Wednesday, December 1, 2021

கற்பாறை போன்ற உறுதி

நாளின் (2 டிசம்பர் 2021) நல்வாக்கு

கற்பாறை போன்ற உறுதி

இன்றைய இரு வாசகங்களிலும், 'கற்பாறை' என்ற சொல் வருகின்றது. 'கற்பாறை' உறுதி மற்றும் அசைவுறாத்தன்மையின் அடையாளமாக இருக்கின்றது.

மெசியா பற்றிய இறைவாக்குப் பகுதியிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது இன்றைய முதல் வாசகம் (காண். எசா 26:1-6). 'அந்நாள்களில் யூதா நாட்டில் இந்தப் பாடல் பாடப்படும்' என்று தொடங்கும் பகுதியில், ஆண்டவராகிய கடவுள் நிகழ்த்தும் வல்ல செயல்களின்மேல் நம்பிக்கை கொண்டவர்கள் உள்ளே வரட்டும் என்று சொல்கின்ற எசாயா, தொடர்ந்து ஆண்டவராகிய கடவுள் நிகழ்த்தும் வல்ல செயல்களை – உயரத்தில் வாழ்வோரைத் தகர்த்தல், நகரைத் தகர்த்தல், எளியோரை அதன்மேல் நடக்கச் செய்தல் - எடுத்துரைக்கின்றார். 'மனஉறுதி' முதன்மையான மதிப்பீடாக முன்வைக்கப்படுகின்றது. இஸ்ரயேல் மக்களின் கடவுள் கற்பாறை போல இருக்கின்றார். அதாவது, பாறை என்னும் சொல் உறுதியைக் குறிக்கின்றது. ஆண்டுகள் பல கடந்தாலும் பாறைகள் அப்படியே இருக்கின்றன. மழை, வெயில், காற்று, புயல் என எது வந்தாலும் பாறைகள் தங்கள் தன்மையை இழப்பதில்லை. அது போலவே ஆண்டவராகிய கடவுள் தன் உடன்படிக்கைப் பிரமாணிக்கத்தில் உறுதியாக இருக்கின்றார். ஆனால், இஸ்ரயேல் மக்கள் தங்கள் கடவுள்மேல் உள்ள நம்பிக்கையில் சமரசம் செய்துகொள்பவர்களாகவும், நெகிழ்வுத்தன்மை கொண்டவர்களாகவும், உறுதியற்ற உள்ளம் கொண்டவர்களாகவும் இருக்கின்றனர்.

ஆண்டவராகிய கடவுள்மேல் கொண்டுள்ள நம்பிக்கை என்பது மனஉறுதி என்னும் செயல்பாடாக அவர்கள் வாழ்வில் வெளிப்பட வேண்டும் என்பது இறைவாக்கினரின் போதனை.

நற்செய்தி வாசகத்தில் (காண். மத் 7:21, 24-27), மத்தேயு நற்செய்தியாளர் பதிவு செய்யும் இயேசுவின் மலைப்பொழிவின் இறுதிப் பகுதியை வாசிக்கின்றோம். 'ஆண்டவரே, ஆண்டவரே' என்னும் சொல் அல்ல, மாறாக, 'தந்தையின் திருவுளத்தின்படி நடக்கும் செயலே' விண்ணகத்தின் கதவுகளைத் திறக்கும் என்கிறார் இயேசு. சொல் என்பது செயலில் வெளிப்பட வேண்டும் என்பது இயேசுவின் பாடமாக இருக்கின்றது. மேலும், செயல்படுதல் என்பதை, 'வீடு கட்டுதல்' என்னும் ஓர் உருவகம் வழியாக முன்வழிகின்ற இயேசு, 'பாறையை அடித்தளமாகக் கொண்டு கட்டுதல்,' 'மணலை அடித்தளமாகக் கொண்டு கட்டுதல்' என்னும் இரு தெரிவுகளை முன்வைத்து, அவற்றில் ஒன்றைத் தெரிவு செய்ய அழைக்கின்றார். மணலில் வீடு கட்டுதல் எளிது. வேகமாகக் கட்டிவிடலாம். ஆனால், அது உறுதியற்றது. சில நேரங்களில் நம் நம்பிக்கைச் செயல்பாடுகள் இப்படி இருக்க நேரிடும்.

இயேசுவின்மேல் கொண்டுள்ள நம்பிக்கை செயல்வடிவம் பெற வேண்டும். இயேசுவின் போதனை அனைத்தும் செயல்களாக வெளிப்பட வேண்டும். இச்செயல்கள் உறுதியாக இருக்க வேண்டும்.

'மனிதர்மீது நம்பிக்கை வைப்பதை விட, ஆண்டவரிடம் தஞ்சம் புகுவதே நலம்!' என ஆண்டவரைப் பற்றிக்கொள்கின்ற திருப்பாடல் ஆசிரியர் (திபா 118), 'ஆண்டவர் பெயரால் வருபவர் ஆசி பெற்றவர்!' என்று ஆண்டவர் பெயரில் ஆசீர் வழங்குகின்றார்.

நம்பிக்கை என்ற உணர்வு, 'ஆம்! நம்புகிறேன்!' என்னும் சொல்லாகவும், வெளிப்புறச் செயலாகவும் வெளிப்படும். சொல் உறுதியற்றது. சொல்லின் உறுதி செயலில்தான் உள்ளது.

1 comment:

  1. அவரை உறுதியாகப் பற்றிக்கொள்ளும் தம் மக்கள் மீது ஆண்டவரும் உறுதியோடிருக்கிறார்.தன் மக்களுடன் தான் கொண்ட உடன் படிக்கைப்படி செருக்குற்றோரை சிதறடித்து, எளியமனம் படைத்தவரை ஏற்றிவிடுகிறார்.பதரான உள்ளம் கொண்ட நாம் தான், அவரிடம் கொண்டுள்ள நம்பிக்கை உட்பட அனைத்திலும் சமரசம் செய்துகொள்கிறோம்.
    அர்த்தமற்ற பல அடுக்குச்சொற்களை விட வீரியமிக்க விவேகமே நம்மை இறைவனிடம் அழைத்துச்செல்லும் என்பதும், பாறையை அடித்தளமாகக் கொண்ட வீடு மட்டுமில்லை… பாறையின் உறுதிகொண்ட மனத்திண்மையும் நமக்கு வேண்டுமென உணர்த்துகிறது இன்றைய நற்செய்தி வாசகம். உறுதியற்ற சொல்லை விடுத்து…உரம் பாய்ந்த செயல்களை நமதாக்கினால் ஆண்டவர் பெயரால் வருபவர் நமக்கும் ஆசி வழங்குவார்! சுற்றும் முற்றும் இருளும்,திகலும்,சாவின் ஓலமும் நிறைந்து நிற்கும் இன்றைய நம் நிலமையை மாற்றி அவரின் மக்களாக வலம்வரத் தேவை அவர் ஆசி மட்டுமே என்று கூறும் தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete