Sunday, November 14, 2021

இது என்ன?

இன்றைய (15 நவம்பர் 2021) நற்செய்தி (லூக் 18:35-43)

இது என்ன?

இயேசு எரிகோவுக்குச் செல்லும் வழியில் பார்வையற்ற ஒருவருக்கு பார்வை தருகின்றார். இந்த நிகழ்வை மாற்கு நற்செய்தியிலிருந்து கடந்த இரு வாரங்களுக்கு முன்பு நாம் வாசித்தோம். மாற்கு பதிவு செய்கின்ற பல நுணுக்கமான தகவல்களை லூக்கா விட்டுவிடுகின்றார். மாற்கு நற்செய்தியில் பார்வையற்றவரின் பெயர் பர்த்திமேயு என வழங்கப்பட்டுள்ளது. பர்த்திமேயு இயேசு வந்திருப்பதை தானாக உணர்ந்துகொள்கின்றார். ஆனால், லூக்கா நற்செய்தியில், 'இது என்ன?' என்று கேட்கின்றார். மாற்கு நற்செய்தியில் அவர் தன் மேலுடையை உதறிவிட்டு வருகின்றார். லூக்காவில் அந்தக் குறிப்பு இல்லை. 

மாற்கு நற்செய்தியாளர் இந்த நிகழ்வை இயேசுவின் வல்ல செயலாகப் பதிவு செய்யாமல், ஓர் உருவகமாகவே பதிவு செய்கின்றார். ஏனெனில், இயேசுவுக்கு அருகில் இருந்த அவருடைய சீடர்கள், பார்வை பெற்றவர்களாக இருந்தாலும், அவர்களால் இயேசுவை, 'தாவீதின் மகன்' என்று கண்டுகொள்ள இயலவில்லை. ஆனால், இங்கே, பர்த்திமேயு பார்வையற்ற மனிதராக இருந்தாலும் இயேசுவை, 'தாவீதின் மகன்' என்றும், 'மெசியா' என்றும் கண்டுகொள்கின்றார். 

லூக்கா பதிவின்படி, தனக்கு முன் மக்கள் கூட்டம் கடந்து போவதைக் கவனிக்கின்ற பார்வையற்ற நபர், 'இது என்ன?' எனக் கேட்கின்றார். 'நாசரேத்து இயேசு போய்க்கொண்டிருக்கிறார்' என்று அவருக்குச் சொல்லப்படுகிறது. 'நாசரேத்து இயேசு' என்ற சொற்களைக் கேட்டவுடன், 'இயேசுவே! தாவீதின் மகனே, எனக்கு இரங்கும்!' என கூக்குரலிடுகின்றார் அவர்.

'இது என்ன?'

இந்த மனிதரின் ஆவல் நமக்கு ஆச்சர்யம் தருகின்றது. இந்த ஒன்றைக் கேள்வியைக் கேட்க அவர் தயங்கியிருந்தால், அல்லது 'யார் போனா என்ன?' என்று ஓய்ந்திருந்தால் அவர் பார்வை பெற்றிருக்க முடியாது. இந்தக் கேள்வியைக் கேட்குமாறு தூண்டிய அவருடைய உள்ளுணர்வை நாம் பாராட்ட வேண்டும். அல்லது அவர் தன்னுடைய உள்ளுணர்வுக்கு உடனடியாகச் செவிகொடுத்ததற்காக அவரைப் பாராட்ட வேண்டும். ஒரே ஒரு கேள்வி அவரை முழுவதுமாக மாற்றிவிடுகின்றது. அவருக்குப் பார்வை அளிக்கின்றது. வழியோரம் அமர்ந்து பிச்சை எடுத்துக்கொண்டவர் இயேசுவைப் பின்பற்றத் தொடங்குகின்றார்.

மாற்றம் ஒரே இரவில் வருவதில்லை என்று பலர் சொல்வதுண்டு. ஆனால், இங்கே மாற்றம் ஒரே மாலைப்பொழுதில் நடந்தேறுகிறது. 

பார்வையற்ற நபர் நமக்குக் கற்றுக்கொடுக்கும் பாடங்கள் மூன்று:

(அ) நம்மைச் சுற்றி இருப்பவர்கள் மற்றும் நடப்பவை பற்றிய கவனம். கவனம் எப்போது வரும்? அக்கறை மற்றும் பொறுப்புணர்வு கொண்டவர்களே அனைத்தையும் கவனித்துப் பார்ப்பர் அல்லது கவனம் செலுத்துவர். நம்மைச் சுற்றி இருப்பவர்களும் நடப்பவையும் நம்மேல் நேர்முகமான அல்லது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டே இருக்கின்றனர்.

(ஆ) கேள்வி கேட்பது. கேள்வி கேட்பது ஒரு கலை. சிலருடைய கேள்விகள் நம்மை முகம் சுளிக்க வைக்கும். சிலருடைய கேள்விகள் எரிச்சல் தரும். சிலருடைய கேள்விகள் நம் சிந்தனையைத் தூண்டும். 'இது என்ன?' என்று அந்த நபர் கேட்ட கேள்வி, மற்றவர்களையும் சிந்திக்கத் தூண்டியிருக்கும். இறைவனிடம் அல்லது ஒருவர் மற்றவரிடம் நாம் இன்று கேள்விகள் கேட்கிறோமா?

(இ) நாசரேத்து இயேசுவே தாவீதின் மகன்

நாசரேத்து இயேசுவை, 'தாவீதின் மகன்' என்று அறிக்கையிடுகின்றார் பார்வையற்ற நபர். அந்த நம்பிக்கையே அவருக்கு நலம் தருகிறது. இயேசுவும் உடனடியாக நின்று பதிலிறுப்பு செய்கின்றார். 

'இது என்ன?' என்னும் ஒற்றைக் கேள்வி அவரின் வாழ்க்கை ஓட்டத்தை மாற்றியது போல, நம் வாழ்வையும் மாற்றும்.

2 comments:

  1. “ இது என்ன?” பார்க்கும் அனைத்தையும் கேள்வியாக மாற்றி ,அவற்றிற்கு விடை தேடுபவர்கள் பல உயரங்களைத் தொடுவார்கள் என்று பெரியவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். இன்றையப் பதிவிலும் அப்படிப்பட்ட ஒருவரைத்தான் நாம் பார்க்கிறோம்.இயேசுவைச் சுற்றி நின்ற அவருடைய பார்வைபெற்ற சீடர்கள், அவரைத் ‘தாவீதின் மகன்’ என்று கண்டுகொள்ள முடியாத நிலையில், பர்த்திமேயு எனும் பார்வையற்ற அந்த மனிதன் “இயேசுவே! தாவீதின் மகனே!” என்று அவரைப் பிரகடனப் படுத்துகிறார்; உள் மனத்தில் தோன்றிய உள்ளுணர்வை, வார்த்தைகளாக வடிக்கிறார்.ஒரே மாலைப் பொழுதில் இவருக்கு வாழ்க்கை மாற்றம்!
    நம்மைச் சுற்றியும் எத்தனையோ பேர் நம் பார்வை அவர்கள் மீது படாதா… நம் வாயிலிருந்து ஒரு ஆறுதல் வார்த்தை வராதா என்று காத்துக்கிடக்கின்றனர்.பேச வேண்டிய நேரத்தில் நாம் ஊமைகளாக இருப்பதால்…. பார்க்க வேண்டிய நேரத்தில் நாம் குருடராகிப் போவதால் நாம் இழந்த நல்ல விஷயங்கள் எத்தனையோ! பேச வேண்டிய நேரத்தில் நாம் உதிர்க்கும் வார்த்தைகளும், பார்க்க வேண்டிய நேரத்தில் நம் கண்களில் படும் விஷயங்களும் நம்மைச் சார்ந்தவரின் வாழ்க்கை ஓட்டத்தை மட்டுமல்ல…நம் வாழ்க்கை ஓட்டத்தையும் மாற்றும்.
    வாழ்வின் சாதாரண விஷயங்களே அசாதாரண மாற்றங்களை ஏற்படுத்தும் என்ற செய்தியைத்தரும் பதிவிற்காக நன்றிகள்!!!

    ReplyDelete