!' என்று வாக்குறுதிகள் தந்தாலும், நாம் இறக்க விரும்புவதில்லை.

'நாம் இறப்போம்' என்பதை அறிந்த இனம் மனித இனம் ஒன்றுதான். ஆகையால் தான் வருத்தம் பற்றிக் கொள்கிறது.

நமக்கு இறப்பைப் பற்றிய பயம் இல்லை. 'இன்னும் வாழவில்லையே!' என்ற பயம் தான் இருக்கின்றது.

வாழும்;போதே பல நிகழ்வுகள் கண்ணாமூச்சி ஆட்டங்களாகவே உள்ளன.

இறப்புதான் வாழ்விற்கு வேகம் தருகிறது. இறப்பு தான் வாழ்வை அர்த்தமாக்குகிறது.

என்னதான் தத்துவங்கள் பேசினாலும், பக்கம் பக்கமாக எழுதினாலும், இறப்பை நாம் புரிந்து கொள்ளவும் முடியாது. அதை மறுக்கவும் முடியாது.

அதன் மர்மம் புரிந்துவிட்டால் பின் அதன் இனிமை போய்விடும்!



1 comment:

  1. இன்று நமக்குமுன் இறந்தவர்களையும் ஏன் நம் இறப்பையும் கூட நினைவுக்குக் கொண்டு வரும் தினம்.இன்று கல்லறைகளுக்கு சென்று பார்த்தால் நாம் காணும் காட்சிகள் நம் கண்களைக் கசியவைக்கும்.இறப்பு என்றாலே பயம், சோகம், கலக்கம், வருவது எதனால்? தந்தையின் கூற்றுப்படி ' ஆம் இன்னும் வாழவில்லையே' என்ற ஆதங்கமாகவும் இருக்கலாம்.தந்தை LX.ஜெரோம் அவர்களின் பதிவின்படி " பொழுது விடிந்ததும் இரவுக்கான ஏற்றிவைத்த மெழுகுதிரியை அணைப்பதுபோல்தான் கிறிஸ்துவர்களின் மரணம்". நம் எண்ணங்கள் எதுவாக இருப்பினும் " நம்மை விட்டுப்பிரிந்து போன நம் உறவுகள் இறைவனில் இளைப்பாறட்டும்" என்ற ஒன்றே நம் இன்றைய செபமாக இருக்கட்டும்...

    ReplyDelete