மலையில் ஆண்டவர்
தொடக்கநூலில், ஆண்டவராகிய கடவுள் ஆபிரகாமைச் சோதிக்கும் நிகழ்வில் (தொநூ 22), 'யாவே யீரே' ('மலையில் ஆண்டவர் பார்த்துக்கொள்வார்') என்று ஆண்டவருக்குப் பெயரிட்டு அழைக்கின்றார். 'மலையில் ஆண்டவர் பார்த்துக்கொள்ளும் விதம்' பற்றி நமக்கு எடுத்துரைக்கின்றன இன்றைய வாசகங்கள்.
'படைகளின் ஆண்டவர் இந்த மலையில் மக்களினங்கள் அனைவருக்கும் சிறந்ததொரு விருந்தை ஏற்பாடு செய்வார்' என்ற துள்ளல் வார்த்தைகளோடு முதல் வாசகம் தொடங்குகிறது (காண். எசா 25:6-10). 'படைகளின் ஆண்டவர்' என்று ஆண்டவரின் பெயரைக் குறிப்பிடக் காரணம், இஸ்ரயேலை ஆண்டவராகிய கடவுள் எதிரிகளின் படைகளளிலிருந்து விடுவிப்பார் என்னும் நம்பிக்கை தருகிறது. 'இந்த மலை' என்பது எருசலேம் அல்லது சீயோன் மலையைக் குறிக்கிறது. தொடர்ந்து, விருந்தில் பரிமாறப்படும் உணவுப் பொருள்களைப் பட்டியலிடுகிறார் எசாயா. அடுத்ததாக, 'மக்களினங்கள் அனைவரின் முகத்தை மூடியுள்ள முக்காட்டை இந்த மலையில் அவர் அகற்றிவிடுவார் ... துன்பத் துகிலைத் தூக்கி எறிவார். சாவை ஒழித்துவிடுவார்.' 'முக்காடு,' 'துன்பத் துகில்' என்னும் இரு சொற்களும் சாவிற்காக மக்கள் புலம்புவதைக் குறிக்கின்றன. இஸ்ரயேலின் சமகாலத்தில், இறப்புக்கான புலம்பல் நேரத்தில் மக்கள் தங்கள் முகங்களை மூடிக்கொள்வது வழக்கம். நம் ஊரில் இறந்தவரின் வீட்டில் உள்ள ஆண்கள் மொட்டையெடுத்துக்கொள்வதுண்டு. ஒரு வீட்டில் 'சேதம்' (இதுவே மங்கலமாக, 'கேதம்' என்று சொல்லப்படுகிறது) நடந்தது என்பதை மற்றவர்கள் அறிந்துகொள்வதற்கு இந்த மொட்டை அடையாளமாக இருக்கிறது. அது போலவே இறப்பு நடந்த வீட்டில் உள்ளவர்கள் தங்கள் முகங்களை முக்காடிட்டு மறைத்துக்கொள்வதும் மற்றவர்களுக்கான அடையாளமாக இருந்தது. 'முக்காடு' அகற்றப்படும் என்று சொல்வதன் வழியாக ஆண்டவராகிய கடவுள் இறப்பு என்னும் எதார்த்தத்தை அகற்றுவதாக முன்மொழிகின்றார். இஸ்ரயேல் மக்கள் மட்டுமல்லாமல் உலகின் அனைத்து மக்களும் சாவிலிருந்து விடுதலை பெறுவர்.
ஆக, 'உணவு,' 'வாழ்வு' என்னும் இரு கொடைகளை கடவுள் மலையின்மேல் அளிக்கின்றார்.
நற்செய்தி வாசகத்தில் (காண். மத் 15:29-37), இயேசு மலையின்மீது ஏறி அமர, பெருந்திரளான மக்கள் அவரிடம் வருகின்றனர். முந்தையதொரு நிகழ்வில், இயேசு மலைமீது ஏறி அமர்ந்தபோது (காண். மத் 5:1), பெருந்திரளான மக்கள் அவரிடம் வர, அவர் திருவாய் மலர்ந்து கற்பிக்கின்றார். இங்கே, இயேசு கற்பிப்பவராக அல்லாமல், செயலாற்றுபவராக முன்வைக்கப்படுகின்றார். ஏனெனில், மலையில் ஏறி வருகின்ற பெருந்திரளான மக்கள் தங்களோடு கால் ஊனமுற்றோர், பார்வையற்றோர், உடல் ஊனமுற்றோர், பேச்சற்றோர் மற்றும் பிற நோயாளர்களையும் அவர் காலடியில் கொண்டுவந்து சேர்க்கின்றனர். இவ்வார்த்தைகளைக் கற்பனை செய்து பார்க்கும்போது நம்மை அறியாமல் ஏதோ ஒரு சோகம் பற்றிக்கொள்கிறது. தங்களுடைய வலுவற்ற நிலையிலும், தங்களுக்கு இருக்கின்ற ஒரே துணை இயேசுதான் என்ற நிலையிலும், இயேசுவிடம் சென்றால் நலம் கிடைக்கும் என்ற நம்பிக்கையிலும்தான் அவர்கள் வலி பொறுத்து, மூச்சிரைக்க மலைமேல் ஏறி வருகின்றனர். இவர்களை உடன் நடத்தி வந்த மக்கள் கூட்டத்தினரும் பாராட்டுக்குரியவர்கள். 'வா! கண்டிப்பா உனக்கு நலம் கிடைக்கும்!' என்று அவர்கள் தங்கள் நண்பர்களை, உறவினர்களை அழைத்துவந்திருப்பர். அவர்கள் அனைவருக்கும் நலம் தருகின்றார் இயேசு. தொடர்ந்து, மக்கள் அனைவரையும் பார்த்து, 'நான் இவர்கள்மேல் பரிவு கொள்கிறேன். இவர்களிடம் எதுவும் இல்லை. இவர்களைப் பட்டினியாய் அனுப்பிவிட நான் விரும்பவில்லை' எனச் சொல்கின்ற இயேசு, ஏழு அப்பங்களைப் பகிரச் செய்து அவர்களின் பசியைப் போக்குகின்றார். மக்கள் உண்டது போக, மீதியும் கிடைக்கிறது.
ஆக, 'உடல் நலம்,' மற்றும் 'உணவு' என்னும் இரு கொடைகளை இயேசு மலையின்மேல் தருகின்றார்.
இரு நிகழ்வுகளிலும் மக்கள் ஆர்ப்பரிக்கின்றனர். முதல் வாசகத்தில், 'இவரே நம் கடவுள். இவருக்கென்றே நாம் காத்திருந்தோம்' என்று துள்ளிக் குதிக்கின்றனர். நற்செய்தி வாசகத்தில், மக்கள் கூட்டத்தினர் வியந்து இஸ்ரயேலின் கடவுளைப் போற்றிப் புகழ்கின்றனர். இன்றைய பதிலுரைப்பாடலில், தன் ஆண்டவரை ஆயர் எனக் கண்டுகொள்கின்ற தாவீது (காண். திபா 23), 'ஆண்டவரின் இல்லத்தில் நான் நெடுநாள் வாழ்ந்திருப்பேன்' என அக்களிக்கின்றார்.
இறைவனின் திருமுன்னிலையில் 'உணவு', 'உடல்நலம்,' மற்றும் 'வாழ்வு' ஆகியவை கிடைக்கின்றன. இறைவன் இவற்றை இலவசமாகவும், வியத்தகு முறையிலும், எதிர்பாராத விதத்திலும் தருகின்றார். 'மலையில் ஆண்டவர் பார்த்துக்கொள்வார்' என்பது பல நேரங்களில் நம் வாழ்வியல் அனுபவமாகவும் இருக்கின்றது. நாம் பெற்ற நலன்களுக்கு நன்றி கூறுகின்ற வேளையில், நலமற்றவர்களை மலையில் ஏற்றி வந்த நல்லுள்ளங்கள் போல மற்றவர்களுக்கு நம் கரம் நீட்டும்போது, 'நாமும் அவர்களைப் பார்த்துக்கொள்ளும் ஆண்டவர்போல' மாறுகின்றோம்!'
உள்ளத்திற்கு உரமேற்றும் ஒரு பதிவு. “மலையில் ஆண்டவர் பார்த்துக்கொள்வார்” இருவாசகங்களிலுமே ‘ மலை’…..ஒரு உறுப்பினர் போல….பேசுபொருளாகப் பார்க்கப்படுகிறது. முதல் வாசகத்தில் படைகளின்ஆண்டவர் தன் மக்களுக்கு உணவு படைப்பதும்,…உடலால்…உள்ளத்தால் நொறுங்கிய மக்களுக்கு சுகமளிப்பதும் அவருக்குத் தன் மக்கள் மீதிருந்த பாசத்தையும்,பரிவையும் காட்டுகிறது.ஒருவர் தன் அருகிலிருப்பவரைப் பார்த்து “ கலங்காதே! உனக்கு நான் இருக்கிறேன்” என்று சொல்ல ஒரு மனது வேண்டும் அதை அடிக்கடி நம் செவிகளில் கிசுகிசுக்காறார் இயேசு.
ReplyDeleteநற்செய்தி வாசகமும் உடல் நலம் மற்றும் உணவை முன்வைப்பதாகவே இருக்கிறது.நாம் விரும்பியதொரு விஷயமே எனினும், அதையடைய மூச்சிறைக்க மலைமேல் ஏறுவது எத்துணை கடினம் என்பதைப் புனிதப் பயணத்தின் போது நான் உணர்ந்திருக்கிறேன்.ஆனால் தன்னை நோக்கி வந்த யாரையும் ஏமாற்றியதில்லை இயேசு…மாறாக வயிறு நிறைய உணவையும், உள்ளம் நிறைய உவகையையும் அள்ளித்தருகிறார். ‘இவரே கடவுள்’ என்று இவருக்காக க் காத்திருந்த மக்கள் துள்ளிக்குதிக்கின்றனர்; போற்றிப்புகழ்கின்றனர்.
தந்தையின் வார்த்தைகள் உண்மையே! எப்பொழுதுமே உணவுக்காகவும்,உடல்நலத்திற்காகவும் மலையேறுபவர்களாகவே நாம் இருக்க வேண்டியதில்லை. சில நேரங்களில் நாமே அந்த மலைகளாக மாறி நம்மை நோக்கி வருபவர்களுக்கு உணவாகவும்…உடல்நலமாகவும் மாறி நேசக்கரம் நீட்டலாம்; ஆண்டவராகவே மாறலாம்..
அப்பொழுது நம்மாலும் தாவீது போல “ஆண்டவரின் இல்லத்தில் நெடுநாள் வாழ்ந்திருப்பேன்” என்று துள்ளிக்குதிக்க முடியும்.
‘படைகளின் ஆண்டவர்’…’மலைகளின் ஆண்டவராகவும்’ மாறி நமக்கு நேசக்கரம் நீட்டுவார் எனும் நம்பிக்கையின் விதைகளைத் தூவிய தந்தைக்கு நன்றிகள்!!!
ஆமென்!
ReplyDelete