Friday, November 5, 2021

செல்வம்

இன்றைய (6 நவம்பர் 2021) நற்செய்தி (லூக் 16:9-15)

செல்வம்

'அர்த்தமுள்ள இந்துமதம்' என்னும் நூலில் கவியரசு கண்ணதாசன் அவர்கள், 'செல்வம்' என்ற சொல், 'செல்வோம்' என்ற சொல்லிலிருந்து வந்ததாகக் குறிப்பிடுகின்றார். அதாவது, வருகின்ற ஒன்று, நம் கையை விட்டுச் செல்வோம் என்ற நிலையில் இருப்பதால் அது செல்வம்.

நேற்றைய நற்செய்தி வாசகத்தில் நேர்மையற்ற வீட்டுப் பொறுப்பாளர் உவமையைச் சொன்ன இயேசு, அதன் தொடர்ச்சியாக, செல்வம் பற்றிப் போதிக்கின்றார். லூக்கா நற்செய்தியில் சீடத்துவத்துக்கு முதல் எதிரியாக இருப்பது 'செல்வம்.' 'செல்வம் நமக்குத் தன்னிறைiவும் தன்மதிப்பையும் சுதந்திரத்தையும் கொடுப்பதால் எந்த மதமும் செல்வத்தை மேன்மையாகப் பேசுவதில்லை. ஏனெனில், மனிதர்கள் ஏழ்மையைப் பற்றிச் சிந்திக்கும் வரைதான் மதம் உயிர்வாழ முடியும். எல்லாரும் செல்வம் சேர்த்துவிட்டால் கடவுளை யாரும் நினைக்கமாட்டார்கள். ஆக, மதங்கள் தொடர்ந்து ஏழ்மையைப் புகழ்ந்துகொண்டே இருக்கும்' என்கிறார் ஓஷோ. மேலும், 'உங்கள் வீட்டுக்கு அருகில் ஓர் ஏழை இருக்கிறார் என வைத்துக்கொள்வோம். உங்கள் மதத்தைக் கொண்டு அவருடைய ஏழ்மையை நீக்குங்கள். அதை விடுத்து, 'நானும் உன்னைப் போலவே ஏழையாக இருக்கிறேன்' என்று சொல்லி அவனிடம் சென்று, 'எனக்கு உணவு தா!' என்று சொன்னால், அவனுடைய பளு இரட்டிப்பாகிவிடும். காய்ச்சலாகக் கிடக்கும் ஒருவனுக்கு மருத்துவர் உடல்நலம் தரவேண்டுமே தவிர, 'எனக்கும் காய்ச்சல் அடிக்கிறது' என்று அவனுக்கு அருகில் அமரக் கூடாது' என்கிறார் ஓஷோ.

இன்றைய நற்செய்தி வாசகத்தில், 'செல்வம்' என்ற ஒற்றைச் சொல்லை மூன்று நிலைகளில் பயன்படுத்துகின்றார் இயேசு: (அ) 'நேர்மையற்ற செல்வத்தைக் கொண்டு நண்பர்களைத் தேடிக்கொள்ளுங்கள்,' (ஆ) 'யார் உங்களை நம்பி உண்மைச் செல்வத்தை ஒப்படைப்பார்?', (இ) 'நீங்கள் கடவுளுக்கும் செல்வத்துக்கும் பணிவிடை செய்ய முடியாது.'

'நேர்மையற்ற செல்வம்' என்ற சொல்லாடலைப் பயன்படுத்தும் இயேசு, 'செல்வம்' என்பது பயன்படுத்த வேண்டிய பொருள்தானே தவிர, வாழ்வின் இலக்கு அல்ல என்பதைத் தெளிவுபடுத்துகின்றார்.

'உண்மைச் செல்வம்' என்பது இறையாட்சி சார்ந்தவற்றைக் குறிக்கிறது. இந்த இடத்தில், செல்வத்தைப் பயன்படுத்துவது ஒரு கலை என்றும், அந்தக் கலையில் கைதேர்ந்தவர்களையே செல்வம் தேடிவரும் என்றும் பொருள் கொள்ளலாம். இதை நம் வாழ்விலும் பார்க்கலாம். 'இந்தப் பணம் இதற்கு!' என்று சொல்லிப் பணத்தை சேகரிக்கத் தொடங்கினால், அந்தப் பணம் அதற்கு வந்தே தீரும்!

மூன்றாவதாக, 'செல்வம்' என்பதைக் கடவுளுக்கு எதிராக முன்வைக்கின்றார் இயேசு. 'கடவுள்' மற்றும் 'செல்வம்' என்னும் இரண்டில், ஒருவர் ஏதாவது ஒன்றை மட்டுமே தெரிவு செய்ய முடியும். ஒன்று மற்றொன்றுக்கு முற்றிலும் முரணானது.

நற்செய்தி வாசகத்தின் இறுதியில், 'பண ஆசைமிக்க பரிசேயர் இவற்றையெல்லாம் கேட்டு இயேசுவை ஏளனம் செய்தனர்' என்று பதிவு செய்கின்றார் லூக்கா. 'நேர்மையான நிலையில் இருந்தால் செல்வம் வரும். தாங்கள் செல்வராய் இருப்பதால் நேர்மையாளர்கள்' என்று மொழிந்தனர் பரிசேயர். ஆனால், அவர்கள் தங்களிலே நேர்மையற்றவர்கள் என்பதை இயேசு சுட்டிக்காட்டுகின்றார்.

பணம் தேவை. பண ஆசை தேவையில்லை.

செல்வம் என்பது வழித்துணையாக இருக்கலாமே தவிர, வழியாகவும் வழியின் இலக்காகவும் இருக்கத் தேவையில்லை.

1 comment:

  1. ‘நம் கையை விட்டுச்சென்று விடுவதால் செல்வோம்- செல்வம்’ பற்றிய ஒரு பதிவு.
    “நேர்மையற்ற செல்வம் “…. வந்த வழி சரியில்லை எனினும், போய்ச்சேரும் வழி சரியெனில் நேர்மையற்ற செல்வமும் நேர்மையானதாகிவிடும்…என்பது உலக வழக்கு. ஏழ்மையை விரும்புவோர் யாருமில்லை என்பது நம் கருத்தாயிருக்க…. “ மதங்கள் பிழைத்திருக்கவாவது இந்த ஏழ்மை தேவை” எனும் ஓஷோவின் கருத்து விந்தையாக இருக்கிறது.Wishful Thinking என்ற ஒரு விஷயம் உண்டு. நாம் எதை மனதார விரும்பித் தேடுகிறோமோ அது நம்மை வந்தடைந்தே தீரும் என்று.அதைத்தான் தந்தையும் ‘இந்தப்பணம் இதற்கு’ என்று சேகரிக்கத்தொடங்கினால் அந்தப்பணம் அதற்கென்று வந்தே தீரும் என்கிறார். பரிசேயர்கள் மட்டுமல்ல…இன்று நம்மவரிடமும் “செல்வந்தர்கள் நல்லவர்கள்” என்ற எண்ணமுண்டு என்பது நாமறிந்ததே! பணம் தேவை; பண ஆசை தேவையில்லை; செல்வம் என்பது வழித்துணையாக வரலாமே தவிர, வழியாகவும்,வழியின் இலக்காகவும் இருக்கத் தேவையில்லை. உண்மைதான்! ஒத்துக்கொள்ள வேண்டிய விஷயம் தான்…
    என்னுள் ஒரு எண்ண ஓட்டம்…கடவுளையும்,செல்வத்தையும் சேர்த்தே வைத்திருப்பதில் தப்பில்லை. நம்மில் உறையும் கடவுளுக்கு எல்லை இல்லை; ஆனால் நம் கையில் உள்ள செல்வத்திற்கு “இது போதும்; இதுவே எல்லை” என யாராலும் வரையறுக்க முடியுமா? கடவுளுக்கு உரியதைக்கடவுளுக்கும்…செசாருக்கு உரியதை செசாருக்கும் செலுத்தும் வரையில் செல்வமும் தேவையானதொன்றே!
    கொஞ்சம் நெருடலான விஷயம் தான்! ஆனாலும் அந்த இறுதி வரிகளுக்காகத் தந்தையைப் பாராட்டலாம்!!!

    ReplyDelete