சக்கேயு
'நீ தயாராக இருக்கும்போது நட்சத்திரம் தோன்றும்!' என்பது ஜென் தத்துவத்தின் மொழி. சக்கேயு தயாராக இருக்கும்போது இயேசு என்னும் நட்சத்திரம் தோன்றுகிறார். சக்கேயு நிகழ்வு லூக்கா நற்செய்தியில் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் ஓர் இனம் புரியாத சோகமும் வேகமும் இழைந்தோடுவதை நம்மால் காண முடிகிறது.
(அ) சக்கேயுவின் சோகம்
சக்கேயு மூன்று நிலைகளில் சோகமாக இருந்திருக்க வேண்டும். ஒன்று, வாழ்வியல் வெற்றிடம். சக்கேயுவிடம் பணம், அதிகாரம், ஆள்பலம் நிறைய இருந்தது. ஆனால், அவை எதுவும் அவருக்கு நிறைவு தரவில்லை. அவர் யூதர்களிடமிருந்து பணத்தை எடுத்து உரோமையர்களிடம் கொடுத்ததால் அவருடைய இனத்தாரே அவரை வெறுத்து அவரிடமிருந்து தள்ளி நின்றிருப்பர். ஆக, உறவுநிலையும் அவருக்கு வெற்றிடமாகத்தான் இருந்திருக்கும். இந்த வெற்றிடத்தை எப்படி நிரப்புவது என்று அவர் நினைத்துக்கொண்டிருந்தபோதுதான் இயேசுவைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பார். தன் வெற்றிடத்தை இயேசு நிரப்ப மாட்டாரா என நினைத்து அவரைக் காண ஏக்கமாயிருக்கின்றார்.
இரண்டு, சக்கேயுவின் குறைபாடுகள். 'சக்கேயு குட்டையாய் இருந்தார்' எனப் பதிவு செய்கின்றார் லூக்கா. இதை அவருடைய ஒட்டுமொத்தக் குறைபாடுகளின் உருவகம் என எடுத்துக்கொள்ளலாம். உடலளவில் குட்டையாக இருக்கின்றார். தன் கோபம், எரிச்சல், அநீதியான எண்ணம் போன்றவற்றால் உள்ளத்தாலும் குட்டையாக இருந்திருப்பார்.
மூன்று, மக்களின் கேலிப் பேச்சுகள். அவருடைய பணியும் அவருக்குக் கடினமாகவே இருந்திருக்க வேண்டும். யாரும் தாங்கள் உழைத்த பொருளை வரியாகத் தானம் செய்வதில்லை. வரி செலுத்துவதிலிருந்து தப்பிக்கவே மக்கள் முயற்சி செய்வர். ஆக, அவர்களின் பொய்யைக் கண்டுபிடித்து, அவர்களைத் துன்புறுத்தி, அச்சுறுத்தி வரி வசூலிக்க அவர் நிறைய முயற்சிகள் செய்ய வேண்டும். இவரைப் பாவி என மக்கள் முத்திரை குத்தினர். ஆலயத்திலும், தொழுகைக்கூடங்களிலும் இவருக்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கும். மேலும், உரோமை அரசும் நிறைய அச்சுறுத்தல்களை அவருக்குக் கொடுத்திருக்கும்.
இவ்வாறாக, உள்ளத்தில் வெற்றிடம், உடல் மற்றும் உறவுநிலைகளில் குறைபாடு, மக்களின் கேலிப் பேச்சுகள், கடவுளிடமிருந்து அந்நியப்பட்ட மனநிலை என சோகத்தில் மூழ்கியிருந்த சக்கேயு, தான் இதிலிருந்து விடுபட வேண்டும் என்ற முடிவெடுக்கின்றார். முடிவெடுக்கின்ற அந்த நொடியில் மாற்றம் நிகழ்கிறது.
(ஆ) சக்கேயுவின் வேகம்
முடிவெடுத்தவுடன் விரைவாகச் செயல்படுகின்றார். இயேசுவைப் பார்த்தாக வேண்டிய கட்டாயம் வாழ்வா – சாவா என்பது போல அவரை விரட்டுகிறது. பார்க்க விரும்பும் ஆவல். ஆனால், அடுத்தடுத்த தடைகள். கூட்டம் பெரிய தடையாக இருக்கிறது. உடலளவிலும் அது தடையாக மாறுகிறது. உளவியல் அளவிலும் தடையாக மாறுகிறது. ஆக, தான் தனியே மரத்தில் ஏற முயற்சிக்கின்றார். வயது வந்த ஒருவர் மரத்தில் ஏறுவதை நம் சமூகம் கேலியாகவே பார்க்கும். ஆனால், அவர் அதைப் பொருட்படுத்தவில்லை. தன் உள்ளத்தின் சோகம் இந்தக் கேலியைவிடப் பெரியதாக இருந்ததால், அது அகல்வதற்கு எப்படியாவது ஒரு வழி பிறக்காதா என விரைவாக ஏறுகின்றார்.
இயேசு அந்த இடத்திற்கு வந்தவுடன் அண்ணாந்து பார்க்கிறார். குனிந்து பார்ப்பதுதான் கடவுளின் இயல்பு. ஆனால், இங்கே கடவுள் அண்ணாந்து பார்க்கின்றார். ஒரு நொடி, இங்கே சக்கேயு கடவுளாக மாறுகின்றார். கீழே இயேசு நிற்பதைக் காண்கின்றார். கடவுளுக்கு மேலே நிற்பது நல்லதன்று என்று இறங்கி வருகிறார். 'உமது வீட்டில் நான் தங்க வேண்டும்' என்று இயேசு சொன்னபோது சக்கேயுவின் மனம் எவ்வளவு மகிழ்ந்திருக்கும்!
அந்த மகிழ்ச்சியில் அவர் மீண்டும் எழுந்து நிற்கின்றார். தன் உடைமையில் பாதியை ஏழைகளுக்குக் கொடுக்கவும், எதையாவது கவர்ந்திருந்தால் நான்கு மடங்கு திருப்பிக் கொடுக்கவும் உறுதி ஏற்கின்றார். தன் வாழ்வின் தேடல் நிறைவுபெற்றதாக உணர்கிறார். இயேசுவைக் கண்டவுடன் தன் வாழ்வு முடிந்துவிட்டதாகவும், இனி தனக்கு எதுவும் தேவையில்லை என்றும் நினைக்கிறார் சக்கேயு.
'இன்று இந்த வீட்டிற்கு மீட்பு உண்டாயிற்று' என்கிறார் இயேசு.
ஆக, மீட்பு என்பது மறுவுலகில், நாம் இறந்த பின்னர் நடக்கும் நிகழ்வு அல்ல. மாறாக, இன்றே இப்பொழுதே நாம் அதை அனுபவிக்க முடியும்.
'இழந்து போனதைத் தேடி மீட்க மானிட மகன் வந்திருக்கிறார்' என்று இயேசு தன் வருகையின் நோக்கத்தையும் முன்வைக்கின்றார்.
மற்றவர்களைப் பொருத்தவரையில் சக்கேயு தன்னிடமுள்ள அனைத்தையும் இழந்தார். ஆனால், சக்கேயுவைப் பொருத்தவரையில் அவர் தன் இழத்தலில்தான் அனைத்தையும் பெற்றார்.
நம் வாழ்வின் சோகமும் வேகமும் இறைவனை எதிர்கொள்ளும் நேரங்கள்.
சோகம் நம் உள்ளத்தை நிரப்பினால் வேகம் குறைக்க வேண்டாம். வேகம் கூட்டுதல் சோகத்தைக் களைக்கும்.
“ சக்கேயு” எனும் பெயரைக்கேட்டாலே அவரின் குட்டையான தேகமும்,அவர் இயேசுவைப் பார்க்க மரத்தின் மீது ஏறியதும் மட்டுமே நினைவிலிருக்கும் நமக்கு அவர் பற்றிய…அவரின் மனநிலை பற்றிய தந்தையின் விளக்கம் கொஞ்சம் ஆச்சரியத்தைத் தருகிறது. “ வெற்றிடம்”…இது சாவை விடக்கொடியது. ஒரு வெற்றிடமே ஒருவருக்குப் பெரிய தண்டனை என்று கருதப்படுகையில் இவருக்குத் தன் உடலளவில்…உள்ளத்தளவில்…உறவளவில்… எல்லாமே வெற்றிடம் என்பது அதிகமே! ஒருவர் மனத்தளவில் மாற வேண்டுமென முடிவெடுக்கையில் இறைவனும் கூட ஒத்துழைக்கிறார் என்பதற்கு சக்கேயுவே சாட்சி.இயேசுவின் பார்வை மட்டுமே தன் வெற்றிடத்தைப் போக்க முடியும் என்று முடிவெடுத்தவராய், அவரின் பார்வை தன்மீது பட, மரத்தின் மீது ஏறுகிறார்.” ஒரு நொடி இங்கே சக்கேயு கடவுளாக மாறுகிறார்” எனும் தந்தையின் வார்த்தைகள் ஒத்துக்கொள்ள வேண்டியவையே! “ உன் வீட்டில் நான் தங்க வேண்டும்” எனும் இயேசுவின் வார்த்தைகள் அவரின் அனைத்து வெற்றிடத்தையும் மகழ்ச்சியால் நிரப்புகின்றன.தான் இழந்த அனைத்தையும் இயேசுவின் பிரசன்னம் திருப்பித்தந்து விட்டதாக உணர்கிறார்.
ReplyDeleteநம் ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் தனிமை,வெறுமை,ஏழ்மை, முதுமை, இயலாமை,வியாதி….இப்படி எத்தனையோ வெற்றிடங்கள். இவற்றைக் காரணம் காட்டி நம் மனத்தை சோகம் அப்பச்செய்வதை விட, அதைத் திறந்து காட்டுதலே நல்லது….அங்கு வெற்றிடம் நீங்கி இயேசுவின் பிரசன்னம் குடிகொள்ள.
எப்பவுமே நாம் நெகட்டிவாகப் பார்த்துப் பழகிய சக்கேயு இன்று நமக்குப் பல செல்வங்களை( விஷயங்களை) அள்ளித்தந்துள்ளார் தந்தையின் வார்த்தைகளில்.
குட்டையாக இருப்பதும் கூட நல்ல விஷயமே! ஒரே ஜம்பில் நாம் மரத்திலேறி மற்றவர்களை நம்மை அண்ணாந்து பார்க்கச் செய்ய! வெற்றிடம் கூட நல்ல விஷயமே…அது வெளியிலிருந்து நல்ல விஷயங்களை உள்ளே அனுமதிக்கும் பட்சத்தில்!
சக்கேயுவை “இப்படியும் பார்க்கலாம்” என்று ஒரு செய்தியைத் தந்த தந்தைக்கு வாழ்த்துக்கள்!!!