பாவச் சோதனை
இன்றைய நற்செய்தி வாசகத்தில் மூன்று கருத்துருக்கள் உள்ளன: (அ) சிறியோருக்கு பாவச் சோதனையை ஏற்படுத்தாமல் இருத்தல், (ஆ) தன் தவற்றை ஏற்றுக்கொள்பவர்களை மன்னித்தல், மற்றும் (இ) நம்பிக்கை கொண்டிருத்தல்.
இந்த மூன்று கருத்துருக்களும், எனக்கும் எனக்குமான உறவு, எனக்கும் பிறருக்குமான உறவு, எனக்கும் இறைவனுக்குமான உறவு என்ற மூன்று தளங்களில் நகர்கின்றன.
எனக்கும் எனக்குமான உறவில், நான் சின்னஞ்சிறியவர்களின் பாவச் சோதனைக்குக் காரணமாக இருக்கக் கூடாது. என் சொல்லும், செயலும் மற்றவர்களைப் பாவம் செய்யுமாறு தூண்டக் கூடாது. சின்னஞ் சிறியவர்கள் என்பவர்கள் வயதில் சிறிய குழந்தைகள் மட்டும் அல்லர். மாறாக, என்னைவிட வலுவிழந்தோர், நொறுங்குநிலையில் இருப்போர். நான் ஓர் அலுவலகத்தில் வேலை செய்கிறேன் என வைத்துக்கொள்வோம். எனக்குக் கீழே உள்ள படிநிலையில் இன்னொருவர் வேலை செய்கிறார். அவர் நேர்மையாக இருக்கக் கூடியவர். கையூட்டு மற்றும் அன்பளிப்புகள் பெறாதவர். ஆனால், நான் கையூட்டு வாங்குவதைப் பார்க்கும்போது அவரும் அச்சோதனைக்கு உட்படுவது உண்டு. அப்படி நான் அவரைக் கையூட்டு வாங்குமாறு தூண்டுகிறேன் என்றால், என் பாவம் இரட்டிப்பாக மாறுகிறது. ஆக, எனக்குரிய நிலையில் நான் நாணயத்தோடு இருத்தல் நலம்.
எனக்கும் பிறருக்குமான உறவில், மனத்தாங்கல்கள் வருவது இயல்பு. நம் சொற்கள் மற்றும் செயல்களால் மற்றவர்களைக் காயப்படுத்துவதற்கான வாய்ப்புகளும் நிறைய உண்டு. மற்றவரின் பாவத்தைக் கண்டிக்கும் நான், மற்றவர் தன் செயலுக்கு மனம் வருந்தினால் அவரை மன்னிக்கவும் செய்ய வேண்டும். மனம் மாறுதல் என்பது வெறும் சொல்லாக இல்லாமல், செயலில் காணக்கூடிய அளவில் மாற்றம் கொண்டிருக்க வேண்டும்.
மேற்காணும் இரு கருத்துருக்களும் குழும வாழ்வு சார்ந்தவை. குழும வாழ்வில் பாவச் சோதனைக்கு சின்னஞ்சிறியவர்கள் ஆட்படக் கூடாது. மனத்தாங்கல்கள் அனைத்தும் மன்னிக்கப்பட வேண்டும்.
எனக்கும் இறைவனுக்குமான உறவில், நம்பிக்கை என்பது அவசியம். நம்பிக்கை கொண்டிருந்தால் காட்டு அத்திமரத்தையும் கடலில் தள்ளலாம் என்பது, பெரிய செயல்களையும் செய்யலாம் என்று நமக்குக் கற்றுத் தருகிறது.
இன்றைய முதல் வாசகத்தில், 'நெறிகெட்ட எண்ணம் மனிதரைக் கடவுளிடமிருந்து பிரித்துவிடும்' என்றும், 'பாவத்திற்கு அடிமையான உடலில் ஞானம் குடிகொள்வதில்லை' என்றும் முன்மொழிகின்றார் சாலமோனின் ஞானநூல் ஆசிரியர்.
ஆக, பாவம் என்பது நம் உடல் மற்றும் உள்ளத்தில் பிளவை உருவாக்குவதோடு, அது கடவுளிடமிருந்தும் நம்மைப் பிரித்துவிடுகிறது.
ஒரு தனி மனிதன், யாருடனான தன் உறவை எப்படிக் காத்துக்கொள்ள வேண்டுமெனும் முறை சொல்லும் ஒரு பதிவு. உடல்…உள்ள….வலிமை…வயது…..பொருளாதாரம் இதில் எதில் வேண்டுமானாலும் நம்மை விடக்குறைந்த ஒருவரிடம் நமது உறவு….அவரைத் தெரிந்தோ…தெரியாமலோ நாம் பாவத்திற்கு இட்டுச்செல்வதாக இருத்தல் கூடாது எனவும்….
ReplyDeleteஎன்னை ஒத்த என் பிறனிடம் நான் கொண்டிருக்கும் உறவு…அவர்கள் தெரிந்தோ,தெரியாமலோ என்னைக் காயப்படுத்தினாலும் அவர்களை என் சொல்லாலும்,செயலாலும் மன்னிப்பதற்குத் தயாராக இருக்க வேண்டும் எனவும்….
என் இறைவனுடனான என் உறவில் , அவரிடம் நான் கொண்டுள்ள நம்பிக்கையே அடித்தளமாக இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்துகிறது இன்றையப் பதிவு.
காட்டு அத்திமரத்தையும் கடலில் தள்ளும் நம்பிக்கையும்…கடுகளவேனும் இறைவனை விட்டு நம்மைப்பிரிக்காத பாவக்கறையற்ற வாழ்வும்… நம்முடையதாக இருக்குமெனில் “ஞானம்” நமது சொத்தாகிவிடும்.
என் புத்திக்கும்,சக்திக்கும் அப்பாற்பட்ட கருத்துக்களைத் தந்தை சமயங்களில் எடுத்து வைக்கையில் “என்னதான் சொல்ல வருகிறார்” என்ற குழப்பம் என்னில் எழுவதுண்டு.ஆனால் இன்று “இந்த உறவென்றால் இது இப்படித்தான்!” என்ற உறவுகளின் இலக்கணம் தெள்ளத் தெளிவு. உறவுகளைப் பேணவும்….போற்றவும் பழகுவோம்.தந்தைக்கு நன்றியும்! வாழ்த்துக்களும்!!!
Good Reflection Yesu.
ReplyDelete