Monday, April 25, 2022

என் மகன் மாற்கு

இன்றைய (25 ஏப்ரல் 2022) திருநாள்

என் மகன் மாற்கு

இன்று நாம் நற்செய்தியாளரான மாற்கின் திருநாளைக் கொண்டாடுகிறோம்.

இவரை இன்றைய முதல் வாசகத்தில் (காண். 1 பேதுரு 5:5-14), பேதுரு, '...என் மகன் மாற்கும் உங்களுக்கு வாழ்த்துக் கூறுகின்றனர்' என எழுதுகின்றார்.

பவுல் தன்னுடைய கடிதங்களில், அன்பு மகன் அல்லது அன்பார்ந்த பிள்ளை திமொத்தேயு என்று குறிப்பிடுவதுபோல இது உள்ளது.

இவர் பேதுருவின் சீடர் என்பதும், இயேசு பாஸ்கா விருந்தை ஏற்பாடு செய்ய திருத்தூதர்கள் சென்றபோது தண்ணீர் குடம் சுமந்து சென்றவர் இவர் என்பதும், இவருடைய இல்லத்தின் மேல்மாடியில்தான் இயேசு தன் இறுதி இராவுணவைக் கொண்டாடினார் என்பதும், இந்த இல்லத்தின் மேலறையில்தான் திருத்தூதர்கள்மேல் தூய ஆவி பொழியப்பட்டது என்பதும், இயேசு கைது செய்யப்பட்டபோது ஆடையின்றி ஓடிய இளைஞர் மாற்கு என்பதும், இவருடைய நற்செய்தியே முதலில் எழுதப்பட்ட நற்செய்தி என்பதும் மரபுவழிச் செய்தி. இவர் யோவான் மாற்கு என்றும் அறியப்படுகின்றார்.

இவரைப் பற்றி திருத்தூதர் பணிகளில் இரண்டு பதிவுகள் வருகின்றன. அவற்றை நம் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்:

'பின்பு , பவுலும் அவரோடு இருந்தவர்களும் பாப்போவிலிருந்து கப்பலேறி, பம்பிலியாவிலுள்ள பெருகை நகருக்கு வந்தார்கள். அங்கே யோவான் (மாற்கு) அவர்களை விட்டு அகன்று எருசலேமுக்குத் திரும்பினார்' (காண். திப 13:13)

'மாற்கு எனப்படும் யோவானையும் தங்களுடன் கூட்டிச்செல்ல பர்னபா விரும்பினார். ஆனால், தங்களோடு சேர்ந்து பணி செய்ய வராது, பம்பிலியாவில் தங்களை விட்டு விலகிச் சென்றுவிட்டதால் அவரைக் கூட்டிச் செல்ல பவுல் விரும்பவில்லை. இதனால், அவர்களிடையே கடுமையான விவாதம் எழுந்தது. எனவே, இருவரும் ஒருவரை விட்டு ஒருவர் பிரிந்தனர். பர்னபா மாற்குவைக் கூட்டிக்கொண்டு சைப்பிரசுக்குக் கப்பலேறினார்' (காண். திப 15:37-39)

முதல் நிகழ்வு பவுலின் முதல் தூதுரைப் பயணத்தில் நிகழ்கிறது. எதற்காக மாற்கு கப்பலிலிருந்து இறங்கி எருசலேம் திரும்பினார் என்று நமக்குத் தெரியவில்லை. கடற்பயணம் பயமாக இருந்ததாலா? அல்லது வீட்டு நினைப்பு வந்ததாலா? அல்லது பவுலோடு வந்தவர்களை இவருக்குப் பிடிக்கவில்லை என்பதாலா? அல்லது பவுலைக் கண்ட பயத்தாலா? அல்லது உள்மனப் போராட்டத்தாலா?

ஏதோ, ஒரு காரணத்திற்காக மாற்கு எருசலேம் திரும்புகின்றார். இந்நிகழ்வில் ஏறக்குறைய யோனா போல இருக்கிறார். பணி செய்வதில் மிகவே தயக்கம் காட்டுகிறார்.

இரண்டாம் நிகழ்வில், இவர் யோனா போல மீண்டும் கப்பலேற முயல்கின்றார். பவுலின் இரண்டாம் தூதுரைப் பயணத்தில் அவர்களோடு இணைந்துகொள்ள விரும்புகிறார். ஆனால், பவுல் அவரை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார். 'முதல் கோணல் முற்றிலும் கோணல்' என நினைக்கிறார் பவுல். 'இன்னொரு வாய்ப்பு கொடுத்து பார்ப்போமே' என்கிறார் பர்னபா. ஒரே நிகழ்வை இரண்டு நிலைகளில் பார்க்கின்றனர் இருவர். பர்னபாவுக்கு மாற்கை எந்த அளவிற்குப் பிடித்தது என்றால், மாற்கிற்காக பவுலையே விட்டுப் பிரிகின்றார். அந்த அளவிற்கு மாற்கு ஆர்வம் கொண்டவராக அல்லது எல்லாருக்கும் பிடித்த இளவலாக இருந்திருக்க வேண்டும்.

ஆனால், இறுதியில் பவுலும் மாற்குவும் சமரசம் செய்துகொள்கின்றனர் என்பதை வேறு குறிப்புகள் நமக்குக் காட்டுகின்றன:

'என் உடன் கைதியாயிருக்கும் அரிஸ்தர்க்கு உங்களை வாழ்த்துகிறார். பர்னபாவின் ஒன்றுவிட்ட சகோதரர் மாற்கும் உங்களுக்கு வாழ்த்து கூறுகிறார்' (காண். கொலோ 4:10) - மாற்கு பர்னபாவின் சகோதரரா அல்லது பவுல் இங்கே அவர்களைக் கிண்டல் செய்கிறாரா என்று தெரியவில்லை.

'என்னுடன் லூக்கா மட்டுமே இருக்கிறார். மாற்கை உன்னுடன் கூட்டி வா. அவர் திருத்தொண்டில் எனக்கு மிகவும் பயனுள்ளவர்' (காண். 2 திமொ 4:11) - பவுல் மாற்கைப் பற்றி நற்சான்று கூறுகிறார்.

மாற்கு என்னும் வரலாற்று மைந்தர் நமக்குத் தரும் செய்தி என்ன?

வாழ்வில் நாம் சில நேரங்களில் பின்னடைவு கொண்டாலும், தொடர்ந்து முன்னேறலாம் என்பதே. வாழ்க்கை எப்போதும் நமக்கு இரண்டாம் வாய்ப்பைத் தரவே செய்கின்றது. 

முதலில் தோற்றால் பரவாயில்லை. இரண்டாவது வாய்ப்பு நிச்சயம் வரும்.

அந்த இரண்டாம் வாய்ப்பைப் பயன்படுத்தி மாற்கு நன்முறையில் திருத்தொண்டு ஆற்றுகிறார். அனைவரின் நற்சான்றையும் பெறுகிறார். தன்னை வெறுத்தவரின் அன்பையும் பெறுகின்றார்.

மாற்கு நற்செய்தி நூல் காட்டும் சீடர்களும் இப்படித்தான் இருப்பார்கள். முதல் வாய்ப்பில் இயேசுவைப் புரிந்துகொள்ள இயலாமல் இருப்பார்கள். சில நேரங்களில் இறுதிவரையும் அப்படியே இருப்பார்கள். இருந்தாலும் பரவாயில்லை என்கிறார் மாற்கு.

எல்லாரும் இயேசுவைப் புரிந்துகொள்ள வேண்டுமா என்ன?

அதுவும் முதலிலேயே புரிந்துகொள்ள வேண்டுமா என்ன?

நற்செயல்: மாற்கு நற்செய்தியை அல்லது நற்செய்தியின் ஒரு பகுதியை வாசிப்பது.


1 comment:

  1. “என் மகன் மாற்கு” என்று பேதுருவால் அன்புடன் அழைக்கப்பட்ட காரணத்தாலோ என்னவோ பவுலுக்கு மாற்குவைப்பிடிக்கவில்லை. ஆனால்இயேசுவின் இறுதி நாட்களில் இவரின் உடனிருப்பு இயேசுவுடன் இருந்ததால் இவர் நமக்குக் கொஞ்சம் கூடுதலாகவே நெருக்கமாகிறார்.பவுலுக்கு மாற்குவைப் பிடிக்காமல் போனதற்குப்பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் இறுதியில் பவுல் இவரைத் தன்னுடன் இணைத்துக்கொள்கிறார் என்பது பவுலின் மேன்மையைக் காட்டுகிறது.
    அழகான வாழ்க்கைப்பாடத்தைக் கற்றுத்தருகிறது இன்றையப்பதிவு. வாழ்க்கை நம் அனைவரையும் ஒன்றுபோல அணைத்துக்கொள்வதில்லை. ஒரு ஓட்டப்பந்தயத்தில் ஒரே சீராக ஓடி முன்னுக்கு வருபவரும் உளர்; பாதி வழியில் பின்னுக்குத் தள்ளப்பட்டுப் பிறகு விட்டதைப் பிடிப்பவர் சிலர். ஏன், கடைசிவரை தொட வேண்டிய தூரத்தைத் தொடாமலே திரும்புபவரும் உண்டு. வாழ்க்கை அதன் பாடங்களை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி சொல்லித்தருகிறது. அதை முழுவதுமாகப் புரிந்து கொள்ள இன்னொரு வாழ்க்கை தேவை. ஓடுபவன் ஓடிக்கொண்டே இருப்பதுமில்லை; விழுந்தவன் எழுந்துநிற்காமல் இருப்பதுமில்லை. அதிகம் விழுபவர்கள் தாம் வாழ்க்கையை அதிகம் புரிந்து கொள்வார்கள்….மாற்குவைப்போல.இந்த பதிவைப்பொருத்தவரை பவுலால் ஓரங்கட்டப்பட்ட மாற்குவே எனக்கு நெருக்கமாகப் படுகிறார்…அவரை ஓரங்கட்டிய பவுலை விட. வாழ்க்கை நம்மை விழுத்தாட்டுகையில் மறுபடி எழுந்திருப்போம்; நம்மை விட இளைத்தவன் ஒருவன் நம்முன்னே ஓடுகையில் அவனுக்கு வழி விடுவோம். புரிதல்….எல்லோருக்கும் ஒன்றுபோல இருக்க வேண்டிய அவசியமில்லை; அததை,அதனதன் போக்கிலேயே விட்டு விடுவதே விவேகம். நல்லதொரு வாழ்க்கைப்பாடம்.தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete