Sunday, November 2, 2014

மொய் என்பது ஒரு கடன்!

நேர்மையாளர்கள் உயிர்த்தெழும்போது உமக்குக் கைம்மாறு கிடைக்கும். (லூக்கா 14:14)

நாளைய நற்செய்திப் பகுதியில் இயேசு யாரை விருந்துக்கு அழைக்க வேண்டும், யாரை அழைக்க வேண்டாம் என்றும் குறிப்பிடுகின்றார்.

ஏழைகளையும், உடல் ஊனமுற்றோரையும் அழையுங்கள். ஏனெனில் அவர்களால் உங்களைத் திரும்ப அழைக்க முடியாது என்று சொல்கின்றார்.

நம்ம ஊர் திருமணங்களில் 'மொய்' எழுதுவது என்ற பழக்கம் உள்ளது. 'மொய்' என்பது எப்படித் தோன்றியிருக்க வேண்டும். மொய் என்பது ஒரு கடன். அதாவது, தன் இல்லத்தில் திருமணம் அல்லது ஒரு மகிழ்ச்சிகரமான நிகழ்வை நடத்தும் ஒருவருக்கு அந்த ஊரார் கூடி வந்து ஏதோ ஒருவகையில் தங்கள் பங்களிப்பைச் செய்வதுதான் மொய். இது எழுதி வைக்கப்படுவதற்கான காரணம் அது திரும்பச் செலுத்தப்பட வேண்டும் என்பதுதான். ஆக, கல்யாண வீட்டில் நாம் செய்வது நமக்குத் திரும்ப வரவேண்டும் அல்லது வந்துவிடும் என்பது நம் எதிர்பார்ப்பு.

நாம் செய்கின்ற அனைத்திலும் எதிர்பார்ப்பு ஒளிந்திருக்கிறது. அந்த எதிர்பார்ப்பை நிவர்த்தி செய்ய முடியாதவர்களுக்கு நீங்கள் உங்கள் பங்களிப்பைச் செய்யுங்கள் என்கிறார் இயேசு.

இரண்டாவதாக, ஏழைகள்.

ஏழைகள் என்றால் யார்?

ஏழைகள் என்ற வார்த்தையை புரிந்து கொள்ள நான் பயன்படுத்தும் வார்த்தை 'சாய்ஸ்' (choice). வாழ்வில் சாய்ஸ் இல்லாதவர்களே ஏழைகள். கொஞ்சம் சாய்ஸ் உள்ளவர்கள் நடுத்தவர வர்க்கத்தினர். நிறைய சாய்ஸ் உள்ளவர்கள் பணம் படைத்தவர்கள். எடுத்துக்காட்டாக, நம் குழந்தையைப் பள்ளியில் சேர்ப்பது. ஏழைகளுக்கு இருக்கும் ஒரே சாய்ஸ் அரசுப்பள்ளிகள். நடுத்தர வர்க்கத்தினர் தங்கள் வருமானத்திற்கேற்ப ஆங்கில வகுப்பு, மெட்ரிக், மேனேஜ்மென்ட் பள்ளி என சில சாய்ஸ்கள் பெற்றிருப்பர். பணம் படைத்தவர்கள் எந்தப் பள்ளியையும் தேர்ந்து கொள்ளலாம். இதையொட்டியே ஆங்கிலத்தில் 'பெக்கர்ஸ் கேன் னாட் பி சூசர்ஸ்' என்ற பழமொழியும் உண்டு.

மேலும், ஏழைகள் என்ற வார்த்தையை 'சார்பு' (dependence) என்ற வார்த்தையைப் பயன்படுத்தியும் பொருள் கொள்ளலாம். நம் வாழ்வில் நம்மிடம் மூன்று சார்பு நிலைகள் உள்ளன: 1) சுய சார்பு அல்லது தற்சார்பு (self-dependence), 2) சமூக சார்பு (social dependence), 3) கடவுள் சார்பு (transcendental dependence). என் மகனைப் படிக்க வைக்க நான் முதலில் சார்ந்திருப்பது தற்சார்பு. என் பணம் போதாத போது என் நண்பர்கள் அல்லது சமூகத்தைச் சார்ந்திருக்கிறேன். அதற்கும் வழியில்லாதபோது என் மனம் கடவுளை நோக்கித் திரும்புகிறது. ஏழையர் இயல்பாகவே கடவுளை மட்டுமே சார்ந்திருக்கக் கூடியவர்கள். (இதற்கு விதிவிலக்கும் உண்டு!)

இந்த இரண்டின் அடிப்படையில் பார்த்தால் அருட்பணி நிலையில் 'ஏழ்மை' என்ற வாக்குறுதியைக் கொடுக்கும் ஒருவர் 'நோ சாய்ஸ்' உள்ளவராகவும், 'கடவுளைச் சார்ந்தவராக' மட்டுமே இருக்க வேண்டும். எனக்கு முன் நிறைய சாய்ஸ் இருக்கும் போதும், நான் என்னை மட்டுமே சார்ந்து நிற்க முனையும் போதும் எங்கேயோ தடம் மாறுகிறது என்றுதானே அர்த்தம்!

நிற்க!

நற்செய்திக்கு வருவோம்.

ஏழையரின் உள்ளம் கொண்டிருக்கும் ஒருவரே ஏழையரை அடையாளம் கண்டுகொள்ள முடியும். ஆக, இன்று நாம் விருந்து வைக்கும் போது ஏழையரையும், மாற்றுத் திறனாளிகளையும் அழைக்க வேண்டும் என்றால், நம்மிடம் உள்ள ஏழ்மை நிலையையும், கையாலாகத நிலையையும், இயலாமையையும், குறைபாடுகளையும் ஏற்றுக்கொள்வது அவசியம்.

'ஏழைகளுக்குக் கொடுத்தால் விண்ணரசில் கைம்மாறு கிடைக்கும்' என்று இயேசுவின் வார்த்தையை அப்படியே எடுத்துக் கொள்வதிலும் ஆபத்து இருக்கிறது. அப்படி எடுத்தால் நாம் ஏழைகளை நமக்காக, நமது விண்ணக வாழ்விற்காகப் பயன்படுத்துகிறோம் என்று ஆகிவிடும். மனிதர்கள் எந்த ஒரு நிலையிலும் பயன்பாட்டுக்கு உரியவர்கள் அல்லர்.

எளியவரோடு எளியவராகப் பழகும், அவர்களோடு விருந்துண்ணும் மனப்பக்குவம் தா! இறைவா! என்பது இன்றைய என் இறைவேண்டல்.


2 comments:

  1. Anonymous11/03/2014

    அருட்பணி நிலையில் 'ஏழ்மை' என்ற வாக்குறுதியைக் கொடுக்கும் ஒருவர் 'நோ சாய்ஸ்' உள்ளவராகவும், 'கடவுளைச் சார்ந்தவராக' மட்டுமே இருக்க வேண்டும்.
    Its a serious question for all of us. Thanks for your provking thoughts!

    ReplyDelete
  2. இன்றையப்பதிவு அருட்பணியாளர்களுக்கு மட்டுமின்றி எல்லோருக்குமே பொருந்தக்கூடியதுதான்.'சாய்ஸே ' இல்லாத ஒருவர் 'கடவுள் சார்புள்ளவராக' இருப்பதை விட 'சாய்ஸ்' அத்தனையும் இருந்தும் ஒருவர் இறைவனைப்பற்றிக் கொண்டிருப்ப்துதான் சிறப்பு.இன்றையப்பதிவு நமக்கு உணர்த்துவது 'மனத்தின் எளிமை; ஏழ்மை' இதைத்தான் " எளிய மனத்தோர்பேறுபெற்றோர்" என்று இயேசுவின் மலைப்பிரசங்கமும் நமக்கு உணர்த்துகிறது.இத்தகைய மனம் நமக்கு இருக்குமேயானால் நாம் யாரை வேண்டுமானாலும் விருந்துக்கு அழைக்கலாம்.இந்த வாரம் இனிதே அமைந்திட அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

    ReplyDelete