Friday, November 12, 2021

இறைவேண்டலும் நம்பிக்கையும்

இன்றைய (13 நவம்பர் 2021) நற்செய்தி (லூக்கா 18:1-8)

இறைவேண்டலும் நம்பிக்கையும்

இன்றைய நற்செய்தி வாசகம் இரு பகுதிகளாக அமைந்துள்ளது. முதல் பகுதியில், மனந்தளராமல் எப்போதும் இறைவனிடம் மன்றாட வேண்டும் என்பதற்கு இயேசு ஓர் உவமை சொல்கின்றார். இரண்டாம் பகுதியில், 'மானிட மகன் வரும்போது மண்ணுலகில் நம்பிக்கையைக் காண்பாரோ?' என்று தன் தயக்கத்தை வெளிப்படுத்துகின்றார்.

உவமையில் வரும் நடுவர் கதையின் முரணாக இருக்கின்றார். அதாவது, மற்ற கதைமாந்தர்களின் இருத்தலை நேர்முகமாகக் காட்டுவதற்காக, இந்த நபரை எதிர்மறையாகப் பயன்படுத்துகின்றார் ஆசிரியர். இந்த நபர் தவறான மனப்பாங்கும், பிறழ்வான செயல்பாடும் கொண்டிருக்கின்றார். 'கடவுளுக்கும் அஞ்சாமல், மனிதரையும் மதிக்காமல் இருப்பதே' இவருடைய மனப்பாங்கு. மேலும், கைம்பெண் ஒருவர் தன்னிடம் நீதி கேட்டு வந்தபோது, நெடுங்காலமாய் எதுவும் செய்யாமல் இருக்கின்றார். ஆக, இவருடைய செயல்பாடும் பிறழ்வுபட்டதாக இருக்கிறது. 

இருந்தாலும், தொடர்ந்து வரும் தொல்லையின் பொருட்டு செயல்படுகின்றார். நீதி வழங்குகின்றார். இதையொட்டிய இன்னொரு உவமையே நள்ளிரவில் அப்பம் கேட்கும் நண்பர் எடுத்துக்காட்டு. 

இங்கே, கைம்பெண் தனக்குரிய நீதியைப் பெற உரிமைகொண்டிருக்கின்றார். ஆனால், அவருடைய உரிமை மறுக்கப்படுகின்றது. எந்தப் பொறுப்புணர்வும் இல்லாத ஒருவர்கூட இறுதியில் மற்றவருக்குரிய உரிமையை வழங்கத் தயாரகின்றார்.

ஆண்டவராகிய கடவுள் நமக்கு உரிமைகள் இல்லை என்றாலும், நமக்கு உடனடியாகச் செவிசாய்க்கின்றார். கடவுளின் நன்மைத்தனம் பொறுப்பற்ற நடுவரின் முரண் எனக் காட்டப்படுகிறது. 

தொடர்ந்து, மண்ணுலகில் நம்பிக்கை மறைந்து வருவதையும் இயேசு சுட்டிக்காட்டுகின்றார்.

இறைவனிடம் மன்றடும்போது, நாம் விண்ணப்பம் செய்யும்போது நம் மனப்பாங்கு நம்பிக்கை கொண்டதாகவும், நம் செயல்பாடு மனந்தளராமலும் இருத்தல் வேண்டும்.


1 comment:

  1. இறைவேண்டலையும், இறை நம்பிக்கையையும் எடுத்துக்காட்டும் ஒரு நிகழ்வு. கடவுளுக்கும் அஞ்சாத…மனிதரையும் மதிக்காத நடுவர் ஒருவர் கைம்பெண்ணுக்கு சேர வேண்டிய நீதியை வெகுகாலமாய் மறுக்கிறார்.இவனுள் தெரிவது கல் நெஞ்சம்.ஆனால் இரவில் அப்பம் கேட்டு வந்தவனுக்கு உதவிசெய்ய, அவன் நண்பனிடம் தெரிவது சாமத்தின் தயக்கமேயன்றி மறுப்பல்ல. ஆனால் இந்த இருவரின் நெஞ்சத்திலும் எங்கோ ஒரு மூலையில் ஈரம் கசிகிறது. ஒருவனுக்குத் தானாக கசிகிறது…மற்றவனுக்கு ஒரு காரணி தேவைப்படுகிறது. இவர்களையெல்லாம் விஞ்சி நிற்பவர் தான் நம் விண்ணகத்தந்தை என்ற புரிதலைத் தருகின்றனர் இந்த இரு கதை மாந்தரும். நாம் கதவைத்தட்டவும் வேண்டாம்….தொல்லை கொடுக்கவும் வேண்டாம்.நாம் மனத்தில் நினைத்து விட்டாலே போதும்; கேட்பதற்கு முன்னரே அள்ளித்தரும் வள்ளல் அவர்.
    வேண்டுவோம்; கிடைத்து விட்டது என்ற நம்பிக்கையோடு வேண்டுவோம்; மனம் சோர்ந்து போகாமல் வேண்டுவோம்.
    இந்த நேரத்தில் என் மனத்தில் ஒரு கேள்வியும் கூடவே எழுகிறது. இறைவனிடம் பிள்ளைகளுக்குரிய உரிமையோடு கேட்கும் நாம்,கொடுத்தலில் எந்த வகையைச் சார்ந்தவர்கள்? யோசிப்போம்!
    மக்களின் தேவைக்கேற்ற …தேவையைப்புரிந்த ஒரு பதிவு. தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete