Wednesday, April 27, 2022

இயல்பின் வெளிப்பாடு

இன்றைய (28 ஏப்ரல் 2022) நற்செய்தி (யோவா 3:31-36)

இயல்பின் வெளிப்பாடு

இன்றைய நற்செய்தி வாசகப் பகுதியோடு நிக்கதேம்-இயேசு உரையாடல் நிறைவு பெறுகின்றது. 'மேலிருந்து வருபவர் - கீழிருந்து வருபவர்,' மற்றும் 'கடவுள் - மனிதர்' என்னும் முரண்களோடு உரையாடல் நிறைவு பெறுகிறது. உரையாடலை வாசிக்கும் நம்மை நோக்கிப் பாடம் ஒரு கேள்வியை மறைமுகமாக முன்வைக்கிறது: 'நீங்கள் மேலிருந்து வருபவரா? அல்லது கீழிருந்து வருபவரா?' 'நீங்கள் கடவுளிடமிருந்து வருபவரா?' அல்லது 

'மனிதரிடமிருந்து வருபவரா?'

முதல் வாசகத்தில் திருத்தூதர்கள் பேதுருவும் யோவானும் தலைமைச் சங்கத்தால் எச்சரிக்கப்படுகின்றனர். கடவுளின் வார்த்தையை இனியும் எடுத்துரைக்கக் கூடாது என்று அவர்கள் எச்சரிக்கப்பட்டபோது, 'நாங்கள் கடவுளுக்குக் கீழ்ப்படிவதா? அல்லது மனிதருக்குக் கீழ்ப்படிவதா?' என்று எதிர்கேள்வி கேட்கின்றனர். 

தங்கள் இயல்பை அறிந்த இவர்கள் எதிர்கேள்வி கேட்கின்றனர்.

தூய ஆவியாரின் வருகைக்கு முன்னர் இவர்கள் மனித இயல்பில் இருக்கின்றனர். அச்சம் கொண்டு கதவுகளை அடைத்துக் கொள்கின்றனர். ஆனால், தூய ஆவியாரைப் பெற்றவுடன் அவர்கள் இயல்பு மாற்றம் பெறுகின்றனர். அவர்களுடைய அச்சம் அகல்கின்றது.

இன்று நாம் நம்மிடம் உள்ள எந்த இயல்பில் செயல்படுகின்றோம்?

மனித இயல்பில் நாம் இருந்தாலும், இறை இயல்பு என்னும் இயங்குதளம் நோக்கி நகரும்போது, நாம் மாற்றம் பெறுகின்றோம்.


1 comment:

  1. Philomena Arockiasamy4/27/2022

    எடுத்த எடுப்பில் கேட்கப்படும் கேள்விகள்….நான் மேலிருந்து வருபவளா? கீழிருந்து வருபவளா? கடவுளிடமிருந்து வருபவளா? எது மேல்? எது கீழ்? தெரியவில்லை. ஆகவே நான் கடவுளிடமிருந்தே வருகிறேன்…திண்ணமாக!
    தலைமைச் சங்கத்தினரால் கேள்விகேட்கப்பட்ட பேதுருவும்…யோவானும் தாங்கள் இறைவனுக்கே கீழ்ப்படிய வேண்டுமென்பதை மறைமுகமான கேள்வியோடு வெளிப்படுத்துகின்றனர்….தங்களுக்குள் இருந்த தூய ஆவியின் துணைகொண்டு.
    இன்று என் முன்னே பல தவறுகள் நடக்கையில்…..அநீதி தலைதூக்கி நீதி ஒளிந்து கொள்கையில் நான் என்ன செய்கிறேன்? என்னுள் உறையும் தூய ஆவியை செயல்பட விடுகிறேனா? இல்லை ஒளித்து வைக்கிறேனா? யோசிப்போம்! நான் மனிதன்தானே! என்னால் யாது இயலும்? என்று கேட்பதை விடுத்து நம்முள் நமக்கே தெரியாமல் இருக்கும் இறைதளத்தை இயங்கு தளமாக்குவோம். எதுவும் இனிதாகும்; சுபமாகும் என்றதொரு பதிவிற்காகத் தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete