Sunday, November 28, 2021

வார்த்தையின் ஆற்றல்

நாளின் (29 நவம்பர் 2021) நல்வாக்கு

வார்த்தையின் ஆற்றல்

'வார்த்தை மனிதரானார். நம்மிடையே குடிகொண்டார்' (யோவான் 1:14) என்னும் மனுவுருவாதல் மறைபொருளை நினைவுகூரும் திருவருகைக்காலத்தில், 'கடவுளின் வார்த்தை' கொண்டிருக்கின்ற ஆற்றலை நமக்கு எடுத்துரைக்கின்றன இன்றைய வாசகங்கள்.

முதல் வாசகம் (எசா 2:1-5) எசாயா நூலின் ஆறுதல் பகுதியிலிருந்து எடுக்கப்படுகிறது. இஸ்ரயேல் மக்கள், கடவுள் தங்களோடு ஏற்படுத்திக் கொண்ட உடன்படிக்கைக்குப் பிரமாணிக்கமில்லாமல் நடந்துகொண்டபோது அவர்களை எதிரிகள் வழியாகத் தண்டிக்கின்றார். நீதியோடு தண்டித்த அவரே, இப்போது இரக்கத்துடன் எருசலேமையும் இஸ்ரயேல் மக்களையும் மேலான நன்னிலைக்குக் கொண்டு வருகின்றார். அழிவுக்கும், அடக்குமுறைக்கும் பயன்பட்ட வாள்கள் ஆக்குவதற்கும், வளர்ப்பதற்கும் பயன்படும் கலப்பைக் கொழுக்களாகவும், ஈட்டிகள் அறுவடைக்கான கருக்கரிவாள்களாகவும் மாறுகின்றன. ஓர் இனம் இன்னொரு இனத்தை அழிப்பதற்கு முயற்சிக்காது. அதாவது, மொத்தத்தில் எருசலேம் தன் பெயருக்கேற்ற 'அமைதியை' பெறும். விதை விதைப்பதற்கு முன்னர் பயன்படும் கலப்பை, அறுவடைக்குப் பயன்படும் கருக்கரிவாள் என்னும் இரு உருவகங்கள் வழியாக, நிலம் பெறுகின்ற அமைதியையும், மக்கள் பெறுகின்ற மறுவாழ்வையும் எடுத்துரைக்கின்றார் எசாயா. இறுதியாக, 'யாக்கோபின் குடும்பத்தாரே' – ஏனெனில், யாக்கோபிலிருந்துதான் இஸ்ரயேல் இனம் உருவானது – என அழைத்து அவர்களின் வேர்களையும், மேன்மையையும் அவர்களுக்கு நினைவூட்டி, 'வாருங்கள் நாம் ஆண்டவரின் ஒளியில் நடப்போம்' என அழைக்கின்றார்.

ஆக, ஆண்டவரின் வார்த்தை – உடன்படிக்கை - இஸ்ரயேல் மக்களுக்குப் புதுவாழ்வு தருகிறது.

இரண்டாம் வாசகத்தில் (மத் 8:5-11), நூற்றுவர் தலைவரின் பையனுக்கு நலம் தருகின்றார். 'ஐயா! நீர் என் வீட்டிற்குள் அடியெடுத்து வைக்க நான் தகுதியற்றவன். ஆனால், ஒரு வார்த்தை மட்டும் சொல்லும், என் பையன் நலமடைவான்' என்று இயேசுவின் வார்த்தையின் ஆற்றலின்மேல் நம்பிக்கை வைத்து சரணாகதி அடைகின்றார் நூற்றுவர் தலைவர். இயேசு அவருடைய நம்பிக்கையைப் பாராட்டுவதோடு, தூரத்திலிருந்தே நலம் தருகின்றார். இயேசுவின் வார்த்தை நோயிலிருந்து நலத்திற்குப் பையனை அழைத்துச் செல்கிறது.

ஆக, இயேசுவின் வார்த்தை நலம் அல்லது புதுவாழ்வு தருகிறது.

'அகமகிழ்வோடு ஆண்டவரது இல்லத்திற்குப் போவோம்' என நம்மை அழைக்கிறது பதிலுரைப் பாடல் (திபா 122).

தகுதியற்ற நம்மைத் தேடி வந்து மனுவுரு ஏற்றார் இறைவனின் வார்த்தை. அந்த வார்த்தை புதுவாழ்வும் நலமும் தருகிறது. அந்த வார்த்தையைத் தேடிச் செல்லும் நம் உள்ளம் மகிழ்ச்சி அடைகிறது.

இறைவனின் வார்த்தை ஆற்றல் கொண்டுள்ளது போல நாம் பேசுகின்ற வார்த்தைகளுக்கும் ஆற்றல் உண்டு. ஆக, வார்த்தையானவர் நம் உதடுகளில் இருந்து நாம் பேசும் வார்த்தைகளைப் புனிதப்படுத்துவாராக. நம் செயலுக்கும் வார்த்தைக்கும் உள்ள நெருக்கத்தை அதிகரிப்பாராக. நாம் ஒருவர் மற்றவருக்கு நம்பிக்கையின் வார்த்தைகளைச் சொல்ல நம்மைத் தூண்டி எழுப்புவாராக!

1 comment:

  1. “கடவுள் மனிதரானார்; நம்மிடையே குடிகொண்டார்”; வார்த்தை மனுவுருவானதை அடிக்கடி நமக்கு ஞாபகமூட்டுகிற காலம் இது.ஆகவே தான் இன்றைய இரு வாசகங்களும் இதைப்பற்றியே பேசுகின்றன.”அடிக்கிற கைதான் அணைக்கும்” என்பதை நிருபித்துக்காட்டுகிறார் கடவுள்.உடன்படிக்கையை மீறியபோது தண்டித்த அதே மக்களை மேலான நன்னிலைக்குக் கொண்டு வரவும் செய்கிறார்.அழிவுக்கு பயன்படுத்தப்பட்ட கருவிகளை அறுவடைக்கும் பயன்படுத்தி நாட்டில் தொலைந்து போன அமைதியை மீண்டும் கொணர்கிறார்.இஸ்ரேல் மக்களின் வேர்களை நினைவூட்டும் ஆண்டவரின் வார்த்தை அவர்களில் நம்பிக்கையையும்,புது ஒளியையும் பாய்ச்சுகிறது.
    இடண்டாம் வாசகமும் நம்பிக்கையின் விதைகளை நம்மில் விதைக்கிறது. இல்லம் வந்து சுகம் தர வேண்டுமென மன்றாடிய நூற்றுவர் தலைவனின் மகனுக்கு தொலைவிலிருந்தே சுகம் தருகிறார் நம்பிக்கையின் தேவன்.
    தகுதியற்ற நம்மைத் தேடி வரும் இறைவார்த்தை நமக்கு புதுவாழ்வும்,நலமும் தருகிறதெனில் நம் உள்ளத்திலிருந்து உதடுகள் வழியாக வரும் வார்த்தைகளும் மற்றவரை மகிழ்விப்பனவாக இருக்க வேண்டும். நம் நம்பிக்கையின் வார்த்தைகள் பிறரைத் தொற்று போல் ஒட்டிக் கொள்ளட்டும்! இத்தனையும் நம்மில் நடக்கும் பட்சத்தில் “ அகமகிழ்வோடு ஆண்டவரது இல்லத்திற்குப் போவோம்” என நம்மை அழைக்கும் பதிலுரைப்பாடலுக்கு நம்மால் செவிமடுக்க முடியும் என்ற நம்பிக்கையின் வார்த்தைகளுக்காக தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete