Wednesday, April 13, 2022

உங்களுக்குப் புரிந்ததா?

ஆண்டவரின் இறுதி இராவுணவுக் கொண்டாட்டம்

விடுதலைப் பயணம் 12:1-8, 11-14 1 கொரிந்தியர் 11:23-26 யோவான் 13:1-15

உங்களுக்குப் புரிந்ததா?

தன் பணிவாழ்வு முழுவதும் பல்வேறு போதனைகள், வல்ல செயல்கள் என்று அவர்களுக்குச் சொல்லாலும் செயலாலும் கற்பித்து வந்த இயேசு, 'இப்படிச் சொல்லிக் கொண்டே இருந்தால் இவர்களுக்குப் புரியாது' என்று நினைத்தவர், சட்டென்று எழுந்து, மேலாடையைக் கழற்றிவிட்டு, இடுப்பில் துண்டைக் கட்டிக் கொண்டு, குவளையில் தண்ணீர் எடுத்துச் சீடர்களின் காலடிகளைக் கழுவித் துடைத்து, மீண்டும் மேலாடை அணிந்து பந்தியில் அமர்ந்துகொள்கின்றார். அப்படி அமர்ந்த அவர் தம் சீடர்களிடம், 'உங்களுக்குப் புரிந்ததா?' என்கிறார். பாதம் கழுவும்போதும் பேதுருவிடம், 'இப்போது உனக்குப் புரியாது. பின்னரே புரிந்துகொள்வாய்' என்கிறார். 

இயேசுவின் இந்தச் செயலைத்தான் முதல் ஏற்பாட்டு இறைவாக்கினர்கள் செய்தனர். இறைவாக்கினர் அடையாளங்களில் மூன்று கூறுகள் பொதுவாக உள்ளன:

அ. இவை யாவும் கடவுளிடமிருந்து ஊற்றெடுக்கின்றன. கடவுளால் நேரிடையாக உந்தப்பட்டோ, அல்லது மறைமுகமாக அறிவுறுத்தப்பட்டோ கதைமாந்தர்கள் அடையாளச் செயல்கள் செய்கின்றனர்.

ஆ. இறைவாக்கு அடையாளங்கள் ஒரு சம்பிரதாய செய்கையாகவோ, அசைவு அல்லது நகர்வாகவோ, தோற்றப்பாங்காகவோ, அல்லது நாடகப்பாணியில் அமையும் செயலாகவோ இருக்கிறது.

இ. இவ்வடையாளங்கள் இவற்றைக் காண்பவர்களைக் காண்கின்ற ஒன்றிலிருந்து காணாத ஒன்றிற்கு அழைத்துச் செல்கிறது. எடுத்துக்காட்டாக, எரேமியாவின் கழுத்தில் நுகத்தைக் காணும் மக்கள் பாபிலோனிய அடிமைத்தனத்தின் நுகத்தைப் புரிந்துகொள்வார்கள்.

இந்த மூன்று கூறுகளும் இயேசுவின் பாதம் கழுவும் நிகழ்விற்குப் பொருந்துவதாக இருக்கின்றன.

அ. 'இராவுணவு வேளையில், தந்தை அனைத்தையும் தன் கையில் ஒப்படைத்துள்ளார் என்பதையும் தாம் கடவுளிடமிருந்து வந்தது போல அவரிடமே திரும்பிச் செல்ல வேண்டும் என்பதையம் அறிந்த இயேசு பந்தியிலிருந்து எழுகின்றார்.' ஆக, இயேசுவின் செயல் தன் தந்தையைப் பற்றிய அறிவால் தூண்டப்பட்டதாக இருக்கின்றது.

ஆ. இயேசு தன் சமகாலத்து மக்கள் நடுவே புழக்கத்தில் இருந்த ஒரு சாதாரண செயலைக் கைக்கொள்கின்றார். அதை ஒரு நாடகப் பாணியில் - சீடர்களோடு பேசிக்கொண்டு, பேதுருவோடு விவாதித்துக்கொண்டு - செய்கின்றார்.

இ. 'ஆண்டவரும் போதகருமான நான் உங்கள் காலடிகளைக் கழுவினேன் என்றால் நீங்களும் ஒருவர் மற்றவருடைய காலடிகளைக் கழுவக் கடமைப்பட்டிருக்கிறீர்கள். நான் செய்ததுபோல நீங்களும் செய்யுமாறு உங்களுக்கு நான் முன்மாதிரி காட்டினேன்' என்கிறார் இயேசு. ஆக, சீடர்கள் தாங்கள் காணும் இந்தச் செயலைத் தங்கள் வாழ்வில் செய்ய, இயேசுவைப் போல பணி செய்ய அழைக்கப்படுகிறார்கள்.

முதல் ஏற்பாட்டு இறைவாக்கினர்கள் தங்களின் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வை தங்களுடைய அடையாளச் செய்கைகளால் வெளிப்படுத்துகின்றனர். இயேசுவின் பாதம் கழுவும் நிகழ்வு அவருடைய சீடர்களின் பிரச்சினைகளுக்கு எப்படித் தீர்வாகிறது?

1. அவரிடமிருந்து வந்தார் - அவரிடமே திரும்பிச் சென்றார்

'உலகின் ஒளி நானே' என்று தன்னைப் பற்றி யூதர்களுக்கு அறிவிக்கின்ற இயேசு, தொடர்ந்து, 'நான் எங்கிருந்து வருகிறேன் என்றும் எங்குச் செல்கின்றேன் என்பதும் எனக்குத் தெரியும். நான் எங்கிருந்து வருகிறேன், எங்குச் செல்கிறேன் என்பது உங்களுக்குத் தெரியாது' என்கிறார் (காண். யோவா 8:12-14). இயேசுவின் பாதம் கழுவும் நிகழ்வை, பவுலின் கிறிஸ்தியல் பாடலோடு (காண். பிலி 2:6-11) பேராயர் ஷீன் பின்வருமாறு ஒப்பீடு செய்கின்றார்: இயேசு பந்தியிலிருந்து எழுந்து - கடவுளுக்கு இணையாயிருக்கும் நிலையை விடுத்து, மேலுடையைக் கழற்றி - தம்மையே வெறுமையாக்கி, துண்டை எடுத்து இடுப்பில் கட்டிக் கொண்டார் - அடிமையின் வடிவை ஏற்று மனிதருக்கு ஒப்பானார், குவளையில் தண்ணீர் எடுத்து காலடிகளைக் கழுவித் துடைத்தார் - சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்து தம்மையே தாழ்த்திக்கொண்டார், கழுவியபின் மேலுடையை அணிந்துகொண்டு - இறந்து உயிர்த்து, பந்தியில் அமர்ந்து - கடவுளும் அவரை உயர்த்தி. மேற்காணும் ஒப்புமை சீடர்களுக்கு இயேசுவின் மனுவுருவாதல், இறப்பு, உயிர்ப்பு, விண்ணேற்றம் ஆகிய அனைத்தையும் கற்றுக்கொடுப்பதாக இருக்கிறது. இவ்வாறாக, இயேசு கடவுளிடமிருந்து வந்தார் என்பதையும், அவர் கடவுளிடமே திரும்பிச் செல்கிறார் என்பதையும் அவர்கள் புரிந்துகொள்கிறார்கள்.

2. சீடர்களின் காலடிகளைக் கழுவி

இயேசுவின் சீடர்கள் நடுவில் விளங்கிய மிகப் பெரிய பிரச்சினை, 'நம்மில் பெரியவர் யார்?' என்பதுதான் (காண். மாற் 9:33-34, 10:35-37, லூக் 22:24). இயேசு சிறு குழந்தையை அடையாளமாக நிறுத்தி அவர்களுக்கு விளக்கியிருக்கிறார். ஆனால், அவர்கள் இறுதிவரை அதைப் புரிந்துகொள்ளவில்லை. ஆகையால்தான், இயேசு பாதம் கழுவும் நிகழ்வின் வழியாக சமத்துவத்தைக் கற்பிக்கின்றார். எப்படி? பாதம் கழுவும் நிகழ்வு ஓர் அடிமை எஜமானனுக்குச் செய்யும் வேலை என்றாலும், இயேசு அந்த அர்த்தத்தில் எடுக்கவில்லை. ஏனெனில், இயேசுவைப் பொறுத்தவரையில் சீடர்கள் என்பவர்கள் அடிமைகள் அல்லர். மாறாக, அவருடைய நண்பர்கள் (காண். யோவா 13:1-20). இந்த நட்பு அவருடைய தற்கையளிப்பிலும் வெளிப்படுகிறது (காண். யோவா 15:13-14). ஆக, சீடர்களுக்குள் இருக்கின்ற எல்லா பேதங்களையும், பிரிவுகளையும், பிரிவினைகளையும், ஏற்றத்தாழ்வுகளையும், விருப்பு, வெறுப்புக்களையும் உடைக்கின்ற இயேசு, அவர்கள் அனைவரையும் நண்பர்கள் என்ற நிலையில் வைத்து அவர்களின் பாதங்களை ஒரு நண்பனாகக் கழுவுகின்றார். ஆக, சமத்துவம் என்பது இயேசுவைப் பொறுத்தவரையில் நட்பில் மலர்கிறது. பேதுரு அவருடைய காலடிகளைக் கழுவ இயேசுவுக்கு அனுமதி மறுத்தபோது,  'நான் உன் பாதங்களைக் கழுவாவிடில் உனக்கு என்னோடு பங்கில்லை' - அதாவது, 'என் நட்பில் உனக்கு இடமில்லை' என்கிறார் இயேசு. 'நீங்களும் ஒருவர் மற்றவருடைய காலடிகளைக் கழுவக் கடமைப்பட்டிருக்கிறீர்கள்' என்று சொல்கின்ற இயேசு, சீடர்கள் நடுவில் திகழ வேண்டிய நட்பில் மலரும் சமத்துவத்தை வலியுறுத்துகின்றார்.

3. முன்மாதிரி காட்டினேன்

இயேசு செய்தது ஒரு முன்மாதிரி. அந்த முன்மாதிரியில் ஒரு அறிவுரையும் கட்டளையும் இருக்கிறது. 'நட்பாக இருங்கள்' என்பது அறிவுரை. 'நான் செய்ததுபோல நீங்களும் செய்யுங்கள்' என்பது கட்டளை. ஏறக்குறைய இதே வார்த்தைகளில்தான் இயேசுவின் புதிய அன்புக் கட்டளையும் அமைந்திருக்கிறது: 'நான் உங்களிடம் அன்பு செலுத்தியதுபோல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்' என்கிறார் இயேசு. 'நான் உங்கள் பாதங்களைக் கழுவியது போல நீங்கள் என் பாதங்களைக் கழுவுங்கள்' என்றோ, 'நான் உங்களிடம் அன்பு செய்தது போல நீங்கள் என்னை அன்பு செய்யுங்கள்' என்று தன்மையமாக இயேசு எதையும் செய்யவோ, சொல்லவோ இல்லை. ஆக, அவரிடமிருந்து பெற்ற சீடர்கள் அதை மற்றவர்களுக்கு வழங்க வேண்டும். அதில்தான் சீடத்துவத்தின் அடையாளம் இருக்கிறது - 'நீங்கள் ஒருவர் மற்றவருக்குக் காட்டும் அன்பிலிருந்து நீங்கள் என் சீடர்கள் என்பதை எல்லாரும் அறிந்துகொள்வர்.

ஆக, இயேசுவின் 'பாதம் கழுவுதல்' என்னும் இறைவாக்கினர் அடையாளம் சீடர்களைப் புதிய புரிதலுக்கு இட்டுச் செல்கிறது.

இத்தீர்வுகள் நற்கருணை, அன்பு, பணிக்குருத்துவம் பற்றிய புரிதல்களை எப்படி விரிவுபடுத்துகின்றன?

நாம் இன்று கொண்டாடும் நற்கருணை, அன்புக் கட்டளை, மற்றும் பணிக்குருத்துவம் ஆகிய மூன்றுமே இறைவாக்கினர் அடையாளங்கள். இவை தங்களையும் தாண்டிய பொருளைத் தங்களுக்குள் கொண்டுள்ளன. இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். 1 கொரி 11:23-26), கொரிந்து நகரத் திருஅவையில் நிலவிய பிளவுகள், ஏற்றத்தாழ்வுகள், வேற்றுமை பாராட்டுதல் ஆகியவற்றைக் கடிந்துகொள்கின்ற பவுல், இறுதியாக, 'ஆண்டவரிடமிருந்து நான் எதைப் பெற்றுக் கொண்டேனோ அதையே உங்களிடம் ஒப்படைக்கிறேன்' என்று சொல்லி, 'இந்த அப்பத்தை உண்டு கிண்ணத்திலிருந்து பருகும்போதெல்லாம் ஆண்டவருடைய இறப்பை அவர் வரும் வரை அறிக்கையிடுகிறீர்கள்' என்று அறிவுறுத்துகின்றார். ஆக, ஒவ்வொரு நற்கருணைக் கொண்டாட்டமும் ஆண்டவருடைய இறப்பை கொரிந்து நகர மக்களுக்கு நினைவூட்ட வேண்டும். ஆண்டவருடைய இறப்பு பிரிவினைகள் அகற்றியது. ஆக, பிரிவினைகள் அகற்ற நற்கருணை அவர்களைத் தூண்ட வேண்டும். அதே போல, முதல் வாசகத்தில் (காண். விப 12:1-8, 11-14) இஸ்ரயேல் மக்கள் கொண்டாடும் பாஸ்கா வெறும் விருந்து அல்ல. மாறாக, ஆண்டவராகிய கடவுள் எகிப்தில் நடத்திய அருஞ்செயலின் அடையாளம். இவர்கள் ஒவ்வொரு முறையும் இதைக் கொண்டாடும்போது அந்நிகழ்வை நினைவில் கொள்ள வேண்டும். 'அன்பு' என்பது சீடத்துவத்தின் அடையாளம் (காண். யோவா 13:35). பணிக்குருத்துவம் என்பது இயேசுவைப் போல ஒருவர் ஒத்திருக்க முன்வருகிறார் என்பதன் அடையாளம். ஆகையால்தான், அருள்பணி நிலைக்குள் வரும் ஒருவர் தன் குடும்பம், சாதி, பின்புலம் என்ற மேசையிலிருந்து எழுந்து, தன்னுடைய விருப்பு, வெறுப்பு என்னும் மேலாடையைக் கழற்றிவிட்டு, இறைத்திருவுளம் நிறைவேற்றுதல் என்ற துண்டை இடுப்பில் கட்டிக் கொண்டு ஒருவர் மற்றவரின் காலடிகளைக் கழுவுதல் வேண்டும்.

ஆக, இன்றைய நாளில் நற்கருணை, அன்பு, பணிக்குருத்துவம் ஆகியவற்றை நாம் வெறும் சடங்குகள் அல்லது வழிபாட்டு அடையாளங்கள் என்பதைப் பார்ப்பதைத் தவிர்த்து, அவற்றை இறைவாக்கினர் அடையாளங்களாகப் பார்த்தல் வேண்டும். அல்லது நற்கருணை, அன்பு, பணிக்குருத்துவம் நம்மில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது.

நற்கருணை, அன்புக் கட்டளை, பணிக்குருத்துவம் என்னும் இறைவாக்கினர் அடையாளங்களை நாம் எப்படி வாழ்வது?

1. தாழ்வானது மேலானதாக மாற வேண்டும்

கோதுமை அப்பமாக மாறுகிறது. திராட்சைக் கனிகள் இரசமாக மாறுகின்றன. நாம் நற்கருணை வழிபாட்டில் கோதுமையையும், திராட்சைக் கனிகளையும் இறைவனுக்குக் காணிக்கையாக்குவதில்லை. மாறாக, நம் உழைப்பால் உருமாறிய அப்பத்தையும், இரசத்தையும் காணிக்கையாக்குகிறோம். அப்பமும் இரசமும் இயேசு கிறிஸ்துவின் உடலாகவும் இரத்தமாகவும் மாறுகின்றன. அவற்றை உட்கொள்ளும் நாம் இயேசுவின் உடலாக இரத்தமாக மாறுகின்றோம். ஆக, ஒவ்வொரு நிகழ்விலும் தாழ்வான ஒன்று மேலானதாக மாறுகிறது. பாதம் கழுவும் நிகழ்வில் முதலில் மேசையில் அமர்ந்த இயேசுவும் பாதம் கழுவிய பின் அமர்ந்த இயேசுவும் ஒன்றா? இல்லை. ஏனெனில், இவ்விரண்டுக்கும் இடையேதான் தாழ்வானது - அதாவது, ஏற்றத்தாழ்வு - உயர்வானதாக - சமத்துவம் மற்றும் நட்பு - மாறுகிறது. ஆக, இன்று நாம் நற்கருணை கொண்டாடும்போது என்னுடைய தாழ்வானது உயர்வானதாக மாறுகிறதா? அல்லது நான் இன்னும் தாழ்ந்துகொண்டே போகின்றேனா?

2. பாதம் கழுவும் அன்பு

இன்று அன்பில் பிரச்சினைகள் எழுக் காரணம் ஒருவர் மேலிருப்பதும் மற்றவர் கீழிருப்பதும்தான். பாதம் கழுவும் நிகழ்வில் இயேசு தம் சீடர்கள் அனைவரையும் நண்பர்களாக்கி அதே நிலையில் தானும் நண்பராக நிற்கின்றார். நண்பர்-நண்பர் என்ற நிலையில் மட்டுமே அன்பு சாத்தியமாகும். மேலும், நண்பர்-நண்பர் நிலையைச் சீடர்கள் மற்றவர்களை நோக்கி நீட்ட வேண்டும் எனவும் அறிவுறுத்துகின்றார். கணவன்-மனைவி, மாமியார்-மருமகள், ஆசிரியர்-மாணவர், காதலன்-காதலி, கடவுள்-பக்தன், பெற்றோர்-பிள்ளைகள் என எந்த அன்புறவிலும், 'மேல்-கீழ்' நிலைதான் இருக்கிறது. 'என் பிள்ளை நான் சொல்வதைக் கேட்க வேண்டும்' என நினைக்கின்ற பெற்றோர் ஏன் பிள்ளை சொல்வதைக் கேட்பதில்லை? தனக்கு எல்லாம் தெரியும் என்பதாலா? நாம் எல்லாருமே நம் இருப்பு என்ற பந்தியை விட்டு எழ வேண்டும். நம் ஈகோ என்ற மேலாடையைக் கழற்ற வேண்டும். நம் குறைவு என்ற துண்டை இடுப்பில் கட்ட வேண்டும். இனிய சொற்களைத் தண்ணீராய் எடுத்து, கனிவான செயல்களால் காலடிகளைத் துடைக்க வேண்டும்.

3. புரிந்துகொள்ளும் பணிக்குருத்துவம்

பணிக்குருத்துவத்தைப் பற்றிய புரிதல் அருள்பணியாளர்களுக்கும் அருள்பணியாளரின் பணி யாருக்குச் செய்யப்படுகிறதோ அவர்களுக்கும் இருக்க வேண்டும். சீடர்களின் காலடிகளைக் கழுவிவிட்டு மீண்டும் பந்தியில் அமரும் இயேசு, 'நான் செய்தது என்னவென்று உங்களுக்குப் புரிந்ததா?' எனக் கேட்கிறார். பாதம் கழுவும் நிகழ்விலும் பேதுருவிடம், 'நான் செய்வது இன்னதென்று உனக்கு இப்போது புரியாது. பின்னரே புரியும்' என்கிறார். இந்தப் பின்னர் எது? அதுதான் திருஅவையின் தொடர் வாழ்வு. இயேசு சீடர்களை விட்டுச் சென்றபின் அவர்கள் செய்யப்போகின்ற பணிகளில்தான் அவர்கள் இயேசுவின் அடையாளத்தைப் புரிந்துகொள்ள முடியும். இன்று அருள்பணியாளர்கள் அருள்பணி நிலை என்றால் என்ன என்பதை சில நேரங்களில் புரிந்துகொள்கின்றனர், சில நேரங்களில் தவறாகப் புரிந்துகொள்கின்றனர், சில நேரங்களில் புரிந்துகொள்ள மறுக்கின்றனர். இந்த மூன்று நிலைகளும் இருக்க வாய்ப்பு இருக்கிறது. புரிந்துகொள்ள வேண்டுமெனில் அருள்பணியாளர்கள் தங்கள் காலடிகளைக் கழுவுமாறு இயேசுவிடம் நீட்ட வேண்டும். அப்போதுதான் 'அவரோடு நமக்குப் பங்கு உண்டு!' அவரால் காலடிகள் கழுவப்படாமல் அருள்பணியாளர் மற்றவரின் காலடிகளைக் கழுவ முடியாது. இன்று பணிக்குருத்துவம் 'வலிந்து பற்றிக்கொண்டிருக்க ஒன்றாகக் கருதப்படுகிறதே தவிர,' அந்த நிலையை விட்டு இறங்குவதையும், தாழ்ச்சியுடன் கீழ்ப்படிந்து சிலுவையைத் தழுவிக்கொள்வதையும் அது ஏற்க மறுக்கிறது. வெறும் வழிபாட்டு அடையாளமாக மாறிவிடுகிறதே தவிர, ஆன்மீகமாக - அதாவது உள்ளும் வெளியிலும் ஒரே மாதிரி - இருக்கத் தயங்குகிறது. 'புரிந்துகொள்தல்' நடக்க ஒருவர் ஒரே தளத்தில் நிற்க வேண்டும், தான் பேசுவதை நிறுத்த வேண்டும், பிறர் பேசுவதைக் கேட்க வேண்டும், முற்சார்பு எண்ணம் அகற்ற வேண்டும், தீர்ப்பிடாமல் இருக்க வேண்டும். இந்ந நிகழ்வில் தான் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டாலும் தன் புரிந்துகொள்தலை அருள்பணியாளர் நிறுத்தவிடக் கூடாது.

இறுதியாக,

இயேசுவின் பாதம் கழுவும் நிகழ்வு நற்கருணை, அன்புக் கட்டளை, பணிக்குருத்துவம் ஆகியவற்றின் இறைவாக்கினர் அடையாளமாக இருக்கின்றது. இயேசுவின் இறைவாக்கினர் அடையாளம் மற்ற இறைவாக்கினர் அடையாளங்களைப் போல உடனடி மாற்றத்தைக் கொண்டுவரவில்லை என்றாலும், இயேசுவின் உயிர்ப்புக்குப் பின் பெரிய மாற்றத்தைச் சீடர்களில் ஏற்படுத்தியது. மாற்றத்தை ஏற்படுத்தாத எந்த அடையாளமும் - திருமண மோதிரம், அருள்பணி நிலையின் அருள்பொழிவு, துறவற நிலையின் வார்த்தைப்பாடு - வெறும் சுமையே. மாற்றத்தை ஏற்படுத்தும் அடையாளங்களாக நம் அடையாளங்கள் இருந்தால் எத்துணை நலம்!


2 comments:

  1. இன்றையப் பதிவை ஒரே வரியில் சொல்வதென்றால் “ அன்பு…. இயேசுவின் அளப்பற்கரிய அன்பு!” பின் வருவதெல்லாம் அதை நம் வாழ்வில் எப்படிக் கொண்டுவருவதென்பது பற்றியே! இன்றைய விஷயங்களனைத்துமே அருட்பணியாளர்களுக்கு சொல்லப்படுவது போல் தோன்றிடினும், அவர்கள் வழியே இல்லறத்தார் நமக்கும் சொல்லப்படுபவைதான். இயேசுவைப் பற்றிய குறிப்புகள் ஒன்றுக்கொன்று மோதிக்கொள்பவை போல் தோன்றுகின்றன….எதை எடுப்பது? எதை விடுப்பது எனும் போட்டியில்.இயேசு தன் சீடர்களுக்குச் செய்ததைத் திருப்பி தனக்கே செய்யும்படிக் கேட்கவில்லை….அவர்களுக்கு கீழே உள்ளவர்களுக்கு செய்யச்சொல்கிறார்…அருமை! இந்தப் பாதம் கழுவும் சடங்கில் தான் எத்தனை விஷயங்கள் ஒளிந்துள்ளன….அன்பு….சமத்துவம்…பணிக்குருத்துவம்…இன்னும் எத்தனையோ! அவரால் காலடிகள் கழுவப்படாமல் அருள்பணியாளர் மற்றவரின் காலடிகளைக் கழுவ முடியாது…இதில் ஒளிந்துள்ள விஷயங்கள் அனேகம்! நம் கண்களுக்குத் தெரியும் அத்தனை விஷயங்களும்..நம் மனம் புரிந்துகொள்ளும் அத்தனை விஷயங்களும் நம்மில் மாற்றத்தைக் கொண்டுவரவில்லையெனில் அத்தனையும் வீண் என்பது இப்பதிவு நமக்குச் சொல்லும் பாடம்.
    இந்நாளில்..இயேசு குருத்துவத்தை ஏற்படுத்திய இந்நாளில் நம் குருக்கள் அனைவரையும் நன்றியுடன் நினைத்துப்பார்ப்போம்…அவர்களை இறைவன் கரங்களில் ஒப்படைப்போம்… நற்காரியங்கள் செய்கையில் வாழ்த்துவோம்….அல்லது செய்கையில் தாங்கிப் பிடிப்போம்.இறைவன் ஒருவரே நீதியின் அரசர் என்பதை நினைவில் கொள்வோம்.இத்தனை நெடிய….அழகான செய்திகளை உள்ளடக்கிய ஒரு பதிவிற்காகத் தந்தைக்கு நன்றிகள். தந்தையோடு இணைந்து,பணிக்குருத்துவத்தின் சாட்சிகளாக வாழும் அருட்பணியாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களும்! நன்றியும்!! இறைவன் நம் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக!!!

    ReplyDelete