Sunday, November 21, 2021

வறுமையில் வாடிய கைம்பெண்

இன்றைய (22 நவம்பர் 2021) நற்செய்தி (லூக் 2:1-4)

வறுமையில் வாடிய கைம்பெண்

'இந்தியக் கைம்பெண்களின் உளவியல், மற்றும் சமூக நிலை' என்ற ஓர் ஆய்வுக்கட்டுரையை இரு நாள்களுக்கு முன்னர் வாசித்தேன். 'கைம்பெண்கள் மறுவாழ்வு அல்லது மீள்வாழ்வு அல்லது மறுமணம்' என்பது அதிகரித்து வந்தாலும், மனைவியை இழந்த ஆண்கள் மறுமணம் செய்கின்ற அளவுக்கு, கணவரை இழந்த ஆண்கள் மறுமணம் செய்துகொள்வதில்லை என்றும் ஆய்வு சொன்னது. தன் கணவரை இழந்ததால் உள்ளத்தில் சோகமும், தன் பிள்ளைகளின் கைகளை நம்பி நிற்பதால் உடல்நோயையும் பொறுத்துக்கொண்டும் பலர் இருப்பதாகவும், கைம்பெண்கள் சமூகத்திலும் பல துன்பங்களுக்கும் ஆளாவதாகவும் கட்டுரை சொன்னது. இன்னொரு பக்கம், தாங்கள் தங்கள் கணவரை இழந்ததால், இனி தனக்கே அனைத்துப் பொறுப்பும் என்று தங்கள் குடும்பத்தை மேலே உயர்த்திய பல பெண்களைப் பற்றியும் கட்டுரை கூறுகிறது.

இயேசுவின் சமகாலத்தில் கைம்பெண்கள் நிலை சமய நிலையிலும் பின்தங்கி இருந்தது. ஏனெனில், கணவர் இறத்தல் என்பது மனைவியின் பாவத்தின் விளைவு என்றும் சிலர் எண்ணினர். இன்றைய நற்செய்தி வாசகத்தில், 'வறுமையில் வாடிய கைம்பெண் ஒருவரின் காணிக்கை' நிகழ்வை லூக்கா பதிவு செய்கின்றார். மற்ற நற்செய்தியாளர்கள், இவரை 'கைம்பெண்' என அழைக்க, லூக்கா மட்டும், 'அவர் வறுமையில் வாடியவர்' என்று பொருளாதார நிலையையும் குறிப்பிடுகின்றார். இயேசுவின் சமகாலத்தில் எல்லா யூதர்களும் எருசலேம் ஆலயத்திற்கு வரி கட்ட வேண்டும் என்ற கட்டாயம் இருந்தது. வரி பெரும்பாலும் கீழிருப்பவர்களைக் கருத்தில் கொள்வதில்லை. எடுத்துக்காட்டாக, நம் ஆலயங்களில் திருவிழாவுக்கென்று வரி, ரூ 1000 விதிக்கப்படுகிறது என வைத்துக்கொள்வோம். பங்கில் உள்ள வசதியானவர்களுக்கு அது பெரிய சுமையாக இருக்காது. ஆனால், சில குடும்பங்களுக்கு அந்த 1,000 என்பது அவர்களுடைய ஒரு மாத வருமானமும், செலவினமுமாகவும் இருக்கும். இயேசுவின் சமகாலத்திலும் அனைவரும் அரை ஷெக்கேல் கொடுக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. நம் நிகழ்வில் வருகின்ற கைம்பெண்ணிடம் அரை ஷெக்கேலில் ஆறில் ஒரு பகுதிதான் இருந்தது. ஆனால், அவர் அதையும் காணிக்கையாகப் போடுகின்றார்.

நிகழ்வில் வரும் கைம்பெண்ணைப் பற்றி மூன்று குறிப்புகளைத் தருகின்றார் இயேசு:

(அ) தமக்குப் பற்றாக்குறை இருந்தும்

'பற்றாக்குறை' என்பது தேவைக்கும் குறைவான நிலை. ஆனால், அந்தக் கைம்பெண் தன் பற்றாக்குறையை பெரிதுபடுத்தவில்லை. தன் வாழ்வில் நிறைய பற்றாக்குறைகளை அனுபவித்த அவர் இந்தப் பற்றாக்குறையையும் கண்டுகொள்ளவில்லை.

(ஆ) தம் பிழைப்புக்காக அவற்றை வைத்திருந்தார்

அதாவது, அவர் இட்ட காணிக்கை அவருடைய ஒரு நாள் செலவினம். தன் வாழ்வைத் தக்கவைக்க அவர் செலவழிக்க வேண்டிய பணம். ஆக, மருத்துவம், முதுமை போன்ற எந்த எதிர்கால வசதிகளையும் கூட எண்ணிப்பார்க்காத நிலையில் இருந்த அவர், தன் நிகழ்காலத் தேவையையும் தள்ளி வைக்கின்றார்.

(இ) எல்லாவற்றையும் போட்டுவிட்டார்

வெறுங்கையராக நிற்கின்றார் கைம்பெண். ஆலயத்தை விட்டு வெளியே சென்றால் அவர் தன் வாழ்வை எப்படி எதிர்கொள்வார்? என்ற கேள்வி நம்மில் எழுகிறது. 

லூக்கா நற்செய்தியின் பின்புலத்தில் இந்நிகழ்வைப் பார்த்தால், பணம் என்பது சீடத்துவத்துக்கான தடை. ஆக, தனக்குள்ள அனைத்தையும் அவர் இழக்கத் தலைப்பட்டதால் சீடத்துவத்துக்கான முன்மாதிரியாக விளங்குகின்றார். மேலும், 'மானிட மகனுக்குத் தலைசாய்க்கவும் இடமில்லை' என்று இயேசு பற்றற்ற நிலையில் இருந்தது போல, இப்பெண்ணும் அதே நிலையை ஏற்கின்றார். மலைப்பொழிவில் இயேசு சொல்வது போல, 'அன்றைய நாளைப் பற்றிக் கூட' அவர் கவலைப்படவில்லை. இயேசுவின் போதனையை அறிந்து செயல்படுத்துபவராக இருக்கின்றார்.

நிற்க.

இப்படியாக நாம் அந்த இளவலின் செயலைப் புகழ்ந்து கொண்டாடினாலும், அவருடைய வறுமை என்னவோ நம்மை நெருடவே செய்கிறது. 'கடவுள் அவரைப் பார்த்துக்கொள்வார். கடவுள் நம் உள்ளத்தைப் பார்க்கிறார். அவர் நம்மைப் பாராட்டுகிறார்' என்னும் சொற்கள் நமக்கு ஆறுதல் தரவில்லை. எல்லாவற்றையும் இழந்து நிற்கும் அவருடைய கைகளில் பாராட்டுப் பத்திரம் கொடுத்தால் அவர் பசியாறுவாரா? 

1 comment:

  1. “வறுமையில் வாடிய கைம்பெண் ஒருவரின் காணிக்கை” ஒருபக்கம் நமக்கு எழுச்சியைத் தருகிற இந்தத் தலைப்பு, மறுபக்கம் அவளின் கையறு நிலை கண்டு ஐயோ பாவம்! என்று சொல்லவும் வைக்கிறது. பற்றாக்குறைக்குப் பழக்கப்பட்டு விட்ட அப்பெண் தன்னிடமிருந்த ஷெக்கேலில் ஆறில் ஒரு பங்கையும் போட்டது…..மற்றவர்கள் தங்களிடம் மிகுதியாக இருந்ததிலிருந்து காணிக்கை இட,இவளோ தன்னையே காணிக்கையாகப் போட்டுவிட்டாள் என்பதைக் காட்டுகிறது.’அனைத்தையும் இழப்பதுவே சீடத்துவம்’ எனில் அந்த சீடத்துவத்திற்கு இவள், மாதிரியாக நிற்கிறாள்.இது உண்மையெனில், தேவைகளும்….தேடலும் அதிகரித்துப்போன நம்மிடம் சீடத்துவம் இருக்கிறது என்று மார் தட்டிக்கொள்வோமெனில், அது உண்மைக்குப் புறம்பில்லையா? “ எல்லாவற்றையும் இழந்து நிற்கும் அவருடைய கைகளில் பாராட்டுப் பத்திரம் கொடுத்தால் அவர் பசியாறுவாரா?” பதில் சொல்ல வேண்டிய இடத்திலிருக்கும் தந்தையே கேள்வி கேட்டால் நாம் என்ன செய்வது? அந்தப் பெண்ணின் வறுமை நம்மை நெருடுவது உண்மையெனில், நம் கண்களைக் கொஞ்சம் திருப்பி நம்மைச் சுற்றி வறுமையே வாழ்வாக இருப்பவர்களை நேசமுடன் பார்ப்போம்.அதில் ஒரு சிலருக்கேனும் நம் கை நீளும் என்றால் நாமும் அவரின் “சீடரே!” உள்ளதோடு சேர்ந்து உள்ளத்தையும் கொடுக்கச் சொல்லும் தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete