Tuesday, April 26, 2022

ஒளி

இன்றைய (27 ஏப்ரல் 2022) நற்செய்தி (யோவான் 3:16-21)

ஒளி

கௌதம புத்தரின் சீடர்களுள் ஒருவர் அவரிடம், 'ஐயனே! மனிதர் படும் கோபத்திற்குத் தண்டனை என்ன?' என்று கேட்டார். அதற்கு புத்தர், 'தம்பி! கோபத்திற்குத் தண்டனை ஏதும் இல்லை. ஏனெனில், அவர்களுடைய கோபமே அவர்களுக்குத் தண்டனை' என்று விடையளித்தார்.

இன்றைய நற்செய்தியில், இயேசு-நிக்கதேம் உரையாடல் தொடர்கிறது.

இந்த உரையாடலில் மிக முக்கியமான இறையியல்கூற்றை யோவான் பதிவு செய்கின்றார்: 'தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்கு கடவுள் உலகின்மேல் அன்புகூர்ந்தார்' (யோவா 3:16). யோவான் நற்செய்தியாளரின் சுருக்கக் கூற்றுக்களில் இதுவும் ஒன்று.

இங்கே, இயேசு கடவுளின் மகன் என்றும், அவர் மேல் நம்பிக்கை கொள்தல் என்றும், நிலைவாழ்வு என்பது நம்பிக்கையாளர்களுக்கு உண்டு என்றும், கடவுள் உலகின்மேல் அன்புகூர்கின்றார் என்றும், அந்த அன்பு அவருடைய தற்கையளிப்பில் வெளிப்படுகிறது என்றும் பல இறையியல் உண்மைகள் புதைந்து கிடக்கின்றன.

இன்றைய நற்செய்தி வாசகத்தில், 'நம்பிக்கை கொள்தல்' பற்றிய இரண்டு புரிதல்கள் தெளிவாக இருக்கின்றன. ஒன்று, 'நம்பிக்கை கொள்தல் என்றால் ஒளிக்கு வருதல்.' இரண்டு, 'நம்பிக்கை கொள்ளாமல் இருத்தல் என்றால் தண்டனைத் தீர்ப்பு அளித்தல்.'

நம்பிக்கை கொள்ளாமல் இருத்தலால் தண்டனைத் தீர்ப்பு வருவதில்லை. ஏனெனில், நம்பிக்கை கொள்ளாமல் இருத்தலே தண்டனைத் தீர்ப்புதான் என்பதுதான் இயேசுவின் புதிய பகிர்வு.

'ஒளிக்கு வருதல்' என்பதை நம் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்:

அ. ஒளி உலகிற்கு வந்துவிட்டது (அந்த ஒளிதான் இயேசு).

ஆ. தம் செயல்கள் தீயனவாய் இருந்ததால் மனிதர் ஒளியைவிட இருளையே விரும்பினர்.

இ. தீங்கு செய்யும் அனைவரும் ஒளியை வெறுக்கின்றனர்.

ஈ. தங்கள் தீச்செயல்கள் வெளியாகிவிடும் என அஞ்சி அவர்கள் ஒளியிடம் வருவதில்லை.

உ. உண்மைக்கேற்ப வாழ்பவர்கள் ஒளியிடம் வருகிறார்கள்.

ஊ. (அவர்கள் ஒளியிடம் வருவதால்) அவர்கள் செய்யும் அனைத்தையும் கடவுளோடு இணைந்தே செய்கிறார்கள்.

இங்கே இரண்டு விடயங்கள் தெளிவாகத் தெரிகின்றன:

அ. கடவுள்தான் ஒளி. அவரே உண்மை. அவரோடு இணைந்து மனிதர்கள் செயல்படும்போது அவர்கள் நன்மையானதைச் செய்கின்றனர்.

ஆ. தீங்கு செய்யும் மனிதர்கள் ஒளியிடம் வர அஞ்சுகிறார்கள். ஏனெனில், வந்தால் அவர்களுடைய செயல்கள் வெளியாகிவிடும். அவர்கள் நிந்தனைக்கும் வெட்கத்திற்கும் ஆளாக வேண்டும். நிந்தனையும் வெட்கமும் பொய்மையின் கனிகள்.

ஒளி என்றால் என்ன?

ஒளி என்பது வெளியே எரியும் வெளிச்சம் அல்ல. மாறாக, அது நன்மை அல்லது உண்மையை நோக்கி என்னைத் தூண்டி எழுப்பும் ஒரு தீப்பொறி.

எப்படி?

நான் செய்யும் தவறை எனக்கு மேலிருக்கும் ஒருவர் சுட்டிக்காட்டுகிறார் என்றால், அந்தச் சுட்டிக்காட்டுதல் ஒரு ஒளி.

நான் வாசிக்கும் புத்தகம் நான் வாழ்வில் அனுபவிக்கும் ஒரு பிரச்சினைக்கு தீர்வான வாக்கியத்தைக் கொண்டிருக்கிறது என்றால், அந்த வாக்கியம் ஒரு ஒளி.

நான் காய்ச்சலாய்க் கிடக்க, ஒரு டைலினால் அல்லது பாராஸெட்டமால் என் காய்ச்சல் போக்குகிறது என்றால், அந்த மாத்திரை ஒரு ஒளி.

ஆக, ஒளி என்பது எந்த வடிவத்திலும் வரலாம்.

அகுஸ்தினார் தன்னுடைய வாழ்வின் மனமாற்றம் பற்றி எழுதும்போது, இனி தன்னாளுகையோடும் உடல் இன்பங்களை அடக்கியும் அவர் முடிவெடுக்கும் தருணத்தில் நடந்த மனப்போராட்டை இப்படி எழுதுகின்றார்:

'நான் எழுந்தேன். எழுந்து உம்மிடம் (இறைவனிடம்) வந்தேன். இனி என் பழைய வாழ்க்கையை வாழப் போவதில்லை என முடிவெடுத்தேன். ஆனால், என் முடிவு என்னுடைய இச்சைக்கும், பேராசைக்கும், ஆணவத்திற்கும் பிடிக்கவில்லை. அவை, என் மேலாடையைப் பிடித்துத் தொங்கிக் கொண்டே, 'எங்களைவிட்டு போகப் போகிறாயா? உண்மையிலேயே போகப் போகிறாயா? நாங்கள் இல்லாமல் உன்னால் வாழ முடியுமா? சீக்கிரம் திரும்பிவந்துவிடுவாய்தானே? ஒருமுறை கூட திரும்ப வரமாட்டாயா? இன்றைக்கே போக வேண்டுமா? நாளை பார்த்துக்கொள்ளக் கூடாதா?' என்று கேட்டன.'

ஆக, ஒளியை நோக்கி நாம் வருவதற்குத் தயாராக இருந்தாலும், இருளின் செயல்கள் தரும் இன்பம், 'இவை இல்லாமல் எப்படி நம்மால் இருக்க முடியும்?' என்ற அச்சத்தையும், 'நாளை பார்த்துக்கொள்ளலாம்' என்ற தயக்கத்தையும் தருகின்றன.

ஒளி எல்லார்மேலும் ஒளிர்கிறது. சிலரே அதைக் கண்டு அதனிடம் வருகிறார்கள்.

இருளின் செயல்களுக்குத் தண்டனை என்று எதுவுமே இல்லை. ஏனெனில், இருளின் செயல்களே தண்டனை. ஒளி மட்டுமே உண்மை. ஒளி மட்டுமே விடுதலை.

நற்செயல்: மெழுகுதிரி போல என் வாழ்வு எரிந்தாலும், என் கால் பகுதியில் இருள் இருக்கும் என்பது நியதி. இந்த இருள் அகல வேண்டுமானால், அங்கே இறை என்னும் மெழுகுதிரியை ஏற்ற முயல்தல் சால்பு.


1 comment:

  1. Anonymous4/26/2022

    தண்டின் மேல் ஏற்றி வைத்த ஒரு விளக்கின் சுடருக்கு ஒப்பான ஒரு பதிவு.” ஒளி” ….வாழ்வைத் தேடுபவர் அதன் அருகில் வருகிறார்; வாழ மறுப்பவரோ அதை விட்டுத் தள்ளியே நிற்கிறார்.நம்பிக்கை கொள்பவன் எவனோ அவன் மட்டுமே ஒளியை நோக்கி வர….நம்பிக்கையற்றவன் அந்த நம்பிக்கையின்மையையே தண்டனையாகப் பெறுகிறான் என்கிறது இன்றையப்பதிவு. நம்பிக்கையே ஒளி எனில் அந்த ஒளி இயேசு அன்றி வேறு யாதும்/ எவருமில்லை.எத்தனை வடிவங்களில் நம்மை வந்தடைகிறது இந்த ஒளி! இதை அடையாளம் கண்டு,அது காட்டும் வழியில் நடப்பின் கண்டிப்பாக நமக்குள் நாம் காண்பது அகுஸ்தினார் கண்ட மனப்போராட்டம் தான். அதை இனம் கண்டு,அதனை வெற்றிகொண்டதாலேயே அவர் இன்று ஒரு புனித. அகுஸ்தினார்.
    மெழுகுதிரியில் இருக்கும் கால் பங்கு இருள் கூட என்னில் இல்லாமல் போகவேண்டுமெனில் அங்கே “ இறை” எனும் மெழுகுதிரியை ஏற்ற இறைவன் அருள்பாவிக்கட்டும்.மனிதனைப் புனிதனாக அழைக்கும் ஒரு பதிவு. தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete