ஆண்டின் பொதுக்காலம் 18ஆம் ஞாயிறு
I. சபை உரையாளர் 1:2, 2:21-23 கொலோசையர் 3:1-5, 9-11 லூக்கா 12:13-21
செல்லும் செல்வம்!
'செல்வம்' என்பது எப்போது நம் கைகளை விட்டுச் 'செல்வோம்' என்று நிற்பதால்தான், செல்வத்திற்கு 'செல்வம்' என்று பெயர் வந்தது என 'அர்த்தமுள்ள இந்துமதம்' நூலில் பதிவு செய்கிறார் கவியரசு கண்ணதாசன்.
செல்வம் என்று வரும்போதெல்லாம் விவிலியம் இரண்டுவகை கருத்துக்களைக் கொண்டிருக்கிறது: ஒரு பக்கம், செல்வம் அறவே கூடாது என்றும், 'பண ஆசையை அனைத்து தீமைக்கும் ஆணிவேர்' என்றும் கற்பிக்கின்றது. மறு பக்கம், பயன்படுத்தப்படும் உருவகங்கள் எல்லாம் 'புதையல்,' 'முத்து' என்று செல்வம் பற்றியதாகவே இருக்கிறது. ஒரு பக்கம், செல்வம் என்பது இறைவனின் ஆசீர் என்று சொல்லப்படுகிறது. மறு பக்கம், ஏழையரின் அருகில்தான் இறைவன் இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. எதை எடுத்துக் கொள்வது? எதை விடுவது? செல்வத்தைப் பிடித்துக் கொள்வதா? விட்டுவிடுவதா? செல்வத்தை நாடுவதா? அல்லது அதை விட்டு ஓடுவதா? செல்வம் நமக்குத் தருகின்ற வாழ்வை நாடுவதா? அல்லது வாழ்வு தருகின்ற செல்வத்தை நாடுவதா? செல்வம் தரும் வாழ்வா? வாழ்வு தரும் செல்வமா?
இன்றைய நற்செய்தியில் கேள்வி ஒன்றை முன்வைக்கின்றார் கூட்டத்திலிருக்கும் ஒருவர். 'பெயரில்லாத இந்த நபரில்' நாம் நம் ஒவ்வொருவரையும் வைத்துப் பார்க்கலாம். 'போதகரே, சொத்தை என்னோடு பங்கிட்டுக் கொள்ளுமாறு என் அண்ணனுக்குச் சொல்வீரா?' என்று கேட்கின்றார் அந்த ஒருவர். அண்ணனுக்கு இரு பகுதியும், தம்பிக்கு ஒரு பகுதியும் சொத்து என்பது இணைச்சட்டம் சொல்லும் விதிமுறை (21:27). கேள்வி கேட்பவரின் அண்ணன் தன் தம்பிக்குச் சேர வேண்டியதைக் கொடுக்க மறுக்கிறார். அதன் காரணம் இங்கே சொல்லப்படவில்லை. இயேசு விடையாக மற்றொரு கேள்வியைப் போடுகின்றார்: 'என்னை உங்களுக்கு நடுவராகவோ பாகம் பிரிப்பவராகவோ அமர்த்தியவர் யார்?' முதல் ஏற்பாட்டில் இம்மாதிரி வேலையை மோசே செய்திருக்கிறார் (காண். விப 2:14, எண் 27:1-11). இயேசுவின் கேள்வி அறிவுரையாக மாறுகின்றது: 'எவ்வகைப் பேராசைக்கும் இடம் கொடாதவாறு எச்சரிக்கையாய் இருங்கள். மிகுதியான உடைமைகளைக் கொண்டிருப்பதால் ஒருவருக்கு வாழ்வு வந்துவிடாது!' என்கிறார்.
இயேசுவின் அறிவுரை இரண்டு கூறுகளைக் கொண்டிருக்கிறது: (அ) பேராசை அறவே கூடாது. (ஆ) உடைமைகள் ஒருவருக்கு வாழ்வு தருவதில்லை.
தொடர்ந்து இயேசு ஓர் உருவகம் தருகின்றார். 'அறிவற்ற செல்வன்' என்று இந்த உருவகத்திற்கு பெயர் தரப்படுகின்றது. ஆனால், இந்த செல்வன் அறிவற்றவர் அல்லர். அறிவானவர்தான்! அறிவற்ற ஒருவரால் எப்படி தன் கிடங்குகளே கொள்ளாத அளவிற்கு தானியத்தை உற்பத்தி செய்ய முடியும். இந்தச் செல்வன் அறிவாளி மட்டுமல்ல. கடின உழைப்பாளி. 'என் வயிற்றுக்கு நான் உழைக்க வேண்டும்,' 'உழைக்க மனமில்லாதவன் உண்ணலாகாது!' என்று தன் வயிற்றுக்குத் தான் உழைக்கின்றார். இவன் யாரையும் ஏமாற்றி சொத்து சேர்க்கவில்லை. தனக்காக உழைத்தவர்களின் கூலியை மறுக்கவில்லை. மேலும், இவர் நல்ல மேனேஜர். திட்டமிடுவதில் கைதேர்ந்தவர். ஆகையால்தான், 'தானியத்தைக் கொள்வதற்கு கிடங்கு போதாது' என்று அதை மேம்படுத்த முயற்சி செய்கின்றார். இதுவரைக்கும் அவர் செய்தது சரிதான். ஆனால், இதற்குப் பின் அவர் தன் உள்ளத்தைப் பார்த்துச் சொல்லும் வார்த்தைகள்தாம் இயேசுவைப் பொறுத்தவரையில் தவறாகின்றன.
செல்வரின் உள்ளக்கிடக்கையை 'தன் உள்ளம் பேசுதல்' (சோலியோலோக்வி) என்ற இலக்கியப் பண்பைக் கொண்டு பதிவு செய்கின்றார் லூக்கா. ஒவ்வொருவரின் உள்ளத்திலிலும் இருப்பதை அறிபவர் இறைவன் என்று நாம் இங்கே பொருள் கொள்ள முடிந்தாலும் (காண். 12:2-3, 1:51, 2:35, 3:15), நம் ஒவ்வொருவரின் உள்ளமும் ஒவ்வொரு நொடியும் எதையாவது பேசிக்கொண்டே இருக்கிறது என்பதையும் நாம் மறுத்துவிட முடியாது.
'நான் என்ன செய்வேன்?' என்று கேட்கின்றார் செல்வர். இந்தக் கேள்வியில் அவரது ஏக்கமும், ஏதாவது செய்ய வேண்டும் என்னும் ஆர்வமும் தெரிகிறது. அவரின் கேள்விக்கு அவரே பதிலும் சொல்கின்றார். அவரின் பதிலில் மூன்று எதிர்கால நிகழ்வுகள் உள்ளன: 'நான் களஞ்சியத்தை இடித்து இன்னும் பெரிதாகக் கட்டுவேன்,' 'என் தானியத்தையும் பொருள்களையும் சேர்த்து வைப்பேன்,' என் நெஞ்சிடம் சொல்வேன்!' மேலும், 'நான்,' 'என்,' 'எனது' என்னும் வார்த்தைகள் இந்தச் செல்வர் எந்த அளவுக்கு தன்னை மட்டுமே மையப்படுத்தியவர் என்பதையும் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.
'என் நெஞ்சமே! உனக்குப் பல்லாண்டுகளுக்கு வேண்டிய பலவகைப் பொருள்கள் வைக்கப்பட்டுள்ளன. நீ ஓய்வெடு! உண்டு குடித்து, மகிழ்ச்சியில் திளைத்திடு!' என்கிறார் செல்வர். பணம் பெற்றவரின் வாழ்வு 'உண், களி, கொண்டாடு' என்று இருப்பதாக விவிலியத்தில் மற்ற நூல்களும் சான்று பகர்கின்றன (காண். சீரா 11:19, 1 ஏனோக் 97:9, எசா 22:12-14, தோபி 7:10-11, 1 கொரி 15:32). இவர் தன் நெஞ்சிலும், எண்ணத்திலும் இருந்து மற்ற எல்லாரையும் வெளியேற்றி விடுகிறார்.
இவரும், இவரின் செல்வங்கள் மட்டுமே உண்மை என்று அவர் நினைத்துக் கொண்டிருந்த வேளையில் அங்கே ஒலிக்கிறது கடவுளின் குரல்: 'அறிவிலியே! இன்றிரவே உன் உயிர் உன்னை விட்டுப் பிரிந்துவிடும். அப்பொழுது நீ சேர்த்து வைத்தவை யாருடையவை ஆகும்?' என்று கேட்கிறார் கடவுள். 'என் எதிர்காலம் இப்படித்தான் இருக்கும்!' என்று செல்வர் நினைத்துக் கொண்டிருந்த வேளையில், அவரின் மற்றொரு எதிர்காலத்தை அவருக்குச் சுட்டிக் காட்டுகிறார் கடவுள். 'மகிழ்ந்திரு' (எஃப்ராய்ன்) என்ற செல்வரின் இறுதி வார்த்தையை 'முட்டாள்' (அஃப்ராய்ன்) என தன் முதல் வார்த்தையாக மாற்றிப் போடுகின்றார் கடவுள். 'எல்லாம் எனக்கே' என்று நினைத்த செல்வரிடம், 'இதெல்லாம் வேறொருவருடையதாகும்!' என்கிறார் கடவுள்.
12:21ல் கதையின் அறநெறி சொல்லப்படுகிறது: 'கடவுள் முன்னிலையில் செல்வம் இல்லாதவராய்த் தமக்காகவே செல்வம் சேர்ப்பவர் இத்தகையோரே!' ஒருவர் சேர்க்கும் செல்வம் அவருக்காக என்று இருந்தாலும், அவர் இறந்தபின் மற்றவருக்கு விட்டுச் செல்ல வேண்டிய கட்டாயத்தில்தான் இருக்கின்றார். மேலும், தனக்காக செல்வம் சேர்ப்பவர் கடவுள் முன்னிலையில் செல்வம் இல்லாதவர் என்று சொல்லப்படுகின்றார்.
நாம் சேர்த்து வைக்கும் சொத்துக்களை, செல்வத்தை நாம் எடுத்துச் செல்ல முடியாது, அதை நாம் எடுத்துச் செல்ல முடியாதது மட்டுமல்ல, அதற்கு உரிமை இல்லாத ஒருவருக்கு அனைத்தையும் விட்டுச்செல்ல வேண்டும் என்பதே வாழ்வின் எதார்த்தம். இந்த எதார்த்தத்தை இன்றைய முதல் வாசகமும் (காண். சஉ 1:2, 2:21-23) பதிவு செய்கின்றது. 'வீண், முற்றிலும் வீண்!' என தன் நூலைத் தொடங்குகின்ற சபை உரையாளர், 'வீண்' என்ற வார்த்தையை 35 முறை பதிவு செய்கின்றார். 'உழைப்பு,' 'இன்பம்,' 'ஞானம்,' 'அறிவு,' 'சட்டம்' என அனைத்தும் 'வீண்' என்று காரசாரமாக விவாதிக்கின்றார். 'வீண்' என்பதன் எபிரேய வார்த்தை 'ஹேபல்.' இந்த வார்த்தைக்கு 'காற்று' அல்லது 'மூச்சு' என்றும், 'நகரக்கூடியது' என்றும் பொருள். எல்லாமே காற்றைப் போல கடந்து செல்லக் கூடியது என்னும் பொருளை இது உணர்த்துவதால் இதை 'வீண்' என்று மொழிபெயர்க்கிறோம். 'ஹேபல்' என்ற வார்த்தையைப் பயன்படுத்தியேதான் காயினின் சகோதரர் ஆபேலும் அழைக்கப்படுகின்றார். ஆபேலுக்கு நேர்ந்த கொடுமை பற்றி நாம் அனைவரும் அறிவோம். கடவுளுக்கு ஏற்புடைய பலியைச் செலுத்தி, அவருக்கு நல்ல பிள்ளையாய் வாழ்ந்த ஆபேல் காட்டில் கேட்பாரற்றுக் கொலை செய்யப்பட்டுக் கிடக்கின்றார். அந்தக் கொடூரமான கொலையைச் செய்தது அவரின் உடன்பிறந்த சகோதரன் காயின். ஆபேலின் நல்ல செயல்களும் அவரைக் காப்பாற்ற முடியவில்லை. வாழ்க்கையில் 'இவை எல்லாம் என்னைக் காப்பாற்றும்!' என்று நாம் நினைக்கும் எதுவும் நம்மைக் காப்பாற்றாமல் போகலாம் என உணர்ந்த சபை உரையாளர், அதே 'ஹேபல்' என்ற வார்த்தையைப் பயன்படுத்தி வாழ்வின் வீணானவைகளைச் சுட்டிக்காட்டுகின்றார்.
இன்றைய முதல் வாசகத்தின் இரண்டாம் பகுதியில், 'உழைப்பு வீண்' என வாதிடும் சபை உரையாளர், 'ஞானத்தோடும், அறிவாற்றலோடும், திறமையோடும் ஒருவர் உழைத்தாலும், உழைத்துச் சேர்த்த சொத்து அனைத்தையும் உழைக்காத ஒருவருக்கு அவர் விட்டுச் செல்ல வேண்டும். அவரது உழைப்பு வீண் என்பது மட்டுமல்ல. இது ஓர் அநீதியுமாகும். 'எனக்கு உரிமை இல்லாத ஒன்றை நான் எப்படி பெற்றுக்கொள்ள முடியும்?' மேலும், ஞானத்தோடும், அறிவாற்றலோடும், திறமையோடும் ஒருவர் உழைத்தாலும், அவருக்கு துன்பமும், அமைதியின்மையும், தூக்கமின்மையும், மனச்சோர்வும்தான் மிஞ்சுகிறது.
இவ்வாறாக, நம் செல்வம் நமக்கும் மகிழ்வைத் தருவதில்லை. அது உரிமையில்லாத, உழைக்காத ஒருவரிடம் போய்ச் சேர்ந்துவிடுகிறது.
'நிலையானவை-நிலையற்றவை' என்று முதல் மற்றும் மூன்றாம் வாசகங்கள் பேசுவதை, 'மேல்-கீழ்' என்னும் உருவகத்தின் வழியாகப் பதிவு செய்கிறது இன்றைய இரண்டாம் வாசகம் (காண். கொலோ 3:1-5, 9-11). கிறிஸ்தவ வாழ்வின் பண்புகள் பற்றி கொலோசை நகரத் திருச்சபைக்கு அறிவுறுத்தும் பவுல், கிறிஸ்துவோடு ஒருவர் இணைந்து உயிர் பெற்றதன் அடையாளம் 'மேலுலகு சார்ந்தவற்றை நாடுவது' என்கிறார். நாம் இருப்பது கீழுலகம் என்றாலும், நம் எண்ணங்கள் மேலுலகு சார்ந்தவையாக இருக்க வேண்டும். மேலுலகு சார்ந்தவையாக என்பது 'மேலே பார்த்துக் கொண்டிருப்பது' என்ற பொருள் அன்று. மாறாக, காண்பவை யாவும் இவ்வுலகம் சார்ந்தவை. காணாதவை அவ்வுலகம் சார்ந்தவை. காண்பவை நிலையற்றவை. காணாதவை நிலையானவை. 'இவ்வுலகப் போக்கிலான பரத்தைமை, ஒழுக்கக்கேடு, கட்டுக்கடங்காத பாலுணர்வு, தீய நாட்டம், சிலைவழிபாடான பேராசை' அனைத்தும் ஒழிக்கப்பட வேண்டும் (3:5) என்றும் எச்சரிக்கின்றார். இந்த ஐந்து செயல்களுமே பல நேரங்களில் செல்வச் செழிப்பின் வெளிப்பாடாக இருக்கிறது என்பது கண்கூடு. இந்தச் செயல்கள் எல்லாம் பழைய இயல்பு என்று சொல்கின்ற பவுல், 'புதிய மனித இயல்பை நீங்கள் அணிந்திருக்கிறீர்கள்!' என அவர்களுக்கு நினைவூட்டுகின்றார்.
ஆக, நிலையற்றவற்றை நாடுவது பழைய இயல்பு. நிலையானவற்றை நாடுவது புதிய இயல்பு.
இவ்வாறாக, இன்றைய இறைவார்த்தை வழிபாடு, செல்வம் என்பது வாழ்வு தராமல் செல்லும் என்றும், அது தரும் வாழ்வும் வேகமாகச் செல்லும் என்றும் நமக்கு உணர்த்துகிறது.
இன்று இந்த வாசகங்கள் நமக்குத் தரும் வாழ்வியல் பாடங்கள் எவை?
1. செல்வம் என்னும் விநோதம்
'செல்வம் சேர்ப்பது' என்பது எல்லா உயிரினங்களின் வாழ்வியல் தேவை. அரிசியைச் சேகரிக்கும் எறும்பு, கூடு கட்டுவதற்கு முள்களை சேகரிக்கும் காகம், குழியைப் பறித்து சுகமாக அமர்ந்து கொள்ளும் நாய்க்குட்டி, புற்றுக்களைக் கட்டி குடிபுகும் கரையான், பாம்பு என தாழ்நிலை உயிரினங்களும் ஏதோ ஒரு வகையில் உணவையும், உறைவிடத்தையும் சேகரிக்கின்றன. ஆக, செல்வம் சேர்த்தல் என்பது உயிரின் ஒரு பரிமாணம். சேர்த்து வைத்தால்தான் உயிர் வாழ முடியும் என்பது வாழ்க்கை நியதி. இப்படியிருக்க, செல்வம் சேர்த்தல் எப்படி மனித இனத்திற்குப் பாவமாக முடியும்? 'அவனன்றி அணுவும் அசையாது' என்பது முதியோர் வாக்கு. 'அவனன்றி கூட எல்லாம் அசைந்துவிடும். ஆனால், அது (பணம்) அன்றி எதுவும் அசையாது' என்பது இன்றைய வாக்கு. 'செல்வம் தேவையில்லை' என்று நான் இப்போது எழுதுவதற்குக் கூட செல்வம் தேவை - கணினி, மென்பொருள், என் ஓய்வு நேரம், மின்சாரம், அறை, இணைய இணைப்பு, மோடம், சிம்கார்ட். இந்த இரண்டு வார்த்தைகளை நான் எழுதி அவை உங்களை வந்து சேர்வது செல்வம் இருந்தால் மட்டுமே சாத்தியம். ஆக, செல்வம் தேவையில்லை என்று நான் சொன்னால் அது அறிவன்று. செல்வம் வேண்டும், செல்வம் வேண்டாம் என்னும் இரண்டு வட்டங்களின் வரையறை மயிரிழை அளவு வித்தியாசமே. பொய்யாமொழிப் புலவர் வள்ளுவரும், 'அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை, பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை' என்கிறார். 'அவ்வுலகம்' இருக்கிறது என்ற நம்பிக்கை இப்போது வேகமாக மறைந்து வருகிறது. ஆனால், இவ்வுலகமும், 'பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை' என்பதும் வேகமாக நினைவிற்கு வருகிறது!
2. 'நான்' என்னும் செல்வம்
நாம் கண்களுக்கு அணியும் மூக்குக் கண்ணாடியும், முகம் பார்த்து சிகை சீவும் கண்ணாடியும் ஒரே கண்ணாடிதான். ஆனால், மூக்குக் கண்ணாடி வழியாகப் பார்த்தால் நமக்கு அடுத்தவர் தெரிகிறார். முகம் பார்க்கும் கண்ணாடி வழி பார்த்தால் நாம் மட்டுமே தெரிகிறோம். எப்படி? கண்ணாடியின் பின் இருக்கும் வெள்ளிப்பூச்சு. வெள்ளி நம்மை மட்டுமே நமக்குக் காட்டுகிறது. இதுதான் வெள்ளியின் ஆபத்து. நாம் இன்றைய நற்செய்தியில் காணும் செல்வருக்குத் தெரிவதெல்லாம் அவரும், அவருடைய வயலும், அறுவடையும், தானிய மூட்டைகளும், களமும், கிடங்கும், நெஞ்சமும், மகிழ்ச்சியும்தான். அவருடைய வேலியைத் தாண்டி அவரால் யோசிக்க முடியவில்லை. ஒருவர் நாய்க்குட்டியைப் பிடித்து நடந்து செல்கிறார் என்றால், கொஞ்ச நேரத்தில் 'அவர் நாய்க்குட்டியைப் பிடித்திருக்கிறார்' என்ற நிலை, 'நாய்க்குட்டி அவரைப் பிடித்திருக்கும்' நிலையாக மாறிவிடுகிறது. செல்வமும் அப்படித்தான். நாம் கொஞ்சம், கொஞ்சமாக வைத்திருக்கும் செல்வம், காலப்போக்கில் நம்மைக் கொஞ்சம் கொஞ்சமாக வைத்துக்கொள்ள ஆரம்பிக்கிறது.
3. 'உழைப்பு' என்னும் 'வீண்'
'முயற்சி திருவினையாக்கும்,' 'தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும்,' 'கடின உழைப்புக்கு ஈடு இணையில்லை' என்று கடின உழைப்பு பற்றியும், முயற்சியும் பற்றி நமக்கு அறிவுறுத்தப்படுகின்றது. இந்த எல்லா அறிவுரைகளையும் 'வீண்' என்ற ஒற்றை வார்த்தையில் எழுதி முடித்து பேனாவை வீசி எறிகின்றார் சபை உரையாளர். உழைப்பு வீணா? உழைப்பால் பயனில்லையா? உழைப்பு இல்லை என்றால் இன்று நாம் குரங்குகளாகத்தானே இருந்திருப்போம். நாம் இரண்டு கால்களில் நிற்கத் தொடங்கியது முதல், இன்று கால்களே இல்லாமல் பறக்கத் தொடங்கியது வரை எல்லாவற்றுக்கும் காரணம் உழைப்பும், முயற்சியும்தானே. நாம் இன்று கவினுறு முறையில் படைத்திருக்கும் உலகம், அறிவியல், விஞ்ஞான வளர்ச்சி, கல்வி, மருத்துவம், அரசியல், பொருளாதார வளர்ச்சி எல்லாவற்றுக்கும் காரணம் நம் முயற்சியும், உழைப்பும்தானே. உழைப்பு வீண் அல்ல. ஆனால், உழைப்புதான் எல்லாம் என நினைத்து ஓய்வு, குடும்பம், உறவுகள், நட்பு, மகிழ்ச்சி ஆகியவற்றை மறப்பது சால்பன்று. உழைப்பு மட்டும் எல்லாம் அல்ல. உழைப்பின் கனிகளையும் சுவைக்க ஒருவர் நேரம் ஒதுக்க வேண்டும். நாம் 60 வருடங்கள் வாழ்கிறோம் என வைத்துக்கொள்வோம். இந்த 60 வருடங்களுக்குத் தேவையானவற்றை நாம் உழைத்து வைத்தால் போதாதா? 'நாளை என்ன நடக்கும்?' என்ற பயமும், 'இது போதாது!' என்ற எண்ணமும், 'அவனிடம் அதிகம் இருக்கிறது' என்ற ஒப்பீடும் நம்மை உழைத்துக்கொண்டே இருக்க வைக்கிறது. 'என்ன நடந்தாலும் எனக்குக் கவலையில்லை' என்ற துணிச்சலும், 'இது போதும்!' என்ற எண்ணமும, 'என்னிடமும் எல்லாம் இருக்கிறது!' என்ற நிறைவும்தான் மாற்று மருந்து.
4. புது விளையாட்டு விதி
'விளையாட்டு முடியும்போது யாரிடம் அதிகம் பொம்மைகள் இருக்கிறதோ அவரே வெற்றியாளர்' என்று நாம் ஒரு விதியை உருவாக்கி வைத்து விளையாடிக் கொண்டிருக்கிறோம். வீடு, வாசல், பெயர், புகழ், பொன், நிலம் என நிறைய பொம்மைகளைச் சேர்த்து வைக்கின்றோம். ஆனால், அந்த பொம்மைகள் நம்மிடம் நிறைய இருந்தாலும் அவற்றை அப்படியே அடுத்த விளையாட்டுக்காரருக்கு (வீட்டுக்காரருக்கு) விட்டுச் செல்கின்றோம். பவுல் இன்றைய இரண்டாம் வாசகத்தில் புதிய விளையாட்டு விதியை அறிமுகம் செய்கின்றார்: 'இவ்வுலகில் நாம் விளையாடிக் கொண்டிருந்தாலும், நம் கண்கள் எப்போதும் மேலுலகு என்னும் கோல்-போஸ்டில் தான் இருக்க வேண்டும்!' நம் எண்ணங்கள், ஓட்டங்கள், திட்டங்கள் அனைத்தும் அதை நோக்கியே இருக்க வேண்டும். நம் பழைய ஜெர்ஸியை அகற்றவிட்டு, புதிய ஜெர்ஸியை அணிந்து கொள்ள வேண்டும். அப்படி அணிந்து கொண்டால், 'இவர் பெரியவர், அவர் சிறியவர்' என்ற வேற்றுமை எண்ணமும், 'இந்த இன்பம் மட்டும் போதும்!' என்ற இன்பத் தேடலும் முடிவுக்கு வரும்.
நாம் ஒரு நாணயத்தைக் காட்டி, 'இது செல்லுமா!' என்கிறோம். 'செல்லும்' நாணயங்கள்தாம் நம் 'செல்வம்.' 'செல்லா' நாணயங்கள் நம் செல்வங்கள் அல்லவே! ஆக, 'செல்வதும்,' 'செல்வமும்' நாணயத்தின் இரண்டு பக்கங்கள்போல எப்போதும் இணைந்தே இருக்கின்றன. 'நம் கையைவிட்டு செல்வதால்தான் அது செல்வம்' என்றும், 'செல்வம் கண்டிப்பாக செல்லும்' என்றும் உணரத்தொடங்கினால், நாம் 'அறிவான செல்வர்கள்!