Tuesday, April 19, 2022

திரும்பிப் பார்த்து

இன்றைய (19 ஏப்ரல் 2022) நற்செய்தி (யோவான் 20:11-18

திரும்பிப் பார்த்து

இன்றைய நற்செய்தி வாசகம் பற்றிய புனித அகுஸ்தினாரின் விளக்கத்தை நான் வாசித்தேன். நிகழ்வின்படி, மகதலா நாட்டு மரியா கல்லறைக்கு வெளியே நின்று, கல்லறையைப் பார்த்து அழுதுகொண்டிருக்கின்றார். அங்கிருந்த இரு வானதூதர்களிடம் பேசிவிட்டு, பின்னால் திரும்புகின்றார். அங்கே இயேசு நிற்பதைக் காண்கிறார். ஆனால், இயேசு அவருடைய கண்களுக்குத் தோட்டக்காரர் போலத் தெரிகிறார். அவருடன் உரையாடல் தொடங்குகிறது. உரையாடலின் இறுதியில், 'மரியா!' என்கிறார் இயேசு. உடனடியாக, 'ரபூனி' என அவரை அள்ளிக்கொள்கின்றார் மரியா. இந்த இடத்தில், 'மரியா திரும்பிப் பார்த்து' எனப் பதிவு செய்கிறார் யோவான். ஏற்கெனவே மரியா திரும்பித்தானே இருக்கிறார். மீண்டும் அவர் திரும்பினால் கல்லறை நோக்கி அல்லவா திரும்ப வேண்டும்?

புனித அகுஸ்தினார் இதற்கு மிக அழகான விளக்கம் தருகின்றார்: 'மரியா, தன் திசையைத் திருப்பவில்லை. மாறாக, தன் இதயத்தைத் திருப்புகிறாள்.' இவ்வளவு நேரம் மரியாவின் முகம் இயேசுவை நோக்கியதாக இருந்தாலும், இப்போதுதான் அவருடைய இதயம் இயேசுவை நோக்கித் திரும்புகிறது. அல்லது இவ்வளவு நேரம் அவருடைய இதயம் கல்லறை நோக்கியதாக இருந்தது. ஆக, முகம் இயேசுவை நோக்கியும், இதயம் கல்லறை நோக்கியும் இருந்தால், அவர் நம் கண்களுக்கும் தோட்டக்காரர் போலவே தெரிவார். முகமும் இதயமும் ஒருசேர அவரை நோக்கி இருந்தால் அவர் நம் ஆண்டவராகத் தெரிவார்.

மரியா இயேசுவைக் கண்டுகொள்வது நான்கு நிலைகளில் நடக்கிறது:

முதலில், அவர் இயேசுவைக் காணவில்லை.

இரண்டாவதாக, அவர் இயேசுவைத் தோட்டக்காரர் போலக் காண்கின்றார்.

மூன்றாவதாக, அவர் அவரை ரபூனி ('போதகர்', 'என் போதகர்') எனக் காண்கின்றார்.

இறுதியாக, அவர் அவரை ஆண்டவர் எனக் காண்கின்றார்.

'நீ என் சகோதரர்களிடம் போய் அவர்களிடம், 'என் தந்தையும் உங்கள் தந்தையும் என் கடவுளும் உங்கள் கடவுளுமானவரிடம் செல்லவிருக்கிறேன்' எனச் சொல்' என்று சொல்லி அனுப்புகிறார் இயேசு.

ஆனால், மகதலா மரியா எல்லாவற்றையும் மறந்துவிடுகிறார்.

'நான் ஆண்டவரைக் கண்டேன்' என்று சொல்கிறார். மற்றதைப் பின்புதான் சொல்கின்றார்.

யோவான் நற்செய்தியைப் பொருத்தவரையில், 'காணுதல்' என்பது 'நம்புதலுக்கான' அடையாளம். கிரேக்கர்கள் சிலர் பிலிப்பிடம், 'ஐயா! நாங்கள் இயேசுவைக் காண விரும்புகிறோம்!' (காண். யோவா 12) என்கின்றனர். அங்கே, 'காணுதல்' நம்பிக்கைக்கான முதல் படியாக இருக்கிறது. 

மரியா அறிவித்த செய்தியே திருத்தூதர்களுக்கு நம்பிக்கையின் செய்தியாக மாறுகிறது.

'கிறிஸ்து வாழ்கிறார்' என்ற செய்தியை இந்த உலகுக்கு முதன்முதலாக அறிவித்தவர் மகதலா நாட்டு மரியாவே. 

நம் வாழ்வில் கல்லறை நோக்கி நம் முகமும் இதயமும் இருத்தல் வேண்டாம். கொஞ்சம் திரும்பிப் பார்த்தால் அவர் நமக்குப் பின் நிற்கின்றார். சில நேரங்களில் தோட்டக்காரர் போல. சில நேரங்களில் போதகர் போல. சில நேரங்களில் ஆண்டவர் போல.


2 comments:

  1. நம் கண்கள் எத்திசையில் வேண்டுமானாலும் திரும்பியிருக்கலாம்…எதை/ யாரை வேண்டுமானாலும் பார்க்கலாம்.ஆனாலும் என் இதயம் யாரை/ எதை நோக்க விரும்புகிறதோ அவரை/அதை மட்டுமே என்னால் அடையாளம் காண முடியும்.மகதலா மரியா விஷயத்திலும் அதுவே நடந்துள்ளது. மனம் முழுக்க இயேசுவே நிறைந்திருப்பினும், அவருக்கு முதலில் தோட்டக்கார்ராகவே தெரிந்த இயேசு “மரியா” என்ற உச்சரிப்பைக் கேட்டபின் “ரபூனி” யாகத் தெரிந்தது மட்டுமின்றி, அவர் இதயமும் அந்த ரபூனியைக்கண்டு கொள்கிறது.எல்லார் கண்களுக்கும் ஆண்டவர் எளிதில் தெரிவதில்லை. மரியா போல,உள்ளத்தால் அவரைத் தேடுபவர்களுக்கே தெரிகிறார். ஆண்டவரைக் காட்சியாகக் கண்டவர் இவ்வுலகத்திற்கே ஒரு சாட்சியமாக மாறுகிறார்.”என் சகோதரர்களிடம் போய் என் தந்தையும்,உங்கள் தந்தையும்,என் கடவுளும்,உங்கள் கடவுளுமானவரிடம் செல்லவிருக்கிறேன் என்று சொல்.” ஆண்டவரை நோக்கித்தன் இதயத்தைத் திருப்பியதாலேயே இந்தப் பேறு அவளுக்கு! நாமும் அவரைத் தேடத்தான் செய்கிறோம்….இவ்வுலக சந்தடியிலும்….பிறர் நம் வாழ்வில் அள்ளித்தெளித்த அவசர கோலங்களிலும்! அவரோ அமைதியாக நம் பின் வந்து “மகளே! உன்னருகில் இருக்கும் என்னை விட்டு விட்டு எங்கெல்லாம் தேடுகிறாய் என்னை?” என்று கிசுகிசுக்கிறார். எந்த வேடத்திலும் அவர் இருக்கலாம்; நம்மில் உண்மையான தேடல் இருந்தால் மட்டுமே நாம் அவரை இனம் காண முடியும். நாம் உணர்ந்த கிறிஸ்துவை இவ்வுலகிற்குக் காட்டும்போது நாமும் மகதல மரியாக்களே! ஒரு ஓரங்க நாடகம் பார்த்த உணர்வைத் தந்த தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete
  2. இன்று தன் குருத்துவத்தின் 12 ஆண்டுகளை அழகுற இறைவனிடம் அர்ப்பணித்து 13 ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் பாசமிகு தந்தை யேசு கருணா அவர்களையும், அவரோடு இணைந்த குருப்பட்டம் பெற்ற அத்தனை அருட்பணியாளர்களையும் அனைவரின் பெயரால் வாழ்த்துகிறேன்.அண்ணல் இயேசு தன் அளப்பறிய அன்பால் உங்களனைவரையும் சகல தீங்கினின்றும் காத்து, அவரின் அருளைத் தங்கள் மேல் அபரிமிதமாகப் பொழிய செபிக்கிறேன்; வாழ்த்துகிறேன்! அன்புடன்!ஆசீருடன்!!

    ReplyDelete