Thursday, November 20, 2014

கையறு நெஞ்சம் கடியல் வேண்டும்!

என் பிழைப்பு அறியாது
கையறு நெஞ்சம் கடியல் வேண்டும்
(சிலப்பதிகாரத்தில் மாதவி)

பிரபஞ்சன் அவர்கள் ஜூவியில் எழுதிய இந்த வாரத் தொடரின் முதல் வரிகள் இவை.  இந்த வார அவரது கட்டுரையின் தலைப்பு 'இரண்டாவது மனைவிமார்கள்'. என் இரண்டவாது மனைவிமார்கள் என இன்றைய நம் பதிவிற்கு தலைப்பிட்டால், வடிவேலு அவர்களின் காமெடி தான் நினைவிற்கு வருகிறது: 'இங்க கட்டிக்கவே வழியில்லையாம்! இதுல வச்சுக்குறாராம்!'

பிரபஞ்சனின் வரிகளில் தொடங்கி நம் பாதையை மாற்றிக் கொள்வோம்.

மாதவி சொல்லும் வார்த்தைகளின் பொருள் என்ன?

தன் மனைவி கண்ணகியை விட்டுவிட்டு நடன நங்கை மாதவியின் மேல் பற்றுக் கொண்டு அவளிடம் வரும் கோவலன் சில மாதங்களுக்குப் பின் மாதவியை விட்டுப் பிரிந்து விடுகிறான். இந்தப் பிரிவை அறிந்த மாதவி அளவில்லா துன்பத்தோடு எழுதும் வார்த்தைகளே இவை.

'அடிகளே, நான் எழுதுபவை தெளிவற்ற சொற்கள் என்றாலும் தங்கள் மனதில் ஏற்றுக்கொள்ள வேண்டும். உங்கள் தாய் தந்தையரையும் விடுத்து, உயர் குலத்தில் பிறந்த உங்கள் மனைவியோடு நள்ளிரவில் வெளியேறினீர்கள்! (என்னிடமும் சொல்லிக் கொள்ளாமல்!) நான் செய்த பிழை என்ன? என் துன்பத்தைப் போக்குவீர்களாக. பொய்யைத் தவிர்த்து உண்மையையே காணும் பெரியவர்கள் நீங்கள்...' எனத் தொடர்கிறது.

'நான் என்ன குற்றம் செய்தேன்?' என்ற கேள்விக்கு கோவலன் மட்டுமல்ல, கோவலனைப் போல இருக்கும் யாரும் பதில் சொல்லிவிட முடியாது. கோவலனே மாதவியின் வீடு தேடி வந்தான். உண்டு உறங்கினான். திடீரென்று ஒருநாள், 'மாயப்பொய்க்காரி, சாகசக்காரி, நடிகை' என்று அவதூறுகளை வாரித்தூற்றிவிட்டு திருடன் போல இருட்டில் வெளியேறுகிறான். இந்த நேரத்தில் தான் மாதவி இந்தக் கேள்வியைக் கேட்கிறாள். கோவலனைவிட மாதவி புத்திசாலி.

மனைவிக்குப் பின் வந்தவளை 'மாற்றாள்' என்கிறது நம் இலக்கியம்.

பிரபஞ்சனின் கட்டுரையின் கருத்துக்கள் இவை. இப்போது இதிலிருந்து நாம் தொடங்குவோம்.

இதை வாசிக்கும் அனைவருக்கும் - ஆண் என்றால் இரண்டு மனைவியர், பெண் என்றால் இரண்டு கணவர்கள் - மாற்றாள்கள் அல்லது மாற்றான்கள் இருக்க வேண்டும் அல்லது இருப்பார்கள் என்பது பற்றி அல்ல நம் பதிவு.

நாம் வாழும் வாழ்க்கையை மனைவி என உருவகப்படுத்திக் கொள்வோம். ஒவ்வொரு மனிதருக்கும் இரண்டு வாழ்க்கை இருக்கிறது என்று சொல்கிறார்கள் உளவியில் ஆய்வாளர்கள். ஒரு வாழ்க்கை நாம் வெளியில் வாழ்வது. மற்றொரு வாழ்க்கை நாம் இருக்கும் அறையில் வாழ்வது.

இல்லையில்லை! நானெல்லாம் ஒரு வாழ்க்கை தான் வாழ்கிறேன் என வரிந்து கட்டிக்கொள்ள வேண்டும். கொஞ்சம் பொறுமையாகக் கேளுங்கள்.

இரண்டு வாழ்க்கை இருப்பது தவறொன்றுமில்லை!

நாம் இருக்கும் அறையில் நாம் இருப்பதற்கும், நம் அறைக்கு வெளியே - ரோட்டில், கோவிலில், பள்ளியில், கல்லூரியில் - இருப்பதற்கும் வித்தியாசங்கள் இருக்கின்றன. நாம் உடுத்தும் உடை, சிந்திக்கும் சிந்தனை, பேசும் வார்த்தை, நடக்கும் நடை என எல்லாவற்றிலும் வித்தியாசம் இருக்கிறது. வெளியில் வாழும் வாழ்க்கை தான் நாம் ஊரறிய இருக்கும் நம் மனைவி. அவரைத் தான் எல்லாருக்கும் தெரியும். அவர் தான் 'லீகல்'. ஆனால் நம் அறைக்குள் வாழும் வாழ்க்கைதான் நம் மாற்றாள். அவளை நமக்கு மட்டும்தான் தெரியும். அவள் மற்றவர்களைப் பொறுத்தவரையில் 'இல்லீகல்'. இந்த இரண்டு பேரில் நமக்கு யாரை அதிகம் பிடிக்கும் என்றால் பல நேரங்களில் 'மாற்றாளைத்' தான். அட்லீஸ்ட் எனக்கு என் மாற்றாளைத் தான் பிடிக்கும்.

நம் உள்ளத்தில் நாம் வைத்திருக்கும் கொள்கை, நம்பிக்கை, நமக்குப் பிடித்தவை, நாம் அதிகம் இரசிப்பவை என பலவற்றை மற்றவர்களுக்குப் பயந்து அல்லது மற்றவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் எனத் தயங்கி நாம் நம் அறைக்குள் வைத்துவிடுகிறோம். நம் அறைக்குள் இருக்கும் போது இந்த உலகமே நமக்கு அடிமை போல தோன்றுகிறது. நம் அறைக்குள் அமர்ந்து கொண்டு நாம் யாரையும் நம்மோடு ஒப்பிடுவதில்லை. யார் என்ன டிரஸ் போடுகிறார்கள் என்று கவலைப்படுவதில்லை. இந்த உலகில் நாம் தான் என நமக்கு அடையாளம் காட்டுவது இந்த 'மாற்றாள்' என்னும் அறை வாழ்க்கை தான்.

சரி! இப்படியே இரண்டு பேரோடு தான் வாழனுமா? வேறு வழியே இல்லையா?

இருக்கிறது! நம் வாழ்க்கையின் இலக்கே இந்த இருமையை ஒழித்து ஒருமைக்குக் கடந்து செல்வது. இயேசுநாதர், மகாத்மா, நபி, புத்தர், மகாவீரர் - இவர்களைப் பார்த்தால் நமக்கு உண்மை தெரியும். 'மனைவி' என்ற புறவாழ்வையும், 'மாற்றாள்' என்ற அகவாழ்வையும் ஒருங்கிணைக்க வேண்டும். அகத்திலிருந்து தாமரை மலர்வது போலத் தான் இந்த செய்முறை அமைய வேண்டும்.

திடீரென்று உதறித் தள்ளிவிட்டு ஒரே நாளில் யோக்கியனாகும் கோவலனின் அணுகுமுறை தவறானது.

மேலும் நாம் பழகிய நண்பர்கள், பூர்வ ஜென்ம உறவுகள் என்று நாம் 'சரி' சொல்லி புறப்பட்டுச் சென்று கொண்டிருக்கும் வாழ்க்கை உறவுகளில், திடீரென்று, 'நீ எனக்கு வேண்டாம்! நான் இன்றிலிருந்து யோக்கியனாக இருக்கப் போகிறேன்!' என்று சொல்லி அவர்களை வருத்தப்படுத்திய நேரங்களுக்காக இன்று நான் வருந்துகிறேன். இந்த நேரங்களில் நானும் கோவலனைப் போலத்தான் இருந்திருக்கின்றேன். 'ஏன் நான் வேண்டாம்னு சொல்லு!' என மாதவியைப் போல அவர்களும் என்னைக் கேட்டிருக்கிறார்கள்.

ஒருமுறை ஏற்றுக்கொண்ட உறவுகளை உள்ளன்போடு அகவாழ்விலும், புறவாழ்விலும் சுமந்து கொண்டு பயணிக்கும் உறுதியான உள்ளம் வேண்டுகிறேன் இன்று!


2 comments:

  1. ஒருவர் வாழும் வாழ்க்கை முறையை வைத்து அவர்களின் புற,அக வாழ்க்கையை நாம் நிர்ணயம் பண்ணுவது அவ்வளவு சுலபமல்ல; அது சரியுமல்ல.மனத்தளவில் வக்ரமனத்துடன் வெளியில் உத்தமராகத் திரியும் அயோக்கியரும் உண்டு; மனத்தளவில் குழந்தைகளாய் புறவாழ்வில் முரடராய் வலம் வரும் நல்லவர்களும் உண்டு.அவரவர் வாழ்க்கைக்கு அளவுகோல் அவரவர் மனசாட்சியே! ஆகவே நம் அறைக்குள் நமக்கு மட்டுமே புரிந்த,தெரிந்த நமது வாழ்க்கையை 'இல்லீகல்' என்று வார்த்தைப்படுத்துவதில் எனக்கு உடன் பாடில்லை.மற்றபடி கோவலன்,கண்ணகி,மாதவி....யாவுமே அந்த குணாதிசயங்களைப் பார்ப்பவரின்,படிப்பவரின் கண்ணோட்டத்தைப் பொறுத்தது......

    ReplyDelete
  2. இறுதி வாக்கியத்திற்கு...

    ... அதன் ஒவ்வொரு வார்த்தைகளுக்கும்

    தலைவணங்குகிறேன்.....
    இப்பதிவை தாங்கள் எழுதிய போது, தாங்கள் எனக்கு அறிமுகமில்லாதவர்....
    But now I salute you,as I find you are so
    till now,since then.����

    ReplyDelete