Thursday, April 28, 2022

கடவுளைச் சார்ந்தவை

நாளின் (29 ஏப்ரல் 2022) நற்சொல் (திப 5:34-42)

கடவுளைச் சார்ந்தவை

இயேசுவை இறப்புக்குத் தீர்ப்பிட்ட நாள் முதல் தலைமைச் சங்கம் தன் கண்களைக் கசக்கிக் கொண்டே இருக்கிறது. பிலாத்துவின் முன் சண்டையிட்டு இயேசுவுக்குச் சிலுவைத் தண்டனை பெற்றுத் தந்தது, அவர் அடக்கம் செய்யப்பட்ட கல்லறைக்குக் காவல் காத்தது, படைவீரர்களுக்குப் பணம் தந்து தவறான வதந்தியைப் பரப்பச் செய்தது என எல்லாம் முடிந்தது என ஓய்ந்திருந்தவர்களுக்கு, கண்களில் விழுந்த தூசியாய், கண்களைக் கசக்கச் செய்யும் புகையாய் வந்து நிற்கிறார்கள் திருத்தூதர்கள் பேதுருவும் யோவானும். 

திருத்தூதர்கள் சாலமோன் மண்டபத்தில் இயேசுவின் பெயரால் நிகழ்த்திய அரும்செயல் மக்கள் நடுவே பரபரப்பாகப் பேசப்படுகிறது. நலம் பெற்றவரும் சங்கத்தின்முன் நிற்கின்றார். திருத்தூதர்கள் தங்கள் பேருரைகளில் தலைமைச் சங்கத்தைச் சாடுகின்றனர். எந்த அளவுக்கு அவர்கள் நிறுத்தப்பட்டார்களோ அந்த அளவுக்கு அவர்கள் தொடர்ந்து நடக்கின்றனர். மீண்டும் மீண்டும் எருசலேம் சங்கம் கூட்டப்படுகின்றது.

அப்படி ஒரு நாள் கூட்டப்பட்ட சங்கத்தில் நடந்த நிகழ்வைத்தான் இன்றைய முதல் வாசகத்தில் (திப 5:34-42) வாசிக்கின்றோம். இந்த நிகழ்வில் முதன்மையான நபராக இருப்பவர் கமாலியேல். தலைமைச் சங்கத்தில் உள்ளவர்களில் பெரும்பாலோர் தங்கள் உணர்வுகளால் அலைக்கழிக்கப்பட்டுக் கூச்சலிட்டபோது, அறிவுப்பூர்வமாகவும், அமைதியாகவும், தன் அனுபவத்தின் பின்புலத்திலும் அறிவுரை வழங்குகின்றார் கமாலியேல்:

'... இப்போது நீங்கள் இம்மனிதர்களை விட்டுவிடுங்கள் என நான் உங்களுக்குக் கூறுகிறேன். இவர்கள் காரியத்தில் நீங்கள் தலையிட வேண்டாம். இவர்கள் திட்டமும் செயலும் மனிதரிடத்திலிருந்து வந்தவை என்றால் அவை ஒழிந்து போகும். அவை கடவுளைச் சார்ந்தவை என்றால் நீங்கள் அவற்றை ஒழிக்க முடியாது. நீங்கள் கடவுளோடு போரிடுபவர்க ளாகவும் ஆவீர்கள்!'

அதாவது, காலம் தன் போக்கில் செயல்பட அனுமதியுங்கள் என்கிறார் கமாலியேல். பண்டைக் காலத்தில் நீடித்தவை அனைத்தும் நலம் தருபவை என்று கருதினர். ஏனெனில், நேரம் அல்லது காலமே பெரிய சோதனையாளர். காலத்தைக் கடந்து ஒன்று அல்லது ஒருவர் நிற்கிறார் என்றால் அவர் மேன்மையானவர். ஆகையால்தான் காலத்தால் அழியாத கட்டடங்களைக் கட்டவும், காலத்தால் அழியாத புகழைப் பெறவும் மனிதர்கள் விரும்பினர்.

ஒன்றை அதன் போக்கிலேயே அனுமதித்தால் - என்ட்ரோபி விதி போல - அது அப்படியே மறைந்துவிடும். ஒன்றை நாம் கண்டுகொள்ளாமல் விட்டால் அது அப்படியே மறைந்துவிடும் என்பது நம் வாழ்வியல் அனுபவமும் கூட. நாம் அழைக்காமல் அல்லது காணாமல் விடுகின்ற நட்பு அப்படியே மறைந்து விடுகிறது. நாம் பயன்படுத்தாமல் இருக்கின்ற அறிவு மறைந்துவிடுகிறது. நாம் செயல்படுத்தாமல் இருக்கின்ற ஒரு திறன் மறைந்துவிடுகிறது. சில நேரங்களில் விதிவிலக்கு இருக்கலாம். ஆனால், பெரும்பான்மையான நேரங்களில் காலமே வெல்கிறது.

கமாலியேலின் வார்த்தைகள் நம் வாழ்வுக்கும் சவால் விடுகின்றன. எப்படி?

நம் வாழ்வில் நாமே முன்னெடுக்கும் செயல்பாடுகள் விரைவில் மறைந்துவிடுகின்றன. ஆனால், கடவுளோடு கரம் கோர்த்து மேற்கொள்ளும் செயல்பாடுகள் தொடர்ந்து நீடிக்கின்றன. ஏனெனில், கடவுள் என்றென்றும் நீடிப்பவர். அதனால்தான், புனித அகுஸ்தினார் தன் இளவயது நண்பன் நெப்ரிடியு இறந்த போது, 'நான் உன்னைக் கடவுளில் அன்பு செய்தால் நீ என்றும் நீடித்திருப்பாய் அல்லவா!' என்று தன் 'ஒப்புகைகள்' நூலில் புலம்புகின்றார்.

நம் வாழ்வில் நிறைய செயல்கள் தொடங்கி அவை பாதியிலேயே சென்றிருக்கலாம். நிறைய மனிதர்களை நாம் கடந்து போயிருக்கலாம். இவற்றில் அல்லது இவர்களில் கடவுளின் கரம் இல்லை என்றால் அனைத்தும், அனைவரும் காலத்தில் கரைந்துவிடுகின்றன(ர்).

நற்செய்தி வாசகத்தில் (யோவா 6:1-15) இயேசு ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் பகிர்ந்து ஐயாயிரம் பேருக்கு உணவளிக்கின்றார். 'இருநூறு தெனாரியத்துக்கு அப்பம் வாங்கினாலும் ஆளுக்கு ஒரு துண்டும் கிடைக்காதே' என்று மனித நிலையில் நிகழ்வைத் தொடங்குகின்றார் பிலிப்பு. ஆனால், இயேசுவோ இறைவனின் கரத்தோடு தொடங்குகிறார். ஆகையால்தான் பசி அடங்கினாலும், அப்பங்கள் மிஞ்சுகின்றன.

அனைத்திலும் இறைவனின் கரம் இணைந்து தொடங்குதல் நலம்.

இறைவனின் கரம் நாம் பற்ற நமக்குத் தேவை நிறைய பொறுமை, ஆழ்ந்த அமைதி, கொஞ்சம் அறிவு. 

கமாலியேல் இவற்றைப் பெற்றிருந்தார்.


1 comment:

  1. Philomena Arockiasamy4/28/2022

    கர்த்தரையே கல்லறைக்கு அனுப்பியவனுக்குக் கண்களில் விழுந்த தூசியாய் பேதுருவும்,யோவானும்.இவர்களை ஒழித்துவிட நினைத்த பிலாத்துவிற்கு அறிவுரை வழங்கும் கமாலியேல் ‘ஒருவேளை அவர்கள் கடவுளிடமிருந்து வந்தவர்களெனில் அவர்களோடு போரிடுவது கடவுளையே எதிர்த்து நிற்பதற்குச் சமம்’ என்கிறார்….தேடப்படாத எதுவும் தன்னிலேயே மறைந்து போகும் என்ற நம்பிக்கைக்கு வலுவூட்டுவது போல.காலம் கடந்து நிற்கும் கடவுளின் நீட்சி மட்டுமே என்றென்றும் நிலைத்திருக்கூடியது …அது உயிர்தோழனின் அன்பாய் இருந்தாலுமே கூட, என்று வாதத்திற்கு வலுவூட்டுகிறார் புனித அகுஸ்தினார்.
    கடவுளின் கரம் மட்டுமல்ல…அவர் கருணையும் சேர்ந்திருந்ததாலேயே புல் தரையில் அமர்ந்திருந்தவர்களின் பசி அடங்கியபின்னும் அப்பங்கள் மிஞ்சுகின்றன என்ற உண்மை நம் குருதியில் கலந்த ஒன்று.
    நம் வாழ்க்கைப்பயணத்தில் பல நிகழ்வுகள்….பல உறவுகள்…பல நட்புகள்.இறைவனை சாட்சியாக வைத்து ஏற்படும் உறவுகள் கலகங்கள்- கண்ணீருக்கிடையே கூட நிலைத்து நிற்பதும்,மற்றவை நீர்க்குமிழியாக மறைந்து போவதும் நம் அன்றாட அனுபவம்.கமாலியேலுக்கிருந்த அறிவும்,பொறுமையும்,அமைதியும் எனக்குமிருந்தால் காலத்தை வெல்லும் காரியங்களை என்னாலும் சாதிக்க முடியும் என்றதொரு அழகான செய்திக்காகத் தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete