கோவிலுக்குள் இயேசு
நேற்றைய நற்செய்தி வாசகத்தில் எருசலேம் நகரை நெருங்கி வருகின்ற இயேசு, அந்நகருக்காகக் கண்ணீர் வடிக்கின்றார். எருசலேம் நகரத்தின் மையம், தலைமை, உச்சம் என்று இருந்த ஆலயத்திற்குள் நுழைகின்ற இயேசு இன்று அதைத் தூய்மைப்படுத்துகின்றார். இயேசு எருசலேம் ஆலயத்தைத் தூய்மைப்படுத்தும் நிகழ்வை ஒத்தமைவு நற்செய்தியாளர்கள் அவருடைய பாடுகளின் வரலாற்று முன்னும், யோவான் நற்செய்தியாளர் இயேசுவின் பணிவாழ்வின் தொடக்கத்திலும் நடக்கும் நிகழ்வாகப் பதிவு செய்கின்றனர். எருசலேம் ஆலயம் தலைமைக்குருவால் நிர்வகிக்கப்பட்ட காவலர்கள்கீழ் இருந்தது. அவ்வளவு எளிதாக இயேசு உள்ளே சென்று புரட்சி செய்திருக்க வாய்ப்பில்லை என்பது ஆய்வாளர்களின் கருத்து. சிலர், இந்நிகழ்வை ஓர் இறையியல் நிகழ்வு என்று கருதுகின்றனர். அதாவது, மெசியாவின் வருகையின்போது ஆலயம் தூய்மையாக்கப்படும் என்பது எபிரேய நம்பிக்கை. அந்த நம்பிக்கையின் நிறைவாக இயேசு ஆலயத்தைத் தூய்மை செய்கிறார் என்றும், இயேசுவே மெசியா என்றும் முன்மொழிகின்றனர் நற்செய்தியாளர்கள்.
இன்னொரு பக்கம், இயேசுவின் காலத்தில் ஆலயம் அதிகாரத்தின், அடக்குமுறையின், நிர்வாகப் பிறழ்வுகளின், பேராசையின் உறைவிடமாக இருந்தது. ஆலயத்தின் பெயரால் வெகுசன மக்கள்மீது வரி சுமத்தப்பட்டது. தலைமைக்குருவே ஆலயத்தின் தலைவராக இருந்ததால், அரசியல்தளத்திலும் அவர் தாக்கத்தை ஏற்படுத்தினார். அதே வேளையில், ஆண்டவராகிய கடவுள் வாழும் தளம் என்றும், அவருடைய பெயர் அங்கே குடிகொள்கிறது என்றும் இஸ்ரயேல் மக்கள் நம்பியதால் ஆலயம் அவர்களுடைய உணர்வுகளில் பதிந்த ஒன்றாகவும் இருந்தது.
ஆகையால்தான், இயேசு ஆலயத்தைத் தொட்டவுடன் அவருடைய எதிரிகள் அவரை ஒழித்துவிட நினைக்கிறார்கள்.
இன்றைய நற்செய்தி வாசகம் இரு பகுதிகளாக அமைந்துள்ளது. முதல் பகுதியில், இயேசு ஆலயத்திற்குள் நுழைந்து அங்கே விற்பனை செய்துகொண்டிருந்தோரை விரட்டியடிக்கின்றார். இரண்டாம் பகுதியில், அவருடைய எதிரிகள் அவரை ஒழித்துவிட நினைத்தாலும் செய்வதறியாது நிற்கின்றனர். ஏனெனில், மக்கள் அனைவரும் இயேசுவைப் பற்றிக்கொண்டிருக்கின்றனர்.
இந்த நிகழ்வு நமக்குச் சொல்லும் பாடம் என்ன?
(அ) நோக்கப் பிறழ்வு
ஆலயம் இறைவேண்டலின் வீடாக இருக்க வேண்டிய நோக்கத்தைக் கொண்டிருந்தது. ஆனால், அந்த நோக்கம் பிறழ்வுபட்டு, கள்வர் குகையாக, இருள் நிறைந்ததாக, பேராசையும் அநீதியும் நிறைந்த இடமாக மாறுகிறது. நாம் அனைவரும் ஆண்டவராகிய கடவுள் குடிகொள்ளும் கோவில் என்கிறார் பவுல். ஆலயம் என்னும் நம் உடலின் நோக்கம் இறைவன் குடிகொள்வது என்றால், அந்த நோக்கம் பிறழ்வுபடாமல் காக்கப்படுகிறதா?
(ஆ) போதனையும் போதகரும்
இயேசு ஒவ்வொரு நாளும் கோவிலில் கற்பித்து வந்தார் என்று பதிவு செய்கின்றார் லூக்கா. இயேசுவின் போதனையைக் கேட்கின்ற மக்கள் அவரைப் பற்றிக்கொண்டிருக்கின்றனர், அதாவது, அவரைப் பிடித்துத் தொங்கிக்கொண்டிருக்கின்றனர். ஏனெனில், இயேசுவின் போதனைக்கும் அவருடைய வாழ்வுக்கும் இடையே எந்தவொரு வேறுபாடும் இல்லை. இன்று நாம் இறைவார்த்தையைப் போதிக்கிறோம், அல்லது கேட்கிறோம். நம் வாழ்வில் முரண்கள் இருப்பது ஏன்?
(இ) அறச்சினம்
இரக்கம், மன்னிப்பு, பரிவு என்று இயேசு ஒரு பக்கம் போதித்தாலும், தவறுபவர்களை அவர் பொறுத்துக்கொண்டாலும், தவறுகளை அவர் பொறுத்துக்கொள்வதில்லை. அவருடைய அறச்சினம் நமக்கு வியப்பளிக்கிறது. தவறுகளோடு சமரசம் செய்துகொண்டு அவற்றைப் பொறுத்துக்கொள்வதற்குப் பதிலாக, தவறுகளைத் திருத்த முயற்சி செய்கின்றார். நான் என்னில் காணும் தவறுகளோடு சமரசம் செய்துகொள்கிறேனா? அல்லது திருத்த முயற்சி செய்கிறேனா?
“ கோவிலுக்குள் இயேசு” எருசலேம் நகரின் மையம்,தலைமை,உச்சம் என்று கருதப்பட்ட ஒரு ஆலயம் இயேசு வந்து சுத்தம் செய்யக் காத்திருந்தது ஆச்சரியமாக இருப்பினும் நம்பிக்கையின் நிறைவாக இயேசு ( மெசியா) ஆலயத்தை சுத்தம் செய்கிறார் என்பது ஒத்துக்கொள்வதாகவே உள்ளது.தகாத செயல்களைச் செய்பவர்களை ஆலயத்திலிருந்து விரட்ட நினைக்கும் இயேசு ஒரு பக்கம்; இயேசுவை ஒழித்துவிட நினைத்தும், மக்கள் அவர் பக்கம் நின்றதால் அதை செயல்படுத்த முடியாத எதிரிகள் மறுபக்கம். இன்றையப் பதிவு நமக்கு அறிவுறுத்தும் பாடம்….
ReplyDeleteநம் உடல் இறைவன் குடிகொள்ளும் ஆலயம் எனில் அந்த நோக்கம் பிறழ்வு படாமல் காக்கப்படவும்…..இயேசுவின் போதனையும் வாழ்க்கையும் இணைந்து இருந்தது போல் நாம் வாழும் வாழ்க்கையும் கேட்கும் இறைவார்த்தையோடு இணைந்து செல்லவும்…
தவறுபவர்களைப் பொறுத்துக்கொண்ட இயேசு தவறுகளை வெறுக்கிறார் எனும் உணர்வு, நாமும் நம் தவறுகளோடு சமரசம் செய்துகொள்ளாமல் தவறுகளைப் புறந்தள்ளி வாழவும்…..இன்றையப் பதிவு நமக்கு அழைப்பு விடுக்கிறது.
அழகான….அர்த்தமுள்ள ஒரு வாழ்க்கை வாழ நமக்கு அழைப்பு விடுக்கும் ஒரு பதிவிற்காகத் தந்தைக்கு நன்றியும்! வாழ்த்துக்களும்!!!
ஆமென!
ReplyDelete