உண்மை விடுதலை அளிக்கும்
இயேசு தன் வாழ்வில் எப்போதும் தக்க வைத்துக்கொண்ட ஒரு மேன்மையான பண்பு 'கட்டின்மை' அல்லது 'விடுதலை.' மற்றவர்களும் தங்களுடைய கட்டின்மை அல்லது விடுதலையை அனுபவிக்க வேண்டும் என்றும், அதை மேன்மையாகக் கருதிப் போற்ற வேண்டும் என்றும், ஒருவர் மற்றவரின் விடுதலையை ஊக்குவிக்க வேண்டும் என்று அவர் விரும்பினார்.
பெத்சதா குளத்தருகில் 38 ஆண்டுகளாகக் கிடந்த உடல்நலமற்றவருக்கு உடல்சார்ந்த விடுதலை அளிக்கின்றார் (யோவா 8). மெசியா என்பது அரச நிலை என்று நினைத்த தன் சீடர்களிடம் மெசியா என்பது துன்புறும் நிலை என்று விளக்கியதன் வழியாக அவர்களுக்கு அறிவுசார்ந்த விடுதலை அளிக்கின்றார். பாவிகளோடும் வரி தண்டுபவரோடும் உணவருந்தியதன் வழியாக அவர்களும் சமத்துவத்தின் மக்கள் என உணர்த்தி, உணர்வுசார் விடுதலைக்கு அனைவரையும் அழைக்கின்றார். 'ஆனால் தேவையானது ஒன்றே!' என்று மார்த்தாவை ஆன்மிக விடுதலைக்கு அழைக்கின்றார்.
இன்றைய நற்செய்தி வாசகம் (யோவா 8:31-42), 'விடுதலை' என்னும் சொல்லை மையமாக வைத்துச் சுழல்கிறது. 'உண்மை உங்களுக்கு விடுதலை அளிக்கும்' என்று இயேசு ஒரு நிலையில் சொல்ல, 'நாங்கள் யாருக்கும் அடிமைகளாக இருந்ததில்லையே!' என்று இன்னொரு நிலையில் புரிந்துகொள்கின்றனர் யூதர்கள். ஆனால், யூதர்கள் எகிப்திலும், அசீரியாவிலும், பாபிலோனியாவிலும் அடிமைகளாக இருந்தவர்கள். மேலும், இயேசுவின் சமகாலத்தில் அவர்கள் உரோமையர்களுக்கும் அடிமைகளாக இருந்தனர்.
'ஆபிரகாமே எங்கள் தந்தை' என்று சொல்கின்றனர். ஆனால், ஆபிரகாம் கொண்டிருந்த நம்பிக்கை இவர்களில் இல்லை என்பதால், அதிலும் பொய்யுரைக்கின்றனர்.
'உண்மை உங்களுக்கு விடுதலை அளிக்கும்' எனச் சொல்லும் இயேசு, 'பாவம் செய்யும் எவரும் பாவத்திற்கு அடிமை' என்கிறார். முதலில் நாம் கட்டளையிடுவது போலத் தொடங்குகிறது பாவச் செயல். ஆனால், காலப் போக்கில் அது நமக்குக் கட்டளையிடுகிறது. இதையே அகுஸ்தினார், 'பழக்கம் கட்டுப்படுத்தப்படாத போது தேவையாக மாறுகிறது' என்கிறார்.
இன்றைய முதல் வாசகத்தில் (தானி 3) உடல்சார் கட்டுகளோடு இருந்த சாத்ராக்கு, மேசாக்கு, மற்றும் ஆபேத்நெகோ என்னும் மூன்று இளவல்களை ஆண்டவராகிய கடவுள் வியத்தகு முறையில் விடுவிக்கின்றார்.
இன்று நான் கட்டின்மையை மேன்மையாகப் போற்றுகின்றேனா?
குறிப்பாக, என் உறவுநிலையில் மற்றவரின் கட்டின்மை அல்லது சுதந்திரத்தை மதிக்கிறேனா?
எந்த நிலையில் நான் அடிமையாக இருக்கிறேன்?
என் அடிமை நிலையிலிருந்து என்னை விடுவிக்குமாறு நான் இறைவனை வேண்டுகிறேனா?
எனக்கு விடுதலை தருகின்ற உண்மையாகிய இயேசுவை நான் ஏற்கிறேனா?
“விடுதலை”…. பொதுவாக இந்த நேர்மறை வார்த்தை, குற்றம் அல்லது குற்றவாளி எனும் எதிர்மறை வார்த்தையுடன் இணைத்தே பார்க்கப்படுகிறது. ஆனால் இயேசுவுடன் இணைத்துப்பேசப்படும் கட்டின்மை, நாம் அறிந்தோ அறியாமலோ நம்மோடு ஒட்டிக்கொண்டிருக்கும்.…நம்மை நேர்வழியில் இருந்து சிதறவைக்கும் விஷயங்களிலிருந்து விலகி இருப்பதைக் குறிக்கிறது.இவை அனைத்திலிருந்தும் நமக்கு முதன்மையாக வைக்கப்படுவது இயேசு, மார்த்தா வழியே நம்மிடம் எதிர்பார்க்கும்” ஆன்மீக விடுதலை”. பாவமற்ற நிலைக்கு நம்மை மாற்றும் விஷயமே ‘கட்டின்மை.’ பொய்யானதை விடுத்து உண்மையானவற்றைப் பற்றிக்கொள்தல். பொய்யான ஒரு பழக்கம் நம்முடைய விழிப்புணர்வை மழுங்கடித்து நம்மை நாசம் எனும் படுகுழியில் தள்ளிவிடுகிறது. இப்பழக்கங்கள் கட்டுப்படுத்தப்படாமல் விடப்படும்போது நமது தேவையாக மாறிவிடுகிறது” என்கிறார் புனித.அகுஸ்தினார் தன் வாழ்க்கைப் பயணத்தையே முன்னிறுத்தி.”அடிக்க…அடிக்க அம்மியும் தேயும்” எனும் பழமொழிக்கிணங்க இந்தப் பழக்கங்கள் கட்டுக்கடங்காமல் போகையில் நம்மையே உடலாலும்,உள்ளத்தாலும் தேய்ந்து போகச்செய்கின்றன. நாம் மனது வைத்தால் மட்டுமே இறைவனின் உதவியோடு கட்டின்மை நிலைக்கு மாற முடியும்.அவரையே நம்பி இருக்கும் நம்மையும், இன்றைய முதல்வாசகத்தில் வரும் மூன்று இளவல்களை விடுவித்தது போல், வியத்தகு முறையில் கட்டின்மைக்கு கூட்டிச்செல்கிறார்.
ReplyDeleteஎன்னைக் கட்டுக்குள் வைத்திருக்கும் விஷயங்கள் எவை? யோசிப்போம்…பட்டியலிடுவோம்…. களைய முயல்வோம்….இறைவனின் உதவியுடன் கட்டின்மைப் பறவைகளாக ஆன்மீகப் பயணத்தைத் தொடருவோம்.காலத்திற்கேற்றதொரு பதிவு. தந்தைக்கு நன்றிகள்!!!