Thursday, April 21, 2022

இயேசுவின் பெயரை

இன்றைய (21 ஏப்ரல் 2022) முதல் வாசகம் (திப 3:11-26)

இயேசுவின் பெயரை

நேற்றைய முதல் வாசகத்தைப் புரிந்துகொண்டால், அதன் தொடர்ச்சியான இன்றைய முதல் வாசகத்தை நம்மால் புரிந்துகொள்ள முடியும்.

பேதுருவும் யோவானும் பிற்பகல் மூன்று மணிக்கு இறைவேண்டல் செய்யக் கோவிலுக்குச் செல்கின்றனர். கிறிஸ்தவம் தொடக்கத்தில் யூத சமயத்தின் அடையாளங்களில் பங்கேற்கவே செய்தது. அதனால்தான், யூத செப நேரத்தில், யூதர்களின் கோவிலுக்குள் செல்கின்றனர் திருத்தூதர்கள். ஆனால், சில மாதங்கள் அல்லது ஆண்டுகளில் கிறிஸ்தவ நம்பிக்கை கொண்டவர்கள் அதே கோவிலுக்குள் அனுமதி மறுக்கப்பட்டனர். பேதுருவும் யோவானும் கோவிலுக்குள் நுழைகின்ற வாசலுக்குப் பெயர் 'அழகு வாயில்.' எருசலேம் நகருக்குள் நுழைய எட்டு வாயில்களும், ஆலயத்திற்குள் நுழைய 12 வாயில்களும் இருந்தன. இவற்றில் எந்த வாயிலின் பெயரும் 'அழகு வாயில்' என்று இல்லை. மக்களுடைய வழக்கத்தில் ஒருவேளை ஏதாவது ஒரு வாயில் இப்படி அழைக்கப்பட்டிருக்கலாம். 

'அழகு வாயில்' - அங்கே கால் ஊனமுற்ற ஒருவரைக் கொண்டு வந்து பிச்சை எடுக்க அமர்த்துகின்றனர். இது ஆலயத்தின் அழகைக் கெடுத்ததா? இல்லை. அழகானதொன்று அவருடைய வாழ்வில் இப்போது நடக்கவிருக்கிறது. 

கோவிலுக்குள் வருகின்ற திருத்தூதர்கள் இவரைக் கண்டவுடன், இவரை உற்று நோக்குகின்றனர். நல்ல சமாரியன் எடுத்துக்காட்டில் வரும் குரு அல்லது லேவியர் போல விலகிச்செல்லவில்லை அவர்கள். மாறாக, நின்று கவனிக்கிறார்கள். இவர்கள் கவனிப்பதை அந்த நபரும் கவனிக்கிறார். 

'எங்களைப் பாரும்!'

ஏதாவது கிடைக்கும் என அவர் பார்க்க, 'வெள்ளியும் பொன்னும் இல்லை என்னிடம். என்னிடம் உள்ளதை உமக்குக் கொடுக்கிறேன். நாசரேத்து இயேசு கிறிஸ்துவின் பெயரால் எழுந்து நடந்திடும்!' எனச் சொல்லி அவரைத் தூக்கி விடுகின்றார் பேதுரு. 

அங்கே அற்புதம் நடக்கிறது. மக்கள் அனைவரும் காண, அற்புதம் நடக்கின்றது. 

அங்கே கூடிய மக்கள் கூட்டத்திடம் பேதுரு ஆற்றும் உரையே இன்றைய முதல் வாசகம்.

'இயேசுவின் பெயரே இவருக்கு வலுவூட்டியது ... அவர் பெயர் மீது கொண்டிருந்த நம்பிக்கையால்தான் ...'

இங்கே 'பெயர்' என்ற சொல் மூன்று முறை பயன்படுத்தப்படுகின்றது. இதன் முக்கியத்துவம் மூன்று:

ஒன்று, எருசலேம் ஆலயத்தில் ஆண்டவராகிய கடவுளின், அதாவது யாவே கடவுளின் 'பெயர்' தங்கியிருப்பதாக இஸ்ரயேல் மக்கள் நம்பினர். அந்தப் பெயர்தான் இயேசு என்று சொல்லி, இயேசுவின் இறைத்தன்மையை முன்மொழிகின்றனர் திருத்தூதர்கள்.

இரண்டு, மக்கள் நடுவே வல்ல செயல்கள் செய்த இயேசு இப்போது தன் பெயரால் நன்மை செய்கிறார் என்றால், அவர் நம்மிடையே இருக்கின்றார். அவர் உயிர்த்துவிட்டார்.

மூன்று, இனி இயேசுவின் பெயர் மட்டுமே போதும். அனைவரும் அனைத்தும் நலம் பெறும். நலம் பெறுவதற்காக இந்தப் பெயர் தவிர வேறு எந்தப் பெயரும் நமக்குக் கொடுக்கப்படவில்லை.

இங்கே, திருத்தூதர்களோடு இருந்த இயேசுவின் உடனிருப்பை நம்மால் அறிந்துகொள்ள முடிகிறது. இதையே மாற்கு நற்செய்தியாளரும், 'அவர்கள் புறப்பட்டுச் சென்று எங்கும் நற்செய்தியைப் பறைசாற்றினர். ஆண்டவரும் உடனிருந்து செயல்பட்டு, நிகழ்ந்த அரும் அடையாளங்களால் அவர்களுடைய வார்த்தையை உறுதிப்படுத்தினார்' (காண். மாற் 16:20) என்று எழுதுகின்றார்.

இன்றைய முதல் வாசகம் நமக்குச் சொல்வது என்ன?

ஒன்று, இயேசுவின் உடனிருப்பை நாம் அறிந்துகொள்ள வேண்டும்.

இரண்டு, தேவையில் இருப்பவர்களை நின்று கவனிக்க வேண்டும்.

மூன்று, இயேசுவின் பெயர் மேல் நாம் கொள்ளும் நம்பிக்கையால் மற்றவர்களுக்கு நம்மால் நலம் தர முடியும்.

மொத்தத்தில், அவருடைய இருப்பால் நம் இருத்தலும் இயக்கமும் மாற வேண்டும்.


1 comment:

  1. “The Name of Jesus”…. வாசிக்கும்போதே ஒரு கம்பீரத்தை உணரமுடிகிறது. “அழகான ஒரு விஷயம் நடக்கவிருக்கிறது இங்கே” என்பதை முன் கூட்டியே உணர்த்தும் ஒரு அழகு வாயில். கால் ஊனமுற்ற ஒருவன் பிச்சையெடுக்கக் கொண்டுவரப்படுகிறான். திருத்தூதரிடமிருந்து பொன்னும்,வெள்ளியும் எதிர்பார்த்த அவனை, “நசரேத்து இயேசுகிறிஸ்துவின் பெயரால் நடந்திடும்” என்று திருத்தூதர்கள் சொல்ல அவனும் எழுந்து நடக்க,ஆச்சரியப்படுகிறது மக்கள், கூட்டம். “இயேசுவின் பெயர் இவருக்கு வலுவூட்டியது இவர்கொண்டிருந்த நம்பிக்கையால் தான்” எல்லா பெயர்களுக்கும் உயர்ந்த பெயரைத் தந்தை அவருக்குக்கொடுக்க, அவரும் அதைத் தகுதியாகக் கண்டார். இயேசுவின் பெயர் ஒரு ஊனமுற்றவனை சுகமாக்கமுடியுமெனில் ஏன் என்னால் முடியவில்லை?. ஏனெனில் என்னிடம் ஊனம் இருக்கிறது. கிடைத்தற்கரிய செல்வமாக அவரின் பெயரை உச்சரிக்கக்கூடிய பெயரை நாம் பெற்றுள்ளோம். முதலில் நம்மிடமுள்ள அவநம்பிக்கை எனும் ஊனம் போக்குவோம். அடுத்து நம்மைச் சுற்றியுள்ளவர்களின் ஊனம் களைய முயற்சிப்போம்.நம்மிடம் வேண்டியதெல்லாம் “‘அவரின் உடனிருப்பும்,நம்பிக்கையுமே!”
    தன்னிலேயே ‘ அப்பெயரை ‘ வைத்திருக்கும் தந்தைக்கு வாழ்த்துக்களும்,நம்பிக்கை தரும் நல்லதொரு பதிவிற்கான நன்றிகளும்!!!

    ReplyDelete