Thursday, November 4, 2021

வீட்டுப் பொறுப்பாளர்

இன்றைய (5 நவம்பர் 2021) நற்செய்தி (லூக் 16:1-8)

வீட்டுப் பொறுப்பாளர்

இன்றைய நற்செய்தி வாசகம் அறநெறிப் பார்வையில் ஒரு நெருடலான பகுதி. தன் தலைவரின் உடைமைகளைப் பாழாக்கும் வீட்டுப் பொறுப்பாளர் முன்மதியோடு செயல்படுவதை இயேசு பாராட்டுகின்றார்: 'ஒளியின் மக்களை விட இவ்வுலகின் மக்கள் தங்கள் தலைமுறையினரிடத்தில் மிக்க முன்மதியுள்ளவர்களாய் நடந்துகொள்கிறார்கள்.'

மற்றவர்களை ஏமாற்றுவதற்கும், பொறுப்பில் இருப்பவர்கள் தமக்கேற்ற வகையில் செயல்படுவதற்குமான எடுத்துக்காட்டு அல்ல இது.

வீட்டுப் பொறுப்பாளரின் மூன்று பண்புகள் நமக்கும் வாழ்க்கைப் பாடங்களாக இருக்கின்றன:

(அ) பிரச்சினையைக் கையாளுதல்

வீட்டுப் பொறுப்பாளர் தன் கணக்கை முடிக்க வேண்டும் என்று தலைவர் விரும்புகின்றார். தன் வேலை போய்விடப் போகிறது என்பதை உணர்கின்றார் வீட்டுப் பொறுப்பாளர். இந்த வேலை இல்லை என்றால், மண் வெட்டி பிடிக்க வேண்டும் அல்லது இரந்து உண்ண வேண்டும். மண் வெட்ட வலிமை இல்லை. இரந்து உண்ண வெட்கமாக இருக்கிறது. அடுத்து என்ன? அடுத்து என்ன? என்று வழிமுறைகளை ஆராய்கின்றார். பிரச்சினையைத் தள்ளிப் போடாமல், உடனடியாகக் கையாளுகின்றார். தன் பிரச்சினைக்குத் தானே பொறுப்பு என உணர்கின்றார்.

(ஆ) தமக்குள்ளே சொல்லிக்கொண்டார்

லூக்கா நற்செய்தியாளர் மிகச் சிறந்த கதைசொல்லி. மனித உள்ளத்தில் அவர்கள் பேசுவதையும் பதிவு செய்வதில் கில்லாடி. இளைய மகனின் உள்ளத்தில், அறிவற்ற செல்வனின் உள்ளத்தில், இங்கே வீட்டுப் பொறுப்பாளர் உள்ளத்தில் எழும் எண்ணங்கள் என அனைத்தையும் அறிந்தவராக இருக்கின்றார். நமக்கு நாமே பேசும் சொற்கள் மிக முக்கியத்துவம் வாய்ந்தவை. அமைதியாக இருக்கும் பலர் தங்களுக்குள்ளே அதிகம் பேசுவதாக ஆய்வுகள் சொல்கின்றன. தமக்குள்ளே நடக்கும் அனைத்தையும் தெளிந்த உள்ளம் கொண்டிருக்கின்றார் வீட்டுப் பொறுப்பாளர்.

(இ) நிலையற்ற செல்வம் கொண்ட நிலையான உறைவிடம் ஏற்படுத்துதல்

'எது நிலையானது? எது நிலையற்றது?' என உடனடியாகத் தேர்ந்து தெளிகிறார் வீட்டுப் பொறுப்பாளர். தன் முழு அதிகாரத்தையும் பயன்படுத்தி, அழிந்து போகக் கூடியதை, தன் கையை விட்டுப் போகக் கூடியதை அழியாத செல்வமாக, அதாவது மக்களின் நம்பிக்கையை, நல்லெண்ணத்தை விலைக்கு வாங்குகின்றார். பல நேரங்களில் நாம் நிலையற்ற செல்வத்தைப் பெறுவதற்காக நிலையான நம்பிக்கையை, நல்லெண்ணத்தை விலைபேசுகின்றோம்.

இன்றைய முதல் வாசகத்தில் புனித பவுல், தன் பணியின் இயல்பு என்ன என்பதையும், தன் பணியின் இலக்கு மக்கள் யார் என்பதையும் தெளிவாக அறிந்தவராக இருப்பதைக் காண முடிகிறது.

இலக்குத் தெளிவும், அந்த இலக்கை நோக்கிய இயக்கமும் நம் வாழ்க்கைப் பாடங்கள்.

1 comment:

  1. இன்றைய இரு வாசகங்களுமே பணியின் இயல்பை சுமந்து வருகின்றன.நேர்மையற்ற வீட்டுப்பொறுப்பாளர் தான் மாட்டிக்கொண்ட நிலையில் துவண்டு போகாமல், அதிலிருந்து வெளிவர வழி தேடுவதுடன்,தன்னைச் சுற்றியிருப்பவர்களின் நல்லெண்ணத்தையும் சம்பாதிக்கிறார். சில சமயங்களின் இருளின் மக்களின் அளவுக்கு திருமுழுக்கையும்,தூய ஆவியையும் சேர்ந்தே பெற்றுள்ள ஒளியின் மக்கள் நம்மால்கூட செய்ய முடிவதில்லை என்று உணர்த்துகிறது இன்றைய வாசகம்.
    மனத்தில் சஞ்சலமில்லாத உரையாடல்களைத் தங்களுக்குள்ளே பேசிக்கொள்பவர்களுக்கு நம்பிக்கையின் நல்லெண்ணங்கள் தோன்றுகின்றன என்பதும்… இலக்கு தெளிவாக இருப்பவர்களுக்கு இயக்கமும் தெளிவாக இருக்கிறது என்பதற்கு இன்றைய வீட்டுப்பொறுப்பாளரும்… புனித பவுலும் சாட்சியாக நிற்கிறார்கள். அதிகாலைப்பொழுது…..அருமையான வார்த்தைகள்…தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete