Monday, November 22, 2021

கோவிலின் மறுபக்கம்

இன்றைய (23 நவம்பர் 2021) நற்செய்தி (லூக் 21:5-11)

கோவிலின் மறுபக்கம்

சில ஆண்டுகளுக்கு முன்னர், 'மறுபக்கம்' என்னும் கவிதை ஒன்றை வாசித்தேன். இது இப்படி நீள்கிறது:

'நாம் அநேகமாக மறுபக்கத்தைப் பார்ப்பதில்லை.

மரப்பாச்சியின் மறுபக்கத்தை.

புகைப்படத்தின் மறுபக்கத்தை.

இலையின் மறுபக்கத்தை.

மலரின் மறுபக்கத்தை.

பிறரின் மறுபக்கத்தை.

ஒருபக்கம் போல மறுபக்கமும் உண்மை.'

ஞானம் பெற்றவர்கள் ஒரு பக்கத்தைப் பார்க்கின்ற அதே வேளையில் வாழ்வின் மறுபக்கத்தையும் பார்க்கின்றனர். 

'என்னே! இளமை! என்னே பொலிவு! என்னே வடிவு! என்னே அழகு!' என்று ஓர் இளவலைப் பார்த்து இரசித்துக் கொண்டிருக்கும் நம்மைக் கடந்து போகின்ற பட்டினத்தார், போகிற போக்கில், 'ஓர் பிடி நீறும் இலாத உடம்பை நம்பும் அடியேனை இனி ஆளுமே!' என்று பாடிக் கொண்டு போகின்றார். நாம் அழகு என்று ஒரு பக்கத்தைப் பார்க்கின்ற வேளையில், எரித்துவிட்டால் ஒரு பிடி சாம்பல்கூட மிஞ்சுவதில்லை என்று நம் கன்னத்தில் அறைந்து வாழ்வின் மறுபக்கத்தைப் பார்க்கச் சொல்கின்றார்.

மலையின் மேல் நின்றுகொண்டிருக்கும் சபை உரையாளர், எல்லாரையும் பார்த்து, 'பிறப்புக்கு ஒரு காலம்ளூ இறப்புக்கு ஒரு காலம். அரவணைக்க ஒரு காலம்ளூ அரவணையாதிருக்க ஒரு காலம். பேசுவதற்கு ஒரு காலம்ளூ பேசாதிருக்க ஒரு காலம். அன்புக்கு ஒரு காலம்ளூ வெறுப்புக்கு ஒரு காலம்' (காண். சஉ 3:2-8) என்று பாடிக்கொண்டிருக்கின்றார்.

நற்செய்தி வாசகத்தில் எருசலேம் ஆலயம் பற்றிப் பேசிக்கொண்டிருக்கின்ற சிலர், கவின்மிகு கற்களாலும் நேர்ச்சைப் பொருள்களாலும் கோவில் அழகுபடுத்தப்பட்டிருப்பதைக் கண்டு வியந்து நிற்கின்றனர். அவ்வழியே கடந்து போகின்ற இயேசு, 'இவற்றையெல்லாம் பார்க்கிறீர்கள் அல்லவா? ஒரு காலம் வரும். அப்போது கற்கள் ஒன்றின்மேல் ஒன்று இராதபடி இவையெல்லாம் இடிக்கப்படும்' என்கிறார். கேட்டுக்கொண்டிருந்தவர்கள் அவரை எதிர்மறைவாதி என எண்ணியிருப்பார்கள். ஆனால், இயேசு, நிகழ்மைய வாதியாக, எதார்த்தவாதியாக இருக்கின்றார். உரோமைப் படையெடுப்பின்போது ஆலயம் தகர்க்கப்படுகின்றது.

இந்த நிகழ்வு நமக்குச் சொல்வது என்ன?

வாழ்வின் ஒரு பக்கத்தைக் காணும் நாம் மறுபக்கத்தையும் அறிய முயற்சி செய்தல் வேண்டும்.

சில நேரங்களில், நாம் மறுபக்கத்தை நிராகரிக்கிறோம். 

சில நேரங்களில், மறுபக்கத்தை மிகைப்படுத்துகின்றோம். 

சில நேரங்களில், மறுபக்கத்தை நாம் கண்டுகொள்வதில்லை.

இன்றைய முதல் வாசகத்தில், நெபுகத்னேசர் அரசர் கனவில் ஒரு பெரிய சிலையைக் காண்கின்றார். அவர் சிலையின் ஒரு பக்கத்தையே – அதாவது, கனவாக – காண்கின்றார். அதன் மறுபக்கம் - அதாவது, கனவின் பொருள் - தானியேலுக்கு கடவுளால் அருளப்படுகிறது.

வாழ்வின் மறுபக்கத்தைப் பார்க்க, கடவுளின் கண்கள் நமக்குத் தேவை. மறுபக்கத்தையும் இணைத்துப் பார்த்தால் வாழ்வில் பற்றுகள் குறையும்.

1 comment:

  1. “ கோவிலின் மறுபக்கம்” தந்தையின் ஆரம்பக்கவிதை, பல விஷயங்களின் மறுபக்கத்தை நாம் காண மறுத்தாலும்,ஞானம் பெற்றவர்கள் ஒரு பக்கத்தைப் பார்க்கின்ற அதே வேளையில் மறுபக்கத்தையும் பார்க்கிறார்கள் என்று கூறுகிறது. பட்டினத்தாரும் சரி….சபை உரையாளரும் சரி…. இயேசுவும் சரி….இறைவனின் படைப்பில் ஒவ்வொரு ஆளுக்கும் சரி….ஒவ்வொரு பொருளுக்கும் சரி இரு பக்கங்கள்!முன் பக்கம் போல் பின்பக்கம் இருப்பதில்லை. வசீகரமான முன்பக்கத்தைப் பார்த்து இரசிக்கும் நாம் பின்பக்கத்தின் உண்மையை நிராகரிக்கிறோம்…மிகைப்படுத்துகிறோம்…..கண்டு கொள்வதில்லை. எதார்த்தவாதிகளுக்குப் புரியும் உண்மை எல்லோருக்கும் புரிவதில்லை.தானியேலுக்கு அருளப்பட்டது போல ஒரு சிலபேருக்கே மறுபக்கத்தின் பொருள் அருளப்படுகிறது.
    மறுபக்கத்தின் உண்மையை நம்மால் ஏற்கமுடிவதில்லை; ஆனால் கடவுளின் கண்களோடு வாழ்வின் மறுபக்கத்தைப் பார்த்தால் வாழ்வில் பற்றுக்கள் குறைந்து, நிதர்சனம் புரியும்.
    வாழ்க்கையை வாழ்ந்து முடித்த ஒருவர் தன் முன்பாதியைத் திரும்பிப்பார்த்து தனக்குள் பாடும் “மௌனராகமே” இன்றையப் பதிவு. ஏற்க மறுக்கும் உண்மையை ஏற்கவைக்க ஒரு முயற்சி. தந்தைக்கு வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete