கண்ணீர்விடும் கடவுள்
இயேசு அழுததாக அல்லது கண்ணீர் வடித்ததாக இரண்டாம் ஏற்பாடு மூன்று நிகழ்வுகளைப் பதிவு செய்கின்றது. முதலில், பெத்தானியாவில் லாசரின் கல்லறைக்கு அருகில் வருகின்ற இயேசு அழுகின்றார் (காண். யோவா 11:35). தன் நண்பன் லாசருக்காக மட்டும் அவர் இங்கே அழவில்லை. மாறாக, மனுக்குலம் இறப்பு என்ற ஒன்றை எதிர்கொள்ள வேண்டிய நிர்பந்தத்தை எண்ணி, இறப்பு ஒரு குடும்பத்திலும் ஊரிலும் ஏற்படுத்தும் இழப்பை எண்ணி அழுகின்றார். இரண்டாவதாக, கெத்சமேனித் தோட்டத்தில் இறுதி இராவுணவுக்குப் பின்னர், தான் கைது செய்யப்படுவதற்கு முன்னர், அவர் கண்ணீர் விட்டு இறைவேண்டல் செய்ததாகவும், அந்த இறைவேண்டலைக் கடவுள் கேட்டார் என்றும் எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமடலின் ஆசிரியர் பதிவு செய்கின்றார் (காண். எபி 5:7-9).
இந்த இரு நிகழ்வுகளுக்கும் இடையே நடக்கும் நிகழ்வுதான் இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு கண்ணீர் வடிக்கும் நிகழ்வு. 'இயேசு எருசலேம் நகரை நெருங்கி வந்ததும் அதைப் பார்த்து அழுதார்' என்று பதிவு செய்கின்றார் லூக்கா (19:41). மேலும், எருசலேம் நகர் விரைவில் இடிபடும் என்றும் முன்னுரைக்கின்றார். இதை இயேசுவே இறைவாக்காக உரைத்தார் என்றும், அல்லது லூக்கா நற்செய்தியாளர் தன் நற்செய்தி எழுதப்படும்போது நடக்கின்ற எருசலேம் அழிவைக் கண்ணுற்று, அதை இயேசுவே முன்னுரைத்தார் என்றும் எடுத்துக்கொள்ளலாம்.
எருசலேம் இரு தவறுகளைச் சுட்டிக்காட்டுகின்றார் இயேசு: ஒன்று, 'அமைதிக்குரிய வழியை எருசலேம் அறியவில்லை.' 'அமைதிக்குரிய வழி' என்பது இயேசுவையே குறிக்கிறது. இயேசுவின் பணி கலிலேயாவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட அளவிற்கு யூதேயாவிலும் அதன் தலைநகரான எருசலேமிலும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும் பரவாயில்லை. அவரை அழிப்பதற்கான வழியை எருசலேம் தேடிக்கொண்டிருந்தது. இரண்டு, 'கடவுள் உன்னைத் தேடி வந்த காலத்தை நீ அறிந்துகொள்ளவில்லை.' கடவுள் தேடி வந்த அருளின் காலம் இயேசு கிறிஸ்துவில்தான் வெளிப்படுகிறது. ஏனெனில், 'ஆண்டவர் அருள்தரும் ஆண்டினை அறிவிக்கவும்' (காண். லூக் 4) என்று இயேசு நாசரேத்தூர் தொழுகைக்கூடத்தில் போதிக்கின்றார்.
இயேசுவின் இந்த அழுகை நமக்கு உணர்த்துவது என்ன?
(அ) இயலாமை
இயேசுவின் கண்ணீர் அவருடைய இயலாமை மற்றும் கையறுநிலையின் வெளிப்பாடாக இருக்கிறது. இறந்த ஒருவருக்கு அருகில் அமர்ந்து நாம் அழுகிறோம். எதற்காக? அவருடைய இழப்பை எண்ணி அழுகிறோம். ஆனால், அதற்கும் மேலாக, 'என்னால் உனக்கு ஒன்றும் செய்ய இயலவில்லையே! நான் உயிரோடிருக்க, நீ மட்டும் இறந்துவிட்டதேன்! என் உயிரை உனக்கு நான் கடனாகக் கொடுக்க இயலாதா?' என்ற இயலாமையில்தான் நாம் அழுகிறோம். இயேசு தன் பணிவாழ்வின் இறுதிக்கட்டத்திற்கு வந்துவிட்டார். அவரை ஏற்றுக்கொள்ளாத எருசலேம் இறந்துவிட்டது. இதற்குமேல் அவரால் ஒன்றும் செய்ய இயலாத நிலையில் இயேசு அழுகின்றார்.
(ஆ) மனமாற்றத்திற்கான அழைப்பு
குடித்துவிட்டு வீட்டிற்கு வரும் தன் கணவரின் அலங்கோலமான நிலை காண்கின்ற மனைவி அழுகிறார். குழந்தைகளும் இணைந்து அவரோடு அழுகின்றன. இந்தக் கண்ணீரின் நோக்கம் மனமாற்றம். மனைவி மற்றும் குழந்தைகளின் கண்ணீரைப் பார்த்தாவது, குடிக்கின்ற நபர் திருந்த மாட்டாரா? என்ற எண்ணத்தில் கன்னத்தில் வடியும் கண்ணீர்த் துளிகள் இவை. ஆனால், பல நேரங்களில் இக்கண்ணீரைப் போலவே மனமாற்றத்திற்கான எண்ணமும் விரைவில் காய்ந்துவிடுகிறது.
(இ) எச்சரிக்கை
சில நேரங்களில் நம் கண்ணீர் மற்றவர்களை எச்சரிக்கும். எடுத்துக்காட்டாக, வன்மத்துக்கு உள்ளான ஒருவர் தனக்கு மற்றவர் இழைத்த தீமையை எண்ணி அழுகிறார். அவருடைய கண்ணீர், தீமையை இழைத்த மற்றவருக்கு எச்சரிக்கையாக இருக்கிறது. 'நீயும் இதைப் போல அழுவாய்!' என்று தனக்கு அநீதி இழைத்தவரைக் கண்ணீர் எச்சரிக்கிறது.
நமக்காகக் கண்ணீர் வடிக்கும் கடவுள் நம் அருகில் இருக்கிறார்.
எருசலேம் போல நாமும் அமைதிக்குரிய வழியை அறியவில்லை என்றால், கடவுள் நம்மைத் தேடி வரும் காலத்தை நாம் அறியவில்லை என்றால், இயேசு இன்று நம்மையும் பார்த்துக் கண்ணீர் வடிக்கின்றார்.
“ கண்ணீர் விடும் கடவுள்”…. இறைவனின் பிரசன்னத்தை நம் அருகாமைக்கு கொண்டு வரும் ஒரு தலைப்பு.இயேசு கண்ணீர் விட்ட மூன்று நிகழ்வுகள்.தான் உயிராக நேசித்த தன் நண்பன் லாசரின் இறப்பு தந்த வலி….மாசு மறுவற்ற தான் இந்த மனுக்குலத்தின் பாவங்களுக்காக படப் போகும் பாடுகள் குறித்த வலி….” கடவுள் உன்னைத்தேடி வந்த காலத்தை நீ அறிந்து கொள்ள வில்லை” என்று எருசலேமைப் பார்த்து கதறிய குமுறல் தந்த வலி. இப்படி அனைத்து வலிகளுமே இறைவன் மனிதனுடன் இணைந்து கைகோர்க்கும் காட்சிகளாகத் தெரிகின்றன.
ReplyDelete“ கண்ணீர்”…. இது ஒரு கொடை.அடுத்தவருக்காக அழத்தெரிந்தவனே மனிதன்.ஒருவர் சிந்தும் கண்ணீருக்குப் பல அர்த்தங்கள்.ஆனால் இயேசு சிந்தும் கண்ணீர் தன் இயலாமையை….மனிதனின் மனமாற்றத்திற்கான அழைப்பை….அநீதி இழைப்பவருக்கு அவர் விடும் எச்சரிக்கையை நமக்கு வெளிக்கொணர்கிறது.” நமக்காக க் கண்ணீர் வடிக்கும் கடவுள் நம் அருகில் இருக்கிறார்.” இதைவிடப் பெரிதாக இறைவனிடமிருந்து மனிதன் எதை எதிர்பார்க்க முடியும்? ஆனால் நம்மைப் பார்த்து கண்ணீர் வடிக்கும் கடவுளாக அவரை மாற்றாமல் பார்த்துக் கொள்வோம்.
ஒருவரின் கண்களில் நீர் வழிகையில் நம் நெஞ்சம் உதிரத்தை வடிக்க வேண்டாம்; ஆனால் அவரின் கண்ணீர் துடைக்கும் கரங்களாக நாம் மாற இறைவன் துணை வேண்டுவோம்!
கண்களை ஈரமாக்கியதொரு பதிவிற்காகத் தந்தைக்கு நன்றியும்…..வாழ்த்தும்!!!