Friday, April 29, 2022

முறை அல்ல

இன்றைய (30 ஏப்ரல் 2022) முதல் வாசகம் (திப 6:1-7)

முறை அல்ல

இந்த ஆண்டு உயிர்ப்புக் காலத்தில் (ஏப்ரல் 19) நான் என் 13 ஆண்டு குருத்துவ அருள்பணி வாழ்வை நிறைவு செய்தேன். என்னோடு அருள்பொழிவு செய்யப்பட்ட அருள்பணியாளர்களோடு உள்ளத்தில் இணைந்து இறைவனுக்கு நன்றி கூறினேன். இந்த ஆண்டில் என் வாழ்வின் இலக்கு (விஷன்), நோக்கு (மிஷன்), மற்றும் அடிப்படை மதிப்பீடுகளை (கோர் வேல்யூஸ்) கூர்மைப்படுத்தலாம் என நினைத்தேன். என் அருள்பொழிவு விருதுவாக்கை - 'அவரோடு' (மாற் 3:14) (இலத்தீனில், 'எல்ஸே கும் இல்லோ') என் இலக்கு என நிர்ணயித்தேன். என் நோக்கு என நான் தேர்ந்து கொண்டது - 'இறைவேண்டலும் (இறை)வார்த்தைப் பணியும்' - இன்றைய முதல் வாசகத்திலிருந்து (திப 6:4) தூண்டப்பட்டது. அடிப்படை மதிப்பீடுகள் என 'மகிழ்ச்சி, உண்மை, மற்றும் கட்டின்மை' ஆகியவற்றைத் தேர்ந்துகொண்டேன்.

13 ஆண்டுகளுக்கு முன் நிறைய செய்ய வேண்டும் என நினைத்தேன். ஆனால், வாழ்க்கையின் நாள்கள் நகர நகர நாம் நிறைய செய்ய முடியாது என்பதை உணரத் தொடங்குகிறேன். ஆக, இலக்கு, நோக்கு, மதிப்பீடுகள் கூர்மைப்படுத்தல் வழியாக, கொஞ்சமாவது செய்ய முடியும் என்னும் நம்பிக்கை துளிர்க்கிறது. 

இன்றைய முதல் வாசகமும் இதையே காட்டுகிறது.

இயேசுவின் உயிர்ப்புக்குப் பின்னர் திருத்தூதர்கள் உலகத்தையே மாற்றி விடலாம் என நினைக்கின்றனர். இதை, அதை என எல்லாவற்றையும் செய்கின்றனர். ஏழைகளுக்கு உணவு, வீடற்றோருக்கு வீடு, அநாதைகளுக்கு ஆதரவு, குழந்தைகளுக்குப் பாதுகாப்பு, முதியோருக்கு ஆறுதல், நற்செய்தி அறிவித்தல், இறைவேண்டல் என வாழ்க்கை வேகமாக நகர்கிறது. இந்த நேரத்தில் ஒரு பிரச்சினை எழுகிறது. மொழி அடிப்படையிலும் உணவு அடிப்படையிலும் பிரச்சினை எழுகின்றது. வழக்கமாக எல்லாக் குழுமங்களிலும் இந்த இரண்டின் அடிப்படையில்தான் பிரச்சினை எழுகின்றது. இரண்டும் வாய் சம்பந்தப்பட்டதுதான். 

'எங்கள் கைம்பெண்கள் பந்தியில் கவனிக்கப்படவில்லை' என்று கிரேக்க மொழி பேசுவோர் எபிரேய மொழி பேசுவோருக்கு எதிராக முணுமுணுக்கின்றனர். இந்தப் பிரச்சினையை கடவுளின் கண் கொண்டு பார்க்கின்ற திருத்தூதர்கள், 'நாங்கள் கடவுளது வார்த்தையைக் கற்பிப்பதை விட்டுவிட்டு பந்தியில் பரிமாறும் பணியில் ஈடுபடுவது முறை அல்ல' என்று உணர்கின்றனர். மேலும், 'நாங்களோ இறைவேண்டலிலும் வார்த்தைப் பணியிலும் ஈடுபட்டிருப்போம்' என்கின்றனர். மேலும், 'நற்சான்று பெற்றவர்களும் தூய ஆவி அருளும் வல்லமையும் ஞானமும் நிறைந்த எழுவர்களைத் தெரிந்தெடுத்து' அவர்களைத் திருத்தொண்டர்களாக ஏற்படுத்துகின்றனர்.

இந்த நிகழ்வு நமக்கு, குறிப்பாக அருள்பணியாளர்களின் மேய்ப்புப் பணிக்கு ஆறு பாடங்களைத் தருகின்றது:

(1) நம் முதன்மைகளைச் சரி செய்தல்

'பந்தியில் பரிமாறுவது அல்ல. மாறாக, இறைவேண்டலும் இறைவார்த்தைப் பணியும்' எனத் தங்களுடைய முதன்மைகளைச் சரி செய்கின்றனர் திருத்தூதர்கள். வாழ்வில் எல்லாம் முதன்மையானவைதாம். எல்லாம் இன்றியமையாதவைதாம். ஆனால், ஆற அமர்ந்து யோசித்தால் மிகச் சிலவே முதன்மைகளாக மாறுகின்றன. ஆகையால்தான், இயேசு, 'ஆனால் தேவையானது ஒன்றே' என்கிறார். இன்று என் வாழ்வில், என் பணியில் உள்ள முதன்மை எது? வாழ்வின் முதன்மைகள் மற்றவை முன் ஒருபோதும் துன்புறுக்கூடாது.

(2) பணிப் பகிர்வு (டெலகேஷன்)

தாங்களே அனைத்தையும் செய்ய வேண்டும் என்னும் மனநிலை விடுத்து தங்கள் பணியைத் திருத்தூதர்களுடன் பகிர முன்வருகின்றனர். வயதின் காரணமாக இது பெரும்பாலும் வருகின்றது. ஆனால், இங்கே முதன்மையான பணிகளைத் தங்களுக்கு வைத்துக்கொண்டு மற்றவற்றைப் பகிர்ந்துகொடுக்கின்றனர். இந்த உலகத்தில் நான் மட்டுமே செய்யக்கூடிய பணி என்று நம் ஒவ்வொருவருக்கும் உண்டு. அதைக் கண்டுகொண்டு, அதைப் பற்றிப் பிடித்துக் கொண்டு மற்றவற்றைப் பகிர்ந்துகொடுத்தல் நலம். பகிர்ந்துகொடுத்தல் வழியாக நாம் அதிகாரம் பறிபோவதில்லை. மாறாக, மற்றவர்கள் நம்மோடு உடனுழைக்கத் தொடங்குகின்றனர்.

(3) நிரந்தரத் தீர்வு காண்பது

ஒரு பிரச்சினைக்கு நாம் தற்காலிகமாக அல்லது நிரந்தரமாகத் தீர்வு காணலாம். தற்காலிகத் தீர்வு எளிதாகத் தெரியும். ஆனால், அடுத்தடுத்த பிரச்சினைகளைக் கொண்டு வரும். சட்டையில் கிழிந்த ஒரு பகுதியை ஊக்கு கொண்டு சரி செய்வது தற்காலிகத் தீர்வு. ஆனால், இது கிழிசலை அதிகமாக்கும். ஆனால், ஊசி-நூல் கொண்டு தைக்கும்போது நிரந்தரத் தீர்வு கிடைக்கிறது சட்டைக்கு. பந்தியின் பிரச்சினை தானே அதைச் சரி செய்ய முயலாமல் புதிய அமைப்பை - திருத்தொண்டர்களை - உருவாக்குகின்றனர்.

(4) உடனடித் தீர்வு

பிரச்சினை தங்கள் காதுகளுக்கு எட்டியவுடன் உடனடியாகச் செயலாற்றத் தொடங்குகின்றனர் திருத்தூதர்கள். உடனடியான தீர்வு நம் ஆதாரங்கள் வீணாகாமல் நம்மைக் காக்கிறது.

(5) வலுவற்றவர்களுடன் உடனிருத்தல்

பந்தியில் உணவு மறுக்கப்பட்டவர்கள் மூன்று நிலைகளில் வலுவற்றவர்களாக இருக்கின்றனர்: முதலில், அவர்கள் கிரேக்க மொழி பேசுகின்ற சிறுபான்மையினர், இரண்டு, அவர்கள் பெண்கள், மூன்று, அவர்கள் கைம்பெண்கள். திருஅவை வலுவற்றவர்களுடன் துணை நிற்கிறது என்பது நாம் இங்கே கற்கும் பாடம். ஆனால், பங்குத் தளத்தில் நாம் வலுவற்றவர்களுக்குத் துணைநிற்பதை விட, பொருளாதாரத்தில் படிப்பில் சமூக உயர்வில் வலுவானவர்களுடன்தான் துணை நிற்கின்றோம். இது தவறு!

(6) முணுமுணுத்தலைக் கேட்டல்

பந்தியின் பரிமாறும் சத்தத்திலும் ஒரு சிலரின் முணுமுணுப்பைக் கேட்கின்றனர் திருத்தூதர்கள். முணுமுணுப்புகள் பெரும்பாலும் உணவறையில்தான் - குழுமத்திலும், குடும்பத்திலும் - தொடங்குகின்றன. அவற்றைச் சரி செய்தல் அவசியம்.

நிற்க.

திருத்தொண்டர்கள் என முன்மொழியப்படுபவர்களுக்கு இரண்டே தகுதிகள்தாம் முன்மொழியப்படுகின்றன: ஒன்று, அவர்கள் நற்சான்று பெற்றிருக்க வேண்டும். ஏனெனில், மற்றவர்கள் முன் வழுவாநிலையில் இருப்பவர்தாம் அவர்களைக் கண்டித்துத் திருத்தி வழிநடத்த முடியும். மனிதர்முன் நற்சான்று நமக்கு இல்லாதபோது நாம் அவர்களோடு சமரசம் செய்யத் தொடங்குவோம். இரண்டு, தூய ஆவி அருளும் வல்லமையும் ஞானமும் பெற்றிருக்க வேண்டும். முனைவர் பட்டமோ, படிப்பில் முதலிடமோ, விவிலிய அறிவோ தகுதி அல்ல. மாறாக, தூய ஆவி அருளும் வல்லமையும் ஞானமும். ஆக, நற்சான்றின் வழியாக திருத்தொண்டவர் மனிதர்முன்னும், தூய ஆவி வழியாக கடவுள்முன்னும் உகந்தவராக மாறுகின்றார்.

இவையே சிறந்த தலைமைத்துவத்துக்கான தகுதிகள்.

ஆக, மேய்ப்புப் பணியில் இருக்கும் நாம் மனிதர்முன் நற்சான்றும், இறைவன்முன் தூய ஆவியின் அருளும் பெற்றவர்களாக இருக்கிறோமா என்பதை அறிந்து, அதற்கேற்ப நம் வாழ்வைத் தகவமைத்துக்கொள்தல் நலம்.

பந்தியின் உணவு ஆறிப் போவதற்கு முன் தீர்வு காண்கின்றனர் திருத்தூதர்கள்.

நம் அருள்பொழிவின் எண்ணெய் காய்ந்து போகுமுன் நம் வாழ்வை மேம்படுத்திக் கொள்தல் நலம்.

1 comment:

  1. Philomena Arockiasamy4/29/2022

    “ஆசையிருக்கு தாசில் பண்ண; ஆனால் அதிர்ஷ்டம் இருக்கு கழுதை மேய்க்க” என்றொரு பழமொழி உண்டு ( தந்தை கோபித்துக்கொள்ள வேண்டாம்; எல்லோருக்கும் இது பொருந்தும்) நாம் எல்லோருமே நம் பிறந்த நாட்கள்,புதுவருடம் தொடங்கும் நாள்,திருமணநாள், குருக்களாயிருந்தால் குருத்துவத்திருப்பொழிவு பெற்ற நாள்,கன்னியர்களுக்கு துறவற வார்த்தைப்பாடு எடுத்த நாள்..இப்படி எத்தனையோ நாட்களில் நாம் கடந்து வந்த பாதையை நினைத்துப்பார்த்து செய்த தவறுக்கு வருந்தி, செய்யாது விட்ட நற்செயல்களுக்காக இறைவனிடம் மன்னிப்புக் கேட்டு மீண்டும் ஒரு புதிய வாழ்க்கையைத் தொடங்குகிறோம்.வீழ்தலும்…எழுதலும் காலத்தின் கட்டாயம்.இப்படியொரு திரும்பிப்பார்த்தலைத் தான் தந்தையும் இங்கே பகிர்கிறார்.13 ஆண்டுகளுக்கு முன் நிறைய செய்ய வேண்டுமென நினைத்தவர் நாட்கள் நகர,நகர அதிகம் செய்ய முடியாது என்று உணர்ந்தது நிதர்சனம்.இலக்கு,நோக்கு,மதிப்பீடுகள்,கூர்மைப்படுத்தல்…என்ன அழகான வார்த்தைகள்!….இவற்றின் மூலம் கொஞ்சமாவது செய்ய வேண்டுமெனும் நம்பிக்கை பிறப்பது நம்மையும் கொஞ்சம் கொஞ்சம் நிமிர்ந்து அமரச்செய்கிறது.ஏன் நாமும் இதைச்செய்யக் கூடாது எனும் கேள்வி பிறக்கிறது.
    “எங்கள் கைம்பெண்கள் பந்தியில் கவனிக்கப்படவில்லை” என்று முணுமுணுத்தவர்களுக்கு திருத்தூதர்களின் பதில் கடவுளின் வார்த்தையைப் போதிப்பதை விட்டு இறைவேண்டலில் ஈடுபடுவது எங்கள் பணி அல்ல.” ஆம்…யார் எதைச்செய்ய வேண்டுமோ,அவர்கள் அதைச்செய்தலே அழகு! அருட்பணியாளர்களைக் குறிப்பிட்டுத் தந்தை எடுத்து வைக்கும் விஷயங்கள் மற்றவர்க்கும் பல நேரங்களில் கைகொடுக்கலாம்; தெரிந்துகொள்வதில் தப்பில்லை.
    “என் வாழ்வில் தேவையானது ஒன்றே! “… அந்த ஒன்று எது என்று தெரிந்துகொண்டு அதற்கு முன்னுரிமை தரவும்….பணிகளைப் பகிர்ந்து கொடுக்கவும்….பிரச்சனைகளுக்கு அன்றாடத் தீர்வை விட்டு நிரந்தரத் தீர்வைக்காணவும்….பிரச்சனைகளை நாளை பார்த்துக்கொள்ளலாம் என்று ஆறப்போடாமல் உடனே தீர்வு காணவும்..வலுவற்றவர்கள் யாரெனத்தேடிக்கண்டுபிடித்து அவர்களின் வலுவின்மையில் வலு சேர்க்கவும்… முணுமுணுத்தல் அது எங்கிருந்து வந்திடினும் அதை சரிசெய்யவும்….என்பவைதான் அவை!
    நற்சான்று வழியாக மனிதர் முன்னும்,தூய ஆவி வழியாக கடவுள் முன்னும் சாட்சியாக நிற்பவரே திருத்தொண்டராகத் தெரிவு செய்யப்படவேண்டும்.” அருள்பொழிவின்எண்ணெய் காய்ந்து போகுமுன் நம் வாழ்வை மேம்படுத்திக்கொள்தல் நலம்.” அருமை!
    அருட்பணியாளருக்காகவே கொடுக்கப்பட்ட பதிவு தான்.ஆனால் அந்த அருட்பணியாளர்கள் யார்? நம்மவர்கள்; நம்மிலிருந்து சென்றவர்கள். அப்படியிருக்க சில மனித பலவீனங்களில் அவர்கள் செய்யும் தவறுகளை மைக் போட்டுப் பேசுவது என்ன நியாயம்? நாம் வேர்களெனில் அவர்கள் நம் கிளைகள். நாம் ஒரு உடலெனில் அவர்கள் அதன் உறுப்புகள். அவர்களின் நல்லதோ..கெட்டதோ அது நம்மையும் பாதிக்க வேண்டும்.அவர்கள் தம் களைகளை அறிய…அவற்றைப் புறந்தள்ள நாம் உதவ வேண்டும். தினம் தினம் மாறிவரும் சூழ்நிலையின் பலிகடா ஆகாமல் அவர்களைப் பாதுகாப்பது நம் கடமை. எல்லாவற்றிற்கும் மேலாக அனைத்து குருக்களாகவும் தினமும் இறைவேண்டல் செய்வோம்.
    தந்தையே! கடந்து போன 13 ஆண்டுகளைப்பற்றிய கவலை வேண்டாம். பெரிய எதிர்காலம் உங்கள் முன் கைகட்டி நிற்கிறது.தங்களின் நோக்கு,இலக்கு, மதிப்பீடுகளைக் கூர்மைப்படுத்துதல் வழியாக இன்னும் எவ்வளவோ செய்யலாம்.தங்களுக்கு என் செபங்களும்! வாழ்த்துக்களும்!! அருட்பணியாளர்களின் ஏன் இல்லறத்தாருக்கும்லுதவக்கூடிய வாழ்க்கைமுறை பற்றிய ஆழமிக்க கருத்துக்களுக்காக நன்றிகள்!!!

    (தந்தைக்கு மீண்டும் ஒரு வேண்டுகோள். ஆரம்ப வரிகளுக்காக கோபமோ,வருத்தமோ வேண்டாம்)

    ReplyDelete