Saturday, April 2, 2022

தொடர்ந்து ஓடு!

தவக்காலம் ஐந்தாம் ஞாயிறு

I. எசாயா 43:16-21 II. பிலிப்பியர் 3:8-14 III. யோவான் 8:1-11

தொடர்ந்து ஓடு!

'ஓடிக்கொண்டே அல்லது நடந்துகொண்டே இருக்கும் நாம் ஒரு கட்டத்தில் செல்ல முடியாதவாறு சாலை அடைக்கப்பட்டிருந்தால்' அந்த இடத்தை 'முட்டுச் சந்து' என்று அழைக்கிறோம். ஆங்கிலத்தில் 'டெட் என்ட்.' அதற்குப் பின் அங்கே பாதை இல்லை. இரண்டே வழிதான் இப்போது: ஒன்று, அங்கேயே நின்று விடுவது, அல்லது வந்த வழி திரும்புவது. அல்லது ஒருவேளை ரொம்பவும் ஆபத்தான நேரத்தில் நாம் முட்டுச் சந்தில் இருக்கிற மதிலை உடைத்து அல்லது தாண்டி அந்தப் பக்கம் தப்புவோம்.

இன்றைய இறைவார்த்தை வழிபாட்டில் இப்படி 'டெட் என்டில்' (முட்டுச் சந்தில்) சிக்கிக்கொண்ட மூன்று பேரைப் பார்க்கிறோம்: முதல் வாசகத்தில் இஸ்ரயேல் மக்கள், இரண்டாம் வாசகத்தில் பவுலடியார், நற்செய்தி வாசகத்தில் விபச்சாரத்தில் பிடிபட்ட பெண். இஸ்ரயேல் மக்கள் பாபிலோனியாவின் அடிமைத்தனம் என்ற வழியற்ற பாதையில் இருக்கின்றனர். பவுல் தன்னுடைய யூத முதன்மைகள் என்னும் வழியற்ற பாதையில் இருக்கின்றார். விபச்சாரத்தில் பிடிபட்ட பெண் கல்லால் அடிபட்டு மரணம் என்ற வழியற்ற பாதையில் இருக்கின்றார். இவர்கள் மூவருக்கும் இரண்டு தீர்வுகள்: ஒன்று. இருக்குமிடத்திலேயே இருப்பது. இரண்டு, வந்த பாதை திரும்புவது. ஆனால், இந்த இரண்டு தீர்வுகளையும் தாண்டி மூன்றாவது ஒரு தீர்வைத் தருகின்றார் இறைவன்: அதுதான், 'தொடர்ந்து ஓடு!' என்பது. 'தொடர்ந்து ஓடு!' என்ற சொன்ன இறைவன், சொன்னதோடு அல்லாமல், புதிய பாதையை ஏற்படுத்திக் கொடுத்து இந்த மூவரும் தொடர்ந்து பயணிக்க வழிசெய்கின்றார். ஆக, இறைவனைப் பொருத்தவரையில் 'என்ட்' என்பது ஒரு 'பென்ட்' மட்டுமே என்று நமக்கு ஒரே வரியில் அறிவுறுத்துகிறது இன்றைய இறைவார்த்தை வழிபாடு.

முதல் வாசகத்தில் (காண். எசா 43:16-21) பாபிலோனியாவில் அடிமைப்பட்டுக்கிடந்த இஸ்ரயேல் மக்களுக்கு இறைவாக்கினர் எசாயா வழியாக ஆறுதலின் செய்தியைத் தருகின்றார் ஆண்டவராகிய கடவுள். கடவுள் இஸ்ரயேலருக்குத் தான் செய்த அரும்பெரும் செயல்களை முதலில் நினைவுறுத்துகின்றார்: 'கடலுக்குள் வழியை அமைத்தவரும், பொங்கியெழும் நீர் நடுவே பாதை அமைத்தவரும், தேர்களையும், குதிரைகளையும், படைவீரரையும், வலிமைமிக்கோரையும் ஒன்றாகக் கூட்டி வந்தவரும், அவர்கள் எழாதவாறு விழச் செய்து, திரிகளை அணைப்பதுபோல அணைத்தவருமான ஆண்டவர்' - இவ்வாறாக, அவர்களின் செங்கடலைக் கடத்தல் நிகழ்வில் அவர் செய்த அரும்பெரும் செயல்களைப் பட்டியலிடுகின்றார் இறைவன். விடுதலைப் பயண நூல் 14ல் நாம் இந்நிகழ்வை வாசிக்கின்றோம். முன்னால் கடல், பின்னால் எகிப்தியர், எந்தப் பக்கம் சென்றாலும் மரணம் என்று அவர்கள் பாதை மூடிக்கிடந்த வேளையில், கடலில் பாதையை உருவாக்குகின்றார் கடவுள். 'அஞ்சாதீர்கள்! நிலைகுலையாதீர்கள்! இன்று ஆண்டவர்தாமே உங்களுக்காக ஆற்றும் விடுதலைப் செயலைப் பாருங்கள். இன்று நீங்கள் காணும் எகிப்தியரை இனிமேல் என்றும் காணப்போவதில்லை. ஆண்டவரே உங்களுக்காகப் போரிடுவார். நீங்கள் சும்மா இருங்கள்!' (விப 14:13-14) என்கிறார் ஆண்டவராகிய கடவுள். இங்கே தண்ணீர் இஸ்ரயேல் மக்களுக்கு வாழ்வாகவும், எகிப்தியருக்கு அழிவாகவும் மாறுகின்றது. பழையதை நினைவுபடுத்தும் கடவுள், உடனே, 'முன்பு நடந்தவற்றை மறந்துவிடுங்கள். முற்கால நிகழ்ச்சி பற்றி சிந்திக்காதிருங்கள். இதோ! புதுச்செயல் ஒன்றைச் செய்கிறேன்' என்கிறார். முற்காலத்தை நினைவுபடுத்தும் கடவுள் ஏன் முற்காலத்தை மறக்கச் சொல்கின்றார். இங்கே முற்காலம் என்பது 'செங்கடல் நிகழ்வையும்' குறிக்கலாம். 'பாபிலோனிய அடிமைத்தன நிகழ்வையும்' குறிக்கலாம். இரண்டாவதைக் குறிப்பதாக நாம் எடுத்துக்கொள்வோம். அடிமைத்தனத்தில் இருந்த மக்கள் தாங்கள் அந்த நிலைக்கு அழைத்து வரப்பட்டதன் வடு மிகவும் ஆழமாகவே இருந்தது. அதை நினைத்துக்கொண்டிருந்த அவர்கள் தங்கள் வாழ்க்கை முடிந்துவிட்டதாகவும், கடவுளால்கூட ஒன்றும் செய்ய முடியாது என்றும் நினைத்துக்கொண்டிருந்தனர். இந்த நேரத்தில் கடவுள் 'புதுச்செயலை' வாக்களிக்கின்றார். அங்கே அழிவின் காரணியாக இருந்த தண்ணீர் இங்கே வாழ்வின் காரணியாக மாறுகிறது. தண்ணீர் என்ற உருவகத்தை வைத்து, 'பாலை நிலைத்தில் பாதையும் பாழ்வெளியில் நீரோடையும் உருவாகும்' என்றும், 'இம்மக்களுக்கு அந்நீரைக் குடிக்கக் கொடுப்பேன்' என்றும் சொல்கிறார் கடவுள்.

ஆக, பாபிலோனிய அடிமைத்தனத்தில் இருந்த மக்கள் தங்களுக்கென ஒரு இனிய கடந்த காலம் இருந்தாலும், நிகழ்காலத்தின் துன்பத்தால் எதிர்காலம் பற்றிய கலக்கத்தி;ல் இருக்கிறார்கள். இவர்களுக்கு, கடவுள் புதிய பாதையை உருவாக்கித் தருவதாக வாக்களித்து இவர்களின் பயணத்தில் இவர்கள் தொடர்ந்து ஓடுமாறு பணிக்கிறார்.

இன்றைய இரண்டாம் வாசகத்தில் (பிலி 3:8-14), பவுல் வாழ்வில் நடந்த மிகப் பெரிய மாற்றத்தை வாசிக்கின்றோம். பவுல் தன்னுடைய முந்தைய வாழ்வை (காண். 3:4-6) விடுத்து புதிய வாழ்வுக்குப் பயணமாகிறார். எட்டாம் நாளில் விருத்தசேதனம் பெற்றவன், இஸ்ரயேல் இனத்தவன், பென்யமின் குலத்தவன், எபிரேயன், பரிசேயன் என்று தன்னுடைய சமய மற்றும் சமூக அடையாளங்களைக் குறித்துப் பெருமை பாராட்டும் பவுல், தொடர்ந்து, 'கிறிஸ்துவின் பொருட்டு எல்லாவற்றையும் இழப்பாகக் கருதுகிறேன்' என்கிறார். மேலும், தன்னுடைய இலக்காக, 'கிறிஸ்துவையும் அவர்தம் உயிர்த்தெழுதலின் வல்லமையையும் அறியவும் அவருடைய துன்பங்களில் பங்கேற்று, சாவில் அவரை ஒத்திருக்கவும் விரும்புவதை' நிர்ணயித்துக்கொள்கின்றார். இந்நோக்கம் நிறைவேற, 'கடந்ததை மறந்துவிட்டு, முன்னிருப்பதைக் கண்முன் கொண்டு, பரிசு பெற வேண்டிய இலக்கை நோக்கித் தொடர்ந்து ஓடுகிறேன்' என்கிறார். பவுல் கொரிந்தியருக்கு எழுதிய திருமடலில், 'பந்தயத்திடலில் ஓட வந்திருப்போர் பலர் ஓடினாலும் பரிசு பெறுபவர் ஒருவரே. எனவே, பரிசு பெறுவதற்காக நீங்களும் ஓடுங்கள்' (காண். 1 கொரி 9:24) என அறிவுறுத்துகிறார். 

ஆக, தான் எல்லா அடையாளங்களையும் இழந்துவிட்டதால் பாதை அடைக்கப்பட்ட பவுல், தொடர்ந்து ஓடுவதற்குக் காரணம் அவர் முன் இருந்த கிறிஸ்துவின் வல்லமை என்னும் இலக்கு. பழைய பாதையிலிருந்து விலகுகின்ற பவுல் புதிய பாதையாம் கிறிஸ்துவில் தொடர்ந்து ஓடுகின்றார். பாதை முடிந்தது என்ற நினைத்த அவருக்குப் புதிய பாதை கிறிஸ்துவில் விடிகின்றது.

இன்றைய நற்செய்தி வாசகம் (காண். யோவா 8:1-11) யோவான் நற்செய்தியில் மட்டுமே காணக்கிடக்கிறது. பல ஓவியர்களின் ஓவியங்களில், இயக்குநர்களின் திரைப்படங்களில் முதன்மையான இடம் பெற்றிருக்கும் 'விபசாரத்தில் பிடிபட்ட பெண்ணை இயேசுவிடம் கொண்டுவரும் காட்சி' (யோவா 7:53-8:11) பல விவிலிய மொழிபெயர்ப்புகளில் அடைப்புக் குறிக்குள் கொடுக்கப்பட்டிருக்கும்.இந்த நற்செய்திப் பகுதி பல முக்கியமான பிரதிகளில் காணப்படவில்லை. அல்லது சில முக்கியமற்ற பிரதிகளில் மட்டுமே காணப்படுகின்றன. இந்த நிகழ்வை யோவான் நற்செய்தியின் ஒரு பகுதியாக எடுத்துக்கொள்வது சிரமமாக இருந்தாலும், 'வெளித்தோற்றத்தின்படி தீர்ப்பளியாதீர்கள். நீதியோடு தீர்ப்பளியுங்கள்' (யோவா 7:24) என்ற இயேசுவின் போதனையின் விளக்கவுரையாகவும், 'நீங்கள் உலகப்போக்கின்படி தீர்ப்பு அளிக்கிறீர்கள். நான் யாருக்கும் தீர்ப்பு அளிப்பதில்லை' (8:15) என்ற வார்த்தைகளின் சுருக்கமாகவும் உள்ளது இந்நிகழ்வு.

இந்நற்செய்திப் பகுதியை கதையாடல் ஆய்வு என்ற அடிப்படையில் ஐந்து உட்பிரிவுகளாகப் பிரிக்கலாம்: (அ) தொடக்கச் சூழல் (8:1), (ஆ) இறுக்கம் (8:2-6), (இ) திருப்பம் (8:7), (ஈ) தளர்வு (8:8-11அ), மற்றும் (உ) இறுதிச் சூழல் (8:11ஆ). ஒலிவ மலையில் இரவு முழுவதும் இருந்த இயேசு பொழுது விடிந்ததும் கோவிலுக்கு வருகின்றார். ஆக, இந்நிகழ்வு நடக்கும் நேரம் அதிகாலை. இடம் கோவில். அதிகாலையில் நிகழ்வு நடப்பதால், அதற்கு முந்தைய இரவில் இந்தப் பெண் விபச்சாரம் செய்து பிடிப்பட்டிருக்கலாம். விபச்சாரத்தில் பிடிபட்ட பெண்ணை இயேசுவிடம் கொண்டுவருகின்றனர் மறைநூல் அறிஞரும் பரிசேயரும். பெண் இங்கே இருக்கிறார்? கூட இருந்த ஆண் எங்கே? என்பதுதான் முதல் கேள்வி. இரண்டாம் கேள்வி. இயேசு, 'போதகரே' என யோவான் நற்செய்தியில் இங்கு மட்டுமே அழைக்கப்படுகின்றார் (காண். மத் 8:19, மாற் 9:17, லூக் 3:12). இது இயேசுவை மரியாதையாக விளிக்கும் சொல் அல்ல இங்கு. அவரது போதனையைக் கிண்டல் செய்யும் விதமாக 'போதகரே' என அழைக்கின்றனர். 'இப்படிப்பட்டவர்களை கல்லால் எறிந்து கொல்ல வேண்டும் என்று மோசே சட்டம் சொல்கிறது.' மோசே சட்டம் சாட்சிகளோடுதான் ஒரு குற்றம் நிரூபிக்கப்பட வேண்டும் என்று சொல்கிறது (காண் இச 17:6, 19:15). ஆனால் இங்கே சாட்சிகள் இல்லை. குற்றச்சாட்டு மட்டுமே இருக்கிறது. மேலும், மோசேயின் சட்டத்திலும், இயேசுவின் காலத்தில் புழக்கத்தில் இருந்த மிஷ்னாவின் சட்டத்திலும், விபச்சாரம் செய்யும் ஆண்தான் தண்டிக்கப்படுகிறார் (காண். லேவி 20:10, இச 22:22). ஆக, இங்கே வந்திருப்பவர்களின் நோக்கம் சட்டத்திற்கு கீழ்ப்படிதலின் அடிப்படையில் அல்ல. 'இயேசுவின் மேல் குற்றம் சுமத்த' அந்தப் பெண்ணைப் பயன்படுத்துகிறார்கள் இவர்கள். 'கல்லால் எறிந்து கொல்லுங்கள்' என்று இயேசு சொன்னால், இயேசு உரோமைச் சட்டத்திற்கு எதிராக செயல்படுபவரகவும், அல்லது கருணையற்ற ரபியாகவும் மாறிவிடுவார். ஏனெனில், இயேசுவின் சமகாலத்தில் கொலை தண்டனை விதிப்பது என்பது உரோமை அரசுக்கும் மட்டும் உரியது என்று இருந்தது. 'கல் எறிந்து கொல்ல வேண்டாம்' என்று சொன்னார் அவர் மோசேயின் சட்டத்தை மீறியவராகக் கருதப்படுவார்.' இயேசு இவர்களின் கேள்வியைத் தவிர்ப்பதற்காக குனிந்து தரையில் எழுதுகின்றார். அவர் தரையில் அவர்களுடைய பாவங்களை எழுதினார் என்று சிலர் சொல்வார்கள். அதனால்தான் என்னவோ, 'பதில் சொல்லும்!' என்று அவரை அவசரப்படுத்துகின்றனர். தீர்ப்பிடுமாறு கூட்டி வந்தவர்களை இப்போது இயேசு கூண்டில் ஏற்றுகின்றார்.'உங்களில் பாவம் இல்லாதவர் முதலில் இப்பெண்மேல் கல் எறியட்டும்!' என்று சொல்லிவிட்டு, மீண்டும் தரையில் எழுதத் தொடங்குகிறார். எல்லாரும் போகின்றனர்.இயேசுவும் அப்பெண்ணும் அங்கே நின்றுகொண்டிருக்கின்றனர். இப்போது இயேசுவே பேச்சைத் தொடங்குகின்றார். 'அம்மா, அவர்கள் எங்கே? உன்னை யாரும் தீர்ப்பிடவில்லையா?' 'இல்லை' என்கிறார் பெண். 'நானும் தீர்ப்பளிக்கவில்லை. நீர் போகலாம். இனி பாவம் செய்யாதீர்' என பெண்ணிடம் இயேசு சொல்வதுடன் நிறைவடைகிறது நிகழ்வு. 

அவர்கள், 'இவள்' என்று சொன்னவரை, இயேசு, 'அம்மா' என மரியாதையுடன் அழைக்கிறார். இந்த ஒற்றைச் சொல்லிலேயே அவர் அவருக்குப் புதுவாழ்வு தந்துவிடுகின்றார். அத்தோடு நில்லாமல், 'இனி பாவம் செய்யாதீர்!' என அறிவுறுத்துகின்றார். ஆக, 'பாதை ஒரு முறை அடைக்கப்பட்டுவிட்டது. நான் உமக்கு புதிய பாதை ஒன்றைத் தொடங்குகிறேன். மீண்டும் பாவம் செய்து அதை அடைத்துவிடாதீர்!' என்று சொல்லி அனுப்புகிறார் இயேசு. தன் வாழ்வுப் பாதையில் அவர் தொடர்ந்து ஓடுமாறு பணிக்கிறார் இயேசு.

இவ்வாறாக, இன்றைய முதல் வாசகத்தில் இஸ்ரயேல் மக்களுக்குப் புதிய பாதையை அமைத்தும், இரண்டாம் வாசகத்தில் புதிய இலக்கை பவுலுக்குத் தந்தும், நற்செய்தி வாசகத்தில் பெண்ணுக்கு மன்னிப்பு அளித்தும், இவர்கள் தொடர்ந்து ஓடுமாறு செய்கின்றார் இறைவன்.


இன்று நம் வாழ்வில் நாம் எதிர்கொள்கின்ற பாதை முடிவுற்ற நிலைகள் எவை? அவற்றைக் கடந்து நாம் எப்படி ஓடுவது? மூன்று வழிகளைச் சொல்கிறது இன்றைய இறைவாக்கு வழிபாடு.

1. கடந்ததை மறந்துவிடுவது

மூன்று வாசகங்களிலும் இந்தச் சொல்லாடல் நேரிடையாகவும் மறைமுகமாகவும் வருகிறது. அடிமைத்தனம் என்னும் கசப்பான அனுபவத்தை மறக்கச் சொல்லி அழைக்கிறது முதல் வாசகம். சமய, சமூக அடையாளங்களை மறக்கச் சொல்கிறது இரண்டாம் வாசகம். பாவ வாழ்வை மறக்கச் சொல்கிறது நற்செய்தி வாசகம். 'மறத்தல்' நம் வாழ்வில் மிக முக்கியமான ஒன்று. நம் குழந்தைப் பருவம் தொடங்கி இன்றுவரை நடந்தவை எல்லாம் நமக்கு நினைவில் இருந்தால் நாம் பைத்தியமாகிவிடுவோம். நம் மூளை எதை வைத்துக்கொள்ள வேண்டுமோ அதை வைத்துவிட்டு மற்றதை மறந்துவிடுகிறது. கடந்த காலத்தில் நம்முடைய மனத்தைக் கட்டியிருக்கும்போது நம்மால் முன்னேறிச் செல்ல முடியவில்லை. அதாவது, யானையைச் சிறிய சங்கிலியால் கட்டுவதுபோல. யானை மிகவும் பலம் வாய்ந்தது. ஆனால், அதை எப்படி பாகானால் சிறிய சங்கிலியைக் கொண்டு கட்ட முடிகிறது? குட்டியாக இருக்கும்போதே யானைக்குக் கட்டப்படும் சங்கிலி அதனால் உடைக்க முடியாததாக இருக்கிறது. ஆக, 'என்னால் உடைக்க முடியாது' என்ற கடந்த கால அனுபவம் யானைக்கு ஆழமாக மூளையில் பதிந்துவிடுவதால், இறுதிவரை அது சங்கிலியை உடைக்கும் முயற்சியில் ஈடுபடுவதே இல்லை. கடந்த காலத்தை மறக்கும்போது கடந்த காலம் நம்மில் விதைத்த எதிர்மறை எண்ணங்கள், உணர்வுகள், அனுபவங்கள் ஆகியவற்றை மறக்க வேண்டும்.

2. இலக்கு நிர்ணயம்

பழையதை மறந்துவிட்டால் மட்டும் போதுமா? புதியது நோக்கி நகர வேண்டும். இல்லை என்றால் நாம் அப்படியே தேங்கி விடுவோம். புதியது என்பது புதிய இலக்கு. பவுல் தன் பழையதை மறக்க புதியது ஒன்றோடு தன்னை இணைத்துக்கொள்கிறார். 100 மீட்டர் ஓட்டத்தில் அல்லது உயரம் தாண்டுதல் அல்லது நீளம் தாண்டுதலில் பங்கேற்பது போல. விளையாட்டு வீரர் தன் 'உந்தியக்கப் பலகையை' மறப்பதோடல்லாமல் இலக்கை மனத்தில் கொண்டால்தான் வெற்றி பெற முடியும். நம் வாழ்க்கை வழியற்ற பாதையை அடைந்துவிட்டால், அதையும் தாண்டி நம்முடைய இலக்கைப் பார்க்க நாம் கற்றுக்கொள்ள வேண்டும். ஆக, அடுத்தடுத்த என்று இலக்கு மாறிக்கொண்டே இருக்க வேண்டும். புதிய இலக்குகள் நமக்கு புதிய வேகத்தைத் தரும். திடீரென்று வேலை பறிபோய்விட்டதா. உடனடியாக, ஓய்வு நேரத்தை எப்படி பயன்படுத்துவது? என்ற இலக்கு வேண்டும். உடல்நலம் சரியில்லாமல் போய்விட்டதா. அதை ஓய்வுக்கான வாய்ப்பாக பயன்படுத்தி அடுத்துச் செய்ய வேண்டிய வேலைகளைத்திட்டமிட வேண்டும். ஆக, 'டெட் என்ட்' என்பது நமக்கு அன்றாடம் வரலாம். ஓடிக்கொண்டே இருக்கும் நமக்கு எதிரே சுவர் வந்துவிட்டதால் வருத்தப்பட வேண்டுமா? இல்லை. அந்தச் சுவரில் ஓவியம் வரையக் கற்கலாமே! அப்படிக் கற்றால், தடையே நமக்கு இலக்காக மாறிவிடும்.

3. வாழ்க்கையைப் பற்றிய பார்வையை அகலமாக்குவது

மற்றவர்கள் அந்தப் பெண்ணின் பழைய வாழ்வைப் பார்த்தார்கள். ஆனால், இயேசுவோ அவளின் புதிய வாழ்வைப் பார்க்கிறார். பார்வை அகலமாகும்போது பாதை இன்னும் விரிவாகும். நம்மால் தொடர்ந்து ஓட முடியும். இங்கே இயேசு, தீர்ப்பிட வந்தவர்களின் பார்வையையும் அகலமாக்குகின்றார். பெண்ணின் பார்வையையும் அகலமாக்குகிறார். வாழ்வில் அனைத்தையும் அனைவரையும் சிறு சிறு புள்ளிகளாக இணைத்துப் பார்க்கிற ஒருவரால்தான் வாழ்வு என்னும் முழு ஓவியத்தைப் பார்க்க முடியும். இயேசுவால் பார்க்க முடிகிறது அப்படி. இயேசுவின் பார்வை நமக்கு இருந்தால் நம்மாலும் அது முடியும்.

இறுதியாக,

இன்று 'டெட் என்ட்' - பாதை முடிவு - வந்தே தீரும். நம் தனிப்பட்ட வாழ்வில், உடல்நலத்தில், உறவுநிலைகளில், பணியில், படிப்பில். இப்படி பாதை அடைக்கப்பட்டது என்று எண்ணியவர்கள் எல்லாம் - புனித அகுஸ்தினார், நம் அப்பா, அம்மா - நெடும் பயணம் கடந்து சென்றார்கள். முடிந்துவிட்ட பாதையில் அமர்ந்து கண்ணீர் வடிக்கவில்லை. ஏனெனில், அவர்களுக்குத் தெரியும் - அவரோடு கைகோர்க்கும்போது முடிவு என்பது விடிவு என்று.


1 comment:

  1. தவக்காலம் 5ம் ஞாயிறுக்கான மறையுரை.தங்களுடைய பயணத்தின் ஓட்டத்தில் தடங்களேற்பட்டு நின்ற மக்களைப் பார்த்து “இது முட்டுச்சந்தல்ல…தொடர்ந்து ஓடுங்கள். நான் உங்களோடு இருக்கிறேன்” எனும் இறைவன் குரல் தொடர்ந்து ஒலிப்பதை எடுத்துச்சொல்லும் மறையுரை.
    பாபிலோனிய அடிமைத்தனத்திலிருந்த இஸ்ரேல் மக்களுக்கு உதவிக்கரம் நீட்டுகிறார் இறைவன். “அஞ்சாதீர்கள்; நிலைகுலையாதீர்கள்.இன்று நீங்கள் பார்க்கும் எகிப்தியரை இனிமேல் பார்க்கப்போவதில்லை” என்று தன் மக்களைத்தேற்றும் இறைவன்,தன் மக்களுக்காகப் புதிய பாதையை உருவாக்கி,அவர்களோடு தொடர்ந்து ஓடுகிறார் எனும் அவரின் உடனிருப்பு பற்றிச் சொல்லும் ஏசாயாவின் நூலிலிருந்து எடுக்கப்பட்ட முதல் வாசகம்…
    “கடந்ததை மறந்து விட்டுப் புதியதை நோக்கி ஓடுங்கள்” எனத்தன் மக்களைப்பார்த்துக்கூறும் பவுல்! “ பந்தயத்தில் பலர் ஓடினாலும் வெற்றிபெறுபவர் ஒருவரே! ஆகவே கிறிஸ்துவோடு இணைந்து ஓடுங்கள்” என அழைப்பு விடுக்கும் பவுலின் வார்த்தைகளைக் கொண்ட இரண்டாம் வாசகம்…..
    விபச்சாரத்தில் பிடிபட்டு தன்னிடம் கொண்டுவரப்பட்ட பெண்ணை “ அம்மா” என அழைப்பதன் மூலம் அவள் பாவம் மன்னிக்கப்பட்டதென சொல்லாமல் சொல்கிறார் இயேசு.”அடைக்கப்பட்ட பாதையைப் புறந்தள்ளி உனக்காகப்புதிய பாதையைத் திறக்கிறேன். மீண்டும் பாவம் செய்து அதை அடைத்துவிடாதே!” எனும் இயேசுவின் ஆறுதல் வார்த்தைகளைக் கொண்ட நற்செய்தி வாசகம்…..
    இன்று நம் வாழ்வின், பாதை முடிவுற்ற பகுதிகளைக்கடப்பது எப்படி என்பது பற்றி அறிவுறுத்தப்படுகிறோம்.
    “என்னால் உடைக்க முடியாது” என்ற கடந்த கால கசப்பான அனுபவங்களை மறக்க முயற்சி செய்வதும்…அடைக்கப்பட்ட இலக்கை அது சுவராக இருப்பினும் அதில் ஓவியம் வரைவதோடு நின்றுவிடாமல்,அடுத்தடுத்த இலக்கை நோக்கி மாற முயற்சி செய்வதும்….தீர்ப்பிடப்பட்டவள் மற்றும் தீர்ப்பிடவந்தவர்களின் பார்வையை அகலமாக்கிய இயேசுபோல் வாழ்வில் அனைத்தையும் இணைத்துப்பார்க்க முயல்வதும்… அடைக்கப்பட்ட பாதையையும் தாண்டி புதுப்பாதைக்கு நம்மை இட்டுச்செல்லும்.
    நமக்கு முன்னால் ஏற்கனவே வாழ்ந்து மறைந்த பலரின் வாழ்க்கைப் பாதை நம்மை புதுப்பாதைக்கு இட்டுச்செல்ல வேண்டும். நம்மைப்பெற்றவர்கள் மற்றும் புனித அகுஸ்தினார் போன்றவர்களின் பாதை அடைக்கப்பட்டபோது அவர்கள் கலங்கி நிற்கவில்லை…கண்ணீர் வடிக்கவில்லை. ஏனெனில் “அவர்களுக்குத்தெரியும்- அவரோடு கைகோர்க்கும்போது முடிவு என்பது விடிவு என்று.” அழகான ஒரு நிதர்சனத்தோடு முடிக்கிறார் தந்தை. வாழ்வுப்பாதையில் இடறல்கள் வந்திடினும்…இன்னல்கள் துரத்திடினும் “அவர் கரங்களின் விரல்கள் என்னுடையவற்றோடு பின்னிப்பிணைந்திருக்கின்றன” எனும் நம்பிக்கையோடு ஓடுவோம்.அவரும் நம்மோடு சேர்ந்தே ஓடுவார் எனும் நம்பிக்கையின் விதைகளை விதைத்த ஒரு மறையுரைக்காகத் தந்தைக்கு நன்றியும்! ஞாயிறு வணக்கங்களும்!!!

    ReplyDelete