பாஸ்கா காலம் 3ஆம் ஞாயிறுI. திருத்தூதர் பணிகள் 5:27-32, 40-41 II. திருவெளிப்பாடு 5:11-14 III. யோவான் 21:1-19
என் சாக்குத் துணியைக் களைகிறார்!
திருச்சிராப்பள்ளி மணிகண்டத்தைச் சேர்ந்த கோமதி மாரிமுத்து 2019ஆம் ஆண்டு கத்தார் நாட்டிலுள்ள தோகாவில் நடந்த ஆசிய தடகள போட்டிகளில் பெண்கள் பிரிவில் 800 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்றார். இவர் ஓடி முடித்து விளையாட்டரங்கில் ஓய்ந்து நின்ற நேரம் எடுக்கப்பட்ட புகைப்படத்தில் இவர் ஏறக்குறைய கிழிந்து நைந்துபோன ஷூ ஒன்றை அணிந்திருப்பது பலருடைய கண்களில் பட்டது. தன் பழைய கிழிந்த ஷூதான் தனக்கு லக்கி என்று இந்த இளவல் பெரிய மனத்துடன் பெருமைப்பட்டுக்கொண்டாலும், புதிய காலணிகள் வாங்குவதற்குக் கூட இயலாத இவருடைய பின்புலமும், கிரிக்கெட் போன்ற விளையாட்டுக்களுக்குத் தரப்படும் முக்கியத்துவம் மற்ற விளையாட்டுக்களுக்குத் தரப்படவில்லை என்ற விளையாட்டு அரசியலும் இங்கே தெளிவாகிறது. தன் தங்கத்தின் வெற்றிக்குப் பின்னாலும் தன்னுடைய கிழிந்த ஷூவைக் கழற்றத் துணியவில்லை கோமதி.
இவரின் வெற்றிக் களிப்பும், மகிழ்ச்சியும் இவரின் கிழிந்த காலணியைக் கழற்ற முடியவில்லை.
முதன் முதலாக வாங்கி உடைந்த பேனா, நம் லக்கியான சேலை, ஷர்ட், திருமண பட்டுச் சேலை, குருத்துவ அருள்பொழிவு திருவுடை, பழைய டைரி என நிறைய பழையற்றையும், கிழிந்தவற்றையும் நாம் இன்று நம்முடன் வைத்திருந்து பழமை பற்றிப் பெருமை கொள்கிறோம். பழமையான இவைகளை நாம் பாதுகாக்கக் காரணம் இவை நம் இறந்த காலத்தை, நம் வேர்களை நமக்கு நினைபடுத்துகின்றன.
ஆனால், சில நேரங்களில் - இல்லை, பல நேரங்களில் - நாம் தூக்கி எறியப்பட வேண்டிய பழையவற்றை இன்னும் தூக்கிக்கொண்டே திரிகிறோம். இப்படிப்பட்ட நேரங்களில் நம் பழையவற்றை அகற்றிவிட்டு புதியவற்றை அருள இறைவன் வருகிறார் என்று நமக்கு நம்பிக்கை அளிக்கிறது இன்றைய இறைவார்த்தை வழிபாடு.
இன்றை பதிலுரைப்பாடலோடு (காண். திபா 30) நம் சிந்தனையைத் தொடங்குவோம்:
'புகழ்ப்பா, திருக்கோவில் அர்ப்பணப்பா, தாவீதுக்கு உரியது' என்று தலைப்பிடப்பட்டுள்ள இப்பாடல் மிக அழகான உருவகம் ஒன்றைக் கொண்டிருக்கிறது. 'நீர் என் புலம்பலை களிநடனமாக மாற்றிவிட்டீர். என் சாக்குத் துணியைக் களைந்துவிட்டு எனை மகிழ்ச்சியால் உடுத்தினீர்!' (திபா 30:11). 'புலம்பல்' மற்றும் 'சாக்குத்துணி', 'களிநடனம்' மற்றும் 'மகிழ்ச்சி' என்ற ஒரே பொருள் கொண்ட சொற்கள் அடுத்தடுத்துப் பயன்படுத்தப்படுவதால், இங்கே 'ஒருபோகு நிலை' அல்லது 'இணைவுநிலை' என்னும் இலக்கியக்கூறு காணக்கிடக்கிறது.
தான் அணிந்திருக்கின்ற சாக்குத்துணியை கடவுள் அகற்றுவதாக தாவீது பாடுகிறார். இன்று சாக்கு என்பது 'ஜனல்' என்ற தாவரத்திலிருந்து தயாரிக்கப்படுகிறது. முதல் ஏற்பாட்டுக் காலத்தில் இது ஆடுகளின் மயிரிலிருந்து தயாரிக்கப்பட்டது. இந்த சாக்கு ஒரு விநோதமான பயன்பாட்டுப் பொருள். உணவுப் பொருள்களான அரிசி, கோதுமை, சீனி போன்றவை சேமிக்கப்படுவதும் சாக்கில்தான். அடுப்பறையில், கழிவறைக்கு வெளியில் ஈரம் அகற்றும் கால்மிதியாகப் பயன்படுத்துவதும் சாக்குதான். வீட்டிற்கு வெளியே தாழ்வாரத்தில் நிழலுக்கு, கவிழ்த்து வைக்கப்பட்ட பஞ்சாரத்துக் கூடையிலிருக்கும் கோழிக்குஞ்சுகளை பருந்துகளின் பார்வையிலிருந்து காப்பாற்ற கூடையின் மேல், பெரிய பாத்திரத்தை சூடு பொறுத்து இறக்க கைகளில், அப்பாத்திரத்தின் கரி தரையில் படியாமல் இருக்க தரையில், பழைய பாத்திரங்களை மூட்டை கட்டி வண்டியில் ஏற்றி வீடு மாற்ற என்று இதன் பயன்பாடு மிகவே அதிகம். நெகிழி (பிளாஸ்டிக்) பைகள் தடைசெய்யப்பட்டபின் இப்போது சாக்குப் பைகளின் பயன்பாடு அதிகரித்துள்ளது நம் ஊரில். விவிலியத்தில் சாக்கு மூன்று பொருள்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது: ஒன்று, துக்கம் அல்லது சோகம். தன் மகன் யோசேப்பு கொல்லப்பட்டான் என்று தனக்கு அறிவிக்கப்பட்டவுடன் யாக்கோபு சாக்கு உடை அணிந்து துக்கம் கொண்டாடுகிறார் (காண். தொநூ 37:34). தன் இனத்தார் அழிக்கப்படப் போகின்றனர் என்று கேள்விப்பட்ட எஸ்தர் அரசி சாக்கு உடை அணிகின்றார் (காண். எஸ் 4:1-2). தன் மகனின் இறப்பு செய்தி கேட்டவுடன் சாக்கு உடை அணிகின்றார் தாவீது (காண். 2 சாமு 42:25). இரண்டு, மனமாற்றம். ஏறக்குறைய முதல் பொருளை ஒட்டியதுதான். இறைவாக்கினர் யோனாவின் செய்தியைக் கேட்ட நினிவே நகரம் சாக்கு உடை அணிந்துகொள்கிறது (காண். யோனா 3:8, மத் 11:21). மூன்று, சேமிப்பு பை. எகிப்துக்கு உணவு சேகரிக்க வந்த தன் சகோதரர்களின் கோணிப்பையில் தன் வெள்ளித்தட்டை வைத்து தைக்கிறார் யோசேப்பு (காண். தொநூ 42:25).
'என் சாக்குத் துணியை நீர் களைகிறீர்' என்று தாவீது பாடும்போது, தன்னுடைய 'துக்கத்தையும்,' 'பாவத்தையும்' இறைவன் களைவதாக முன்மொழிகின்றார் தாவீது. கடவுள் சாக்குத்துணியை அகற்றினால் மட்டும் போதுமா? நிர்வாணத்தை அவரே மறைக்கின்றார். எப்படி? மகிழ்ச்சியால்.
இன்றைய முதல் வாசகத்தில் (காண். திப 5:27-32,40-41) திருத்தூதர்கள் பேதுருவும் யோவானும் கைது செய்யப்பட்டு தலைமைச் சங்கத்தின்முன் நிறுத்தப்படுகின்றனர். தலைமைச் சங்கம்தான் இயேசுவுக்குச் சிலுவைத்தீர்ப்பிடுமாறு பிலாத்துவை வலியுறுத்தியது. தங்களுடைய ஆண்டவரும் போதகருமான இயேசுவைக் கொலைக்கு உட்படுத்திய அதே சங்கத்தின்முன் பேதுருவும் யோவானும் நிறுத்தப்படும்போது இயல்பாக அவர்களின் உள்ளத்தில் எழுகின்ற உணர்வு 'பயம்.' 'நீங்கள் இந்த இயேசு பற்றிக் கற்பிக்கக்கூடாது என்று நாங்கள் கண்டிப்பாகக் கட்டளையிடவில்லையா?' என்று தலைமைக்குரு கேட்டபோது, 'மனிதர்களுக்குக் கீழ்ப்படிவதைவிட நாங்கள் கடவுளுக்குக் கீழ்ப்படிய வேண்டுமில்லையா?' என்று எதிர்கேள்வி கேட்கின்றனர் திருத்தூதர்கள். இந்தப் பதிலில் இவர்களின் பயமற்ற நிலையையும் அதே வேளையில், 'நீ ஒரு மனிதன்தான்!' என்ற தலைமைக் குருவையே எதிர்த்து நிற்கும் இறைவாக்கினர் துணிச்சலையும் பார்க்கின்றோம். இவர்களின் இந்தப் பதிலால் இவர்கள் நையப்புடைக்கப்படுகின்றனர். ஆனாலும் விடுதலை செய்யப்படுகின்றனர். விடுதலை செய்யப்பட்ட திருத்தூதர்கள், 'இயேசுவின் பெயரை முன்னிட்டு அவமதிக்கு உரியவர்களாகக் கருதப்பட்டதால் திருத்தூதர்கள் மகிழ்ச்சியோடு தலைமைச் சங்கத்திலிருந்து வெளியே சென்றனர்' எனப் பதிவு செய்கிறார் லூக்கா.
அரசவையிலிருந்து பொன்னும் பரிசிலும் பெற்று வெளியே வந்தால் ஊரார் வியப்புடன் பார்த்து வாயாரப் புகழ்வர். நெற்றி முகர்வர். நன்றாய் அடிபட்டு, கிழிந்த ஆடை, உடைந்த பற்கள். வழியும் இரத்தம், கலைந்த தலை என்று வெளியே வந்தால் எல்லாரும் ஏளனம் செய்வர். ஒதுங்கிச் செல்வர். ஆனால், திருத்தூதர்கள் அச்சம் அற்றவர்களாக, அவமதிப்பை ஏற்றுக்கொள்பவர்களாக இருப்பதோடு, இவற்றுக்காக மகிழ்ச்சியும் அடைகின்றனர்.
ஆக, 'அச்சம்' என்னும் சாக்குத்துணியை திருத்தூதர்களிடமிருந்து அகற்றி 'மகிழ்ச்சி' என்ற ஆடையை கடவுள் இவர்களுக்கு அணிவிக்கின்றார்.
இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். திவெ 5:11-14) யோவான் 'கொல்லப்பட்ட ஆட்டுக்குட்டியைக்' காட்சியில் காண்கின்றார். 'பார்ப்பதற்கேற்ற தோற்றம் இல்லாமல், இகழப்பட்டு, மனிதரால் புறக்கணிக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு, சிறுமைப்படுத்தப்பட்டு, அடிப்பதற்காக இழுத்துச்செல்லபட்ட ஆட்டுக்குட்டி போல' (காண். எசா 52:13-53:12) இருந்த இயேசு, 'வல்லமை, செல்வம், ஞானம், ஆற்றல், மாண்பு, பெருமை, புகழ்' என்னும் ஏழு குணங்களைப் பெருகிறார். யூத நம்பிக்கைப்படி கடவுள் கொண்டிருக்கும் அல்லது கடவுளிடம் நிறைவாக இருக்கும் ஏழு குணங்கள் இவை. கடவுளுக்கு உரித்தான ஏழு நிறைகுணங்களும் இப்போது இயேசுவுக்கு வழங்கப்படுகின்றன.
ஆக, 'அவமானம்' என்னும் சாக்குத்துணியை இயேசுவிடமிருந்து அகற்றி, 'மாட்சி' என்ற ஆடையை கடவுள் அவருக்கு அணிவிக்கின்றார்.
இன்றைய நற்செய்தி வாசகம் (காண். யோவா 21:1-19) யோவான் நற்செய்தியின் பிற்சேர்க்கைப் பகுதியிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. உயிர்த்த இயேசு கலிலேயாவில் தன் சீடர்களுக்குத் தோன்றும் நிகழ்வை இரண்டு நிலைகளில் பதிவு செய்கிறார் யோவான். முதலில், லூக்கா நற்செய்தில் செய்வதுபோல, தன் சீடர்களோடு இணைந்து உணவு உண்கிறார் இயேசு. இரண்டவதாக, மூன்று முறை தன்னை மறுதலித்த பேதுருவை, 'என்னை அன்பு செய்கிறாயா?' என்று மூன்று முறை கேட்டு, தலைமைத்துவத்தால் அவரை அணிசெய்கிறார்.
எருசலேமிலிருந்து கலிலேயா திரும்புகின்ற சீடர்கள் தாங்கள் முதலில் செய்துவந்த மீன்பிடித்தொழில் செய்யப் புறப்படுகின்றனர். இது இவர்களுடைய ஏமாற்றத்தின், விரக்தியின், சோர்வின் வெளிப்பாடாகக்கூட இருக்கலாம். அவர்களை அழைத்த நிகழ்வில் போலவே (காண். லூக் 5:1-11) காலியான வலைகள் மற்றும் காலியான வயிறுகளோடு காய்ந்திருக்கின்ற சீடர்களுக்கு மிகுதியான மீன்பாட்டை அருளுகின்றார் இயேசு. அவர்கள் தங்களுடைய பழைய வாழ்க்கைக்குத் திரும்பியதை இயேசு கடிந்துகொள்ளவில்லை. மாறாக, தாயன்போடு, 'பிள்ளைகளே' என் அவர்களை அழைத்து, 'கரியினால் தீ மூட்டி உணவு தயாரித்து' அவர்களின் பசியைப் போக்குகின்றார். தொடர்ந்து, சீமோன் பேதுருவோடு தனித்து உரையாடும் இயேசு, 'நீ இவர்களைவிட மிகுதியாக என்னை அன்பு செய்கிறாயா?' என்று கேட்டு, 'என் ஆட்டுக்குட்டிகளைப் பேணி வளர்,' 'என் ஆடுகளை மேய்,' 'என் ஆடுகளைப் பேணி வளர்' என்று தலைமைத்துவப் பொறுப்பை அவருக்கு அளிக்கின்றார். மேலும், பேதுருவின் இறுதிக்காலம் எப்படி இருக்கும் என்பதையும் முன்னுரைக்கும் இயேசு, 'என்னைப் பின்தொடர்!' என்று தற்கையளிப்பிற்கு அவரை அழைக்கின்றார்.
ஆக, 'குற்றவுணர்வு' என்னும் சாக்குத் துணியை சீடர்களிடமிருந்து அகற்றும் இயேசு, 'பொறுப்புணர்வு' என்ற ஆடையால் அவர்களை அணிசெய்கின்றார்.
இவ்வாறாக, இன்றைய முதல் வாசகத்தில், 'அச்சம்' என்னும் சாக்குத் துணி அகற்றப்பட்டு, 'மகிழ்ச்சி' என்னும் ஆடையும், இரண்டாம் வாசகத்தில், 'அவமானம்' என்னும் சாக்குத் துணி அகற்றப்பட்டு, 'மாட்சி' என்னும் ஆடையும், நற்செய்தி வாசகத்தில், 'குற்றவுணர்வு' என்னும் சாக்குத் துணி அகற்றப்பட்டு, 'பொறுப்புணர்வு' என்னும் ஆடையும் அணிவிக்கப்படுகிறது.
இன்று நம்மிடம் இருக்கும் 'அச்சம்,' 'அவமானம்,' மற்றும் 'குற்றவுணர்வு' என்ற சாக்குத் துணிகளை அகற்றி, 'மகிழ்ச்சி,' 'மாட்சி,' 'பொறுப்புணர்வு' என்னும் ஆடைகளை நமக்கு அணிவிக்கின்றார் கடவுள்.
எப்படி?
1. 'அச்சம்' அகற்றி 'மகிழ்ச்சி'
நம் இருப்பை நாம் மறுக்கும்போது, அல்லது பிறருடைய இருப்பை அதிக மதிப்பிடும்போது நமக்கு அச்சம் வருகிறது. எடுத்துக்காட்டாக, தலைமைக் குருவைப் பார்த்து மறைமுகமாக, 'நீரும் ஒரு மனிதன்தான். உமக்கு அச்சப்படத் தேவையில்லை' என்று சொல்கின்றனர் திருத்தூதர்கள். பல நேரங்களில் இல்லாத ஒன்றை இருப்பது போல நினைத்து, அல்லது இருப்பதை மிகைப்படுத்திப் பார்த்து நாம் அச்சம் கொள்கிறோம். சிறிய தலைவலி வந்தால் புற்றுநோய் வந்துவிட்டதாகவும், சிறிய பிரச்சினையை பெரிய ஆபத்தாகவும் நினைக்கின்றோம். தாங்கள் யார் என்றும், தங்களுடன் கடவுள் இருக்கின்றார் என்றும் அறிந்துகொள்கின்ற சீடர்கள், தலைமைக்குரு யார் என்றும் தெரிந்துகொள்கின்றனர். இவ்வளவு நாளாக, தாங்கள் கொண்டிருந்த மிகைப்படுத்துதலை அகற்றி, 'நீயும் ஒரு மனிதன்தான். உன்னைவிட கடவுள் இருக்கிறார்' என்று துணிவு கொள்கின்றார். ஆக, மிகைப்படுத்துதல் மறைந்தாலே அச்சம் மறைந்துவிடும். அரசுத் தேர்வில் தோற்றுவிட்டால் வாழ்விலேயே தோற்றுவிட்டதுபோல நாம் அச்சப்படக் காரணம் நம்முடைய மிகைப்படுத்துதலே. ஆக, மிகைப்படுத்துதல் மறைந்து, மனிதர்களை மனிதர்களாக, தேர்வை தேர்வாக, பிரச்சனையை பிரச்சினையாகப் பார்க்கும்போதும், இவற்றை எல்லாம் விட பெரிய கடவுளை நம் அருகில் வைத்துக்கொள்ளும்போதும் நம் அச்சம் மறைந்து நமக்கு மகிழ்ச்சி பிறக்கிறது.
2. 'அவமானம்' அகற்றி 'மாட்சி'
இன்று நாம் ஒருவரின் பின்புலம், இருப்பு, கையிருப்பு, பையிருப்பு ஆகியவற்றை முதன்மைப்படுத்தி பார்க்கும்போது, அவரை நாம் நம்மைவிடத் தாழ்வானவர் என எண்ணி, இகழ்ச்சியாகப் பார்ப்பது சில நேரங்களில் நடக்கும். அல்லது இதே காரணங்களுக்காக நாமும் மற்றவர்களால் அவமானத்திற்கு உள்ளாகியிருப்போம். அவமானம் அல்லது வெட்கம் என்பது நம்முடைய ஆளுமையைச் சீர்குலைக்கும் பெரிய காரணி. 'தனக்குத் தானே பொய்யாய் இருக்கும் ஒருவர் அவமானத்தால் கூனிக்குறுகுவார்' என்கிறார் இரஷ்ய எழுத்தாளர் டோஸ்டாய்வ்ஸ்கி. எடுத்துக்காட்டாக, என் அறையின் இருட்டின் தனிமையில் நான் ஒரு மாதிரியாகவும், வெளியில் வேறு மாதிரியாகவும் இருக்கும்போது, என்னை அறியாமல் என் மனம் வெட்கப்படும். ஏனெனில், என் மனத்திற்கு என் அறையின் இருட்டில் நான் எப்படி இருக்கிறேன் என்று தெரியும். நமக்குள்ளே நாம் கொள்ளும் அவமானம் குறைய வேண்டுமெனில் எனக்கு நானே பொய் சொல்வதை நான் குறைக்க வேண்டும். பிறரால் வரும் அவமானம் குறைய வேண்டுமெனில் நான் பொறுமை காக்க வேண்டும். ஆக, பொய்யைக் குறைக்கும்போது, பொறுமையாய் இருக்கும்போது அவமானம் மறைந்து மாட்சி பிறக்கும்.
3. 'குற்றவுணர்வு' அகற்றி 'பொறுப்புணர்வு'
நம்மை வெற்றிப்பாதையிலிருந்து பின்நோக்கி இழுக்கும் ஒரு பெரிய காரணி குற்றவுணர்வு. நாம் கடந்த காலத்தில் செய்த தவறும், அந்தத் தவறு நம்மில் உருவாக்கிய காயமும் நம்மை முன்நோக்கிச் செல்லவிடாது. 'ஐயோ! நான் இப்படி,' 'நான் இப்படித்தான்,' 'என்னால் திருந்த முடியாது,' 'என் பழைய சுமை கடினமாக இருக்கிறது' என்று சோர்வும், விரக்தியும் கொண்டிருந்தால் நம்மால் முன்னேறிச் செல்ல முடியாது. முதல் ஏற்பாட்டில் மிக அழகான வாக்கியம் இருக்கிறது: தானும் தன் மனைவியும் தன் நிலமும் கடவுளால் சபிக்கப்பட்டவுடன், ஆதாம் தன் மனைவிக்கு 'ஏவாள்' எனப் பெயரிடுகின்றான். இதுவரை 'பெண்' (காண். தொநூ 2:23) என அறியப்பட்டவள் இப்போது 'உயிர் வாழ்வோர் அனைவரின் தாயாக' (காண். தொநூ 3:20) மாறுகிறாள். 'ஐயோ! பாவம் செய்தாயிற்று! கீழ்ப்படியவில்லை! கடவுளின் கட்டளை மீறிவிட்டேன்!' என ஆதாமும், ஏவாளும் குற்றவுணர்வுடன் புலம்பிக் கொண்டே இருக்கவில்லை. அடுத்து என்ன செய்வது? என்று தங்கள் வாழ்க்கைக்குப் பொறுப்பேற்கின்றனர். நாமும் நம் பழைய பாவக் காயங்களை மறக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். இன்னும் சிலர், கொஞ்சம் நன்றாகச் சிரித்தாலே, அல்லது தங்களுக்கென ஒரு நல்ல பொருளை வாங்கினாலே குற்றவுணர்வு கொள்வர். இதுவும் ஆபத்தானது. நாம் மகிழ்ச்சியாக இருக்கவும், நல்ல பொருள்களைப் பயன்படுத்தவும், மதிப்பாக இருக்கவும், மதிப்பானவற்றோடு, மதிப்பானவர்களோடு உறவு கொள்ளவும் குற்றவுணர்வுகொள்தல் கூடாது. மதிப்பான இந்தப் பொருளை வைத்து நான் எப்படி என் மதிப்பைக் கூட்ட முடியும்? என்று நினைக்க வேண்டுமே தவிர, 'ஐயோ! எனக்கு தகுதியில்லை இதற்கு!' என்று அழுது புலம்பக்கூடாது. 'நான் தவறிவிட்டேன். நான் மறுதலித்தேன். ஆனால், எல்லாவற்றிற்கும் மேலாக உம்மை அன்பு செய்கிறேன்' என சரணாகதி ஆகிறார் பேதுரு. ஆக, குற்றவுணர்வு மறையும்போது பொறுப்புணர்வு தானாக வந்துவிடுகிறது.
இறுதியாக,
பழைய சாக்குத் துணிகளை இறைவன் அகற்றி புதிய ஆடைகளை நமக்கு அணிவிக்க அவர் முன்வரும்போது, நாம் கொஞ்சம் எழுந்து நிற்போம். அப்போதுதான், 'மகிழ்ச்சி என்னும் ஆடை அணிந்து களிநடனம் செய்ய முடியும்' - இன்றும் என்றும்!
பாஸ்கா காலம் மூன்றாம் வாரத்தின் மறையுரை!ஆசிய தடகள போட்டியில் 300 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்ற திருச்சியைச் சேர்ந்த கோமதி.இந்த தங்கம் வாங்கிய பின்னாலும் கூட…தன் வெற்றி தந்த களிப்பிலும் கூட தன் கிழிந்த காலணியைக் கழற்றத்துணியவில்லை கோமதி. இப்படித்தான் நாமும் பல நேரங்களில் தூக்கி எறியவேண்டிய அழுக்குகளை நம் தோள்மேல் சாக்கு மூட்டைகளாகத் தூக்கி சுமக்கிறோம். இப்படிப் பட்ட நமக்க்கு நாம் அணிந்திருக்கும் சாக்குத் துணியைக் களைந்துவிட்டுப் புது ஆடையை அணிவிக்க விரும்புகிறார் இறைவன். தாவீதின் புலம்பலைக் களிநடனமாக்கிவிட்ட இறைவன், அவரின் துக்கத்தையும்.புலப்பலையும் ஏன் அவரின் நிர்வாணத்தையும் கூட சேர்த்தே மறைக்கிறார்.
ReplyDeleteஇயேசு நிறுத்தப்பட்ட அதே தலைமைச்சங்கத்தின் முன் யோவானும்,பேதுருவும் நிறுத்தப்பட, அவர்கள் கடவுளன்றி வேறு யாருக்கும் அஞ்சமாட்டோமென நையப்புடைத்து
வெளியே அனுப்பப்படுகின்றனர்..அவமதிப்பை ஏற்றுக்கொண்ட இவர்களை இறைவன் அச்சம் எனும் சாக்குத் துணியை நீக்கி மகிழ்ச்சி எனும் ஆடையால் நிரப்புகிறார் என்று சொல்லும் திருத்தூதர் பணிகளிலிருந்து எடுக்கப்பட்ட வாசகம்…..
உருவமே ஒடுங்கிப்போய் ஒடுக்கப்பட்டு,சிறுமைப்பட்டு இருந்த இயேசுவுக்கு வல்லமை,ஆற்றல்,ஞானம் போன்ற குணங்கள் வழங்கப்பட்டு..அவமானம் எனும் சாக்குத்துணியை அகற்றி “ மாட்சி” எனும் ஆடையால் அணிவிக்கிறார் என்று சொல்லும் திருவெளிப்பாட்டிலிருந்து எடுக்கப்பட்ட இரண்டாம் வாசகம்…
யோவான் நற்செய்தியிலிருந்து எடுக்கப்பட்ட பகுதி முழுவதும் கொட்டிக்கிடப்பது அன்பு மட்டுமே!….தன் சீடர்களோடு அமர்ந்து உணவு உண்பதும்…மறுதலித்த பேதுருவை அன்பு செய்கிறாயா? என்று மும்முறை கேட்பதும் அன்பின் உச்சகட்டம்.குற்றவுணர்வு எனும் உணர்வகற்றி அவர்களைப் பொறுப்புணர்வு எனும் ஆடையால் நிரப்புகிறார் இறைவன்.
இன்று நம் அவலத்தின் உச்சியில் இருக்கும் போது அச்சம்..அவமானம்…குற்றவுணர்வு இவைகளில் மூழ்கிக்கிடக்கும் போது மகிழ்ச்சி..மாட்சி பொறுப்புணர்வு எனும் ஆடைகளால் நம்மை மகிழ்விக்கிறார் இறைவன்.என்னை இதற்குத் தகுதியாக்க நான் செய் ய வேண்டியதென்ன?”அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்” என்று கேட்டிருப்போம். “என்னுடன் உறையும் இறைவன் அயர்வதுமில்ல: தூங்குவது மில்லை”, “என் ஆயன் என்னுடன் இருக்கிறார்” போன்ற எண்ணங்கள் நம் உள்ளத்துக்கு உரமூட்டும்போது.. “என்னை கலக்கமுறச் செய்ய நீ யார்?” எனத் துணிந்து ஒருவனைப் பார்த்துக் கேட்கும் போதும் நம்மில் ‘அச்சம்’ மறைந்து ‘மகிழ்ச்சி’ ஏற்படுகிறது. பலர் நம் சமூகத்தில் தாங்கள் பெரியவர்கள் என்று காட்டிக்கொள்ள புழுகு மூட்டைகளாகி விடுகின்றனர். மூட்டை அவிழ்ந்து பொய்யான விஷயங்கள் சிதறுகையில் கிடைப்பது “அவமானம்”. என்னிடம் உள்ளதைப் பெருமையோடு ஏற்றுக்கொள்வதே “ மாட்சி” என நம்ப வேண்டும்.
செய்த குற்றங்களிலேயே உழன்று கொண்டிருப்பது “ குற்றவுணர்வு” அதில் வெளிவரப் பார்ப்பவரே மனிதன். அவனுக்குக் கிடைப்பது பொறுப்புணர்வு பேதுருக்கு கிடைத்தது போல….பாவம் செய்த ஏவாளுக்கு “மனுக்குலத்தின் தாய்” எனும் பட்டம் கிடைத்தது போல.
ஆனாலும் இந்த அச்சம்,அவமானம்,குற்றவுணர்வு எனும் உணர்வுகள்
மகிழ்ச்சி,மாட்சி,பொறுப்புணர்வு என்று மாற வேண்டுமெனில் அதற்கான தகுதியை என்னுள் நான் வளர்ததுக்கொள்வது அவசியம்.
இறுதியாக வருகின்றன தந்தையின் வார்த்தைகள்..ஒரு சக்கரத்தின் அச்சாணி போல்…” பழைய சாக்குத்துணிகளை இறைவன் அகற்றி,புதிய ஆடைகளை நமக்கு அணிவிக்க அவர் முன்வரும்போது நாம் கொஞ்சம் எழுந்து நிற்போம்.அப்போதுதான் மகிழ்ச்சி எனும் ஆடை அணிந்து களி நடனம் செய்ய முடியும்!” இன்றும் எனறும்!
அர்த்தமுள்ள வார்த்தைகளை அழகுறப் படைத்த தந்தைக்கு வாழ்த்துக்களும்! ஞாயிறு வணக்கங்களும்!!!