பாவிகளாகவே சாவீர்கள்
தன் சமகாலத்தவர் தன்னை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக இயேசு பல முயற்சிகள் செய்கின்றார். ஆனால், அவரை ஏற்றுக்கொள்வதற்குப் பதிலாக அவரை எதிர்ப்பதிலேயே அக்கறை காட்டுகின்றனர் சமகாலத்தவர்கள்.
இன்றைய நற்செய்தி வாசகம் (யோவா 8:21-30), மூன்று பகுதிகளாக அமைந்துள்ளது. முதல் பகுதியில், 'நான் செல்லும் இடத்திற்கு உங்களால் வர இயலாது' என இயேசு சொல்ல, பரிசேயர்கள், 'இவர் தற்கொலை செய்துகொள்ளப் போகிறாரோ?' எனக் கேட்கின்றனர். இரண்டாம் பகுதியில், 'நீர் யார்?' என அவர்கள் இயேசுவிடம் கேட்கின்றனர். ஆனால், அந்தக் கேள்விக்கு இயேசு அளித்த விடையை அவர்கள் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. இறுதியாக, 'இருக்கிறவர் நானே' என்று தன்னை வெளிப்படுத்துகின்றார். சிலர் இயேசுவிடம் நம்பிக்கை கொள்கின்றனர்.
இந்த வாசகத்தில் மூன்று சொல்லாடல்கள் நம் சிந்தனையைத் தூண்டுகின்றன:
(அ) பாவத்திலேயே சாவீர்கள்
யோவான் நற்செய்தியைப் பொருத்தவரையில் 'பாவம்' என்பது 'இயேசுவை நம்பாத நிலையே.' இந்த நம்பிக்கையற்ற நிலைக்குக் காரணம் மக்களின் கடின உள்ளம். முதல் வாசகத்தில் (எண் 21:4-9), கடவுளுக்கும் மோசேக்கும் எதிராக மக்கள் முணுமுணுக்கின்றனர். அவர்களை அழிப்பதற்காகக் கடவுள் பாம்புகளை அனுப்புகின்றார். பாம்புகளை அனுப்பிய அவரே அவர்களைக் காப்பாற்றவும் வகை செய்கின்றார். கடின உள்ளமும் பொறுமையற்ற நிலையும் இன்றைய நம் பாவங்களாக இருப்பின் அவற்றைக் களைவது நலம்.
(ஆ) உயர்த்திய பின்பு
'உயர்த்துதல்' என்பது யோவான் நற்செய்தியில், 'இயேசு சிலுவையில் உயர்த்தப்படுவதையும்,' 'இயேசுவின் உயிர்ப்பு மற்றும் விண்ணேற்றத்தையும்' குறிக்கிறது. எண்ணிக்கை நூலில் மோசே பாலைநிலத்தில் வெண்கலப் பாம்பை உயர்த்துகின்றார். பாம்பினால் கடிபட்டவர்கள் அதைக் கண்டபோது நலம் பெறுகின்றனர்.
(இ) என்னை அனுப்பியவர் என்னோடு
இயேசுவின் ஆழ்ந்த அப்பா அனுபவத்தை இங்கே காண்கின்றோம்: 'நானாக எதையும் செய்வதில்லை ... என்னை அனுப்பியவர் என்னோடு இருக்கிறார். அவர் என்னைத் தனியாக விட்டுவிடுவதில்லை. நானும் அவருக்கு உகந்தவற்றையே எப்போதும் செய்கிறேன்.' இந்த வார்த்தைகள் இயேசுவை இறைமகன் என்று நமக்குக் காட்டுவதோடு, தந்தைக்கும் மகனுக்கும் இருந்த ஆழமான உறவையும் காட்டுகின்றது. இயேசு எந்நிலையிலும் தன் தந்தைக்கு எதிராகச் செயல்படவே இல்லை. அவருக்கு உகந்ததை மட்டுமே நிறைவேற்றக் கூடியவராக இருக்கிறார்.
இன்று நம் முன்பாக சிலுவையில் உயர்த்தப்பட்ட இயேசுவைக் காணும்போதெல்லாம், நம் பதிலிறுப்பு என்ன? அவரைப் பார்க்கும் நாம் நலம் பெறுகின்றோமா? அவருக்கு உகந்தவற்றையே நாம் செய்ய முற்படுகின்றோமா?
“அவரோடு” இருந்தவர்களே அவரை ஏற்றுக்கொள்ளவில்லை.பரமனுக்கே பாரம் ஏற்றுகிறார்கள் அவரின் சமகாலத்தவர்கள்.இறுதியாக அவர்களில் சிலரையேனும் அவரில் நம்பிக்கை கொள்ளச்செய்யும் “ இருக்கிறவர் நானே!” எனும் வார்த்தைகள். இறைவனை நம்பாமை மக்களின் கடின உள்ளமெனில், அவர்களை அழிக்க நினைக்கும் நினைப்பு இறைவனின் கடின உள்ளம்.இறுதியில் தோற்பதோ இறைவனின் கடின உள்ளம்; வெல்வதோ தன் மக்களைக் காப்பாற்ற வேண்டுமெனும் இறைவனின் “பேரிரக்கம்.”
ReplyDeleteதந்தைக்கும் மகனுக்குமிடையேயான நேசப்பிணைப்பு அவர்களுக்கும் ஒரு மனித உள்ளம் இருந்ததென்பதை வெளிப்படுத்துகிறது. எந்த நிலையிலும் தன் தந்தைக்கு எதிராக செயல்படாத இறைமகன்,அவருக்கு உகந்ததை மட்டுமே நிறைவேற்றுகிறார். இன்று சிலுவையில் உயர்த்தப்பட்ட இயேசுவைக் காணுகையில் நம் உள்ள ஓட்டமென்ன? கண்டிப்பாக அவரைப்பார்த்த நாம் உடல்- உள்ள நலம் பெற்றிருப்போம்.அப்படி இல்லையெனில் நம் கடின உள்ளத்தின் களங்கத்தைக் களைய முயற்சி செய்வோம்.
“ இவன் தந்தை என்நோற்றான் கொல் எனும் சொல்” ….வள்ளுவனின் வார்த்தைகள் மனிதருக்கு மட்டுமல்ல…கடவுளருக்கும் பொருந்தும் என்பதைக் காட்டும் ஒரு பதிவு. தந்தைக்கு நன்றிகள்!!!