Wednesday, November 10, 2021

திரும்பி வருதல்

இன்றைய (10 நவம்பர் 2021) நற்செய்தி (லூக் 17:11-19)

திரும்பி வருதல்

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு பத்து தொழுநோயாளர்களைக் குணமாக்குகின்றார். அவர்களில் ஒருவர் மட்டும் - சமாரியர் மட்டும் - இயேசுவுக்கு நன்றி சொல்வதற்குத் திரும்புகின்றார்.

இயேசுவின் பயணம் எருசலேம் நோக்கியதாக இருக்கிறது. கலிலேய, சமாரிய எல்லைகளை அவர் கடக்கின்றார். அவரை எதிர்கொண்டு வருகின்ற பத்து தொழுநோயாளர்கள், 'ஐயா! இயேசுவே, எங்களுக்கு இரங்கும்!' என்று குரல் எழுப்புகின்றனர். 'நீங்கள் போய் உங்களைக் குருக்களிடம் காட்டுங்கள்!' என்று சொல்லி அனுப்புகிறார் இயேசு. வழியில் நலம் பெறுகின்றனர். நலம் பெற்ற சமாரியர் மட்டும் கடவுளைப் புகழ்ந்து கொண்டே திரும்பி வருகின்றார்.

சமாரியர் மட்டும் திரும்பி வரக் காரணம் என்ன? தொழுநோய் பீடித்திருந்த வரை, 'தொழுநோயாளர்' என அவரை அறிந்து, ஏற்றுக்கொண்ட மற்ற யூத தொழுநோயாளர்கள், நோய் நீங்கியவுடன், 'இவன் சமாரியன்!' அவரை நிராகரித்தார்களா?

அல்லது

எருசலேமில் உள்ள யூத ஆலயத்திற்கும் அங்குள்ள யூதக் குருக்களுக்கும் நமக்கும் என்ன தொடர்பு? என்று அந்த சமாரியர் திரும்பினாரா?

அல்லது

கடவுளே இங்கு இருக்க, குரு எதற்கு என்று கேட்டுக் கொண்டு அவர் இயேசுவிடம் திரும்பினாரா?

ஆனால், ஒன்று மட்டும் நிச்சயம். அவர் திரும்புகின்றார்.

திரும்புதல் நம் வாழ்வில் மிக முக்கியமானது. திரும்புதலில் இரு வகை உண்டு: ஒன்று, இளைய மகன் வகை. தன் தந்தையிடமிருந்து சொத்துக்களைப் பிரித்து வாங்கிக்கொண்டு புறப்படுகின்ற இளைய மகன், அறிவு தெளிந்தவராய் தன் தந்தையின் இல்லம் திரும்புகிறார். இரண்டு, இயேசு வகை. தன் நாளைப் பணியிலும் திருத்தூதர்களோடும் செலவழிக்கின்ற இயேசு, இரவில் தனிமையான ஓர் இடத்தில் தன் தந்தையிடம் திரும்புகின்றார். முதல் வகை திரும்புதல் ஒரே முறை நடக்கிறது. இரண்டாம் வகை திரும்புதல் அடிக்கடி நடக்கிறது. முதல் வகை திரும்புதல் மனமாற்றத்தின் அடையாளமாக இருக்கிறது. இரண்டாம் வகை திரும்புதல் நன்றி மற்றும் புகழ்ச்சியின் அடையாளமாக இருக்கிறது.

சமாரியத் தொழுநோயாளர் இரண்டாம் வகையில் திரும்புகின்றார்.

மார்ட்டின் ஹைடெக்கர் என்ற மெய்யியல் அறிஞர், 'வீடு திரும்புதல்' ('ஹோம்கமிங்') பற்றி அடிக்கடிப் பேசுகின்றார். 'வீடு திரும்புதல்' என்பதை, 'நம் வேர்களுக்குத் திரும்புதல்,' 'நம் வாழ்க்கைப் பயணத்தைத் திரும்பிப் பார்த்தல்,' 'நம் தொடக்கத்தை மறுஆய்வு செய்து பார்த்தல்' என்று முன்மொழிகின்றார். இன்றைய நற்செய்தியில் நாம் காணும் சமாரியத் தொழுநோயாளர் இந்த மூன்று நிலையிலும் திரும்புகின்றார். தன் வேர் என இயேசுவை ஏற்றுக்கொள்கின்றார். தான் கடந்து வந்த பயணத்தையும் அந்தப் பயணத்தில் தான் பெற்ற உடல்நலத்தையும் எண்ணிப்பார்க்கின்றார். 'இயேசு' என்று அறிக்கையிட்ட ஒருவர் முன் காலில் முகங்குப்புற விழுவதன் வழியாக அவரைக் கடவுள் என ஏற்றுக்கொள்கின்றார்.

திரும்பி வருதல் எப்படி நடக்கிறது?

(அ) நிற்றல்

நிற்கின்ற ஒருவர்தான் திரும்ப முடியும். ஓடிக்கொண்ட இருக்கின்ற ஒருவர் திரும்பினார் கீழே விழுந்துவிடுவார். மற்றவர்கள் நடந்துகொண்டே இருக்க, சமாரியர் மட்டும் நிற்கின்றார். அமைதி கொண்ட உள்ளமே நிற்கும். பதைபதைப்பு கொண்ட உள்ளம் ஓடிக்கொண்டே இருக்கும்.

(ஆ) தன்நிலை அறிதல்

தொழுநோய் நீங்கியவர்கள் குருக்களிடம் சான்று பெற்றவுடன் குழுமத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்பது மோசேயின் சட்டம். தான் குழுமத்திற்குள் அனுமதிக்கப்படுமுன் கடவுளுடைய குழுமத்தில் தான் அனுமதிக்கப்பட வேண்டும் என்பதை உணர்கிறார் சமாரியர். தன் நிலை மேம்பட்டதற்கான காரணம் இயேசு என்பதை உணர்கின்றார்.

(இ) எதிர்திசையில் பயணிக்க வேண்டும்

இது மிகவும் முக்கியம். மற்ற தொழுநோயாளர்கள் இவரின் திரும்புதலைத் தடுத்திருப்பார்கள். 'சொல் பேச்சு கேட்க மாட்டாயா! அவர் நம்மைக் குருக்களிடம்தானே காட்டச் சொன்னார்! வா! போவோம்!' என்று அவரை இழுத்திருப்பார்கள். ஆனால், சமாரியர் துணிவுடன் தன் பாதையின் திசையை மாற்றுகின்றார். எதிர்திசையில் பயணிப்பது அவருக்கு எளிதாக இருந்திருக்காது. ஏனெனில், இயேசு மீண்டும் தன் பயணத்தைத் தொடங்கிச் சென்றுகொண்டிருப்பார். இருந்தாலும், அவரைக் கண்டுவிடலாம் என்ற நம்பிக்கையில் புறப்படுகின்றார்.

அவருடைய திரும்பி வருதலை இயேசு பாராட்டுகின்றார்.

'உமது நம்பிக்கை நலம் தந்தது. எழுந்து செல்லும்' என அனுப்புகின்றார்.

மற்றவர்கள் உடலில் மட்டும் நலம் பெற, இவர் உண்மைக் கடவுளை அறிந்துகொண்டதால் உள்ளத்திலும் நலம் பெறுகிறார்.

'கொஞ்சம் எக்ஸ்ட்ரா மைல் நடக்க – திரும்பி நடக்க' நம்மை அழைக்கிறார் சமாரியர்.


1 comment:

  1. “10 தொழுநோயளர்களின் உவமை” என நாம் கேட்டுப் பழக்கப்பட்ட ஒன்று.இயேசுவால் சுகமடைந்த 9பேர் அதை ஒரு விஷயமாகவே கருத மறுக்க, பத்தாமவன்…சமாரியன் மட்டும் சுகம் கொடுத்தவரிடம் திரும்பி வருகிறான் நன்றி சொல்ல. இதைத் “ திரும்புதல்” என்கிறார் தந்தை. இதற்கான இலக்கணங்களாக “ஒருவன் திரும்பிவர வேண்டுமெனில் அவன் மனம் மாற வேண்டும்; கடந்து வந்த பயணத்தைத் திரும்பிப்பார்க்க வேண்டும்; தன் நிலையறிந்து…பதைபதைப்பு நீங்கி…..எதிர் திசையில் பயணிக்க வேண்டும்” இப்படிப்பட்ட ஒருவன் செவிகளில் மட்டுமே “ உமது நம்பிக்கை நலம் தந்தது, எழுந்து செல்லும்” எனும் இயேசுவின் கிசுகிசுத்த வார்த்தைகள் கேட்கும்.
    இத்தனையும் நடக்க வேண்டுமெனில் ஒருவன் போனதிசையில் திரும்பி வேண்டும். பெற்ற நன்மைக்கு நன்றி சொல்ல பெரிய மனம் வேண்டும்.அதை அழகாகக் கற்றுத்தருகிறார் இன்றைய சமாரியர். தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete