Saturday, November 13, 2021

நான் அசைவுறேன்!

ஆண்டின் பொதுக்காலம் 33ஆம் ஞாயிறு

I. தானியேல் 12:1-3 II. எபிரேயர் 10:11-14,18 III. மாற்கு 13:24-32

நான் அசைவுறேன்!

ஆண்டின் பொதுக்காலத்தின் இறுதி ஞாயிறு இன்று. வருகின்ற ஞாயிறு கிறிஸ்து அரசர் பெருவிழா. இன்றைய ஞாயிற்றை ஏழைகள் ஞாயிறு என்றும் நாம் சிறப்பிக்கின்றோம். இன்றைய நாளின் வாசகங்கள் உலகத்தின் இறுதி நாள்கள் பற்றிப் பேசுகின்றன.

முதல் வாசகம் தானியேல் நூலின் இறுதிப் பகுதியிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. திருவெளிப்பாட்டு நடை என்னும் இலக்கியக் கூற்றை நாம் இங்கே காண்கிறோம். இந்த நடையில் நிறைய உருவகங்களும், அடையாளங்களும், குறிச்சொற்களும் பயன்படுத்தப்படுகின்றன. துன்பம், போர், வன்முறை, வறுமை, பசி, பஞ்சம், இயற்கைப் பேரிடர்கள் என வருந்தும் உலகம் நொடிப்பொழுதில் முடியும் அல்லது மாறும் என மொழிகிறது இந்த நடை. சிரிய அரசர் நான்காம் எபிஃபேனஸ் காலத்தில் யூதர்கள் அனுபவித்த துன்பங்களின் போது தானியேல் காட்சி காண்கின்றார். நீதித் தீர்ப்பின்போது என்ன நடக்கும் என்பதைக் காட்சியாகக் காண்கிறார் தானியேல். மிக்கேல் என்னும் அதிதூதர் யூத நாட்டின் காவல் தூதராக இருக்கின்றார். மக்களின் கருத்துகளைக் கடவுள்முன் கொண்டு செல்பவர் இவரே. கடவுளின் கட்டளைகளை உடனடியாக நிறைவேற்றுபவரும் இவரே. உலக முடிவில் தீமைக்கு முடிவு கட்டுவதற்காக கடவுள் மிக்கேல் அதிதூதரை அனுப்புகிறார். இந்த நேரத்தில் இறந்தோர் உயிர் பெறுவர். நல்லோர் எனவும், தீயோர் எனவும் இரு குழுக்களாக அவர்கள் பிரிக்கப்படுவர். தானியேல் நூலைப் பொருத்தவரையில் நல்லோர் என்பவர் கடவுளுக்குப் பிரமாணிக்கமாக இருந்து, கடவுளின் கட்டளைகளைக் கடைப்பிடித்து, துன்பங்களை ஏற்றுக்கொண்டோர் ஆவர்.

இரண்டாம் வாசகத்தில், எருசலேமில் வாழ்ந்த தலைமைக் குருக்களுக்கும் ஒப்பற்ற தலைமைக் குருவாம் இயேசுவுக்கும் இடையே உள்ள வேறுபாடுகளைத் தொடர்ந்து பட்டியலிடுகின்றார் ஆசிரியர். ஒரே பலியால் - தன் உடலால் - நிறைவுள்ளவராக்குகிறார் இயேசு. நிறைவுள்ளவராக்குதல் என்பது பலி செலுத்தப்பட்டு ஏற்றுக்கொள்ளப்படுதலைக் குறிக்கின்றது.

நற்செய்தி வாசகத்தில், மாற்கு நற்செய்தியில் உள்ள திருவெளிப்பாட்டு நடைப் பகுதியை – உலக இறுதியை – வாசிக்கின்றோம். உலக இறுதியின்போது வான்வெளியில் நிகழும் மாற்றங்களையும், மானிட மகனின் வருகையையும் முன்மொழிகின்ற இயேசு (மாற்கு), 'விண்ணும் மண்ணும் ஒழிந்து போகும். என் வார்த்தைகள் ஒழிய மாட்டா' என்கிறார். மேலும், அந்த நாள் வானகத் தந்தைக்கு மட்டுமே தெரியும்.

ஆக, தொடங்கியது அனைத்தும் முடிவுறும் என்றும், இறுதியில் நல்லோர் வெல்வர் என்றும், இயேசுவின் வழியாக நாம் அனைவரும் நிறைவுள்ளவராக்கப்படுவோம் என்றும் முன்மொழிகின்றது இன்றைய இறைவாக்கு வழிபாடு.

உலகம் அழிந்தாலும், வான்கோள்கள் அதிர்ந்தாலும், நல்லோர்-தீயோர் எனப் பிரிக்கப்பட்டாலும், நமக்கு இவை அனைத்தும் அச்சம் தந்தாலும், 'நான் அசைவுறேன்!' எனத் துணிவோடும் உறுதிபடவும் கூறுகின்றார் பதிலுரைப் பாடல் ஆசிரியர் (திபா 16). 'ஆண்டவரை எப்போதும் என் கண்முன் வைத்துள்ளேன். அவர் என் வலப் பக்கம் உள்ளார். எனவே, நான் அசைவுறேன்' என்கிறார் பாடல் ஆசிரியர். ஆண்டவரைத் தன் கண்முன் வைத்துள்ளவர்கள் அசைவுறுவதில்லை.

இன்று நான் கண்ட திருப்பலி ஒன்றில், பெங்களுரு பேராயர் அவர்கள், மூன்று 'டி' பற்றிப் பேசினார்கள். இராணுவப் பயிற்சியின்போது கற்பிக்கப்படும் இந்த மூன்று 'டி'யை நம் வாழ்க்கைக்கும் எடுத்துக்கொள்ளலாம் என நினைக்கிறேன்:

(அ) டிவோஷன். தமிழில், 'அர்ப்பணம்' என்று சொல்லலாம். ஆண்டவருக்கும், வாழ்க்கைக்கும், நம் அழைப்புக்கும் நாம் கொடுக்கும் பதிலிறுப்பே டிவோஷன். தானியேல் காலத்தில் சிலர் தங்கள் ஆண்டவராகிய கடவுளின் கட்டளைகளைப் பற்றிக்கொண்டனர். அப்படி அவர்கள் பற்றிக்கொண்டதே அர்ப்பணம்.

(ஆ) டெடிகேஷன். 'அர்ப்பணம்' என்பது 'உணர்வு' என்றால், 'ஈடுபாடு' என்பது செயல். எடுத்துக்காட்டாக, நான் இறைவனுக்கு அர்ப்பணமாக இருந்தால், அவர்சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபாடு காட்டுவேன். குடும்ப உறவில், கணவன் மனைவியிடமும் மனைவி கணவரிடமும் அர்ப்பணத்தோடு இருந்தால், அவர்கள் தாங்கள் செய்கின்ற அனைத்திலும் ஈடுபாட்டுடன் விளங்குவர்.

(இ) டிஸிப்லின். 'ஒழுக்கம்' என்று இதை மொழிபெயர்க்கலாம். தீர்க்கமான முடிவும் அந்த முடிவைச் செயல்படுத்துதலுமே ஒழுக்கம். ஒழுக்கம் என்பது அறநெறி சார்ந்த ஒன்று அல்ல. மாறாக, அது அன்றாட வாழ்வியல் சார்ந்தது.

அர்ப்பணம், ஈடுபாடு, ஒழுக்கம் என்னும் அணிகலன்கள் நம்மை அலங்கரித்தால், நாம் எச்சூழலிலும் அசைவுறாமல் நிலைத்து நிற்க முடியும்.

ஏழையர் ஞாயிற்றுக்கும் இந்த இறைவார்த்தை வழிபாட்டுக்கும் என்ன தொடர்பு?

ஏழ்மை என்பது சார்பு நிலையை உணர்தல். ஏழையர் இயல்பாகவே மற்றவர்களைச் சார்ந்து வாழ்தலைப் பண்பாகக் கொண்டவர்கள். பல நேரங்களில் பணம், பொருள், ஆற்றல், அதிகாரம், ஆள்பலம் ஆகியவற்றைக் கொண்டு தற்சார்பு நிலையில் நாம் வாழ விழைகின்றோம். நம் தற்சார்பு இறைவனிடமிருந்தும் மற்றவர்களிடமிருந்தும் நம்மை அந்நியப்படுத்துகின்றது.

