Thursday, November 11, 2021

லோத்தின் மனைவி

இன்றைய (12 நவம்பர் 2021) நற்செய்தி (லூக் 17:26-37)

லோத்தின் மனைவி

ஆண்டின் பொதுக்காலம் நிறைவுற்று திருவருகைக் காலம் தொடங்கவிருப்பதால் வருகின்ற நாள்களின் நற்செய்தி வாசகங்கள் உலக இறுதி பற்றியும், மானிட மகனின் வருகை பற்றியும் பேசுகின்றன. இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு இறுதிநாள்கள் பற்றி தன் சீடர்களுக்கு அறிவுறுத்துகின்றார். அவருடைய அறிவுரையின் மையமாக இருப்பது, 'திடீரென வரும் அந்நாள்.' அதாவது, அந்த நாள் திடீரென வரும் என்றும், அந்த நாள் நமக்கு எந்த அவகாசமும் அளிக்காது என்றும், தயார்நிலை அவசியம் என்றும் குறிப்பிடுகிறார் இயேசு.

'லோத்தின் மனைவியை நினைத்துக்கொள்ளுங்கள்!' என்று சொல்லி, லோத்தின் மனைவியை உருவகமாக முன்மொழிகின்றார் இயேசு.

லோத்தின் மனைவி என்ன செய்தார்? அவரை நாம் ஏன் நினைத்துக்கொள்ள வேண்டும்?

'அந்நகரங்களையும் அவற்றைச் சுற்றியிருந்த சமவெளி முழுவதையும் ஆண்டவர் அழித்தார். நகர்களில் வாழ்ந்த அனைவரையும் நிலத்தில் தளிர்த்தனவற்றையும் அழித்தார். அப்பொழுது லோத்தின் மனைவி திரும்பிப் பார்த்தாள். உடனே உப்புத் தூணாக மாறினாள்' (தொநூ 19:25-26).

லோத்தின் மனைவி சோதோம் நகரைத் திரும்பிப் பார்த்ததால் உப்புத்தூணாக மாறுகிறார்.

சாக்கடலைச் சுற்றி நிறைய உப்புத் தூண்கள் இன்றும் காணப்படுகின்றன. அவற்றில் ஒன்று ஒரு பெண் திரும்பிப் பார்ப்பது போல இருக்கும். அத்தூணுக்குப் பின் உள்ள கதை என்று இக்கதையாடல் எழுதப்பட்டிருக்கலாம். இப்படிப்பட்ட எழுத்துக்கு 'பெயர் வரையறைக் கதையாடல்' என்று பெயர். அதாவது, ஒரு பெயர் எப்படி வழங்கலாயிற்று என்பதற்காக வழங்கப்படும் கதை. எடுத்துக்காட்டாக, 'வைகை' என்ற ஆற்றின் பெயர் வரக் காரணம், 'சிவபெருமான் தன் கையை வைத்ததால், அது வை-கை என்று அழைக்கப்பட்டது' என்று சொல்லப்படுகிறது

லோத்தின் மனைவி திரும்பிப் பார்த்தது ஏன்?

தான் வளர்த்த கோழிக்கு என்ன ஆயிற்று?

தன் ஆடுகள் அழிந்திருக்குமோ?

தன் தோட்டம் பொசுங்கியிருக்குமோ?

பக்கத்து வீட்டுத் தோழியரை உடன் அழைத்து வந்திருக்கலாமே?

மாடியில் காயப்போட்ட வடாகம் என்ன ஆயிற்று?

துணிகள் காயுமுன் கந்தகம் பொழிய வேண்டுமா?

என்ற கேள்விகளோடு திரும்பிப் பார்த்திருக்கலாம். அல்லது, 'என்னதான் நடக்கிறது?' என்ற ஆவல் மிகுதியால் திரும்பிப் பார்த்திருக்கலாம். ஆனால், ஒன்று நிச்சயம். திரும்பிப் பார்த்தல் தவறு.

இரண்டு நாள்களுக்கு முன் பத்து தொழுநோயாளர் நற்செய்திப் பகுதியில் திரும்பிப் பார்த்தலும் திரும்பி வருதலும் நன்று என்று சொன்னோம்.

திரும்பிப் பார்த்தல் நன்றே. ஆனால், திரும்பிப் பார்த்து நிற்றல் ஆபத்தானது.

கார் ஓட்டிச் செல்கின்ற நபர் பின்னால் வருகின்ற வாகனங்களைப் பார்ப்பதற்கான 'ரேர் மிரர்' மட்டும் பார்த்துக்கொண்டே ஓட்டினால் என்ன ஆகும்? முன்னால் அவர் மோதிவிடுவார்.

நம் வாழ்க்கை நமக்கு நிற்கவும், திரும்பிப் பார்க்கவும் நேரம் தருவதில்லை. நாம் முன்னால் சென்றுகொண்டே இருக்க வேண்டும். நம் வாழ்வில் நாம் கடந்து வந்த பாதை கடந்ததுதான். மீண்டும் போய் அதைச் சரிசெய்ய இயலாது. ஆக, நாம் வாழும்போது அறிந்து, தெளிந்து, நன்றாக வாழ்ந்துவிட்டால் போதும்.

முன்னே செல்கிறவர் முன்னே தொடர்ந்து செல்லட்டும் எனக் கற்பிக்கிறார் லோத்தின் மனைவி.

1 comment:

  1. நம்மவரின் வார்த்தைகளில் கூறினால் “ முன் வைத்த காலைப் பின் வைக்காதே!” என்பதுவே இன்றையப் பதிவின் சாரம்.” திடீரென்று வரும் நம் இறுதி நாள்…என்று..எப்படி எனத்தெரியாத ஒரு நிலையில் என்றுமே தயார்நிலையில் இருக்க வேண்டும்” என்று கூறுகிறது இன்றைய வாசகம்.தனியாக வந்த நாம்,தனியாகத்தான் போக வேண்டும்.இதில் சிறிதேனும் நாம் மாறுபட்டாலும் லோத்தின் மனைவியின் நிலையே நமக்கும்!
    பொதுவாக அவ்வப்பொழுது நாம் நடப்பதைக் குறைத்து..நாம் கடந்துவந்த பாதையைத் திரும்பிப்பார்த்து தவறைத் திருத்திக்கொள்ளவும்,நல்லவை செய்யவும் அவகாசம் தர வேண்டுமென அறிவுறுத்தப்பட்டிருப்போம். அதைத்தான் செய்தார் லோத்தின் மனைவி.ஆனால் அவருக்குக் கிடைத்ததோ தண்டனை.
    கண்மூடிக்கண் திறப்பதற்குள் முடியப் போகிறது 2021. சென்ற வருடம் நம்மோடிருந்த எத்தனையோ பேர் இன்று நம்மிடம் இல்லை.நமக்குப் பின்னால் வருபவர்களைப்பற்றி யோசிக்காமல், நமக்கு முன் கடந்து சென்றவர்களிடமிருந்து பாடம் கற்போம். நம்முடைய இறுதி நாளைக்கு நம்மைத் தயார் செய்ய அழைப்பு விடுக்கும் ஒரு பதிவு. எச்சரிக்கை மணியடிக்கும் தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete