Wednesday, November 24, 2021

எருசலேம் மிதிக்கப்படும்

இன்றைய (25 நவம்பர் 2021) நற்செய்தி (லூக் 21:20-28)

எருசலேம் மிதிக்கப்படும்

இன்றைய நற்செய்தி வாசகத்தில் மூன்று கருத்துருக்கள் உள்ளன: ஒன்று, எருசலேம் நகரின் அழிவு பற்றிய இயேசுவின் முன்னறிவிப்பு,  இரண்டு, திருவெளிப்பாட்டு நடையில் முன்மொழியப்படுகின்ற உலகின் இறுதி நாள்கள், மற்றும் மூன்று, மானிட மகனின் வருகையின்போது நம்பிக்கையாளர்களின் பதிலிறுப்பு.

கிபி 70இல் நடந்த எருசலேம் முற்றுகை வரலாற்றில் மிக முக்கியமானது. முதல் யூத-உரோமைப் போர் என அழைக்கப்படுகின்ற அந்தப் போரில் எருசலேம் நகரமும் ஆலயமும் உரோமையர்களால் அழிக்கப்படுகின்றது. தீத்து மற்றும் திபேரியு ஜூலியஸ் இந்தப் படையெடுப்பை முன்னெடுக்கின்றனர். இந்த முற்றுகை ஏறக்குறைய ஐந்து மாதங்கள் நீடித்தன. யூதர்கள் சில இடங்களில் வெற்றி பெற்றாலும், இறுதியால் உரோமைப் பேரரசு வெற்றிகொள்கின்றது.

இந்தப் போரின் கோர முகத்தை வரலாற்று ஆசிரியர் யோசேஃபுஸ் இப்படிப் பதிவு செய்கின்றார்: 'அழிவின் காட்சி கொடூரமாக இருந்தது. மரங்களாலும் தோட்டங்களாலும் நிறைந்திருந்த இடங்கள் பாலைவனமாகக் காட்சி அளித்தன. யூதேயாவின் அழகைப் பார்த்து வியந்த எந்த அந்நியரும் இப்போது அதைப் பார்த்தால், அதன் பரிதாப நிலை கண்டு புலம்புவார். அழகின் அடையாளங்கள் அனைத்தும் குப்பையாகக் கூட்டித் தள்ளப்பட்டன. இதற்கு முன்னர் இந்த நகரைப் பார்த்த ஒருவர் அதைப் போல இன்னொரு முறை காண இயலாது. இந்த நகரில் தங்கியிருந்தவரும் இந்நகரை அடையாளம் காண இயலாது.'

எருசலேம் முற்றுகை நடைபெற்ற பின்னர், கிபி 80-90 ஆண்டுகளுக்குள் லூக்கா தன் நற்செய்தியை எழுதியிருப்பார். ஆக, எருசலேம் முற்றுகையை அவர் நேரடியாகக் கண்டவராகவோ, அல்லது எருசலேம் அழிவின் எச்சத்தைக் கண்டவராகவும் இருந்திருப்பார். முற்றுகை நடந்த வேளையில் பெண்களும், குழந்தைகளும் அனுபவித்த இன்னல்களை அவர் அறிந்திருப்பார். தன் காலத்திலும் எருசலேம் பிறஇனத்தார் கையில் இருப்பதைக் கண்டிருப்பார். தான் கண்ட அனைத்தையும் இயேசுவே முன்னுரைத்தாக அவர் பின்நோக்கிப் பதிவு செய்திருப்பார். இந்த இலக்கிய நடைக்குப் பெயர் 'ரெட்ரோஜெக்ஷன்' என்பதாகும்.

மேலும், உலக முடிவு பற்றிய ஆவல் மேலோங்கி இருந்ததால், உலக முடிவு பற்றிய கருத்துகளும் இயேசுவால் முன்னுரைக்கப்படுவதாக எழுதப்படுகின்றன. இயேசுவின் சமகாலத்து ஸ்தாயிக்கியர்கள் பிரபஞ்சம் 3000 ஆண்டுகள் நீடிக்கும் என்றும், அதன் பின்னர் அது மீண்டும் தன்னையே புதுப்பித்துக்கொள்ளும் என்றும் கருதினர். தங்கள் காலத்தில் அது நிகழ்வதாக அவர்கள் எதிர்நோக்கியிருந்தனர்.

மானிட மகனின் இரண்டாம் வருகையும் கிறிஸ்தவ குழுமத்தால் எதிர்நோக்கப்பட்டது. மானிட மகனின் வருகையின்போது தங்கள் துன்பம் அனைத்தும் மறைந்துபோகும் என்று எண்ணினர். ஏனெனில், அவர்கள் தங்கள் சமய நம்பிக்கைக்காக மிகவும் துன்புறுத்தப்பட்டனர்.

ஆக, லூக்கா என்னும் வரலாற்று ஆசிரியர், தன் சமகாலத்து நிகழ்வுகளை, இயேசு முன்னறிவித்த நிகழ்வுகளாகப் பதிவு செய்கின்றார். அல்லது இயேசுவே இதை முன்னுரைத்திருக்கலாம்.

இந்த நற்செய்திப் பகுதி நமக்குச் சொல்வது என்ன?

ஒன்று, மாட்சியும் வீழ்ச்சியும் தொடர்ந்து நிகழக் கூடியவை. எருசலேமை வீழ்த்திய உரோமை பின்நாள்களில் தானும் வீழ்கிறது. பாவத்திற்கான தண்டனை என்று சொல்லத் தயக்கமாக இருக்கிறது. ஏனெனில், பாவமே செய்யாத பச்சிளங் குழந்தைகள் அழிக்கப்பட்டது ஏன்? நாம் பிறப்பது போலவே இறக்கிறோம். அப்படி மட்டும் நிறுத்திக்கொள்ளலாம் என நினைக்கிறேன்.

இரண்டு, இறுதி நாள்கள் பற்றிய அச்சம். நம் தனிப்பட்ட வாழ்வின் இறுதி நாள்கள் பற்றிய அச்சம் நமக்கு இயல்பாகவே நம்மில் இருக்கிறது. 'இதுதான் நடக்கும்' என்று ஏற்றுக்கொள்கின்ற மனம் அச்சத்தைக் களையும்.

மூன்று, 'தலைநிமிர்ந்து நில்லுங்கள்.' இது படைவீரருக்கான சொல்லாடல். தலைநிமிர்ந்து நிற்கின்ற படைவீரர் தயார்நிலையில் இருக்கிறார்.

இன்றைய முதல் வாசகத்தில், ஆண்டவராகிய கடவுள் சிங்கத்தின் குகையிலிருந்து தானியேலைக் காப்பாற்றுகின்றார். தீமை ஒருபோதும் நன்மையை வெல்ல இயலாது என்பதற்குச் சான்றாக இந்நிகழ்வு உள்ளது.

1 comment:

  1. ஒரே பதிவில் சொல்லப்பட்டிருப்பவை பல விஷயங்கள்.புரிந்து கொள்ள அத்தனை இணக்கமாக இல்லை. இறுதிப்பகுதி சொல்லும் செய்திகளை மட்டுமே எடுத்துக்கொள்ளலாம். எருசலேமை வீழ்த்திய உரோமை தானும் பின் நாட்களில் வீழ்ச்சியுறுகிறது.’பாவத்திற்குத் தண்டன’ என்று சொல்லத் தந்தை தயக்கம் காட்டினாலும் உண்மை அதுதானே! இறுதி நாட்களின் நிகழ்வுகள் இவையே, என்று நினைக்க நம்மைப் பழக்கப்படுத்திக்கொண்டால் அந்நிகழ்வுகள் நம் கண்முன் நடக்கையில் நமக்கு அந்நியமாகத் தெரியாது.படைவீரர்கள் மட்டுமல்ல….தயார் நிலையில் இருக்கும் யாருமே தலை நிமிர்ந்தே நிற்பர்.
    சிங்கத்தின் குகையிலிருந்து ஆண்டவர் தானியேலைக் காப்பாற்றும் நிகழ்வு தீமை நன்மையை வெல்ல முடியாது என்ற உண்மையை முன் வைக்கிறது….இன்றையப் பதிவின் ஆறுதல் இது மட்டுமே!
    திருவருகைக் காலம் நெருங்க நெருங்க நமக்குச்சொல்லப்படும் செய்திகள் அச்சத்தை முன் வைப்பதாகவே உள்ளன.அவற்றுக்கும் நம்மைப் பழக்கப்படுத்திக்கொள்ளும் பட்சத்தில் அவை நம் கண்முன் நடக்கையில்,”இவை நாம் எதிர்பார்த்த விஷயங்கள் தானே!” என்ற எண்ணம் நம்மைப்பலவித அச்சங்களிலிருந்து காப்பாற்றும்.
    மருந்தைக் கொஞ்சம் இனிப்பு சேர்த்துக் கொடுக்கும் தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete