Tuesday, April 19, 2022

என்ன நிகழ்ந்தது?

இன்றைய (20 ஏப்ரல் 2022) நற்செய்தி (லூக் 24:13-35)

என்ன நிகழ்ந்தது?

உயிர்த்த இயேசு எம்மாவு செல்லும் வழியில் இரு சீடர்களைச் சந்தித்ததையும் அவர்களுக்குத் தம்மை வெளிப்படுத்தியதையும் இன்றைய நற்செய்தி வாசகத்தில் காண்கின்றோம்.

'கண்கள் மறைக்கப்பட்டிருந்தன' என்னும் சொல்லாடல் தொடங்கி, 'கண்கள் திறந்தன' என்னும் சொல்லாடல் நோக்கி நகர்கின்றது நிகழ்வு.

இந்த நிகழ்வைப் பற்றி நிறையக் கேள்விகள் எழுப்பப்படுகின்றன. இரண்டை மட்டும் கருத்தில் கொள்வோம். ஒன்று, 'எம்மாவு' என்ற ஊர். எம்மாவு என்ற ஊர் விவிலியத்தில் குறிக்கப்பட்டுள்ளதே தவிர, உண்மையில் அது இல்லை. 'எம்மாவு' என்று லூக்கா எழுதியதாகச் சொல்லப்படும் இரு ஊர்களின் பெயர்களை தொல்லியல் துறை கண்டறிந்துள்ளது. இவ்விரண்டு ஊர்களும் எருசலேமிலிருந்து ஏறக்குறைய 11 கிமீ தொலைவில் அமைந்துள்ளன. இரண்டு, எம்மாவு சீடர்கள் அப்பம் பிட்கும்போது இயேசுவைக் கண்டுகொள்கின்றனர். இயேசு மூன்று நாள்களுக்கு முன்புதான், அதாவது, வியாழன் அன்று, நற்கருணையை ஏற்படுத்துகின்றார். அப்பம் பிட்டுத் தன் சீடர்களுக்குக் கொடுக்கின்றார். மூன்று நாள்களில் அது எல்லாச் சீடர்களுக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஏனெனில், அந்த நிகழ்வில் பன்னிரு திருத்தூதர்கள் மட்டுமே இருந்தனர். மேலும், இந்த மூன்று நாள்களும் திருத்தூதர்கள் மற்றவர்களுக்குப் பயந்து ஒளிந்துகொண்டிருந்தனர். இப்படி இருக்க, 'அப்பம் பிட்குதல்' நிகழ்வு இயேசுவை அடையாளப்படுத்துவதாக எம்மாவு சீடர்கள் உணர்ந்துகொண்டது எப்படி? என்ற கேள்வி எழுகின்றது. ஆக, லூக்கா தான் நற்செய்தியை எழுதுகின்ற காலத்தில் வழக்கத்தில் இருந்த அப்பம் பிட்குதல் நிகழ்வை எடுத்து இங்கே சேர்த்திருக்கலாம் என்பது லூக்கா நற்செய்தி மற்றும் திருத்தூதர் பணிகள் நூல் ஆய்வாளர்களின் கருத்து.

இன்றைய நற்செய்தியில் மூன்று குழுவினர் பேசுகின்றார்கள்:

(அ) வழியில் சீடர்கள் பேசுகின்றனர்.

(ஆ) எருசலேம் முழுவதும் இயேசுவைப் பற்றிப் பேசுகின்றது.

(இ) இயேசு சீடர்களோடு பேசுகின்றார்.


(அ) சீடர்கள் எதைப் பற்றிப் பேசுகின்றனர்?

'நாசரேத்து இயேசுவைப் பற்றிப் பேசுகின்றனர்.' என்ன பேசுகின்றனர்? 'அவர் கடவுளுக்கும் மக்கள் எல்லாருக்கும் முன்பாகச் சொல்லிலும் செயலிலும் வல்ல இறைவாக்கினராகத் திகழ்ந்தார். அவர் இஸ்ரயேலை மீட்கப் போகிறார் என்று நாங்கள் எதிர்பார்த்திருந்தோம் ... ஆனால் அவர் சிலுவையில் அறையப்பட்டார் ... மூன்று நாள்கள் ஆகின்றன ... அவர் உயிரோடிருப்பதாகச் சொல்கிறார்கள்' 

சீடர்கள் இயேசுவைப் பற்றிப் பேசினாலும், அவர்களுடைய வார்த்தைகளில் குழப்பமும் கலக்கமும் இருக்கின்றன.

(ஆ) எருசலேம் முழுவதும் என்ன பேசிற்று?

நேரிடையாக இது கொடுக்கப்படவில்லை என்றாலும், இயேசுவுக்கு நிகழ்ந்தது பற்றி அவர்கள் பேசியிருக்கலாம் என்பதை நம்மால் ஊகிக்க முடிகிறது.

(இ) இயேசு என்ன பேசுகின்றார்?

அவர்களிடம் கேள்வி கேட்கின்றார்: 'என்ன நிகழ்ந்தது?'

அவர்களைக் கடிந்துகொள்கின்றனர்: 'மந்த உள்ளத்தினரே!'

தன்னை அழைக்குமாறு அவர்களைத் தூண்டுகின்றார்: 'எங்களோடு தங்கும்!'

இயேசுவின் உரையாடல் அத்துடன் நிற்க, அவருடைய செயல் அங்கே பேசத் தொடங்குகிறது. அப்பம் பிட்குதலில் இயேசுவைக் கண்டுகொள்கின்றனர் சீடர்கள். உடனே அவர் மறைந்து போகின்றார். இறைமை என்பது உடனடியாக மறையக்கூடியது என்பதை நாம் நீதித்தலைவர்கள் நூலிலும் வாசிக்கின்றோம் (காண். நீத 6, 13).

இயேசுவைச் சந்தித்த சீடர்கள் உடனடியாக தாங்கள் புறப்பட்ட இடம் நோக்கிச் செல்கின்றனர்.

எந்த ஊரை விட்டு அவர்கள் தப்பி ஓட நினைத்தார்களோ, அதே ஊரான எருசலேமுக்குச் செல்கின்றனர்.

இனி அவர்களுடைய வாழ்க்கை முன்பு போல இருக்கப் போவதில்லை.

'என்ன நிகழ்ந்தது?'

என்று இயேசு நம்மைப் பார்த்துக் கேட்கின்றார்.

இது விடை தேடும் கேள்வி அல்ல. மாறாக, 'நான் இருக்கும்போது உனக்கு ஏதாவது நிகழ்ந்துவிடுமா!' என்ற வாக்குறுதியும் ஆறுதலும் அவருடைய வார்த்தைகளில் இருக்கின்றன.

ஒன்றும் நிகழ்ந்துவிடவில்லை நமக்கு.

ஒன்றும் நிகழ்ந்துவிடாது நமக்கு.

அவர் நம்முடன் வருகின்றார். நாம்தான் அவர் இல்லை என்று குறைபட்டுக் கொள்கின்றோம் பல நேரங்களில்.


1 comment:

  1. Anonymous4/20/2022

    இயேசுவும்,சீடர்களும, சந்தித்ததன் பின்னனி குறித்த பல விஷயங்கள் அலசப்பட்டாலும் நமக்குத் தேவை அவர்களின் சந்திப்பு மட்டுமே.சீடர்கள் இயேசுவிடம் பேசியதன் பின்னனி ஒரு குழப்பம் நிறைந்த மனநிலை.என்ன ஆனதோ இயேசுவுக்கு என்ற கவலை.சிலுவையில் அறையப்பட்ட அவர் மூன்றுநாட்களுக்குப்பின் உயிரோடு இருப்பதாகச் சொல்கிறார்கள்…என்று விஷயங்கள் தெரிந்தும் தெரியாத நிலை.” மந்த உள்ளத்தினரே!” என அவர்களை இயேசு கடிந்து கொண்டாலும்,அவர்கள் மீது ஒரு பரிவு.அப்பம் பிட்கையில் சீடர்களின் கண்கள் திறக்க ,எதிரே இருப்பவர் இயேசு எனக்கண்டு கொள்கின்றனர்.இயேசுவின் சந்திப்பு தந்த தைரியத்தில் மீண்டும் எருசலேமுக்கே விரைகின்றனர்.இயேசுவின் “:என்ன நிகழ்ந்தது?” எனும் கேளவியில் நாம் கண்டுகொள்வது அவரது அக்கறை…”நான் இருக்கிறேன் உன்னோடு…அவர் நமக்குத் தரும் உடனிருப்பு.”அவரது ஆறுதலும்,தேறுதலும் நம்மைச்சுற்றி யிருக்க, எந்தத் தீங்கும் தீண்டாது நம்மை என்ற உறுதி தரும் ஒரு பதிவு. சிலசமயங்களில் உறுதி தந்தவரையே உதாசீனப்படுத்தும் தருணங்களும் உண்டு.கண்களைத் திறந்து வைப்போம்….அவரைக் காண்பதற்காக!எனக்கு எப்பவுமே நெருக்கமானதொரு சம்பவத்தைக்கொண்டதொரு பதிவு.தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete