நீங்கள் தெய்வங்கள்
'மனிதர்கள்மேல் எனக்குள்ள நம்பிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. ஆகையால்தான், ஒருவழிச் சாலையைக் கடக்கும்போது கூட நான் இரு பக்கங்களும் பார்க்கிறேன்.'
- கடந்தவாரம் இன்ஸ்டாகிராமில் பார்த்த போஸ்டர் ஒன்றில் இவ்வார்த்தைகள் இருந்தன.
மனிதர்கள்மேல் நாம் நம்பிக்கை வைக்கிறோம், அல்லது வைக்க வேண்டிய சூழலில் இருக்கிறோம், அல்லது வைக்க வேண்டிய தேவை இருக்கிறது. அதிகாலையில் வாங்கும் பாலில் இருந்து, இரவில் நம் வீட்டிற்கு வெளியே நாம் அமர்த்தும் வாட்ச்மேன் வரை நாம் மனிதர்கள்மேல் நம்பிக்கை வைக்கிறோம். சில நேரங்களில் அவர்கள் நம் நம்பிக்கையைக் குலைக்கிறார்கள். அல்லது அவர்களது செயல்கள் அவர்கள்மேல் நம்பிக்கையின்மையை நம்மில் வளர்க்கின்றன.
இன்னொரு பக்கம், 'மனிதர்கள்மேல் நம்பிக்கை வைப்பதை விட கடவுள்மேல் நம்பிக்கை வைப்பது மேல்' என விவிலியம் நமக்கு அறிவுறுத்துகிறது. கடவுள்மேல் உள்ள இந்த நம்பிக்கையை நாம் எப்படி வரையறை செய்வது? கடவுள்மேல் மட்டும் நம்பிக்கை வைத்துவிட்டு, மனிதர்கள்மேல் உள்ள நம்பிக்கையை நீக்கி விடலாமா? இல்லை.
முதல் வாசகத்தில் (எரேமியா 20:10-13), 'என் நண்பர்கள்கூட என் வீழ்ச்சிக்காகக் காத்திருக்கிறார்கள்' என்று அருள்புலம்பல் செய்கின்ற இறைவாக்கினர் எரேமியா, 'ஆண்டவர் வலிமை மிகுந்த வீரரைப் போல என்னோடு இருக்கின்றார்' என்று துள்ளிக் குதிக்கின்றார். ஆக, மனிதர்கள்மேல் நம்பிக்கை இழக்கின்ற பொழுது எரேமியாவுக்கு இறை நம்பிக்கைக்கான தொடக்கப் புள்ளியாக இருக்கிறது. அல்லது, மனிதர்கள்மேல் நம்பிக்கை இழக்கின்ற எரேமியா அதற்கு மாற்றாக இறை நம்பிக்கையைப் பற்றிக்கொள்கின்றார். தன் இறைவாக்குப் பணிக் கப்பல் திக்கற்றுத் தவிக்கும்போது, ஊன்றி நிற்கின்ற நங்கூரப் புள்ளியாகத் தன் இறைவனைப் பார்க்கின்றார்.
நற்செய்தி வாசகத்தில் (யோவான் 10:31-42), இயேசுவுக்கும் யூதர்களுக்குமான விவாதம் தொடர்கின்றது. இயேசு தன்னை இறைவனோடு ஒன்றிணைத்துப் பேசுவதற்காக யூதர்கள் அவர்மேல் கல்லெறிய முயல்கின்றனர். தன் நற்செயல்களைச் சுட்டிக்காட்டுகின்ற இயேசு அவற்றின் பொருட்டாவது அவர்கள் தன்னை நம்பலாமே எனக் கேட்கின்றார்.
இயேசுவுக்கும் தங்களுக்கும் உள்ள வேற்றுமையைப் பார்த்து அவர்மேல் கல்லெறியத் துணிந்த தன் சமகாலத்து மக்களிடம், அவர்களுக்கும் தனக்கும் உள்ள ஒற்றுமையை - அனைவரும் தெய்வங்கள் (காண். திபா 82:6) என்பதை - சுட்டிக்காட்டுகின்றார்.
ஆக,
மனிதர்கள்மேல் உள்ள நம்பிக்கை குறையும்போது இரு நிலைகளில் அதை நம்மால் சரி செய்ய இயலும்:
ஒன்று, இறைவனை நங்கூரப் புள்ளியாகப் பற்றிக்கொள்வது.
இரண்டு, மற்ற மனிதர்களுக்கும் நமக்கும் உள்ள வேற்றுமையைப் பாராமல், அவர்களும் நம்மைப் போன்ற சாயல் கொண்டவர்கள் என இருவருக்கும் உள்ள ஒற்றுமையைப் பார்த்து, அவர்களை இரக்கத்துடன் தழுவிக் கொள்வது.
நிற்க.
நற்செய்தி வாசகத்தின் இறுதியில், சிலர் இயேசுவின்மேல் நம்பிக்கை கொண்டதை வாசிக்கின்றோம்.
நம்பிக்கை, நம்பிக்கையின்மை, நம்பிக்கை குறைவு, அவநம்பிக்கை, அதீத நம்பிக்கை என வாழ்க்கை நகர்ந்துகொண்டேதான் இருக்கும்.
நமக்கு அருகில் இருப்பவர் தன் கையில் கற்களை வைத்திருந்தாலும், அவர்களோடு பேசுவதற்கு இயேசு பெற்றிருந்த துணிவுக்குக் காரணம் தன்னம்பிக்கையே.
தன்னம்பிக்கை இல்லாமல் மற்ற நம்பிக்கைகள் சாத்தியமல்ல.
'நான் தெய்வம்! நானே தெய்வம்!' என்னும் எண்ணம் நம் தன்னம்பிக்கைக்கு வலுவூட்டுகிறது.
வலுவிழந்து நிற்கும் நெஞ்சுக்கு வலுவூட்டும் ஒரு பதிவு. நாம் உறங்கச்செல்லுமுன் “நாளை காலை துயிலெழுவோம்” என்ற நம்பிக்கையிலிருந்து, 24 மணிநேரம் கழித்து அடுத்த நாள் அதே நேரம், அதே எண்ணத்தோடு உறங்கச்செல்வது வரை நம்மை இயக்குவது “ நம்பிக்கைதான்”. இது இறைவனில் வைப்பது மட்டுமல்ல…நம்மீதும் சேர் த்தேதான்.என்னதான் என் மீது நான் கொண்ட நம்பிக்கை என்னை வாழவைக்குமெனும் உறுதி என்னை முன்னே தள்ளினாலும், நாம் அடுத்தவர் மீது வைக்கும் நம்பிக்கை தவிர்க்க இயலாதது.ஆனாலும் எரேமியாவின் கூற்று போல், அடுத்தவர் மீது நம் நம்பிக்கைப் பொய்த்துப்போகும்போது அங்கே புள்ளியாக….நங்கூரமாக வருகிறவரே நம் இறைவன்.தன்னை இறைவனோடு இணைத்துப் பேசியதற்காக, இயேசுவை கல்லால் எறியத்துணிந்த யூதர்கள் போல், நம் வாழ்விலும் நம்மை காரணமில்லாமல் இழிசொற்களெனும் கற்களால் எறிபவர்களையும் நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டியுள்ளது. நம்பிக்கை- அவநம்பிக்கையின் பல முகங்கள் நம்மைத் துரத்திக்கொண்டேதான் இருக்கும்.அந்நேரங்களில் தன் அனைத்து நம்பிக்கையையும் (பலத்தையும்) தன் தும்பிக்கையில் தேக்கி வைத்திருக்கும் யானை போல, நம்மில் நாம் கொண்டுள்ள நம்பிக்கை நம்மை நகர்த்த வேண்டும்.இந்த நம்பிக்கையை நம்மில் தக்கவைத்துக்கொள்வதற்காக “ நான் தெய்வம்! நானே தெய்வம்!” என்ற தன்னம்பிக்கையின் உச்சத்திற்குச் சென்றாலும் தப்பில்லை என்கிறார் தந்தை.
ReplyDeleteபதிவின் ஆரம்பத்தில் உள்ள அந்த இன்ஸ்டாகிராம் போஸ்டர் கூறுவதும் “அடுத்தவர்மீது வைக்கும் நம்மபிக்கையை விட என்மீது நான் வைக்கும் நம்பிக்கையே மேலானது” என்பதுவே!
எத்தனை நம்பிக்கைகள் நம்மைக் காத்து நின்றாலும் நம்மை வேலியாய் நின்று பாதுகாப்பது “ஆண்டவரே! நீரே எனக்கு எல்லாம்!” எனும் இறை நம்பிக்கையே!
மன உறுதிதரும் நல்லதொரு பதிவிற்காகத் தந்தைக்கு நன்றிகள்!!!