ஏழ்மை என்னும் சார்புநிலையை திருப்பாடல் ஆசிரியர் கொண்டிருந்ததால்தான், இறைவனைப் பற்றிப் பிடித்துக்கொண்ட அவர், 'நான் அசைவுறேன்!' என்று துணிந்து சொல்கின்றார்.

இன்று நம் நாட்டில் குழந்தைகள் தினத்தையும் கொண்டாடுகின்றோம். குழந்தைகள் இயல்பாகவே மற்றவர்களைச் சார்ந்திருப்பவர்கள். மற்றவர்களைச் சார்ந்த நிலையை உணர நமக்கு நிறைய தாழ்ச்சி தேவை. நாம் இருக்கும்போது ஒருவர் மற்றவரையும், இறக்கும்போது இறைவனையும் சார்ந்திருக்கின்றோம்.

'நான் அசைவுறேன் - ஏனெனில், நான் சாய்ந்துள்ளேன்!'

1 comment:

  1. ஆண்டின் பொதுக்காலத்தின் 33ம் ஞாயிறின் மறையுரை. “ ஏழைகளின் ஞாயிறு” என்பது புதுமையாக இருக்கிறது. நாம் நம் வாழ்நாளில் சந்திக்கும் அத்தனை தீமைகளும் ஒரு நொடிப்பொழுதில் மறைய, இறந்தோர் உயிர்பெற்று, தூய மிக்கேல் அதிதூதரின் தலைமையில், நல்லோர் எனவும் தீயோர் எனவும் பிரிக்கப்படுவர் என்பதைக் கூறும் தானியேலின் முதல் வாசகம்….
    தன் உடலையும்,உயிரையும் ஒருசேரப் பலிகொடுத்து, தன்னையும்… தான் கொடுத்த பலியையும் நிறைவுள்ளதாக்கும் இயேசு பற்றிக்கூறும் இரண்டாம் வாசகம்….
    “விண்ணும்,மண்ணும் ஒழிந்து போயிடினும்,ஆண்டவரின் வார்த்தைகள் ஒழியமாட்டா” என்பதை உறுதிப்படுத்தும் இறுதி நாள்; எத்தனைதான் அச்சத்திற்குரிய விஷயங்கள் நடந்திடினும் “ஆண்டவரைத் தங்கள் கண்முன் வைத்திருப்பவர்கள் அசையமாட்டார்கள்”
    என்பதை எடுத்துரைக்கும் நற்செய்தி வாசகம்…..
    மேற்கூறிய அத்தனை விஷயங்களிலும் “ஆண்டவரின் பக்கம் நான் சாய்ந்திருக்க என்னைத் தகுதியாக்குவது, என்னை அலங்கரிக்கும் அர்ப்பணம்,ஈடுபாடு, ஒழுக்கம் எனும் அணிகலன்களே” என்பது தந்தை தரும் வாழ்க்கைச் செய்தி.
    “ ஏழ்மை” என்பது சார்பு நிலை அல்லது சார்ந்த நிலை.பணம்,பொருள்,அதிகாரம், ஆள்பலம் இதில் எதில் ஒன்றிலேனும் அடுத்தவரைச் சார்ந்திருக்கும் எவருமே ஏழைதான். இந்த ஏழ்மைநிலை அடுத்திருக்கும் மனிதனிடமிருந்து நம்மைப் பிரிக்கலாம்; ஆனால்ஆண்டவரை நாம் ஒரு
    தூணாய்ப் பற்றி நிற்க…சாய்ந்து நிற்க நமக்குத் தேவை இந்த ஏழ்மை நிலைதான்; குழந்தைகளும் கூட இந்த சார்பு நிலைக்கு உட்பட்டவர்கள்தான். “நாம் இருக்கும் போது ஒருவர் மற்றவரையும், இறக்கும்போது இறைவனையும் சார்ந்திருக்கிறோம்” தந்தையின் வரிகள் சத்தியமான உண்மை! திருப்பாடலாசிரியரோடு நாமும் இணைந்து
    “ நான் அசைவுறேன்- ஏனெனில்,நான் சாய்ந்துள்ளேன்!” எனப்பாடுவோம்.
    திருவருகைக் காலத்திற்கு நம்மைத் தயார் செய்யும் ஒரு அழகான மறையுரைக்காகத் தந்தைக்கு வாழ்த்துக்களும்! ஞாயிறு வணக்கங்களும்!!!

    ReplyDelete