Monday, April 11, 2022

மனமகிழ்வு நேரம்

இன்றைய (12 ஏப்ரல் 2022) நற்செய்தி (யோவா 13:21-33, 36-38)

மனமகிழ்வு நேரம்

துறவு இல்லங்களிலும், கல்லூரி விடுதிகளிலும், அருள்பணியாளர் பயிற்சி மையங்களிலும், கூட்டுக் குடும்பங்களிலும் இரவு உணவிற்குப் பின் 'மனமகிழ்வு நேரம்' என்று ஒன்று உண்டு. ஏறக்குறைய 30 நிமிடங்கள் நடக்கும் அந்நிகழ்வில் குழு விளையாட்டுக்கள், நகைச்சுவை பரிமாற்றம், நடந்த நிகழ்வுகளின் திறனாய்வு போன்றவை இருக்கும். இப்படி அமர்ந்து பேசிவிட்டவர்கள் எந்தவொரு மனத்தாங்கலும் இல்லாமல், வருத்தமும் இல்லாமல் தூங்கச் செல்வார்கள். மனமகிழ்வு நேரம் முடிந்து காலை உணவு முடியும் வரை 'நீண்ட அமைதி' (கிராண்ட் சைலன்ஸ்) கடைப்பிடிக்கப்படும்.

இயேசுவின் இறுதி இராவுணவு முடிந்து ஒரு மனமகிழ்வு நேரமாக இன்றைய நற்செய்தி வாசகம் இருக்கிறது. இயேசு அமர்ந்திருக்கிறார். அவருடைய மார்பில் அன்புச் சீடர் சாய்ந்திருக்கிறார். இன்னும் கொஞ்சம் திராட்சை இரசமும் ரொட்டியும் மீதம் இருக்கிறது. மற்ற சீடர்களும் அமர்ந்திருக்கிறார்கள். உரையாடல் இயேசு-அன்புச் சீடர்-பேதுரு என்ற முக்கோணத்தில் நகர்கிறது. பேசு பொருளாக இங்கே யூதாசு இருக்கிறார். 

'உங்களுள் ஒருவன் என்னைக் காட்டிக் கொடுப்பான்'

'உங்களுள் ஒருவன் என்னை மறுதலிப்பான்'

- இப்படியாக யூதாசு மற்றும் பேதுரு செய்யப்போகின்ற செயல்களை முன்னுரைக்கின்றார் இயேசு.

இரண்டிற்கும் இரண்டு அடையாளங்கள் தருகின்றார் இயேசு:

'இரசத்தில் தோய்த்த அப்பத்துண்டு' - யூதாசு

'சேவலின் கூவல்' - பேதுரு

யூதாசு தான் செய்யப்போவதைக் குறித்து மௌனம் காக்கிறார். பேதுரு தன்னையே, 'இல்லை, இல்லை, நான் அப்படிச் செய்ய மாட்டேன்' என மறுதலித்துக்கொள்கிறார்.

இந்த நிகழ்வை இயேசு பெரிய கட்டத்தில் வைத்துப் பார்க்கிறார்: அதுதான், கடவுள் அருளும் மாட்சி.

அதாவது, தனக்கு முன்னால் நடந்தேறுகின்ற நிகழ்வுகள் - காட்டிக்கொடுத்தலும், மறுதலித்தல் - அவரை அசைக்கவில்லை.

இயேசு எல்லாரையும் ஒரே மாதிரி பார்க்கும் பக்குவம் பெற்றிருக்கிறார். ஒரு சீடர் மார்பில் சாய்ந்து தன்னை அன்பு செய்கிறார் என்று துள்ளவும் இல்லை. மற்ற இவர் காட்டிக்கொடுக்கவும், மறுதலிக்கவும் இருக்கிறார்கள் என்று துவண்டுவிடவும் இல்லை. ஒரே மனநிலை. சமமான மனநிலை. அமைதியான நிலை.

இந்தச் சமநிலை எப்போது வரும்?

- தன்னை அறிந்த ஒருவர் இந்த மனநிலையை எளிதாகப் பெறுவார்

- தன் வாழ்வை பெரிய வட்டமாக இணைத்துப் பார்க்கிறவர் இம்மனநிலையை எளிதாகப் பெறுவார்

- எல்லாவற்றிலும் கடவுளின் விரல் செயலாற்றுவதைப் பார்க்கிறவர் இம்மனநிலையை எளிதாகப் பெறுவார்

- மற்றவர்கள் இப்படி இருந்தால் அவர்களை நான் அன்பு செய்வேன் என்ற நிலையில் இல்லாமல், மற்றவர்கள் என்னை அன்பு செய்யாவிட்டாலும், அவர்கள் எனக்கு என்ன செய்தாலும் நான் அவர்களை அன்பு செய்வேன் என்ற பக்குவம் கொண்டிருப்பவர் இம்மனநிலையை எளிதாகப் பெறுவார்

- தன் வாழ்வில் எந்தப் பற்றுகளையும் கொண்டிராதவர் இம்மனநிலையைப் பெறுவார்

இந்தச் சமநிலை நமக்கும் வந்தால், இரவு ஒன்பது மணி மட்டுமல்ல. எல்லா நேரமும் மனமகிழ்வு நேரமே.


1 comment:

  1. “மனமகிழ்வு நேரம்”…. பள்ளி,கல்லூரி, ஆசிரியப்பணி இவற்றின் போது விடுதிகளில் தங்கியிருந்த எனக்கு இந்த மனமகிழ்வு நேரம் பரிட்சயமானதொன்றே.அதைத் தொடர்ந்து வரும் அந்த “நீண்ட அமைதி நேரமும்” அதிக முக்கியம் வாய்ந்த ஒன்று. இயேசுவின் காட்டிக்கொடுத்தல் நிகழ்வுக்கு முன்னால் நடந்தவற்றை படம்பிடித்துக் காட்டுகிறார் தந்தை.யூதாசும்,பேதுருவும் நிகழ்த்தவிருந்த விஷயங்களை முன் மொழிந்த இயேசுவுக்கு மௌனமும்,மறுதலிப்புமே பதிலாக வருகின்றன.தன் மார்பில் சாய்ந்துள்ள சீடரின் அன்பையும் சரி…தன்னைக்காட்டிக்கொடுக்கவும்,மறுதலிக்கவும் தயாராயிருக்கிற சீடர்களின் ‘வளர்த்த கடா மார்பில் பாயும்’ செயலையும் சரி…ஒன்றுபோலவே பார்க்கிறார் இயேசு.முன்னது கண்டு துள்ளலும் இல்லை; பின்னது கண்டு துவண்டலும் இல்லை. தன்னைப்படைத்தவரின்….பாதுகாத்துவருபவரின் உள்ளம் அன்றி வேறு ஏதும் அவர் மனத்தைப் புரட்டவில்லை.
    “என்னை நேசிப்பவர்களை நேசிப்பேன்; என்னை நேசிக்க மறுப்பவர்களை இன்னும் அதிகமாக நேசிப்பேன்.” என்ற பக்குவம் என்னில் வந்தால் என்னாலும் ஆண்டவனின் விரல்கள் என்னை வழிநடத்துவதை உணரமுடியும். அழகானதொரு மேடைநாடகம் பார்த்த உணர்வு. எல்லா நேரத்தையும் “ மனமகிழ்வு நேரமாக்க” வழி சொல்லும் உணர்ச்சி மிகு பதிவிற்காகத் தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete