Wednesday, April 6, 2022

அவர்மேல் எறிய கற்கள்

நாளின் (7 ஏப்ரல் 2022) நற்சொல்

அவர்மேல் எறிய கற்கள்

யூதர்களுக்கும் இயேசுவுக்கும் இடையேயான விவாதம் இன்றைய நற்செய்தி வாசகத்தில் (யோவா 8:51-59) தொடர்கிறது. 

'நீ பேய்பிடித்தவன்தான் என்பது இப்போது தெரிந்துவிட்டது' ... 'எங்கள் தந்தை ஆபிரகாமை விட நீ பெரியவனோ?' ... 'நீ யாரென்று நினைத்துக் கொண்டிருக்கிறாய்?' ... 'உனக்கு இன்னும் ஐம்பது வயதுகூட ஆகவில்லை. நீ ஆபிரகாமைக் கண்டிருக்கிறாயா?' என்று சொற்களாகத் தொடர்கிறது விவாதம். இறுதியில் அவர்கள்கள் அவர்மேல் எறியக் கற்களை எடுக்கின்றனர். இயேசு மறைவாக நழுவிக் கோவிலிலிருந்து வெளியேறுகின்றார். 

முதல் வாசகத்தில் (தொநூ 17:3-9), ஆபிரகாமுடன் உடன்படிக்கை செய்கின்ற கடவுள், அவருக்கு நிலத்தையும், வழிமரபையும் ஆசீராகக் கொடுக்கின்றார். 

யூதர்கள் தாங்கள் ஆபிரகாமின் வழிவந்தவர்கள் என்ற நிலையில் எப்போதும் பெருமிதம் கண்டனர். இயேசு தன்னை ஆபிரகாமுக்கு இணையாக்குவதை அவர்களால் தாங்கிக்கொள்ள இயலவில்லை. ஆனால், இயேசுவின் இறைத்தன்மையை அவர்கள் காண மறுக்கிறார்கள்.

உலகம் தோன்றுவதற்கு முன்பாக இருந்தவரைப் பார்த்து, 'உனக்கு இன்னும் ஐம்பது வயதுகூட ஆகவில்லை' எனச் சொல்கின்றனர்.

தங்கள் வசதிக்கேற்ப இயேசுவை வளைத்துப் பார்த்தனர்.

இன்னொரு பக்கம், இயேசுவும் தங்களைப் போல இருக்க வேண்டும் என நினைத்தனர். அவரின் மேன்மையை அவர்களால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை.

கடின உள்ளம் இறைவனை நம்மிடமிருந்து அகற்றிவிடுகிறது.

1 comment:

  1. சாதாரணமாக நாம் யாரையேனும் புதிதாகப் பார்க்கையில் நம்மை அவர்களோடு ஒப்பிட்டுப் பார்க்கிறது நம்மனம். அதைத்தொடர்ந்து யார் யாரைவிடப் பெரியவர் என மனத்துக்குள் ஒரு விவாதம்.தாங்களே பெரியவரென நினைக்கையில் அதைத்தொடர்ந்து வருவது ஒரு பெருமையுடன் கூடிய அகங்காரம். இந்தப் பிரபஞ்சத்தையே படைத்தவரைப்பார்த்து “உனக்கு இன்னும் ஐம்பது வயது கூட ஆகவில்லை” என்கின்றனர் அந்த அறிவிலிகள்.இருவருக்குமிடையே ஒரு சுவரைக்கட்டப் பார்க்கின்றனர்.தாங்கள் அபிரகாமின் வழிவந்தவர்கள் என உணர்ந்து கொண்ட அவர்களால், இயேசுவையும் தங்களோடு இணைத்துப்பார்க்கத்தடுக்கிறது அவர்களது கடின உள்ளம்.உள்ளம் கடினப்படும்போது தன்னையே இழக்கும் மனிதன் கற்களைத்தேடுகிறான் இயேசுவின் மேல் எறிய.அங்கிருந்து மறைந்து விடுகிறார் இயேசு.
    பொறாமை எனும் தீ எதையும் சுட்டெரிக்கக் கூடியது.அதன் தாக்கத்திலிழஞருந்து நம்மைக் காத்துக்கொள்ள வழியுறுத்தும் ஒரு பதிவு. தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete