இன்றைய (11 நவம்பர் 2021) நற்செய்தி (லூக் 17:20-25)
எப்போது வரும்?
'இறையாட்சி எப்போது வரும்?' என்று பரிசேயர் இயேசுவிடம் கேட்கின்றனர்.
இது ஆவலால் எழும் கேள்வியா? அல்லது ஆதங்கத்தால் எழும் கேள்வியா? அல்லது அவசரத்தால் எழும் கேள்வியா? அல்லது இயேசுவைக் கேலி செய்யும் கேள்வியா? என்று தெரியவில்லை. ஆனாலும், இயேசு விடையளிக்கின்றார். மேலும், இதே இடத்தில் மானிட மகனின் வருகை பற்றியும், மானிட மகன் எதிர்கொள்ளவிருக்கும் துன்பங்கள் பற்றியும் எடுத்துரைக்கின்றார்.
'இறையாட்சி உங்கள் நடுவேயே செயல்படுகிறது' என்கிறார் இயேசு.
'உங்கள் நடுவே' என்றால் 'பரிசேயர்கள் நடுவே' என்று பொருள் அல்ல. மாறாக, நாம் வாழ்கின்ற இத்தளத்தில் இந்நேரமே அது செயல்படுகின்றது.
இதை நாம் மூன்று நிலைகளில் புரிந்துகொள்ளலாம்:
ஒன்று, 'நம் நடுவே' இருக்கின்ற இயேசுவே இறையாட்சி.
இரண்டு, நம் வாழ்வியல் சூழலில் இறையாட்சி நிலவுகிறது.
மூன்று, காண இயலாத சூழலில் அது இயங்குகிறது.
இயேசு விடுக்கும் அழைப்பு என்ன?
இறையாட்சி நம் தனிப்பட்ட அனுபவமாக மாற வேண்டும். இறைவன்தாமே ஆட்சி செய்கின்றார் என்பதை நாம் உணர்வதற்கு நம்பிக்கைக் கண்கள் அவசியம்.
இன்றைய முதல் வாசகம், 'ஞானம் கதிரவனை விட அழகானது. விண்மீன் கூட்டத்தினும் சிறந்தது. ஒளியைக் காட்டிலும் மேலானது' என ஞானத்தின் மேன்மையை முன்மொழிகிறது.
ஞானம் காட்டும் ஒளியில் நாம் இறையாட்சியைக் கண்டுகொள்ள இயலும்.
“ இறையாட்சி உங்கள் நடுவிலேயே செயல்படுகிறது” என்கிறார் இயேசு.இறையாட்சி என்பது நம் வாழ்வின் அனுபவமாக உணரப்பட வேண்டும் என்பதே நம்மைக்குறித்த இயேசுவின் எதிர்பார்ப்பாக இருக்க வேண்டும். இதற்குத் தேவை “ நம்பிக்கைக் கண்கள்” என்கிறது இன்றையப்பதிவு.நாம் கண்களால் காணக்கூடிய கதிரவனைவிட…விண்மீன் கூட்டத்தை விட…. நாம் உணரக்கூடிய ஒளியை விட ‘ஞானம்’ அழகானதெனில் அது காட்டும் வழியில் தானே நாம் இறையாட்சியைக் கண்டுணர முடியும்!? ‘ ஆம்!’ என்பதன்றி வேறென்ன பதிலாக இருக்க முடியும்? வாசித்தலும்…யோசித்தலுமே வாழ்க்கை என்றுணர்த்திய தந்தைக்கு நன்றிகள்!!!
ReplyDelete