இன்று காலை திருப்பலியில் முதல் வாசகம் ஒருவர் வாசித்துக்கொண்டிருந்தபோது, என்னில் ஓர் எண்ணம் உதித்தது. 'தானியேலை சிங்கத்தின் வாயிலிருந்து ஆண்டவர் விடுவித்தார்' என்று நம் விவிலியத்தில் உள்ளது. 'பாபிலோனியர்கள் தங்களுடைய நூலில் இதே நிகழ்வை எப்படி பதிவு செய்திருப்பார்கள்?' தங்கள் கடவுள் தோற்றுவிட்டார் என்று அவர்கள் பதிவு செய்ய வாய்ப்பில்லை. 'யூதன் ஒருவன் அரச கட்டளைக்குப் பணிய மறுத்து, தன் கடவுளை வழிபட்டுக் கொண்டிருந்தான். இதை அரசன் கண்டு அவனைச் சிங்கத்தின் குகையில் தள்ளினான். குகையின் வாயிலை நெருங்குமுன் அது அவனை அடித்துக் கொன்று போட்டது' - இப்படித்தான் அவர்கள் எழுதியிருப்பார்கள். எந்தவொரு இலக்கியமும் தன் இலக்கியத்தின் பாடுபொருளை, கடவுளை உயர்த்தியேதான் எழுதும்.
இன்றைய முதல் வாசகத்தில், தானியேல் நான்கு விலங்குகளின் காட்சிகளைக் காண்கின்றார். இறுதியாக விலங்கு கொல்லப்படுகிறது. தொன்மை வாய்ந்தவர் (கடவுள்) மானிட மகனுக்கு (இஸ்ரயேல்) ஆட்சி உரிமையை வழங்குகின்றார்.
வெகுசன மக்கள் தங்கள் அடிமைத்தனமெல்லாம் மறைந்து ஒருநாள் தாங்கள் அரியணையில் அமர்வோம் என்ற அவர்களுடைய ஆசை நிறைவேறுவதாக (விஷ் ஃபுல்ஃபில்மென்ட்) (wish fulfillment) நினைப்பதாக நாம் இந்தக் காட்சிகளை எடுத்துக்கொள்ளலாம். ஏனெனில், தானியேல் கண்ட காட்சி அவருடைய காலத்தில் நிறைவேறவில்லை. எதிர்காலத்தில் நடக்கவிருப்பதற்கான முன்சுவையாகவே இவை இருக்கின்றன.
இரு விடயங்கள் இங்கே கவனிக்கத்தக்கவை:
வெகுசன ஊடகங்கள் தங்கள் பாடுபொருளை முன்னிறுத்தியே பதிவுகளை இடும்.
அடிமைத்தனத்தில் இருப்பவர்கள் தாங்கள் விடுதலை பெற்றுக்கொள்வதாகக் காட்சிகளை பதிவிடுவர். இவை சில நேரங்களில் 'தானாக நிறைவேறும் இறைவாக்குகளாக' ('ஸெல்ஃப் ஃபுல்ஃபில்லிங் ப்ராஃபஸி) (Self-fulfilling prophecy) மாறிவிடுவதும் உண்டு.
பல அருங்கொடை இல்லங்களிலும், ஆவிக்குரிய சபைகளிலும் தானியேல் நூலின் பகுதிகளும், திருவெளிப்பாட்டு நூல் பகுதிகளும் எடுத்துக்கொள்ளப்பட்டு விளக்கங்கள் தரப்படுகின்றன. அவர்கள் அளிக்கும் விளக்கங்கள் நேரடிப் பொருளாக இருக்கின்றன. ஆனால், நேரடிப் பொருளாக நாம் இவற்றைப் புரிந்துகொள்ளும்போது பாடங்களின் சூழல்களை அப்படியே தள்ளிவிடுகிறோம். அது தவறு. ஏனெனில், ஒவ்வொரு பாடமும் அதனதன் சூழலில்தான் புரிந்துகொள்ளப்பட வேண்டும்.
தானியேலைச் சிங்கத்தின் வாயிலிருந்து கடவுள் காப்பாற்றுவார் என்பது நமக்கு எதிர்நோக்கைத் தருமே தவிர, உத்திரவாதம் தராது. சிங்கங்களின் வாயில் கடிபட்டு இறக்கின்ற தானியேல்கள் இன்றும் நம் நடுவில் இருக்கின்றனர். அன்று அனுப்பப்பட்ட வானதூதர்கள் எங்கே போயினர்?
கடலிலிருந்து எழுந்து வந்து மனிதர்களை அச்சுறுத்திய விலங்குகள் போல, இன்றும் நம்மைச் சுற்றி அச்சுறுத்தல்கள் நடந்துகொண்டே இருக்கின்றன. அன்று வந்த தொன்மை வாய்ந்தவர் இன்று எங்கே போனார்?
நிற்க.
இன்றைய நற்செய்தி வாசகத்தில், நிகழ்வுகளைத் தெரிந்து தெளிதல் பற்றி இயேசு தன் சீடர்களுக்கு அறிவுறுத்துகின்றார்.
அன்றைய மக்கள் இயற்கையின் இயக்கத்தை வைத்துப் பல விடயங்களைக் கணிப்பார்கள். இன்று நாம் செயற்கைக்கோள்கள் வைத்திருந்தும் நம்மால் கணிக்க இயலவில்லை. இயற்கை ஒரு கணிதச் சமன்பாடு போல இயங்குகிறது என்பது கிரேக்க மெய்யிலாளர் பித்தாகரஸின் வாதம். இப்படி இருந்தால் அப்படி நடக்கும் என்று நாம் கணித்துவிட முடியும்.
இறுதிக்கால நிகழ்வுகளும் அப்படிப்பட்டவையே என்கிறார் இயேசு. அதாவது, மண்ணிலும் விண்ணிலும் நாம் காணும் அடையாளங்களைக் கொண்டு மானிட மகனின் வருகை அண்மையில் உள்ளது என்பதை நாம் கணித்துவிட முடியும்.
இந்தப் போதனை நமக்குச் சொல்வது என்ன?
(அ) தேர்ந்து தெளிதல்
ஒரு விடயத்தின் பல கூறுகளைச் சீர்தூக்கிப் பார்த்து, அல்லவை நீக்கி, நல்லவை தழுவலே தேர்ந்து தெளிதல். 'இது அல்ல! இது அல்ல!' என்று நாம் ஒவ்வொரு அடுக்காக நீக்கும்போதுதான் இயற்கையின் மறைபொருளை உணர முடிகிறது. தேர்ந்து தெளிதல் வளர நாம் நம் உள்ளுணர்வுடன் தொடர்பில் இருக்க வேண்டும்.
(ஆ) காரணம் - காரியம்
இயற்கை நிகழ்வுகள் அனைத்தும் காரணம் - காரியம் என்றே நகர்கின்றன. 'காரணம் - காரியத்திற்கு' அப்பாற்பட்டவற்றை நாம் வல்ல செயல்கள் என்று சொல்கின்றோம்.
(இ) என் வார்த்தைகள் ஒழியா!
தன் வார்த்தைகள் அனைத்தும் நிறைவுறும் என இயேசு மொழிகின்றார். அதாவது, தன் வார்த்தை பொய்யாகாமல் நிறைவுபெறும் என்கிறார். நம்மைத் தயார்நிலைக்கும் விழிப்புநிலைக்கும் அழைக்கிறார் இயேசு.
கொஞ்சம் எதிர்மறை உணர்வு எட்டிப்பார்க்கும் ஒரு பதிவு. பல விஷயங்கள் புரிந்தும்,புரியாமலும் இருக்கின்றன…..”சிங்கத்தின் வாயினின்று கடவுள் தானியேலைக் காப்பாற்றுவார்” எனும் எண்ணம் தவிர.அதையும் கேள்விக்குறியாக்குகிறார் தந்தை.இன்றைய சிங்கங்களின் வாயில் கடிபட்டு இறக்கும் தானியல்களைக் காப்பாற்றுவது யார்? என்பது போல.
ReplyDeleteஇயற்கையின் இயக்கங்களை வைத்துப்பல விடயங்களைக் கணித்த அந்தக்கால மக்கள் போன்று, மண்ணிலும்,விண்ணிலும் நடக்கும் அடையாளங்களை வைத்துப் பல விஷயங்களைக் கணிக்கலாம் என்ற புரிதல் உள்ளது.
இயேசுவின் போதனையாக அல்லவை நீக்கி நல்லவை நல்லவை தழுவுதல் மூலம் இயற்கையின் மறைபொருளைத் தேர்ந்து தெளிந்து அறிந்து கொள்ளவும்….
காரண- காரியத்திற்கு அப்பாற்பட்ட வல்ல செயல்களைப் புரிந்து கொள்ளவும்…..
தன் வார்த்தைகள் அனைத்தும் பொய்யாகாமல் நிறைவுபெறும் என்பதால் நாம் விழிப்பு நிலையில் தயாராக இருக்கவும்…..
மேற்கூறிய விஷயங்கள் நம் புரிதலுக்குக் கொஞ்சம் அப்பாற்பட்டதாக இருப்பினும் புரிதலின் தேவன் நாம் காண்பதையும், கேட்பதையும் நமக்குப் புரிய வைப்பார் என நம்புவோம்!
இன்றையப்பதிவின் விஷயங்களைக் கூட்டிக் கழித்துப் பார்த்தால் இவை அனைத்தும் இயேசுவின் “ என் வாரத்தைகள் ஒழியா” எனும் உண்மைக்கு வல்லமை சேர்க்கின்றன.இதை தனக்கே உரித்தான அழுத்தமான வார்த்தைகளால் புரிய வைக்க முயற்சித்திருக்கும் தந்தைக்கு என் நெஞ்சம் நிறை நன்றிகள்!!!