Monday, May 2, 2022

எப்போது இங்கு வந்தீர்?

இன்றைய (2 மே 2022) நற்செய்தி (யோவா 6:22-29)

எப்போது இங்கு வந்தீர்?

இயேசு அப்பம் பலுகச் செய்தபின், வாழ்வுதரும் உணவு பற்றிய நீண்ட உரையைப் பதிவு செய்கின்றார் யோவான். அந்த உரைக்கான முன்னுரையே இன்றைய நற்செய்திப் பகுதி.

இந்த வாசகத்தில் இரண்டு கேள்விகள் இருக்கின்றன:

அ. ரபி, எப்போது இங்கு வந்தீர்?

மக்கள் இயேசுவைப் பார்த்துக் கேட்கும் கேள்வி இது. தாங்கள் உணவு உண்ட இடத்திலேயே இயேசுவைக் காணலாம் நினைத்து மக்கள் அங்கே வருகிறார்கள். ஆனால், அவரோ அதற்கு நேர் எதிரே உள்ள கப்பர்நாகூம் சென்றுவிட்டார். அங்கு அவரைத் தேடிச் சென்று, அவரைக் காண்கின்ற மக்கள், 'ரபி, எப்போது இங்கு வந்தீர்?'

ஆனால், இயேசு இக்கேள்விக்கு விடையளிக்கவில்லை. மாறாக, அவர்கள் வந்ததன் நோக்கத்தை ஆய்வுக்கு உட்படுத்துமாறு அவர்களை அழைக்கின்றார்.

அவர்களின் தேவை உடல் சார்ந்த அப்பமாக மட்டும் நின்றுவிடாமல், அழியாமல் நிலைவாழ்வு தருகின்ற ஒன்றைத் தேடுமாறு பணிக்கின்றார்.

ஆ. எங்கள் செயல்கள் கடவுளுக்கு ஏற்றவையாக இருப்பதற்கு நாங்கள் என்ன செய்ய வேண்டும்?

இக்கேள்வியையும் மக்களே இயேசுவைப் பார்த்துக் கேட்கின்றனர். இது ஒரு நல்ல கேள்வி. ஓபனிங் நல்லாதான் இருக்கு.

இங்கே இயேசுவின் பதில் நேரிடையாக இருக்கிறது: 'கடவுள் அனுப்பியவரை நம்புவதே கடவுளுக்கேற்ற செயல்'

நம் சிந்தனைக்கு இன்று, இம்மக்களின் தேடலில் விழுந்த ஓட்டையை எடுத்துக்கொள்வோம்.

அது என்ன தேடலில் விழுந்த ஓட்டை?

முதல் நாள் நிகழ்வு: இயேசு படகில் ஏறவில்லை. சீடர்கள் மட்டுமே ஏறுகின்றார்கள்.

இரண்டாம் நாள் நிகழ்வு: நிறையப் படகுகள் வருகின்றன. ஆனால் அதில் இயேசுவும் இல்லை, சீடர்களும் இல்லை.

இதற்கிடையில் உள்ள ஒன்றை அவர்கள் காணவில்லை. அது என்ன?

'இயேசு மீண்டும் தனியாய் மலைக்குச் சென்றார்'

இதுதான் அவர்களின் தேடலில் விழுந்த ஓட்டை.

இயேசுவை நேருக்கு நேராகப் பார்த்து அவரைத் தேடிக் கொண்டிருந்தவர்கள் கொஞ்சம் அண்ணாந்து பார்க்க மறந்துவிட்டார்கள். அல்லது தங்களுக்கு வசதியான இடத்தில் மட்டும் இயேசுவை அவர்கள் தேடினார்கள்.

ஒருவேளை அவர் மலைக்குச் சென்றதை அவர்கள் கவனித்திருந்தால் இயேசுவைப் பற்றிய பார்வை அவர்களுக்கு மாறியிருக்கும். அவரது அரசாட்சி ஆன்மிகம் சார்ந்தது என எண்ணியிருப்பார்கள்.

கடவுள் இங்கேதான் இருக்க வேண்டும், கடவுள் இப்படித்தான் இருக்க வேண்டும் என மனித அறிவு அவருக்கு வரையறை இடவே விரும்புகிறது. 

வரையறைகளை மிஞ்சும் இறைவனை நாம் நம்பினால் போதும். அவர் நம் வரையறைக்குள் வந்துவிடுவார். இதுதான் கடவுளின் வலுவின்மை.

நற்செயல்: நான் எங்கே இருக்கிறேன்? இங்கே நான் எப்படி, எப்போது வந்தேன்? நான் எங்கே போகவேண்டும்? என்ற இலக்கு நிர்ணயக் கேள்விகளைக் கேட்பது.


2 comments:

  1. Philomena Arockiasamy5/02/2022

    பல நேரங்களில் ஆன்மா சார்ந்த தேவைகளை விடுத்து,உடல் சார்ந்த தேவைகளை மட்டுமே சிந்திப்பது,தேடுவது மனித பலவீனம். ஆன்மா சார்ந்த தேவைகள் நிறைவடைகையில் உடல் சார்ந்த தேவைகள் பெரிதாகத் தெரிவதில்லை என்பதை நாம் உணரத் தவறுகிறோம்.அதனால் தான் இயேசு அப்பம் பெருகச்செய்த இடத்தை விட்டுச் சொல்லாமலே சென்றுவிட்டது போல் உணர்கிறது மக்கள் கூட்டம்.அப்பம் பற்றியே யோசித்த அவர்கள் இரண்டு நாட்களுமே இயேசு படகில் இல்லை என்பதையோ ,அவர் மலைக்குத் தனிமையில் சென்றுவிட்டார் என்பதையோ உணரத் தவறுகின்றனர். பல நேரங்களில் நம் தேடலை வைத்தே நம் பார்வையும் இருக்கிறது. தேடல் தவறுகையில் பார்வையும் தவறுகிறது. எங்கேயும் உறையும் இறைவனை ‘ இங்கே’ தான் இருக்க வேண்டுமென்று எதிர்பார்க்க நாம் யார்? ஆனாலும் நம் எதிர்பார்ப்பிற்கு வளைந்து கொடுக்கும் வலுவிழந்த இறைவனாகவும் அவரால் மாற முடியும் என்பதே இறைமை என்பதை நாம் உணரத் தவறுகிறோம்.என்னை நோக்கி அவர் வரவேண்டுமெனும் எதிர்பார்ப்பை விடுத்து அவர் புல் வெளியிலிருப்பினும்,மலைமுகட்டிலிருப்பினும் அங்கே நான் நகர்ந்தால் எத்துணை நலம்! என்னையே நான் கேட்கவேண்டிய கேள்விகளை என் சிந்தனை ஓட்டத்திற்குள் நுழையவிட்ட தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete
  2. நான் எங்கே இருக்கிறேன்? இங்கே நான் எப்படி, எப்போது வந்தேன்? நான் எங்கே போகவேண்டும்?/// அது தெரிஞ்சா நான் ஏன் இப்படி இருக்க போறேன் ?

    ReplyDelete