ஆண்டின் பொதுக்காலம் 7ஆம் ஞாயிறு
I. 1 சாமுவேல் 26:2,7-9,12-13,22-23 II. 1 கொரிந்தியர் 15:45-49 III. லூக்கா 6:27-38
கொஞ்சம் எக்ஸ்ட்ரா
டெட் பேச்சுகளின் இந்தியப் பேச்சாளர்கள் வரிசையில் ஜோசப் அன்னம்குட்டி ஜோஸ் என்ற பாலக்காட்டு இளைஞர் ஒருவர், 'எக்ஸ்ட்ரா ஐ, எக்ஸ்ட்ரா இயர், எக்ஸ்ட்ரா ஹார்ட்' என்னும் தலைப்பில் பேசுகிறார். இவர் பண்பலை ஒன்றின் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருக்கிறார். மூன்று கதைகள் சொல்லி தன் உரையை நிகழ்த்துகிறார். அதில் முதல் கதை அவருடைய கல்லூரிப் பருவம் பற்றியது. எம்.பி.ஏ. படித்துக்கொண்டிருந்த அவர் முதல் பருவத்தில் ஒரு பாடத்தில் தவறி விடுகிறார். அவரால் அத்தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆசிரியர்கள் கடிந்துகொள்கிறார்கள். நண்பர்கள் அவரை ஒதுக்குகிறார்கள். மாலையில் வீட்டிற்கு வந்த அவர் தன் பெற்றோரை அழைத்து தான் தேர்வில் தவறியதைச் சொல்கிறார். அப்பாவும், அம்மாவும் அவரை ஒன்றும் சொல்லவில்லை. அப்பா அவரை அழைத்து, 'வா வெளியே போய்விட்டு வருவோம்' என்று தோளில் கைபோட்டு இவரை அழைத்துச் செல்கிறார். ஊருக்கு வெளியே இருக்கின்ற ஒரு சிறிய சாலையோர ஓட்டலுக்குச் செல்கிறார்கள். அப்பா, 'இரண்டு டீ, ஒரு மசால் தோசை' என்று ஆர்டர் செய்துவிட்டு அமர்கிறார். இவருக்கு ஒன்றுமே புரியவில்லை. தன்னை அப்பா தவறாகப் புரிந்துகொண்டாரோ என்றுகூட நினைக்கிறார். அவர்கள் ஆர்டர் செய்தவை வருகின்றன. மசால் தோசையை இவர் பக்கம் நகர்த்தி வைக்கும் அப்பா, 'ஜோஸ், சாப்பிடு! தோல்வி எப்போதும் முடிவல்ல' என்று டீயைக் குடிக்க ஆரம்பிக்கிறார். இவருக்கு கண்ணீர் பொங்கி வழிகிறது. இதுவரைத் தன் தோல்விக்காக அழாதவர் இப்போது தன் தந்தையின் பரிவின்முன் அழுகிறார். நாள்கள் நகர்கின்றன. இவர் அத்தேர்வை எழுதி வெற்றி பெறுகின்றார். அத்தேர்வின்போது இவருடைய அடுத்த பேட்ச் மாணவர்களின் நட்பும் கிடைக்கிறது. ஆக, கல்லூரி செயலராகவும் தெரிவுசெய்யப்படுகின்றார். 'என் அப்பா அன்று என்னை ஒரு எக்ஸ்ட்ரா கண் கொண்டு பார்த்ததால், எக்ஸ்டரா காது கொடுத்து நான் பேசியதைக் கேட்டதால், எக்ஸ்ட்ரா இதயம் கொண்டு என் தோல்வியை ஏற்றுக்கொண்டதால் என்னால் சாதிக்க முடிந்தது' என உரையின் முதல் பகுதியை நிறைவு செய்கிறார் ஜோஸ்.
கொஞ்சம் எக்ஸ்ட்ரா, அல்லது இன்னும் கொஞ்சம் - இதுதான் இன்றைய இறைவாக்கு வழிபாடு நமக்கு வழங்கும் செய்தியாக இருக்கிறது. நாம் காலையில் கண் விழித்தவுடன் தேடும் பற்பசை தொடங்கி, நாள் முழுவதும் பயன்படுத்தும் அலைபேசி, இணையதள சேவை எனத் தொடர்ந்து, இரவில் தூங்குவதற்கு முன் ஏற்றும் குட்நைட் லிக்விட் வரை, எல்லாவற்றிலும், 'கொஞ்சம் எக்ஸ்ட்ரா' என்று இன்றைய வியாபார உலகம் நம்மை ஈர்த்துக்கொண்டே இருக்கிறது. ஆனால், இந்த 'எக்ஸ்ட்ராக்கள்' எல்லாம் நம் மேல் சுமத்தப்பட்டவை. இவை நமக்கு வழங்கப்படும் இலவசங்கள் அல்ல. இவற்றிற்கான பணமும் நம்மிடமிருந்து வசூலிக்கப்பட்டுவிடுகிறது. மேலும், இவைகள் ஒவ்வொன்றும் நிபந்தனைக்கு உட்பட்டவை. இன்றைய இறைவார்த்தை வழிபாடு நம்மை அழைப்பது வியாபார நோக்கமற்ற, நிபந்தனைகளற்ற 'கொஞ்சம் எக்ஸ்டராவிற்கு.'
எப்படி?
இன்றைய முதல் வாசகம் (காண். 1 சாமு 26:2,7-9,12-13,22-23) தன் கைக்குக் கிடைத்த சவுலைக் கொல்லாமல் விடும் தாவீதின் பெருந்தன்மையையும், அவர் அருள்பொழிவு செய்யப்பட்ட சவுலின்மேல் வைத்திருந்த மதிப்பையும் எடுத்துரைக்கிறது. சவுல் இஸ்ரயேலின் முதல் அரசர். சிதறுண்டு கிடந்த இஸ்ரயேலின் பன்னிரு குலங்களை ஒன்றாகச் சேர்த்து, அன்றைய புதிய மற்றும் ஆற்றல்மிக்க எதிரியான பெலிஸ்தியரை வெல்வது சவுலின் முதன்மையான பணியாக இருந்தது. பெலிஸ்தியருக்கு எதிரான போரில் தொடக்கத்தில் இவர் வெற்றி பெற்றாலும், காலப்போக்கில் இறைவாக்கினர் சாமுவேலோடு நடந்த உரசல்களாலும், தனக்கென்றும் தன் மாட்சிக்கென்றும் அரசாட்சியைப் பயன்படுத்தியதாலும் கடவுளின் அதிருப்திக்கு ஆளாகின்றார் சவுல். சவுல் அரசாட்சியில் இருக்கும்போதே தாவீது அரசராக அருள்பொழிவு பெறுகின்றார். கோலியாத்தை வென்றதில் தொடங்கி தாவீதின் ஆற்றல் மற்றும் போரிடும் திறன் மற்றவர்களால் அதிகம் பேசப்படுகிறது. இது சவுலின் பொறாமையைத் தூண்டி எழுப்புகிறது. தன் அரச இருக்கை தன்னிடமிருந்து பறிபோய்விடுமோ என்ற பயத்தில் தாவீதை பல நேரங்களில் பல இடங்களில் கொல்ல முயல்கிறார் சவுல். ஒரு கட்டத்தில் சவுலிடமிருந்து தப்பி பாலைநிலத்தில் தஞ்சம் புகுகிறார் தாவீது. தாவீதை இவ்வாறு விரட்டிக்கொண்டே செல்லும் சவுல் ஒரு கட்டத்தில் தாவீதின் கைகளில் விழுகின்றார். இந்த நிகழ்வைத்தான் இன்றைய முதல் வாசகம் வர்ணிக்கிறது. சவுல் கூடாரத்திற்குள் தூங்கிக்கொண்டிருக்கின்றார். அவரோடு இருந்த படைவீரர்களும் தூங்குகின்றனர். பயணக் களைப்பு மற்றும் மலைப்பாங்கான இடம் என்பதால் மிகவும் அயர்ந்து தூங்குகிறார்கள். சவுலின் தலைமாட்டில் ஈட்டி இருக்கிறது. மேலும், தாவீதோடு உடன் வந்த அபிசாய் தானே சவுலைக் கொன்று தாவீதிடம் 'வெரி குட்' வாங்க முன் வருகின்றார். ஆக, தனக்கு முன் தூங்கிக் கொண்டிருக்கும் எதிரி, கையின் அருகில் ஈட்டி, தனக்குப் பதிலாகக் குத்தக் காத்திருக்கும் அபிசாய் என மூன்று வாய்ப்புக்கள் இருந்தும், 'அவரைக் கொல்லாதே! ஆண்டவரால் திருப்பொழிவு செய்யப்பட்டவர்மேல் கைவைத்துவிட்டுக் குற்றமற்று இருப்பவன் யார்?' என்று சொல்லிச் சவுலைக் கொல்லாமல் விடுகின்றார் தாவீது. மேலும், தான் அந்த இடத்திற்கு வந்து, சவுலுக்குத் தீங்கிழைக்க வாய்ப்பு கிடைத்தும், தான் தீங்கு செய்யாமல் விட்டதன் அடையாளமாக, 'தலைமாட்டில் இருந்த ஈட்டியையும், தண்ணீர்க் குவளையையும்' எடுத்துக்கொண்டு போகிறார் தாவீது. காலையில் துயில் எழும்பியதும் சவுல் தேடியவை இவைகளாகத்தான் இருந்திருக்கும். மேலும், மறுநாள், 'அவனவன் நீதிக்கும் உண்மைக்கும் ஏற்ப ஆண்டவர் என்னை உம்மிடம் ஒப்புவித்தும் ஆண்டவரால் திருப்பொழிவு செய்யப்பட்டவர்மேல் நான் கைவைக்கவில்லை' என்று உரக்கக் கூறுகிறார் தாவீது.
ஆக, தனக்கு இன்னா செய்த சவுலை ஒறுக்காமல், அவரின் உயிரை விட்டுவைக்கின்றார் தாவீது. தன் கையில் சவுலின் உயிர் கிடைத்தும், தனக்கு வாய்ப்புகள் கிடைத்தும், அதைக் கடவுளே அனுமதித்தும், சவுலுக்குத் தீங்கு செய்ய மறுப்பதன் வழியாக, 'கொஞ்சம் எக்ஸ்ட்ரா' இதயம் கொண்டவராக நமக்கு முன்வைக்கப்படுகிறார் தாவீது.
இன்றைய இரண்டாம் வாசகம் (காண். 1 கொரி 15:45-49) இறந்தவர் உயிர்பெற்றெழுதல் பற்றிய போதனையின் தொடர்ச்சியாக இருக்கிறது. இறந்தவர் உயிர்ப்பு பற்றி கொரிந்து நகரத் திருச்சபைக்கு விளக்குகின்ற பவுல், 'ஆதாம்' 'கிறிஸ்து' என்ற இரண்டு உருவகங்களைப் பயன்படுத்தி, 'மனித' மற்றும் 'ஆவிக்குரிய' இயல்புகளின் குணநலன்களை முன்வைக்கின்றார். இங்கே, ஆதாம் உயிர் பெற்றவர் என்றும், கிறிஸ்து உயிர் தருபவர் என்றும் பவுல் எழுதுகின்றார். ஆதாம் உயிர் பெற்றார். ஆனால், அவருடைய மனித இயல்பில் அவர் இருந்ததால் அவரால் மீண்டும் உயிர் தர முடியவில்லை. ஏனெனில், மனித இயல்பு அழிவுக்குரியது. அது வரையறைக்குட்பட்டது. ஆனால், கிறிஸ்து அப்படி அன்று. அவர் தான் மனுவுரு ஏற்றபோது உயிர் பெற்றவராக இருந்தாலும், தன் உயிர்ப்பின் வழியாக அவர் உயிர்தருபவராக மாறுகின்றார். ஏனெனில், அவருடைய இயல்பு ஆவிக்குரியது. அது வரையறைகள் அற்றது.
ஆக, ஒருவர் தன் ஆதாம் இயல்போடு இணைத்துக்கொண்டால் அவரால் வேறு ஒன்றும் செய்ய முடியாமல், மண்ணைச் சார்ந்த இயல்பைக் கொண்டவராக இறந்துவிடுவார் என்றும், ஒருவர் கிறிஸ்து இயல்போடு இணைத்துக்கொண்டால் அவரால் உயிர்தரும் இயல்பையும் பெற்று கிறிஸ்துவோடு உயிர்க்க முடியும் என்றும் அறிவுறுத்துகிறார் பவுல்.
இன்றைய நற்செய்தி வாசகம் (காண். லூக் 6:27-38) கடந்த வார சமவெளிப்பொழிவின் தொடர்ச்சியாக இருக்கிறது. சாதாரண மனித மூளைக்கு மிக அசாதாரணமாகவும், கடினமாகவும் தோன்றும் சிலவற்றைப் பின்பற்றுமாறு தன் சீடர்களுக்கு அறிவுறுத்துகின்றார் இயேசு. இயேசுவின் கட்டளை இரண்டு நிலைகளில் இருக்கிறது: (அ) 'பகைவரிடம் அன்பு, சபிப்பவருக்கு ஆசி, இகழ்ந்து பேசுபவருக்கு இறைவேண்டல், கன்னத்தில் அறைபவருக்கு மறுகன்னம், மேலுடையை எடுத்துக்கொள்பவருக்கு அங்கி, கேட்பவருக்குக் கொடுத்தல், பொருள்களை எடுத்துக்கொள்வோரிடமிருந்து திருப்பிக் கேட்காமல் இருத்தல்,' (ஆ) 'பிறருக்கு தீர்ப்பளிக்க வேண்டாம். மன்னியுங்கள். கொடுங்கள்.' ஒருவர் இந்த இரண்டு கட்டளைகளையும் பின்பற்ற வேண்டுமானால், அவர் தன்னுடைய தனிப்பட்ட அறநெறிக்கொள்கையையும், தான் மனித உறவுகளைப் பற்றி வைத்திருக்கின்ற எண்ணங்களையும் மறுஆய்வு செய்ய வேண்டும். இயேசுவின் புதிய கொள்கைத்திரட்டைப் பின்பற்ற அவரே மூன்று உந்துப்புள்ளிகளையும் தருகின்றார்: (அ) 'பிறர் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என விரும்புகிறீர்களோ, அதையே நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்' - ஆண்டான், அடிமை, இருப்பவன், இல்லாதவன், மேலிருப்பவன், கீழிருப்பவன், முதலாளி, வேலைக்காரன் என எல்லாருக்கும் பொருந்தும் இவ்விதி ஒருவரின் தனிமனித மாண்பை மையப்படுத்துவதாக இருக்கிறது. (ஆ) 'உங்கள் தந்தை இரக்கமுள்ளவராய் இருப்பது போல நீங்களும் இரக்கமுள்ளவராய் இருங்கள்' - கடவுளைப் போல இருத்தலை ஒரு ஐடியலாக முன்வைக்கிறார் இயேசு. ஆக, ஒருவரின் மனித இயல்பைச் சற்றே உயர்த்துகின்றார். (இ) 'நீங்கள் எந்த அளவையால் அளக்கிறீர்களோ அதே அளவையால் உங்களுக்கும் அளக்கப்படும்' - ஆக, நான் செய்வது எனக்கே திரும்பக் கிடைக்கும் என்ற ஆர்வம் அல்லது அச்சத்தினால் செய்ய அழைக்கிறார் இயேசு.
ஆக, மேற்காணும் இரண்டு கட்டளைகள் மற்றும் மூன்று உந்துபுள்ளிகளின் நோக்கம் ஒன்றுதான்: 'கொஞ்சம் எக்ஸ்ட்ரா வாழ்வது.' இப்படி வாழ்பவர்கள் 'உன்னத கடவுளின் மக்கள் எனப்படுவார்கள்' என்ற புதிய பெயரையும் இயேசு தருகின்றார். ஆக, எல்லாரும் செய்வதைப் போலச் செய்யாமல், கொஞ்சம் அதிகமாக செய்யச் சொல்கிறார் இயேசு.
நம் வாழ்வில் 'கொஞ்சம் எக்ஸ்ட்ரா கண், காது, இதயம்' கொண்டு எப்படி வாழ்வது?
1. பிறரின் நல்வாழ்வு என் இலக்காக வேண்டும்
கொஞ்சம் எக்ஸ்ட்ரா கண், காது, இதயம் கொண்டு வாழ்வதன் இலக்கு தன்னுடைய நல்வாழ்வு அன்று. மாறாக, எனக்கு அடுத்திருப்பவரின் நல்வாழ்வு. அடுத்தவரின் நல்வாழ்வை இலக்காக வைப்பது என்பது ஒருவருடைய தனிப்பட்ட வாழ்வை இழக்கத் துணிவது. தூங்கி எழும் சவுல் தன்னை மீண்டும் துரத்துவார், தன் உயிரைப் பறிக்கத் தேடுவார் எனத் தெரிந்தும், தன் பாதுகாப்பின்மையிலும் சவுலின் பாதுகாப்பை முதன்மைப்படுத்துகின்றார். சவுலின் உயிரைக் கொல்லாது விடுகின்றார். தன் இறப்பின் வழியாகத்தான் மானுடம் மீட்புப் பெற முடியும் என்று இயேசு மானுட நல்வாழ்வை இலக்காகக் கொண்டிருந்ததால்தான் அவரால் தன்னுடைய இன்னுயிரை இழக்க முடிகிறது. இன்னும் கொஞ்சம் எக்ஸ்ட்ரா என எல்லாவற்றையும் செய்ய முடிகிறது. இயேசுவின் சீடர்களும், அவருடைய இரண்டு கட்டளைகளைக் கடைப்பிடிப்பதன் நோக்கம் தங்கள் நல்வாழ்வு அல்ல, மாறாக, பிறரின் நல்வாழ்வே. ஏனெனில், இயேசுவின் கட்டளைகளைக் கடைப்பிடிக்கும் அவர்கள் நிறைய துன்பத்தைத் தாங்க வேண்டியிருக்கும். மற்றவர்கள் தங்களைக் காயப்படுத்துவதை அவர்கள் பொறுத்துக்கொள்ள வேண்டும்.
2. வலியை வலிந்து ஏற்றல் வேண்டல்
'தெ ஸெல்ஃபிஷ் ஜீன்' என்ற நூலின் ஆசிரியர் ரிச்சர்ட் டாக்கின்ஸ், மனித உடலின் ஜீன்கள் இயல்பாகவே தன்னலம் நோக்கம் கொண்டவை என்கிறார். இவை எந்த நேரத்திலும் தங்களைப் பற்றி மட்டுமே சிந்திக்க முடியும். மேலும், எந்த ஆபத்து நேரத்திலும் இவை தங்களைத் தற்காத்துக்கொள்வதிலேயே கவனமாக இருக்கும் என்கிறார். ஏனெனில், ஜீன்கள் இயல்பாகவே வலியை ஏற்கத் தயங்குபவை. இன்றைய இறைவார்த்தை வழிபாட்டில் நாம் காணும் தாவீது, இயேசு, இயேசுவின் சீடர்கள் இந்த இயல்புக்கு எதிராகச் செல்கிறார்கள். வலியைத் தாங்களாகவே ஏற்கிறார்கள். இன்றைய நம் உலகம் வலிகள் இல்லாமல் வழிகளைக் கற்றுக்கொடுக்க நினைக்கிறது. ஆனால், வலிகளை வலிந்து ஏற்பதில் வழிகள் தென்படுவதோடல்லாமல், வலிகளும் மறைந்துவிடும் எனக் கற்பிக்கிறது இன்றைய இறைவார்த்தை வழிபாடு.
3. என் அளவை எது? என்ற தெளிவும் உறுதியும் வேண்டும்
வாழ்க்கை ஒரே அளவையால் எல்லாருக்கும் அளப்பதில்லை. மேலும், நான் பிறருக்கு அளக்கும் அளவையைப் போல அவரும் எனக்கு அளப்பதில்லை. நான் நன்றாகக் கூலி கொடுக்கும் வீட்டுத் தலைவியாக இருக்க, என் வீட்டில் வேலை செய்பவர் அதற்கேற்ற வேலை செய்வதில்லை. ஆசிரியரின் உழைப்பு என்ற அளவைக்கு ஏற்ப மாணவர்கள் உழைப்பதில்லை. நான் நல்லது செய்ய அதுவே எனக்குத் தீங்காகவும் முடியலாம். இம்மாதிரி நேரங்களில் எல்லாம், அளவைகளை மாற்றிக்கொள்ளும் சோதனை வரும். அச்சோதனையிலிருந்து விடுபட வேண்டும். தாவீதுக்கு சோதனை அபிசாய் வடிவிலும், மேலும் தன்னுடைய சிந்தனையாலும் வருகிறது. 'கடவுளே இதை அனுமதித்தார்' என்று தனக்குத் தானே நியாயம் சொல்லி சவுலை அவர் கொன்றிருக்கலாம். ஆனால், எந்த நிலையிலும் தன் தகைமை, தாராள உள்ளம் என்னும் அளவையை அவர் மாற்றிக்கொள்ளவே இல்லை. இதுதான் கன்சிஸ்டன்ஸி - மாறாத்தன்மை. ஆகையால்தான், இயேசுவும் 'தந்தை போல இரக்கம் கொள்ளுங்கள்' என்கிறார். கடவுள் தன் அளவையை ஆள்பார்த்து மாற்றுவதில்லை. எல்லார்க்கும் பெய்யும் மழையாக அவர் இருக்கிறார். 'என் அளவையை மாற்றிக்கொள்ள' என் ஆதாம் இயல்பு என்னைத் தூண்டும்போது, உடனடியாக மாறாத கிறிஸ்து இயல்பை அணிந்துகொள்ள வேண்டும்.
இறுதியாக, இன்று சரிக்குச் சரி, தவறுக்குத் தவறு, அல்லது சரிக்கும் தவறு, என்ற குறுகிய மனநலப் போக்கே நம் தனிப்பட்ட மற்றும் சமூக வாழ்வின் மகிழ்வைக் குலைக்கிறது. யாரும் தங்களுக்குக் குறிக்கப்பட்ட ஒன்றையே செய்யத் தயங்கும் இன்று, 'கொஞ்சம் எக்ஸ்ட்ரா' சாத்தியமா? என்ற கேள்வி எழுகிறது. ஆனால், இயேசுவின் மாற்றுக்கலாச்சாரம் எப்போதும் சாத்தியமே. இன்றைய பதிலுரைப் பாடலில் நாம் வாசிப்பது போல (திபா 103), ஆண்டவர் 'எனக்கு பேரன்பையும் இரக்கத்தையும் மணிமுடியாகச் சூட்டியிருக்கிறார்' என்றால், நானும் அவருடைய மகனாக, மகளாக, கொஞ்சம் எக்ஸ்ட்ரா அன்பு, இரக்கம் என வாழ்ந்தால் எத்துணை நலம்!