Wednesday, February 28, 2018

அதை நினைத்துக்கொள்!

நாளைய (28.02.2018) நற்செய்தி (லூக் 16:19-31)

அதை நினைத்துக்கொள்!

அலுவலக நிதி பரிமாற்றம் தொடர்பாக இன்று இரண்டு வங்கிகளுக்குச் செல்ல நேரிட்டது.

மதுரை புதூரில் இருக்கும் இந்தியன் வங்கி. கே.கே. நகரில் இருக்கும் எச்டிஎப்சி வங்கி.
இந்தியன் வங்கி கூட்டத்தால் நிரம்பியது. எச்டிஎப்சி கூட்டமின்றி இருந்தது.
இந்தியன் வங்கிக்கு வெளியே நிறைய சைக்கிள்களும் சில பைக்குகளும் இருந்தன. மற்ற வங்கிக்கு வெளியே பைக்குகளும் சில கார்களும் நின்றன.

நான் சலான் நிரப்பிக் கொண்டிருந்தபோது 'கேசவன்' என்பவர் அருகில் வந்து தனக்கு ஒரு சலான் நிரப்புமாறு சொன்னார். தான் அடகு வைத்துள்ள தங்க நகையை திருப்ப வந்திருப்பதாகச் சொன்னார். அவர் அடகு வைத்து திருப்ப நினைத்த நகை என்னவென்று தெரியவில்லை. ஆனால், அவர் முகத்தில் அவ்வளவு மகிழ்ச்சி தெரிந்தது. சலான் நிரப்பி அவரைக் கவுண்டருக்கு அனுப்பிவிட்டு என் சலானைத் தொடர்ந்தேன். அங்கே மற்றொரு பெண் தன் நகையை அடகுவைக்குமாறு அங்கே வந்திருந்தார். தன் தாலியைத் தான் அடகு வைக்க வந்திருப்பார் என நினைக்கிறேன். ஏனெனில் புதிதாய் அவர் கழுத்தில் தொங்கிய மஞ்சள்கயிறு அப்படியே அவரது கறுப்பான தேகத்தில் பளிச்சென தெரிந்தது. 'எந்தச் சலான் நிரப்ப வேண்டும்?' என்று என்னிடம் கேட்டார். அதற்குள், 'நகையை வைக்க நேர கவுண்டருக்கு போங்க' என்று கேசவன் சொல்ல அந்தப் பெண் அங்கே சென்றுவிட்டார்.

ஒரே இடம். ஒரே நேரம்.
ஆனால், வாழ்க்கை மட்டும் ஒருவருக்கு வரவாகவும், மற்றவருக்கு செலவாகவும் இருக்கிறது.
இது ஏன்?

நிற்க.

'மகனே, நீ உன் வாழ்நாள்களில் நலன்களையே பெற்றாய். அதே வேளையில் இலாசர் இன்னல்களையே அடைந்தார். அதை நினைத்துக்கொள்!'

செல்வந்தர் - இலாசர் எடுத்துக்காட்டில் செல்வந்தனைப் பார்த்து ஆபிரகாம் சொல்லும் வார்த்தைகள் இவை.

வாழ்நாள்களில் பெற்ற நலன்களை மறந்துவிட்டதுதான் செல்வந்தன் செய்த தவறு.

இன்னல்களில் இருப்பவர்களுக்கு எண்ணமெல்லாம் தங்கள் இன்னல்கள் பற்றியே இருக்கும். அவர்களுக்கு மற்றவர்களைப் பற்றி எண்ண நேரமும், ஆற்றலும் இருக்காது. ஆனால், நலன்கள் பெற்றவர்களுக்கு அடுத்தவர்களைப் பற்றி எண்ண நேரமும், ஆற்றலும் நிறைய இருக்கும்.

நாம் பெற்ற நலன்களை எந்நேரமும் நினைவில் கொள்ள நாளை நாம் அழைக்கப்படுகிறோம். நம் நலன்களை நாம் நினைவில்கொள்ளும்போது நலன்கள் குன்றியவர்களை நாம் நினைத்துப்பார்க்க ஆரம்பிப்போம்.


Tuesday, February 27, 2018

செபதேயுவின் மனைவி

நாளைய (28 பிப்ரவரி 2018) நற்செய்தி (மத்தேயு 20:17-28)

செபதேயுவின் மனைவி

விவிலியத்தின் நற்செய்தி நூல்களில் வரும் 'செபதேயுவின் மனைவி' என்னும் இத்தாய் ஆச்சர்யத்துக்குரியவர். செபதேயுவின் மனைவி அல்லது செபதேயுவின் மக்கள் நிகழ்வு மத்தேயு (20:17-28) மற்றும் மாற்கு (10:35-45) நற்செய்தி நூல்களில் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இரண்டு நற்செய்தியாளர்களும் வௌ;வேறு விதங்களில் இதைப் பதிவு செய்கின்றனர்.

மத்தேயு: 'செபதேயுவின் மனைவி'
மாற்கு: 'செபதேயுவின் மக்கள்'
மத்தேயு: 'கிண்ணத்தில் குடிக்க முடியுமா?'
மாற்கு: 'கிண்ணத்தில் குடிக்க முடியுமா?' 'திருமுழுக்கு பெற முடியுமா?'

இந்த இரண்டு வித்தியாசங்கள் தவிர மற்றபடி பதிவுகளின் அமைப்பு ஒன்றுபோலவே இருக்கிறது:
அ. இயேசுவிடம் விண்ணப்பம்
ஆ. இயேசு வைக்கும் மினி இன்டர்வியு
இ. 'அதெல்லாம் முடியாது! முடியாது!' என்னும் இயேசுவின் பதில்
ஈ. மற்ற சீடர்களின் கோபம்
உ. சீடத்துவம் மற்றும் அதிகாரம் பற்றிய இயேசுவின் போதனை

சீடர்களின் முகத்தைக் காப்பாற்றுவதற்காகவே யோவான் மற்றும் யாக்கோபு ஆகியோரின் அம்மா வந்ததாக பதிவு செய்கிறார் மத்தேயு. ஓர் ஆண் எப்படி இன்னொரு ஆணிடம் விண்ணப்பம் செய்ய முடியும் என்ற எண்ணமும் மத்தேயவின் இப்பதிவுக்குப் பின்புலமாக இருந்திருக்கும்.

செபதேயுவின் மனைவியே இயேசுவிடம் வந்ததாக எடுத்துக்கொள்வோம்.

யோவான் மற்றும் யாக்கோபு ஆகியோரின் தாய் தம் பிள்ளைகளுக்காக இயேசுவிடம் விண்ணப்பம் செய்கின்றாள். ரொம்ப எளிதான விண்ணப்பம்: 'ஒருவர் வலப்புறமும் மற்றவர் இடப்புறமும் அமர வேண்டும்.' எப்போது? 'இயேசு ஆட்சி புரியும்போது'.

நல்லதுதானே!

நல்ல கள்வன் இயேசுவை அரசுரிமை பெற்றுவருபவர் என்று சொல்வதற்கு முன்னதாகவே செபதேயுவின் மனைவி அதைச் சொல்லிவிடுகிறாள். ஆண்களைவிட பெண்களுக்கு எதிர்காலத்தை கணிக்கும் திறன் அதிகமாக உண்டு. ஒருவரைப் பார்த்த மாத்திரத்தில் அவர்களின் இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் அனைத்தையும் கணக்கிட்டுவிடுவார்கள்.

செபதேயுவின் தாய் எதற்காக தன் மகன்களுக்காக விண்ணப்பிக்க வேண்டும்?

ஒருவேளை செபதேயு இறந்திருக்கலாம். தன் மகன்கள் வீட்டைக் கவனிப்பதற்குப் பதிலாக இப்படி ஒரு போதகரை நம்பி ஊர் சுற்றுகிறார்களே! என்ற கவலை வந்திருக்கலாம். 'நீங்க ஏன்டா இப்படி ஊர் சுத்துறீங்க?' என்று அவர்களைக் கேட்கும்போது, 'அவர் ஒன்னும் சாதாரண நபர் அல்ல. அவர்தான் மெசியா!' என்று அவர்கள் சொல்லியிருக்கலாம். எப்படியோ தன் மகன்களது எதிர்காலம் திட்டமிட்டபடி நன்றாக இருக்க வேண்டும் என்பது இந்த ஏழைத்தாயின் எளிய ஆசையாக இருக்கிறது. அரியணையின் வலப்புறம் மற்றும் இடப்புறம் தானே கேட்டாள். அரியணையையா கேட்டாள்?

செபதேயுவின் மனைவி ரொம்ப பிராக்டிக்கலா இருக்கின்றாள்.

அவளுக்கு மறுவாழ்வு, மோட்சம், நரகம் இவற்றில் எல்லாம் நம்பிக்கை இருப்பதுபோல தெரிவதில்லை. இயேசு இப்பொழுதே அரசன் ஆவார் என்றும், அரியணைக்கு அருகில் இடம் கிடைக்கும் என்ற எதார்த்தவாதியாக இருக்கின்றாள்.

இவள் துணிச்சல்காரியும் கூட.

ஆகையால்தான், 'நான் குடிக்கும் கிண்ணத்தில் உங்களால் குடிக்க முடியுமா?' என்று இயேசு கேட்டபோது, 'அது என்ன அப்படி ஒரு பெரிய கிண்ணம்? நாங்களும் குடிப்போம்' என்கிறாள்.

ஒருபக்கம், இயேசுவிடம் கேட்டுப் பெற்றுவிட வேண்டும் என்ற நம்பிக்கை.
இன்னொரு பக்கம், நம்பிக்கையோடு கைகோர்க்கும் துணிச்சல்.

மற்ற சீடர்களின் பொறாமை, கோபம், இயேசுவின் அறிவுரை பற்றி இவளுக்குக் கவலையில்லை. தன் மனதில் பட்டதைக் கேட்டுவிட வேண்டும். தன் மகன்கள் நன்றாக இருக்க வேண்டும். இது சுயநலம் அல்ல. மாறாக, தன் இருப்பை தன் ஆண்டவன்முன் பதிவு செய்கின்ற எளிய முயற்சி.

'அடுத்தவர்கள் என்ன நினைப்பார்கள்?' என்று நான் எத்தனை முறை என் தயக்கத்தால் பின்வாங்கியிருக்கிறேன்?
'அடுத்தவர்கள் கோபம் அல்லது பொறாமைப்படுவார்கள்!' என்று நினைத்து நான் எத்துனை முறை என் விருப்பங்களை என் கடவுள்முன் சொல்லாமல் இருந்திருக்கிறேன்?

நம்பிக்கையும், துணிச்சலும் கலந்த நல்கலவை செபதேயுவின் மனைவி.

Monday, February 26, 2018

மக்கள் பார்க்க வேண்டும்

நாளைய (27 பிப்ரவரி 2018) நற்செய்தி (மத் 23:1-12)

மக்கள் பார்க்க வேண்டும்

சின்னக் குழந்தை தட்டுத்தடுமாறி நடந்து வருவதைப் பார்த்திருப்போம்.

அது தட்டுத்தடுமாறி வரும்போது தானாக கீழே விழுந்துவிட்டால் தடவித் தடவி எழுந்து சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு தொடர்ந்து நடக்கத் தொடங்கிவிடும். ஆனால், ஒருவேளை, தான் விழுந்ததை அடுத்தவர் பார்த்துவிட்டார் எனத் தெரிந்தால் உடனே அழத் தொடங்கிவிடும். மற்றவர்முன் தன் தோல்வியை ஏற்றுக்கொள்ளமுடியாமல் எழும் கதறலே அது.

ஆக, அடுத்தவர் நம்மைப் பார்ப்பது நம்மை அறியாமலேயே நம்முள் நேர்முக மற்றும் எதிர்மறை உணர்வுகளை எழுப்புகிறது.

நமக்குப் பிடித்தவருக்கு பிடித்த கலர் அணிவது.
ஒரே மாதிரி யூனிஃபார்ம் சேலை அணிந்து சென்று கல்யாண வீட்டில் எல்லாரையும் உசுப்பேற்றிவிடுவது.
இப்படியாக அடுத்தவர் பார்க்க வேண்டும் என நாம் நிறையச் செய்கிறோம்.

'தாங்கள் செய்வதெல்லாம் மக்கள் பார்க்கவேண்டும் என்றே அவர்கள் செய்கிறார்கள்' - இப்படியாக தன் சமகாலத்து மறைநூல் அறிஞர்களைச் சாடுகின்றார் இயேசு.

நாம் கண்ணாடி முன் நிற்கும்போது கூட அந்த பிம்பத்தை நம் கண்கள் வழியாக இரசிப்பது ஒரு மூன்றாம் நபர்தான். அடுத்தவர் பார்க்க நாம் நிறைய காரியங்களைச் செய்கிறோம். மேலும், அடுத்தவர் பார்க்கச் செய்யும் வேலைகள் நிறைய வளர்ச்சிதருவனவாகவும் இருக்கின்றன.

ஹாஸ்டலில் வார்டன் பார்க்கிறார் என்பதற்காக படிக்கும் மாணவர்கள்.
அதிபர் பார்க்கிறார் என்பதற்காக ஆலயத்திற்கு வரும் குருமாணவர்கள்.
தன் வீட்டுக்காரர் பார்க்கிறார் என்பதற்தாக தலையை நிமிர்ந்து பார்க்கும் மனைவி.
இப்படி நிறைய இடங்களில் அடுத்தவரின் பார்த்தல் நம் வாழ்வில் ஒரு மேன்மை உணர்வை உருவாக்கவே செய்கிறது. இயேசு இந்த உணர்வுக்குக் கடிவாளம் இட அழைக்கின்றார். ஏனெனில், 'மக்கள் பார்க்க வேண்டும்' என்று நாம் செய்யும் செயல்கள் அனைத்திற்குமான பலனை நாம் அடுத்தவருக்குக் கொடுத்துவிடுகின்றோம். அமைதி காக்கின்றோம். மாறாக, தன்னை அறிதலும், தன்னம்பிக்கை உடையவரும் மக்களின் பார்த்தலை பெரிதாகப் பொருட்படுத்துவதில்லை.

இந்த நிலைக்கு அழைக்கிறது நாளைய நற்செய்தி வாசகம்.

Sunday, February 25, 2018

அமுக்கி குலுக்கி

நாளைய (26 பிப்ரவரி 2018) நற்செய்தி (லூக் 6:36-39)

அமுக்கி குலுக்கி

என் சிறுவயதில் எங்கள் வீட்டிற்கு அருகில் கிருஷ்ணசாமி நாயக்கர் அவர்களின் மாட்டுக்கொட்டகை இருந்தது. மாட்டுக்கொட்டகைதான் எங்கள் மாலைநேர விளையாட்டுக்கூடம். மாலை நேரத்தில் கறந்த பாலை ஊரில் உள்ளவர்களுக்கு விநியோகம் செய்வார் நாயக்கர். உள்ளுர்காரர்கள், வெளியூர்க்காரர்கள் என நிறையப்பேர் வருவார்கள். அதிகமாக 200 மிலி வாங்கும் அளவிற்குத்தான் எங்கள் ஊரின் நடுத்தர மக்களின் பொருளாதார நிலை இருந்தது. அப்படி வாங்கும் 200 மிலியை சரியாக அளந்து - அதாவது, ஒரு சொட்டுக்கூட வெளியில் ஊற்றாமல் - வழங்குவார் நாயக்கர். ஆனால், சிலருக்கு மட்டும் மிலி அளவை நிறைந்து வழியும் மட்டும் எடுத்து ஊற்றுவார். அப்படி எக்ஸ்டரா வருவது 2 அல்லது 5 மிலியாக இருக்கும். ஆனாலும் சிலருக்கு மட்டும் அவரின் கண்களில் தயை இருந்தது.

இதே போலத்தான் எங்க ஊரு பூசாரி. மாலையில் பூ கோர்த்து வீடுகளுக்கு விற்க வருவார். 100 பூ வாங்கும் சிலருக்கு 100 பூக்களை எண்ணி, மீண்டும் சில பூக்களை எண்ணி நூல் கொஞ்சம் அகல விட்டு வெட்டி மடியில் போடுவார். சிலருக்கு மட்டுமே இவரின் கண்களிலும் தயை கிடைத்தது.

'மனித கண்களில் தயை கிடைக்கும்போது' அவர்கள் 'அமுக்கு குலுக்கி சரிந்து விழும்படி மடியில் அளந்துபோடுவார்கள்' என்பது ரூத்து நூலில் நாம் காணும் நிகழ்வும்கூட.

நாளைய நற்செய்தியில் 'அமுக்கி குழுக்கிச் சரிந்து விழும்படி நன்றாய் அளந்து உங்கள் மடியில் போடுவார்கள்' - இந்த வாக்கியத்தின் பின்புலம் கோதுமை அல்லது பார்லி அறுவடையாகத்தான் இருக்கும்.

இதன் பொருள் என்னவென்றால் தாராளமாக இருப்பவர்கள் தாராளமாக பெறுவார்கள். கணக்கு பார்க்காமல் கொடுப்பவர்களுக்குக் கணக்குப் பார்க்காமல் கொடுக்கப்படும். கொடுப்பவன் தான் கொடுக்கின்ற அளவைக்கு ஏற்றாற்போல கொடுத்தால் போதும்தான். ஆனாலும், அவன் அமுக்கி குலுக்கி கொடுக்கும்போது தன்னிடம் உள்ளதை அடுத்தவருக்காக இழக்கத் துணிகிறான்.

ஆக, இரக்கம், மன்னிப்பு, கண்டனமின்மை, தாராள உள்ளம் என நாம் தாராளமாக இருந்தால் தாராளமாக அங்கே திரும்பி வரும்.

வாழ்வின் முக்கியமானவைகளும், இனிமையானவைகளும் அளவைகளுக்குள்ளும், அறிவியலுக்குள்ளும் வருவதில்லை. அவைகள் அவற்றைத் தாண்டியே நிற்கின்றன.


Friday, February 23, 2018

நல்லோர் மேலும் தீயோர் மேலும்

நாளைய (24 பிப்ரவரி 2018) நற்செய்தி (மத் 5:43-48)

நல்லோர் மேலும் தீயோர் மேலும்

நாளைய நற்செய்தி வாசகத்தில் இயேசு விடுக்கும் சவால் சற்றுக் கடினமாக இருக்கிறது.

நண்பர்களுக்கு நட்பு பகைவர்களுக்கு வெறுப்பு என்று காட்டுவதை விட கதிரவன் போல, மழைத் தண்ணீர் போல இருங்கள் என்கிறார் இயேசு. உயிர் மற்றும் உணர்வுகளை விட்டால்தான் இப்படி இருக்க முடியும். உயிரற்ற பொருள்கள்தாம் இப்படி இருக்க முடியும்.

வீட்டுத் தலைவர் திறந்தாலும் திருடன் திறந்தாலும் பீரோ திறக்கிறது.
யார் உட்கார்ந்தாலும் நாற்காலி தாங்கிக்கொள்கிறது.
யார் போட்டாலும் கண்ணாடி உடைகிறது.
ஆக, உயிரற்ற இந்த பொருள்கள் அடுத்தவரின் உணர்வு மற்றும் உறவு ஆகியவற்றால் மாறுவதில்லை.

நான் இன்று கார் ஓட்டுகிறேன் என வைத்துக்கொள்வோம். நான் இப்போதுதான் பழகுகிறேன் என்பதற்காக பிரேக் தானாக விழுமா? இல்லை. நான் தான் பிரேக் போட வேண்டும். ஆக, உயிரற்றவைகளுக்கு எல்லாம் ஒன்றுதான். எல்லாரும் ஒன்றுதான்.

ஆக, நண்பர்கள், பகைவர்கள், எதிரிகள், துரோகிகள், விரோதிகள் என அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டு; என்றால் ஏறக்குறைய உயிர் அற்றவர்களாக, உணர்வு அற்றவர்களாக இருக்க வேண்டும். இல்லையா?

சிலர் சொல்வாங்க. சின்னக் குழந்தைபோல இருத்தல் என்று.

சின்ன குழந்தைகளுக்கும் விருப்பு, வெறுப்புக்கள் இருக்கவே செய்கின்றன. அவைகள் எல்லாரிடமும் ஒரே உணர்வோடு இருப்பதில்லை.

உயிரற்று, உணர்வற்று இருக்கும் அந்த நிலையை இயேசு விண்ணகத்தந்தையின் இயல்பு என்கிறார்.

இன்று ஒருநாள் உணர்வற்று இருக்க முயற்சி செய்துபார்க்கலாமே!

கடைசிக் காசு

நாளைய (23 பிப்ரவரி 2018) நற்செய்தி (மத் 5:20-26)

கடைசிக் காசு

இயேசுவின் மலைப்பொழிவின் ஒரு பகுதியாக இருக்கும் நாளைய நற்செய்தி வாசகத்தின் இறுதியில் இயேசு நாம் எதிரியோடு செய்துகொள்ள வேண்டிய சமரசம் பற்றிக் குறிப்பிடுகின்றார்.

'உங்கள் எதிரி உங்களை நீதிமன்றத்திற்கு அழைத்துச்செல்லும்போது' என தொடங்குகிறது அறிவுரைப் பகுதி. எதற்காக எதிரி நீதிமன்றத்திற்கு அழைத்துச்செல்கிறார் என்றும், மற்றவர் என்ன குற்றம் செய்திருந்தார் என்பதையும் வாசகர்தாம் ஊகித்துக்கொள்ள வேண்டும். ஒருவேளை கடன்வாங்கிவிட்டு திரும்பச் செலுத்தாமல் இருந்திருப்பார் மற்றவர். அல்லது ஏதாவது குற்றம் செய்துவிட்டு பிணையாக பணம் செலுத்த வேண்டியவராக இருப்பார்.

இப்படி அவர் நம்மை அழைத்துச் செல்லும்போது நாம் செய்ய வேண்டியது விவாதமோ, விளக்கமோ அல்ல. மாறாக, உடன்பாடு. எப்பாடு பட்டாவது உடன்பாடு செய்ய வேண்டும். இல்லையென்றால் நாம் நடுவரிடம், நடுவர் நம்மை காவலரிடம் ஒப்படைக்க 'கடைசு காசு திருப்பித்தரும்வரை' நாம் சிறையில் இருக்க வேண்டும்.

ஆக, வழிநெடுகில் நடக்கும் ஒரு சின்ன உடன்பாடு நம் வாழ்வின் பொருள் மற்றும் நிம்மதி இழப்பிலிருந்து நம்மைக் காப்பாற்றிவிடுகிறது.

துன்பம் நமக்குத்தான் வரப்போகிறது என்றால், அந்தத் துன்பத்தை இவ்வாறாக துடைத்துக்கொள்ள அறிவுறுத்துகின்றார் இயேசு.

வழிநெடுகில் நடக்கும் உடன்பாடு - இதை நமக்கும் கடவுளுக்கும் உள்ள உறவில்கூட பொருத்திப்பார்க்கலாம்.

வழிநெடுகில் நடந்து உடன்பாடு செய்யும்போது நாம் மற்றவரோடு பேச வேண்டும். அவர் சொல்வதைக் கேட்க வேண்டும். அவரின் விதிமுறைகளுக்குக் கட்டுப்பட வேண்டும். இதுதான் உடன்பாடு. இறைவனுக்கும் எனக்கும் உள்ள உறவில் நான் எந்த அளவிற்கு அவரோடு வழிநடக்க விரும்புகிறேன்?

நான் செலுத்த வேண்டிய கடைசிக்காசு என்ன?

'கடைசிக்காசை திரும்ப செலுத்துவதில்' ஒருவகையான கட்டின்மை இருக்கும்.
அந்தக் கட்டின்மையை மிக எளிதான வழியாக வழிநெடுகில் முடித்துக்கொள்ள வேண்டிய வழியாகக் காட்டுகின்றார் இயேசு.

ஆக, எனக்கும் பிறருக்குமான உறவில், எனக்கும் இறைவனுக்குமான உறவில் நான் விரைவாக உடன்பாடு செய்துகொள்ள விரும்புகிறேனா?

Wednesday, February 21, 2018

பேதுருவின் தலைமைப்பீடம்

நாளை பேதுருவின் தலைமைப்பீட விழாவைக் கொண்டாடுகிறோம்.

உரோமை தூய பேதுரு பேராலயத்தில் நம் வலது புறத்தில் பேதுருவின் வெண்கலச்சிலை ஒன்று உண்டு. வழக்கமாக வைத்திருக்கும் சாவிகள் இல்லாமல் ஒரு நாற்காலி, ஒரு தொப்பி என ஒய்யாரமாக அமர்ந்திருப்பார். அவரின் பாதங்கள் பக்தர்களின் கரம் பட்டதால் சூம்பிப்போய் இருக்கும்.

பேதுருவின் வித்தியாசமான இந்த முகத்தையே நாளை திருநாளாகக் கொண்டாடுகிறோம்.

பேதுருவின் வாழ்க்கையை 'கண்ணீருக்கு முன்,' 'கண்ணீருக்கு பின்' என்று இரண்டாகப் பிரிக்கலாம். சேவல் கூவிய அந்த இளங்காலைப் பொழுதில் அவர் வடித்த கண்ணீர்த்துளிகள்தாம்.

தினமும் காலையில் சேவல் கூவும் சத்தம் கேட்கும்போதெல்லாம் இவருக்கு தான் செய்த பாவம்தானே நினைவிற்கு வந்திருக்கும்!

பழையது நல்லது என்றால் நாம் திரும்ப நினைத்து அசைபோடுகின்றோம்.

கெட்டது என்றால் அதைப்பற்றியே நினைக்க மறுக்கின்றோம்.

பேதுருவை தலைமைத்துவத்திற்கு உயர்த்தியது கடவுளின் அருள்தான் என்றாலும், அவரின் இந்த நல்ல குணமும்தான். அதாவது, தவறு செய்துவிட்டேன். கண்ணீர் வடித்துவிட்டேன். மாறிவிட்டேன். தன் குற்ற உணர்வு தன்னைக் கட்டிப்போட அவர் அனுமதிக்கவில்லை.

இந்தக் கட்டின்மையே எல்லா ஆன்மீகத்தின் ஆணிவேர்.

எந்த இடத்திலும் நாம் கட்டின்மையை அடையலாம்.

இறுதியாக,

'ஆண்டவரே, உமக்கு எல்லாம் தெரியுமே!
எனக்கு உம்மீது அன்பு உண்டு என்பது நீர் அறியாத ஒன்றா?'

என்கிறார் பேதுரு.

தான் மறுதலித்ததையும் மறந்துவிட்டார் பேதுரு. அன்பின் வலிமை இதுவே.


Tuesday, February 20, 2018

யோனாவைவிட பெரியவர்!

நாளைய (21 பிப்ரவரி 2018) நற்செய்தி

யோனாவைவிட பெரியவர்!

நாளைய நற்செய்தி வாசகத்தில் தன்னிடம் அடையாளம் கேட்கும் தன் தலைமுறை மக்களைச் சாடுகின்ற இயேசு அவர்களுக்கு 'யோனாவின்' அடையாளம் தருகின்றார்.

யோனா இறைவாக்கினர் நூல் மிகவும் வித்தியாமான நூல். ஏனெனில் இதன் கதாநாயகன் வித்தியாசமானவர். வேண்டா வெறுப்பாக நற்செய்தியை அறிவித்தாலும் இவரின் வார்த்தைகளைக் கேட்கின்ற மக்கள் மனமாற்றம் அடைகின்றனர். யோனா இயேசுவின் சமகாலத்தவருக்கு மிகவும் அறிமுகமான கதைமாந்தராக இருந்திருப்பார். ஆகையால்தான் மக்களுக்கு பரிச்சயமான ஓர் அடையாளத்தை அவர்களுக்குத் தருகின்றார்.

யோனாவைவிட இயேசு இரண்டு விதங்களில் பெரியவராக இருக்கிறார்:

அ. யோனா இரண்டாம் முறைதான் நற்செய்தியை அறிவிக்கின்றார். இயேசுவோ முதல் முறையிலேயே அதைச் செய்கின்றார்.

ஆ. யோனா கடவுளின் இரக்கத்தைக் கடிந்துகொள்கின்றார். ஆனால் இயேசுவோ கடவுளின் இரக்கத்தை மக்களுக்கு வெளிப்படுத்துகின்றார்.

அறிகுறிகள் இல்லாமலேயே யோனாவை அறிந்துகொண்டனர் நினிவே மக்கள்.
அறிகுறி கொடுத்தும் இயேசுவை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர் இயேசுவின் சமகாலத்தவர்.

யோனாவைவிட பெரியவர் இன்று என் அருகில் என்றால் என் எதிர்வினை எப்படி இருக்கிறது?


Monday, February 19, 2018

அவர்களைப் போல இருக்க வேண்டாம்!

நாளைய (20 பிப்ரவரி 2018) நற்செய்தி (மத்தேயு 6:7-15)

அவர்களைப் போல இருக்க வேண்டாம்!

தம் சீடர்களுக்கு செபிக்கக் கற்றுக்கொடுக்கின்ற இயேசு, 'நீங்கள் அவர்களைப் போல் இருக்க வேண்டாம்!' என்று சொல்கிறார்.

'அடுத்தவரைப் போல இருப்பது' என்பது நமக்கு அடிக்கடி வரும் சோதனை.
அடுத்தவரைப் போல பேசுவது, செயல்படுவது, பண்புகளை வளர்த்துக்கொள்வது, உடை அணிவது என நாம் நிறைய 'போல' செய்கின்றோம். இயேசுவைப் பொறுத்தவரையில் 'போலச் செய்வது எல்லாமே போலியாகச் செய்வதுதான்.'

அடுத்தவரைப் போல ஏன் செபிக்க வேண்டாம் என இயேசு சொல்கின்றார்?

அடுத்தவரைப் போல இருப்பது மிக எளிதானது. ரொம்ப சிம்ப்பிளா புரியனும்னா நாம பயன்படுத்துகிற 'சைனா ஃபோன்கள்.' இவைகளுக்கு என்று எந்தவொரு ஆய்வு மற்றும் மேம்பாடு செலவு கிடையாது. இவைகள் செய்வதெல்லாம் ஏற்கனவே இருக்கும் ஃபோனைப் போல செய்வதுதான். ஆகையால்தான், எல்லா ஃபோன்களுக்கும் போலியான 'போல' ஃபோன்கள் கிடைக்கின்றன. இவைகள் விலை மலிவானவை. இவைகள் முகவரிகள் அற்றவை. இவைகள் தங்கள் அடையாளங்களை மறைத்துக்கொள்பவை.

இயேசு தன் சீடர்கள் அனைவருக்கும் சொல்வது இதுதான்: 'நீங்கள் விலையேறப் பெற்றவர்கள். நீங்கள் முகவரிகள் கொண்டவர்கள். நீங்கள் வானகத் தந்தையின் பிள்ளைகள் என்ற அடையாளத்தைக் கொண்டிருப்பவர்கள்.'

இயேசுவின் சீடராகிய நாம் ஒவ்வொருவரும் ஒரு விசிட்ங் கார்ட் அடித்தால் அதில் என்னவெல்லாம் இருக்க வேண்டும் என்பதை நாளைய நற்செய்தி வாசகம் நமக்குச் சொல்கிறது:
பெயர்: கடவுளின் மகன்-மகள்
வயது: அன்றாடம்
முகவரி: மேலே வானம், கீழே பூமி
முக்கிய பண்புகள்: திருவுளம் நிறைவேற்றுவது, அன்றாடம் உழைப்பது, மன்னிப்பது, சோதனைக்கு உட்படாமல் இருப்பது, தீமையிலிருந்து விடுதலை பெறுவது

இன்று நாம் யாரைப் போலவும் இருக்காமல் அல்லது மாறாமல் இருக்க முன்வரலாமே!


எனக்கே செய்தீர்கள்!

நாளைய (20.02.2018) நற்செய்தி (மத் 25:31-46)

எனக்கே செய்தீர்கள்!

'மிகச் சிறியோராகிய இவர்களுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததை எல்லாம் எனக்கே செய்தீர்கள்!'

நாளைய நற்செய்தியில் வரும் மேற்காணும் வாக்கியம் எனக்கு எப்போதும் நெருடலாகவே இருக்கும்.

'மிகச் சிறியோராகிய இவர்களுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததை எல்லாம் இவருக்கே செய்தீர்கள்' என இயேசு சொல்லியிருந்தால் நலமாய் இருந்திருக்கும் எனத் தோன்றுகிறது. எப்படி?

மனிதர்கள் இலக்குகள். அவர்கள் ஒருபோதும் இலக்குகளை அடையப் பயன்படுத்தப்படும் பொருள் அல்ல. மனிதர் என்பவர் ஒரு நிலவு. அவர் அந்த நிலவிற்குச் செல்லப் பயன்படும் ராக்கெட் அல்ல. ஆக, தங்களிலேயே நிறைவு பெற்றிருக்கின்ற மனிதர் ஒருவரைப் பயன்படுத்தி நான் மோட்சம் அல்லது நிறைவாழ்வு அடைய விரும்புவது தவறு. 'இவருக்கு நான் துணி கொடுத்தால், தண்ணீர் கொடுத்தால், எனக்கு மோட்சம் கிடைக்கும்' என்றால் நான் உண்மையில் இந்த நபரை என் தேவைக்காக பயன்படுத்துகிறேன் என்பதுதானே பொருள்.

'நான் உங்களுக்குச் செய்யவில்லை. கடவுளுக்கே செய்கிறேன்' என்று சொல்லிக்கொண்டு தொழுநோய் பிடித்தவரின் புண்களைத் துடைத்த அன்னை தெரசாவைப் பார்த்து அந்த மனிதர் சொன்னாராம்: 'நிறுத்திக்கொள்ளுங்கள். போதும். நீங்கள் செய்ததை எனக்காக செய்யவில்லை என்றால் உங்கள் உதவி எனக்குத் தேவையில்லை.'

இன்று நாம் செய்யும் எந்தச் செயல்களும் பிறரைப் பயன்படுத்தி நம் மோட்சத்தை அடைவதாக இருந்தால் அது தவறு என்பதை உணர்ந்துகொள்ளலாம்.

இங்கே ஒரே ஒரு ஆறதல்:

கடவுள் வலுக்குறைந்தவர்களோடு தன்னை ஒன்றிணைத்துக்கொள்கிறார்.

Friday, February 16, 2018

நுகம்

வேடிக்கையான கதை ஒன்று கேள்விப்பட்டிருப்பீர்கள்.

ஒரு ஏழைக்குடியானவன் தன் பண்ணையாரின் தோட்டத்தில் விறகு பொறுக்கச் செல்கின்றான். தனக்குரிய வேலையை முடித்துவிட்டு, விறகுகளும் பொறுக்கிக்கொண்டு வீடு திரும்புகிறான். விறகுக்கட்டு அழுத்திக் கொண்டே வருகிறது. விறகுக்கட்டையின் சுமையோடு அவன் தள்ளாடவும் செய்கிறான். சற்று நேரத்தில் அவன் பின்னாலயே ஒரு டிராக்டர் வரும் சப்தம். சற்றே திரும்பிப் பார்க்க அது தன் பண்ணையாரின் டிராக்டர் என்றதும் சந்தோஷம். தன்னையும் அதில் ஏற்றுக்கொள்ளுமாறு பண்ணையாரிடம் கேட்கின்றார். பண்ணையாரும் அவனை ஏற்றிக்கொள்கின்றார். சற்று தூரம் போனதும் பண்ணையார் திரும்பிப் பார்க்க, இவன் விறகுக்கட்டைத் தலையில் வைத்தவாறே நின்று கொண்டு பயணம் செய்வதைப் பார்க்கின்றார். 'ஏம்ப்பா! அதைக் கொஞ்சம் கீழே இறக்கி வைச்சுட்டு சுகமா வரலாம்ல!' என்கிறார். 'இல்லயா! எனக்கு நீங்க டிராக்டர்ல இடம் கொடுத்ததே சந்தோஷம். என் சுமை என்னோட போகட்டும்! இதையும் இறக்கி வச்சி நான் உங்களுக்குக் கஷ்டம் கொடுக்க வேணாம்!' என்று பதில் சொல்கிறான்.

'உன்னிடையே இருக்கும் நுகத்தை அகற்றிவிட்டு...' (எசாயா 58:9)

நேற்றைய முதல் வாசகத்தின் தொடர்ச்சியே நாளைய முதல் வாசகமும். நேற்றைய வாசகத்திலும் 'நுகத்தின் பிணையல்களை அறுப்பதும் ... ... எவ்வகை நுகத்தையும் உடைப்பதன்றோ நான் தேர்ந்துகொள்ளும் நோன்பு' (எசாயா 58:6) என்று நாம் வாசித்தோம்.

இந்த ஏழைக்குடியானவனைப் போல வாழ்க்கை என்ற டிராக்டர் பயணத்தில் நாம் இறக்கி வைக்காமல் சுமந்து கொண்டு வரும் சுமைகள் நிறையவே இருக்கின்றன.

'நுகம்!'

இந்த வார்த்தை உழவு உலகின் வார்த்தை. ஏர் பிடித்து உழும்போது ஏரை மாடுகளோடு இணைக்கும் குறுக்குக் கம்பும், மாட்டு வண்டியின் வண்டிப்பகுதியை மாடுகளின் மேல், அல்லது ஒற்றை மாட்டின் மேல் இணைக்கும் குறுக்குக் கம்பும் தான் நுகம்.

நுகம் ஒரு மரக்கட்டை. மாடுகளையும் ஏரையும், மாடுகளையும் வண்டியையும் பிணைக்கும் ஒரு இணைப்புக் கோடு. மாடுகளுக்கும், வண்டிக்கும் தொடர்பை ஏற்படுத்தக் கூடியது நுகம் தான். சமஸ்கிருத வார்த்தையான 'யோகா'விற்கும் 'நுகம்' என்றே பொருள். அதாவது, யோகா தான் நம் உடலில் உள்ள ஆன்மாவையும், உடலுக்கு வெளியே இருக்கும் பெரிய ஆன்மாவான 'பிரம்மாவையும்' இணைக்கிறது.

இந்த மாடுகள் என்ன நினைக்குமாம்? அன்றாடம் நுகத்தை தங்கள் கழுத்தில் வாங்கி வாங்கிப் பழக்கப்பட்டு, இந்த நுகங்களும் தங்களின் கழுத்தின் ஒரு பகுதி போல என்று நினைக்குமாம்! (மாடு நினைக்கிறது உனக்கு எப்படித் தெரியும் என்று கேட்காதீங்க!) அண்மையில் டிவியில் நாய்க்கான உணவு விளம்பரம் பார்த்தேன். அந்த விளம்பரத்தின் இறுதியில் - 'இன்னும் மேம்படுத்தப்பட்ட சுவையோடு!' என்று போட்டார்கள். எனக்கு நானே கேட்டுக்கொண்டேன்: 'மேம்படுத்தப்பட்ட சுவைன்னு யார் டேஸ்ட் பண்ணியிருப்பா?' - அத மாதிரிதான் இதுவும்! சரியா?

மாடுகளை எஜமானன் அல்லது அதன் உரிமையாளன் அடிமைப்படுத்தித் தன் வேலைக்குப் பயன்படுத்தும் ஒரு உபகரணமே நுகம். ஆக, நுகம் என்பது அடிமைத்தனத்தின் அடையாளம். செதேக்கிய அரசன் காலத்தில் பாபிலோனியா அடிமைப்படுத்தப்படும் என்பதை எரேமியா இறைவாக்கினர் கழுத்தில் நுகத்தைச் சுமந்து கொண்டு இறைவாக்கு உரைக்கும் நிகழ்வை நாம் அறிவோம் (காண்க. எரேமியா 27).

நுகம் இணைக்கிறது அப்படின்னு சொல்றோம்! பின் எப்படி இது அடிமைத்தனம் ஆகலாம்?

இதுதான் இன்றைய சிந்தனை.

மனிதர்கள் தங்களிலே நிறைவு இல்லாதவர்கள். ஏதாவது ஒன்றோடு அவர்கள் தங்களை இணைத்துக்கொண்டிருத்தலில் தான் தங்களின் நிறைவை அவர்கள் காண்கிறார்கள். நம் உள்ளத்தில் எப்போதும் ஒரு அநாதை உணர்வும், பாதுகாப்பற்ற உணர்வும் நீங்காமல் நிலைகொண்டுள்ளது. அதனால் தான் நாம் மற்றவர்களைத் தேடுகிறோம். மற்றவைகளோடு நம்மையே இணைத்துக்கொள்ள விரும்புகிறோம்.

தாயின் கருவறையில் நம்மைத் தாயோடு இணைக்கும் தொப்புள் கொடியும் ஒரு நுகம் தான். அதாவது, அது நம்மைத் தாயோடு இணைக்கிறது. ஆனால், அந்த நுகம் இருந்து கொண்டே இருந்தால் நல்லா இருக்குமா? சரியான நேரத்தில் தொப்புள் கொடி அறுக்கப்படவில்லையென்றால் அது தாய்க்கும், சேய்க்கும் ஆபத்தாக மாறிவிடுகின்றது. இந்த இணைப்பு அறுந்து வெளியே வரும்போது நாம் முதல் பாதுகாப்பற்ற உணர்வை அனுபவிக்கின்றோம். இந்த உணர்வின் வெளிப்பாடே கண்ணீர். இந்த உலகிற்குப் பயத்தோடே நாம் வெளியே வருவதால் தான் நாம் நம் கைகளைக் கூடி இறுக்க மூடிக்கொண்டு பிறக்கின்றோம். (இது ஒரு அதிசயம் தான்! ஏனெனில் கையை விரித்துக்கொண்டு பிறந்தால் நம் பிஞ்சு நகம் நம் பிறப்பின் குழாயைச் சேதப்படுத்தும் வாய்ப்பும் உண்டு!) பிறந்தபின் கைகளை விரிக்கும் நாம் எதையாவது பற்றிக்கொள்ளவே விரும்புகிறோம் - படிப்பு, பெயர், பணம், பொருள், புகழ், பக்தி, உறவு - ஒன்றை விட்டு மற்றொன்றை நாம் பிடித்து அவற்றோடு இணைத்துக்கொள்ள விரும்புகிறோம். அப்படி இருக்கும் இணைப்பு காலப்போக்கில் அடிமைத்தனமாகவும் மாறும்போதுதான் அது ஆபத்தாகி நம் மகிழ்வைக் குலைக்க ஆரம்பிக்கிறது.

எந்த நுகம் நம்மை இணைக்கிறதோ, அதே நுகம் நம்மை அடிமைப்படுத்தவும் செய்கிறது.

இதில் பிரச்சினை என்னன்னா? எந்த நுகம் நம்மை இணைக்கிறது, எந்த நுகம் நம்மை அடிமைப்படுத்துகிறது என்று நம்மால் கண்டுபிடிக்க முடிவதில்லை. சில நேரங்களில் இணைக்கும் நுகத்தை அடிமைத்தனம் எனவும், அடிமைத்தனத்தை நல்ல நுகம் என்று கூட நாம் நினைத்துவிடத் தொடங்குகிறோம்.

நுகம் நமக்கு வெளியில் தான் இருக்க வேண்டும் என்பதல்ல. நமக்கு உள்ளேயும் இருக்கலாம். நம் உள்ளத்தில் இருக்கின்ற எதிர்மறை உணர்வுகள், பயம், சின்னச் சின்ன இன்பங்களின் பின்னால் போகும் நிலையற்ற மனப்பக்குவம் என்று நம் உள்ளுக்குள்ளும் நுகங்கள் இருக்கலாம்.

இந்த நுகங்களை நாம் அடையாளம் காணுதலே அவைகளை அகற்றுவதற்கான முதல் படி.

இப்படி இருக்கும் நுகங்களை நாம் அகற்றிவிட்டால் அதன் பலன் என்ன என்பதை தொடர்ந்து எசாயா எழுதுகின்றார்:

'இருள் நடுவே உன் ஒளி உதிக்கும்.
ஆண்டவர் தொடர்ந்து உன்னை வழிநடத்துவார்.
வறண்ட சூழலில் உனக்கு நிறைவளிப்பார்.
உன் எலும்புகளை வலிமையாக்குவார்.
நீயும் நீர் பாய்ந்த தோட்டம் போலும்,
ஒருபோதும் வற்றாத நீரூற்று போலும் இருப்பாய்.'
(எசாயா 58:10ஆ-11)

விரதம்

நாளைய (16 பிப்ரவரி) வாசகம்

பசித்தோர்க்கு உங்கள் உணவைப் பகிர்ந்து கொடுப்பதும்
தங்க இடமில்லாத வறியோரை உங்கள் இல்லத்திற்கு அழைத்து வருவதும்
உடையற்றோரைக் காணும் போது அவர்களுக்கு உடுக்கக் கொடுப்பதும்
உங்கள் இனத்தாருக்கு உங்களை மறைத்துக் கொள்ளாதிருப்பதும் அன்றோ
நான் விரும்பும் நோன்பு!
(எசாயா 58:7)

'நோன்பு'

இதைப் புரிந்து கொள்ளப் பயன்படும் இன்னொரு வார்த்தை 'விரதம்'. 'விரதம்' என்னும் சொல்லின் மூலம் 'வ்ரதா' என்னும் சமஸ்கிருதச் சொல். அதன் அர்த்தம், 'ஆன்மீக வாக்குறுதி'. என் நண்பர் ஒருவரின் பெயர் வரன் வரதன். இன்றுதான் அவரது பெயரின் இரண்டாம் பகுதி புரிகிறது - 'ஆன்மீக வாக்குறுதியின் வரம்' அந்தப் பெயரின் பொருளாக இருக்க முடியும். 'வ்ரதா' என்பதை இன்னும் தோண்டிப் பார்த்தால் அதன் மூலம் 'வ்ர்ன்' என்னும் மூன்று எழுத்துகள். இதன் பொருள் - நான் தெரிவு செய்கிறேன். திருமண வரம் அல்லது வரன் என்பதும் இதிலிருந்துதான் வருகிறது. (அப்படின்னா நம்ம நண்பரோட பெயர் ஒரே பொருளைக் கொண்ட அடுத்தடுத்த இரண்டு வார்த்தைகள் தாம் போல. அவரிடமே சீக்கிரம் கேட்டு விடுவோம்!)

விரதம் என்பது ஏதாவது ஒரு குறிப்பிட்ட சடங்கை தன்னார்வமாக, ஒரு குறிப்பிட்ட நாட்களுக்குச் செய்வது. இதைச் செய்யக் காரணம் இப்படிச் செய்வதன் வழியாக ஒருவரின் இஷ்ட தெய்வத்தைத் திருப்திப்படுத்தி, அவரிடமிருந்து விரதமிருப்பவர் தான் வேண்டுவதைப் பெற்றுக்கொள்வது.

நம் இந்தியப் புராணங்களில் கூட 'காயிக வ்ரதா' (உடல் சார்ந்தது), 'வாச்சிக வ்ரதா' (வார்த்தை சார்ந்தது) மற்றும 'மானச வ்ரதா' (மனம் சார்ந்தது) என்று விரதங்கள் பற்றிய குறிப்புகள் உள்ளன.

விரதத்தில் முக்கியம் தூய்மை. அதாவது, எந்த உணவும் உள்செல்லாமல் நாம் நம்மில் எப்படி இருக்கிறோமோ அப்படி இருப்பதுதான் விரதம்.

முதல் ஏற்பாட்டு எசாயா கடவுளுக்கு இந்த விரதம் பிடிக்கவில்லை என எழுதுகிறார். 'நீ உன்னையே பார்த்துக்கொண்டிருப்பதற்குப் பதில் உன் அருகில் இருப்பவரைப் பார்! அதுதான் நான் விரும்பும் விரதம்' என்கிறார் அவர்.

இதை வரலாற்றுப் பிண்ணனியோடு புரிந்து கொள்வோம். எசாயா 58 எழுதப்பட்ட ஆண்டு பாபிலோனிய அடிமைத்தனத்திற்குப் பின். அடிமைத்தனத்திலிருந்து வீடு திரும்பியவர்கள் உண்ண உணவில்லாமல், உடுக்க உடையில்லாமல், தங்குவதற்கு இடமில்லாமல் தெருக்களில் அலைந்து திரிகின்றனர். இவர்களுக்கு யார் உணவும், உடையும், இடமும் கொடுக்க வேண்டும்? ஏற்கனவே இவைகளையெல்லாம் வைத்திருக்கும் எருசலேம் வாசிகள் தான்! 'நீ குடுன்னா' யாராவது சும்மா குடுப்பாங்களா? இல்லை. சாமி கண்ணக்குத்தும், ரத்தம் கக்கிச் சாவ! அப்படின்னு பயமுறுத்துனாதான் குடுப்பாங்க. ஆகையால்தான் ஒரு சமூக மாற்றத்திற்கான விதையை விதைக்க எசாயா 'கடவுளைப்' பயன்படுத்திக்கொள்கின்றார்.

இன்றும் அடிமைத்தனத்திலிருந்து திரும்பியவர்கள் போல் தான் நம்ம ஊரும், நம்ம உலகமும் இருக்கின்றது. நாம் நோன்பு இருப்பது நமக்குப் பயன்தர வேண்டும், கேட்டது கிடைக்க வேண்டும் என்று மட்டும் இல்லாமல் தேவையில் இருக்கும் நம் சகோதர, சகோதரியைப் பார்த்து 'என்னப்பா நல்லா இருக்கிறியா?' என்று கேட்டாலே தவக்காலம் அருளின் காலம் தான்.

Wednesday, February 14, 2018

தன்னலம் துறந்து

நாளைய (15 பிப்ரவரி 2018) நற்செய்தி (லூக் 9:22-25)

தன்னலம் துறந்து

அய்ன் ரான்ட் அவர்கள் எழுதிய 'தெ வெர்ச்யு ஆஃப் செல்ஃபிஷ்னஸ்' என்ற நூல் அமெரிக்காவின் முதலாளித்துவத்தை ஆதரித்து எழுதப்பட்ட ஒரு நூல். நம்மிடம் இருக்கும் தன்னலத்தை ஒரு மதிப்பீடாகப் பார்க்கிறது இந்நூல்.

ஆனால், நாளைய நற்செய்தி வாசகத்தில் இதற்கு முற்றிலும் மாறாக, 'தன்னலம் துறத்தல்' என்பதை மதிப்பீடாக முன்வைக்கின்றார். மனித பரிணாம வளர்ச்சியில் தன்னலம் மிகவும் முக்கியம். தன்னலம் கொண்டிருக்கின்ற உயிரினமே வளர்ந்திருக்கிறது என்பதற்கு அறிவியலும், விஞ்ஞானமும் சான்றுபகர்கின்றன. இப்படி நம்முடைய ஜீனில் மிக முக்கியமாக இருக்கும் இந்த 'தன்னலம்' என்ற டி.என்.ஏவை நம்மால் வெளியே எடுத்துவிட முடியுமா?

தன்னலம் என்பது 'நான்' மற்றும் 'எனது' என இரண்டு நிலைகளில் இருக்கிறது என்று எம் பேராயர் குறிப்பிடுவார். எப்போதெல்லாம் என் மனம் 'நான்' என்பதையும், 'எனது' என்பதையும் கொண்டிருக்கின்றதோ அப்போதெல்லாம் அது தன்னலமே கொண்டிருக்கின்றது. 'நான்' என்பதும், 'எனது' என்பதும் இல்லாமல் நாம் எதையும் கற்பனை செய்துபார்க்கவே முடியாது. 'பிறர்' என்று சொல்வதற்குக்கூட 'நான்' அவசியமாகிறது.

இவ்வளவு கடினமான ஒன்றை ஏன் சீடத்துவத்தின் முதல் செக்பாய்ண்டாக இயேசு வைக்க வேண்டும்?

ஏனெனில் இயேசுவின் பார்வை வித்தியாசமாக இருக்கிறது. எப்படி? தன்னலம் துறத்தல் என்பது மடிதல் அனுபவம். அந்த மடிதல் அனுபவம் புதிய உயிருக்கு வழி வகுக்கிறது. ரொம்ப சிம்பிள். ஒரு விதை இருக்கிறது. அந்த விதைக்கென்ற சில 'நான்களும்' 'சில எனதுகளும்' - கலர், டேஸ்ட் போன்றவை. ஆனால், அது எப்போது அவற்றை இழக்கிறதோ அப்போது யாரும் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவிற்கு ஒரு செடியாக, மரமாக வளர்ச்சி பெறுகிறது.

ஆக, தன்னலம் துறத்தல் என்பது என் வெளியடையாளங்களைக் கடந்து என் உள் ஆற்றல்தளத்திற்குச் செல்லுதல். பல நேரங்களில் நாம் வைத்திருக்கின்ற 'நான்' மற்றும் 'எனது' என்ற அடையாளங்கள் நம் ஆற்றலை வீணாக்குபவையாக அல்லது ஆற்றலை அழிப்பவையாக இருக்கின்றன. வெங்காயத்தின் ஒவ்வொரு தோலாக இதை நாம் கழற்றிக்கொண்டே போகும்போது சில நேரங்களில் ஆற்றல்மிக்க அந்த கருவையும், சில நேரங்களில் ஒன்றுமில்லாமைiயும் கண்டுகொள்கின்றோம்.

அந்தக் கருவும், ஒன்றுமில்லாமையுமே நம்மை புதிய மனிதராக மாற்றுகின்றன.

சின்ன சின்ன தோல்களை நானாக உரித்துக்கொள்ள முன்வந்தால் எத்துணை நலம்!

எது தவம்?

எது தவம்?

இந்த ஆண்டு தவக்காலம் கொஞ்சம் வித்தியாசமான நாள்களில் வருகிறது என்பதைக் கவனித்திருப்போம். எப்படி?

பிப்ரவரி 14 - காதலர் தினம் - திருநீற்றுப்புதனாகவும்
ஏப்ரல் 1 - முட்டாள்கள் தினம் - உயிர்ப்பு பெருவிழாவாகவும் உள்ளது.

காதல்தான் எல்லாம் என்ற இந்த உலகில் தவம் சாத்தியம் இல்லை என்று சொல்பவர்களுக்கு தவம் காதலர்தினத்தில் தொடங்குகிறது.
உலகின் பார்வைக்கு முட்டாள்தனம் என்று தெரிந்தது ஆண்டவரின் உயிர்ப்பு.

நாளை தவக்காலத்தைத் தொடங்குகிறோம்.

நோன்பு, செபம், பிறரன்புச் செயல்கள் - இந்த மூன்றும்தான் தவம் என்று நாம் காலங்காலமாகச் சொல்லக் கேட்டிருக்கின்றோம்.

நோன்பு தவம் என்றால், ஏழ்மையால், உடல்நலமின்மையால், நாடுகடத்தப்படுதலால், அகதியாய் இருத்தலால் சிலர் வாழ்க்கை முழுவதும் பசியுற்றிருக்கின்றனர்.

செபம் தவம் என்றால் மௌனமடத்தில் இருக்கும் துறவறத்தார் ஏறக்குறைய எந்நேரமும் செபித்துக்கொண்டுதான் இருக்கின்றனர்.

பிறரன்புச் செயல்களே தவம் என்றால் அக்ஷயா டிரஸ்ட் தொடங்கி எல்லா அறக்கட்டளைகளும் பிறரன்புச் செயல்களைச் செய்துகொண்டுதான் இருக்கின்றன.

இந்த மூன்று செயல்களையும் ஏறக்குறைய நாம் ஏதோ ஒரு நிலையில் செய்துகொண்டுதான் இருக்கின்றோம். இதுதான் தவமா? இதுதான் தவக்காலமா?

தவக்காலம் என்றால் நாம் இந்த மூன்று பண்புகளை மட்டுமே நினைத்துக்கொண்டிருக்கின்றோம். இந்த மூன்று பண்புகளைக் கடைப்பிடித்தல் தவக்காலம் அல்ல. மாறாக, இந்த மூன்று பண்புகளின் வழியாக அதிமான மகிழ்ச்சிக்கு - அதாவது, பாஸ்கா மகிழ்ச்சிக்கு - நாம் மனம் திறப்பதே தவம்.

'தவம்' என்ற வார்த்தை 'தபஸ்ய' என்ற சமஸ்கிருத வார்த்தையிலிருந்து வருகிறது. 'தபஸ்ய' என்ற வார்த்தையின் மூலம் 'தப்.' 'தப்' என்றால் 'வெப்பத்தை வெளிப்படுத்துதல்' என்பது பொருள். ஆக, 'தபஸ்' என்றால் 'வெப்பம், தணல், தீ' என்று பொருள்.

நம் உடலில் வெப்பம் உள்ளது வரைதான் நாம் உயிரோடு இருக்கிறோம். ஆக, தவம் என்பது நம் உடலின் வெப்பத்தை சீர் செய்வது அல்லது வெப்பத்தை உணர்வது.

'தவம் கிடந்தேன்'
'தவமாய் தவமிருந்து பெற்றேன்'
என்ற சொல்லாடல்களையும் நாம் கேட்டுள்ளோம். இங்கே 'தவம்' என்றால் 'ஒரு சிந்தனை, ஒரே செயல்' என்ற ஒருமுகப்படுத்துதலாக இருக்கிறது.

நாற்பது நாளைக்கு அது செய்யக் கூடாது, இது செய்யக் கூடாது அல்லது அது செய்யணும், இது செய்யணும் அப்படின்னு சில முடிவுகளும் எடுத்திருப்போம்.

நான் ஒவ்வொரு வருடமும் இப்படி எடுக்குற முடிவுகள் விரலைக் கொண்டு ஈ ஓட்டுற மாதிரி விரலுக்கும் பயனில்லாம, ஈயையும் விரட்டாமல் தான் இருக்கும். ஆனாலும் இந்த வருடம் சிலவற்றைச் செய்யலாம், சிலவற்றை விடலாம் என்று காலையில் இருந்து தோணுது. ஆனா, எதைச் செய்ய, எதை விட என்றுதான் இன்னும் தெரியல. இன்னும் விடியலைல. விடியறுத்துக்குள்ள பாத்துக்குடுவோம்.

ஒவ்வொரு வருடம் திருநீற்றுப் புதன் அன்றும் நாம் திருப்பலியில் வாசிக்கும் நற்செய்திப் பகுதி மத்தேயு 6:2-18. தர்மம் செய்தல், இறைவேண்டல் செய்தல் மற்றும் நோன்பு இருத்தல் பற்றிய இயேசுவின் மலைப்பொழிவு போதனையின் மையப்பகுதி தான் இது.

நான் தவக்காலத்தில் என் மனதுக்குள் வைத்துக்கொள்ள நினைத்துக் கொள்ளும் ஒரே சிந்தனை இதுதான்:

'உங்கள் தந்தை!'

இன்று நாம் வாசிக்கும் நற்செய்திப் பகுதியில் இந்த இரண்டு வார்த்தைகளும் ஏழுமுறை பயன்படுத்தப்பட்டுள்ளன.

1. உங்கள் தந்தை உங்களுக்கு கைம்மாறு அளிப்பார் (6:4)
2. மறைவாய் உள்ள உங்கள் தந்தையை நோக்கி (6:6)
3. மறைவாய் உள்ளதைக் காணும் உங்கள் தந்தையும் (6:6)
4. உங்கள் தேவையை உங்கள் தந்தை அறிந்திருக்கிறார் (6:8)
5. மன்னியாவிடில் உங்கள் தந்தையும் உங்களை மன்னிக்கமாட்டார் (6:15)
6. மறைவாய் இருக்கிற உங்கள் தந்தைக்கு மட்டும் தெரியும் (6:18)
7. மறைவாய் உள்ளதைக் காணும் உங்கள் தந்தையும் (6:18)

மேலும் 'விண்ணகத்திலிருக்கிற எங்கள் தந்தை' என்று 6:9லும், 'உங்கள் விண்ணகத் தந்தை' என்று 6:14லிம் வாசிக்கிறோம். 'விண்ணகத்தில்' அப்படிங்கிற வார்த்தை குறுக்க நிற்கிறதுனால இந்த இரண்டு இடங்களையும் தவிர்த்து விடுவோம்.

இந்த 'உங்கள் தந்தை' யார்?

முதல் ஏற்பாட்டில் யாரும் கடவுளை 'தந்தை' என்று அழைத்ததில்லை. கடவுள் எட்டாதவராகவும், மிக மதிப்பிற்குரியவராகவும் கருதப்பட்டதால் யாரும் கடவுளை அப்படி அழைக்கவும் துணியவில்லை. ஒரு சில இடங்களில் கடவுள் இஸ்ராயேல் மக்களின் தந்தையாக தன்னையே உருவகப்படுத்துகின்றார். உதாரணத்திற்கு, 'தந்தை தன் மகனுக்குக் கற்றுக்கொடுப்பது போல உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்குக் கற்றுக் கொடுத்தார்' (இச 8:5). இந்த இடத்தில் கூட கடவுள் தன்னை 'உடல்ரீதியான' தந்தையாக அல்லாமல், 'மீட்புரீதியான' தந்தையாகவே தன்னை முன்னிறுத்துகின்றார்.

இரண்டாம் ஏற்பாட்டில் கடவுளுக்கு தந்தை என்ற சொல்லாடல் பயன்படுத்தப்படுகின்றது. இந்தச் சொல்லாடலை அதிகம் பயன்படுத்துபவர் யோவான் நற்செய்தியாளர் (109 முறை). மத்தேயு நற்செய்தியாளர் மொத்தம் 44 முறை பயன்படுத்துகிறார். இவற்றில் 21 இடங்களில் கடவுளை இயேசு தன் சீடர்களுக்கும், கடவுளுக்குமான உறவில் 'உங்கள் தந்தை' என முன்வைக்கின்றார். மத்தேயு நற்செய்தியாளரைப் பொறுத்தவரையில் கடவுளை சீடர்கள் மட்டும் தான் 'தந்தை' என்று அழைக்க முடியும்.

கடவுள் எல்லா மனிதர்களுக்கும் தந்தை என்றாலும், இந்த 'தந்தைக்குரிய' நிலையை அவர் எல்லாருக்கும் தருவதில்லை. 'மகளுக்குரிய' அல்லது 'மகனுக்குரிய' நிலையில் யார் இருக்கிறார்களோ அவர்கள் மட்டுமே கடவுளை 'தந்தை' என அழைக்க முடியும்.

முதல் ஏற்பாட்டில் தூரமாய் ஒளிந்திருந்த கடவுள் இரண்டாம் ஏற்பாட்டில் தொட்டு 'அப்பா' என்று அழைக்கக் கூடிய தூரத்திற்கு நெருங்கி வருகின்றார்.

இந்தத் தவக்காலத்தில் நமக்கிருக்க வேண்டிய (அட்லீஸ்ட் எனக்கு இருக்க வேண்டிய!) நம்பிக்கை இதுதான்: 'உங்கள் தந்தை' உன்னோடு இருக்கிறார்!

சின்ன வயதுல குழந்தை தன் தந்தையைப் போல இந்த உலகத்தில் வீரன் யாருமேயில்லை என்று நினைக்குமாம். தன் தந்தையை மட்டும் அது ஹீரோவாகப் பார்க்குமாம்.

அந்தக் குழந்தை மனது இன்று நமக்கு இருந்தால் போதும். இன்று நம்மை அலைக்கழிக்கும் கவலை. மனத்துயரம், வெறுமை, நாளை என்ன நடக்கும் என்ற படபடப்பு, அடுத்த வருஷம் என்ன செய்யலாம் என்ற வெற்று மன ஓட்டம் எல்லாவற்றிற்கும் காரணம் நாம் அடிக்கடி 'நம் தந்தை' இருக்கிறார் என்பதை மறந்தவிடுவதுதான்.
இந்த ஒரு எண்ணம் மட்டும் நமக்கு ஆழ்மனதில் பதிந்துவிட்டால் போதும். வெற்றியோ, தோல்வியோ, வறுமையோ, செல்வமோ, துன்பமோ, இன்பமோ எல்லாம் ஒன்றுபோலத் தெரிய ஆரம்பிக்கும்.

இந்த உலகில் யாரும் நம்மைப் பார்க்கவில்லையென்றாலும், நாம் செய்வதைப் பாராட்டவில்லையென்றாலும், நம் செயல்கள். சொற்கள் பிடிக்கவில்லை என்று சொன்னாலும் மனதில் கலக்கம் தேவையில்லை.

ஏனெனில், உங்கள் தந்தை உங்களோடு!

தாயின் கருவறையில் நாம் இருக்கும் நிலையும், கல்லறையில் நாம் இருக்கும் நிலையும்தான் தவம்.

இந்த தனிமைத்தவத்தை இன்றே ஏற்பதுதான் தவக்காலம். இந்தத் தனிமைத்தவத்தில்தான் அந்த தந்தையின் உடனிருப்பை நாம் கண்டுகொள்ள முடியும்.

இந்தத் தவக்காலம் உங்களுக்கு அருளின் காலமாக அமையட்டும்!

Monday, February 12, 2018

மறதியும், புரிதலின்மையும்

நாளைய (13 பிப்ரவரி 2018) நற்செய்தி (மாற் 8:14-21)

மறதியும், புரிதலின்மையும்

'அவர்கள் மறந்துவிட்டார்கள்' என்று தொடங்கும் நாளைய நற்செய்தி வாசகம் 'இன்னும் உங்களுக்குப் புரியவில்லையா?' என்ற கேள்வியோடு நிறைவு பெறுகிறது.

'சீடர்கள் தங்களுக்குத் தேவையான அப்பங்களை எடுத்துச்செல்ல மறந்துவிட்டார்கள்' என்ற மாற்கு நற்செய்தியாளரின் பதிவு அவர்கள்மேல் நமக்கு ஒரு பரிதாப உணர்வை ஏற்படுத்துகிறதே தவிர கோபத்தை ஏற்படுத்தவில்லை. மறதி நம் எல்லாருக்கும் பொதுவான ஒன்றுதான். நான் என்னைப் பற்றிய விடயங்களை மறந்தால் அது என்னை அவ்வளவாக பாதிப்பதில்லை. ஆனால் எனக்கு அடுத்திருப்பவரைப் பற்றியது என்றால் அது என்னைப் பாதிக்கிறது. எப்படி? 'தினமும் சுடு தண்ணீர் குடிக்க வேண்டும்' என மருத்துவர் எனக்குச் சொல்லியிருக்கிறார் என வைத்துக்கொள்வோம். அதே போல என் அம்மாவும் சுடுதண்ணீர் குடிக்கிறார்களா என்று கவனித்துக்கொள்ள வேண்டும் என்றும் சொல்கிறார். ஒருநாள் நான் சுடுதண்ணீர் எடுத்துச்செல்ல மறந்துவிடுகிறேன். அது எனக்கு பரவாயில்லை என்று தோன்றினாலும், என் அம்மாவின் உடல்நலம் என்று வரும்போது என் மறது எனக்குள் ஒரு பதைபதைப்பை ஏற்படுத்திவிடுகின்றது. அப்படி ஒரு பதைபதைப்புதான் நாளைய நற்செய்தி வாசகத்தில் சீடர்கள் உள்ளத்திலும் ஏற்பட்டிருக்க வேண்டும்.

ஏதோ ஒரு காரணத்தால் அவர்கள் அப்பங்களை மறந்துவிட்டார்கள்.

ஆனால் பிரச்சினை இங்கே இதுவல்ல. அப்பங்களை தாங்கள் மறந்துவிட்டாலும் அப்பங்களை பலுகச் செய்யும் ஒருவர் தங்களோடு இருக்கிறார் என்பதையும் - சுடு தண்ணீர் அடுப்பு - மறந்துவிடுகிறார்கள். ஆகையால்தான், 'புளிப்பு மாவு' என்று இயேசு சொல்லும் வார்த்தை அவர்களுக்கு தாங்கள் மறந்து வைத்துவிட்டு வந்த அப்பங்களை நினைவூட்டுகிறது.

கடவுளைப் பற்றிய மறதி அல்லது காட் அம்னீசியா இன்று நம் வாழ்விலும் சில நேரங்களில் தொற்றிக்கொள்கின்றது. எவ்வளவோ பிரச்சினைகளை நாம் தாண்டி வந்தாலும், அந்த நேரங்களில் அவரின் உடனிருப்பை நாம் அனுபவித்திருந்தாலும், புதிய பிரச்சினை எழும்போது பழைய அனுபவம் நமக்கு மறந்துவிடுகிறது.

நிற்க.

இயேசுவின் இறுதி வார்த்தைகளுக்கு வருவோம்: 'இன்னும் உங்களுக்குப் புரியவில்லையா?'

'புரியவில்லையா?' - எல்லா மொழிகளிம் பயன்படுத்தப்படும் அதிகமான சில வார்த்தைகளில் ஒன்று இது.

இந்தக் கேள்வி வித்தியாசமான கேள்வி.

இந்தக் கேள்விக்கு விடையாக 'ஆம்' என்று சொன்னாலும் குழப்பமாக இருக்கும். 'இல்லை' என்று சொன்னாலும் குழப்பமாக இருக்கும்.

இயேசு தன் சீடர்களிடம் பரிசேயர்களின் புளிப்பு மாவு பற்றிச் சொல்கின்றார். சீடர்கள் அப்பத்தைப் பற்றி நினைத்துக்கொண்டிருக்கின்றனர்.

பேசுபவரும் கேட்பவரும் ஒரே தளத்தில் இருக்கும்போதுதான் தகவல் பரிமாற்றம் சாத்தியமாகிறது.

இயேசு நிற்கும் தளமும் சீடர்கள் நிற்கும் தளமும் ஒன்றாக இல்லை. ஆகையால் தகவல் சிதறுகிறது.

புரிந்து கொள்வதற்கு இரண்டு அடிப்படை தேவைகளை முன்வைக்கின்றார் இயேசு:

அ. மழுங்காத உள்ளம். அதாவது கூர்மையான உள்ளம். தயாரான உள்ளம்.

ஆ. பார்க்கின்ற கண்கள், கேட்கின்ற காதுகள். அதாவது ஒவ்வொரு உறுப்பும் தான் செய்ய வேண்டிய வேலையைச் சரியாகச் செய்ய வேண்டும்.

இயேசுவைப் புரிந்துகொள்ள மட்டுமல்ல, நாம் ஒருவர் மற்றவரைப் புரிந்துகொள்ளவும் இவைகள் அடிப்படையே.

Sunday, February 11, 2018

வாதாட தொடங்கினர்

நாளைய (12 பிப்ரவரி 2018) நற்செய்தி (மாற்கு 8:11-13)

வாதாட தொடங்கினர்

இரண்டு நாள்களுக்கு முன் எம் மறைமாவட்ட குருமாணவர்களோடு உரையாடிக்கொண்டிருந்தபோது, அவர்களில் ஒருவர், 'ஃபாதர் கடவுள் இருக்கிறாரா? இல்லையா? என்கிற டவுட் எப்போ க்ளியர் ஆகும்?' என்று கேட்டார். 'டவுட் இருக்கிற வரைக்கு கடவுளும் இருக்கிறார்' என்று சும்மா சொல்லி சமாளித்தேன்.

'கடவுள் இருக்கிறாரா? இல்லையா?' என்ற கேள்வி நம்முள் இருப்பதுபோல, 'நீர் கடவுளா?' என்று இயேசுவைப் பார்த்துக் கேட்கும் பரிசேயர்கள் உள்ளத்தில் இது வேறுமாதிரியாக இருக்கிறது. 'நீர் கடவுள் அல்லது கடவுள் மகன் என்றால் அடையாளம் காட்டும்' என்று இயேசுவை சோதிக்கத் தொடங்குகின்றனர் பரிசேயர்கள்.

நாளைய நற்செய்தி வாசகத்தில் இரண்டு சொல்லாடல்கள் என்னை மிகவும் கவர்கின்றன:

1. 'இயேசுவோடு வாதாடத் தொடங்கினர்'
2. 'அவர் அவர்களைவிட்டு அகன்று மறுகரைக்குச் சென்றார்'

இந்த இரண்டிற்கும் ஒரு தொடர்பு இருப்பதாகத் தெரிகிறது. கடவுளோடு நாம் வாதாடத் தொடங்கும்போது, அல்லது வாதாடுதல் தொடரும்போது அவர் நம்மைவிட்டு தூரமாகிக்கொண்டே செல்கின்றார்.

மனிதர்கள் உள்ளத்தில் எழும் இயல்பான நம்பிக்கை போராட்டத்தைப் பற்றியே நாளைய முதல் வாசகமும் (யாக் 1:1-11) பேசுகின்றது.

'கடவுளோடு வாதாடுதல்' ஒரு பக்கம் இருக்க, இன்று நாம் கடவுளுக்காக வாதாடவும் தொடங்கிவிட்டோம் - எந்தக் கடவுள் உண்மையானவர்? என்பது போன்ற வாதங்கள்.

இன்று நான் கடவுளோடு வாதாடும் தருணங்கள் எவை?
நான் மகிழ்ந்திருக்கும்போது இருக்கும் கடவுள் நம்பிக்கை நான் வாடியிருக்கும்போது வாடிவிடுவது ஏன்?
எப்போதெல்லாம் கடவுள் என்னிடமிருந்து தப்பி மறுகரைக்குச் செல்கின்றார்? அல்லது அவர் அப்படி செல்வதாக நான் உணர்கிறேன்?

Thursday, February 8, 2018

கூட்டத்திலிருந்து வெளியே

நாளைய (9 பிப்ரவரி 2018) நற்செய்தி (மாற்கு 7:31-37)

கூட்டத்திலிருந்து வெளியே

'நாம் எதற்காக புறணி பேசுகிறோம்?' என்ற தலைப்பில் இணையதளத்தில் ஒரு கட்டுரையை வாசித்தேன். 'புறணி பேசுதல்' என்பது 'நாம் ஒருவர் மற்றவரோடு இணைந்திருக்கிறோம் என்பதையும், இணைய வேண்டும் என்ற ஆர்வத்தையும் அது காட்டுகிறது' என்று அந்தக் கட்டுரையாசிரியர் குறிப்பிடுகின்றார்.

மற்றவரோடு இணைந்திருத்தல் என்பது இன்று ஒருவர் மற்றவரோடு உள்ள உடல் சார்ந்த இணைந்திருத்தலைவிட இன்று அலைபேசி, இணையதளம், சமூக உறவுத்தளங்கள் என பல நிலைகளில் சாத்தியமாகிறது.

'நல்லா இருக்கீங்களா?' என்று மற்றவரைக் கேட்பதைவிட, 'வாட்ஸ்ஆப்ல இருக்கீங்களா?' என்றுதான் பல நேரங்களில் நாம் கேட்கின்றோம்.

கூட்டத்தோடு இணைந்திருத்தல் எல்லா நேரங்களிலுமே நன்மையைத் தரும் என்றால் அது தவறு.

நிற்க.

நாளைய நற்செய்தி வாசகத்தில் காதுகேளாதவரும், திக்கிப்பேசுபவருமான ஒருவரை சிலர் இயேசுவிடம் கொண்டுவருகின்றனர். உடனே இயேசு அந்த நபரைக் கூட்டத்தைவிட்டு வெளியே அழைத்துச் செல்கின்றார்.

இயேசுவின் இந்தச் செயலுக்கு நான் இரண்டு காரணங்களை ஊகிக்கிறேன்:

ஒன்று, இந்தக் கூட்டம் திக்கிப் பேசுகின்ற, காதுகேளாத இந்த நபரை இதுவரை கிண்டல் செய்த கூட்டமாக இருந்திருக்கும்.
இரண்டு, அந்த நபரின் காதுகளில் விரலைவிட்டு, நாவைத் தொட்டு அவரைக் குணமாக்கும் செயல் ஒருவேளை மக்கள் நடுவில் இயேசுவைக் கிண்டல் செய்வதற்கான ஒன்றாக மாறியிருக்கலாம்.

அல்லது, வேறு ஏதாவது காரணம் இருக்கலாம்.
ஆனால், இயேசு கூட்டத்தைவிட்டு அவரைத் தனியே அழைத்துச்செல்கின்றார். சென்று, 'எப்பத்தா' ('திறக்கப்படு') என்கிறார். சிலநேரங்களில் நமது வாழ்விலும் இந்தத் திறக்கப்படுதல் அவசியமாகிறது. நாம் கூட்டத்தைவிட்டு தனியாகச் செல்லும்போதுததான் நம் வாழ்வு என்னும் புதிர் திறக்கப்படுகிறது.

நன்மை தீமை அறியும் கனி ஏவாளுக்குக் கிடைத்தது அவர் தனியாக இருக்கும்போதுதான்.
யாக்கோபுவிற்கு இஸ்ரயேல் என்ற பெயர் கிடைத்தது அவர் தனியாக இருக்கும்போதுதான்.
மோசேக்கு யாவே இறைவன் தன்னை வெளிப்படுத்தியது அவர் தனியாக இருக்கும்போதுதான்.
ஊதாரி மைந்தன் தன் நிலை உணர்ந்தது அவர் தனியாக இருக்கும்போதுதான்.

ஆக, கூட்டத்தைவிட்டு விலகிச்செல்லும்போது பல நிலைகளில் வாழ்க்கை நமக்கு 'திறக்கிறது.'
இன்று கூட்டம் சார்ந்த அனைத்தையும் மூடிவிட்டு, கொஞ்சம் தனிமைக்குக் கதவுகளைத் திறக்கலாமே!


Tuesday, February 6, 2018

உள்ளேயிருந்து வருவது

நாளைய (7 பிப்ரவரி 2018) நற்செய்தி (மாற்கு 7:14-23)

உள்ளேயிருந்து வருவது

தூய்மை - தீட்டு விவாதம் தொடர்கின்றது.

மனித உடலுக்குள் செல்லும் 'வெளியிலிருந்து உள்ளே'

மனித உள்ளத்திற்குளிருந்து வரும் 'உள்ளேயிருந்து வெளியே'

இந்த இரண்டு தளங்களில் 'தூய்மை - தீட்டு' விவாதத்தை நிறுத்துகிறார் இயேசு.

வெளியிருந்து உள்ளே செல்லும் உணவுப்பொருள்கள் - அவைகள் கழுவப்பட்டாலும், கழுவப்படாவில்லையென்றாலும் - அவைகள் மனிதர்களைத் தீட்டுப்படுத்துவதில்லை. ஏனெனில் அவைகள் உள்ளத்திற்குள் நுழையாமல் உடலுக்குள்தான் நுழைகின்றன.

ஆக, உடலில் தீட்டு என்பது கிடையாது. தீட்டான உறுப்பும் கிடையாது. ஒருவரின் உடலை வைத்து அவர் தீட்டானவர் என்ற சொல்வதும் தவறு என்பது இங்கே புலனாகிறது.

ஆனால் எதெல்லாம் உள்ளத்தைத் தொடுகிறதோ, அல்லது உள்ளத்திலிருந்து வெளிவருகிறதோ அது தீட்டாக இருக்க வாய்ப்பிருக்கிறது - பரத்தைமை, களவு, கொலை, விபசாரம், பேராசை, தீச்செயல், வஞ்சகம், காமவெறி, பொறாமை, பழிப்பரை, செருக்கு, மதிகேடு போன்றவை.

ஆக, உள்ளம் தீயவற்றை வெளிக்கொணர்கிறது.

இந்த உள்ளம் தானாகவே தீயவற்றைத் தோற்றுவிக்கிறதா? அல்லது வெளியிலிருந்து அது உள்ளே இழுக்கும் டேட்டாவை வைத்து தீயவற்றை தோற்றுவிக்கிறதா?

இரண்டும்தான் என நினைக்கிறேன்.

ஏனெனில், ஒரு இலட்ச ரூபாய் நோட்டுக்கட்டை இருவர் பார்க்கிறார்கள் என வைத்துக்கொள்வோம். பார்வை என்ற செயல் வழியாக டேட்டா இருவரின் உள்ளேயும் செல்கிறது. ஆனால், அதை ஒருவர் திருடுகின்றார். மற்றவர் அதைத் திருட மறுக்கின்றார். ஆக, பிராஸஸிங் செய்வது நம் மனம். ஆக, இந்த மனத்தை சரியான பிராஸஸிங்கில் வைத்திருக்க நாளைய நற்செய்தி நமக்கு அழைப்ப விடுக்கின்றது.

மூதாதையர் மரபு

நாளைய (6 பிப்ரவரி 2018) நற்செய்தி (மாற்கு 7:1-3)

மூதாதையர் மரபு

இயேசுவின் பணிக்காலத்தில் அவர்மேல் சுமத்தப்பட்ட சில குற்றச்சாட்டுக்களில் ஒன்று 'மரபுமீறல்.' ஆனால் நாளைய நற்செய்தியில் இந்தக் குற்றச்சாட்டு நேரடியாக இயேசுவின்மேல் சுமத்தப்படாமல் சீடர்கள்மேல் சுமத்தப்படுகிறது.

'தூய்மை - தீட்டு' என்ற இரண்டு வார்த்தைகளை மையமாக வைத்தே விவாதம் தொடங்குகிறது.

'நாங்கள் தூய்மையாக இருக்கிறோம் - நீங்கள் தூய்மையாக இல்லை' என்று பரிசேயர்கள் இயேசுவின் சீடர்களைப் பார்த்து குற்றம் சுமத்துகின்றனர்.

'தூய்மை - தீட்டு' பிரிப்பதில் மதம் காலங்காலமாக முக்கிய பங்கு வகித்துவருகிறது. மதங்களே மரபுகளை உருவாக்குகின்றன. மரபுகளின்படி செயலாற்றுவது நமக்கு எளிதாக இருப்பதால் மரபுகளை மாற்றக்கூட நாம் நினைப்பதில்லை. 'இதுதானே வழக்கம் - இப்படியே செய்துவிட்டுப்போய்விடுவோம்!' என்று நாம் இருந்துகொண்டே இருக்கிறோம்.

உதாரணத்திற்கு, சாதியின் அடிப்படையில் மனிதர்களைப் பிரிப்பது தவறு என்பது நம் பகுத்தறிவுக்குத் தெரிந்தாலும், 'இருப்பது அப்படியே இருந்துவிட்டுப் போகட்டும்' என நாம் மரபை வாழையடி வாழையாக - சில நேரங்களில் இன்னும் மும்முரமாக - கடைப்பிடிப்பவர்களாகின்றோம்.

மரபு - கட்டளை

மரபு மனிதரிடமிருந்து வருகிறது அல்லது மனிதர்களால் உருவாக்கப்படுகிறது.

கட்டளை கடவுளிடமிருந்து வருகிறது.

மரபுகள் முன்னிடம் வகிக்கும்போது கட்டளைகள் பின்னால் தள்ளப்படுகின்றன.

மரபுகள் உடல் சார்ந்தவை.

கட்டளை உள்ளம் சார்ந்தவை.

கட்டளைகள் பின்னால் தள்ளப்படுவதால் பரிசேயர்களின் உதடுகள் கடவுளுக்கு அருகில் இருக்க, உள்ளங்கள் பின்னால் தள்ளப்படுகின்றன.

நம்ம கதவுக்கு முன்னால உதவி கேட்டு நிற்கும் ஒருத்தருக்கு உதவினால், 'இதுவே பழக்கமாகிவிடும்!' என்று சொல்லும் அளவிற்கு, நல்லது செய்யவும் நம் மரபு குறுக்கே நிற்கிறது என்பது நாம் எந்த அளவிற்கு மரபுகளால் ஆளப்படுகிறோம் என்பதற்குச் சான்றாக அமைகிறது.

இயேசு மட்டும் எல்லாரையும் போல 'வழக்கம் போல' 'மரபு போல' செய்திருந்தால் இன்னும் கொஞ்சநாள் வாழ்ந்திருப்பார் என நினைக்கிறேன்.

மரபில் வாழ்வது எளிது.

ஆனால் எளிதானவை இறைவனுக்கு ஏற்றதானவை அல்ல.

Sunday, February 4, 2018

அவர் இன்னாரென்று கண்டுணர்ந்து

நாளைய (5 பிப்ரவரி 2018) நற்செய்தி (மாற்கு 6:53-56)

அவர் இன்னாரென்று கண்டுணர்ந்து

நாளைய நற்செய்தியில் கரைக்கு அந்தப்பறம் இயேசு சென்றபோது நடந்த நிகழ்வை வர்ணிக்கின்றார் மாற்கு.

'இயேசு இன்னாரென்று கண்டுணர்ந்து' மக்கள் அவரிடம் ஓடி வருகின்றனர். தொட அனுமதிக்குமாறு அவரை வேண்டுகின்றனர். கொத்து கொத்தாக மக்கள் அவரைத் தேடுகின்றனர்.

இயேசுவின் வெளிப்புற அடையாளமா?

அல்லது

அவர்களின் தனிப்பட்ட அனுபவமா?

எதை வைத்து அவர்கள் இயேசுவை அடையாளம் கண்டனர்?

இயேசுவின் சமகாலத்தில் இயேசுவைப் போலவே நிறைய போதகர்கள் இருந்திருக்க வாய்ப்புண்டு. 'இவர்தான் இயேசு!' என அவரிடம் எதை தனியாக அடையாளம் காட்டியது?

'இவர்தான் இயேசு' என்பதை ஒரு சிலர் மட்டுமே கண்டிருக்க முடியும்.

மற்றவர்கள் இவர்களிடமிருந்து இதைக் கேட்டிருக்க முடியும். ஆனால் இதில் என்ன ஆச்சர்யம் என்றால், மற்றவர்களிடமிருந்து கேட்டவர்கள் எல்லாம் அனைத்தையும் அப்படியே நம்புகிறார்கள்.

இங்கே இரண்டு பொறுப்புணர்வு இருக்கின்றது:

ஒன்று, இயேசு இவர்தான் என அனுபவித்தவர்கள் அந்த அனுபவத்;தை மற்றவர்களுக்குச் சொல்ல வேண்டும்.

இரண்டு, அனுபவத்தை சொல்லக் கேள்விப்பட்டவர்கள் அப்படியே நம்பி ஏற்றுக்கொள்ள வேண்டும்.

இயேசுவை இன்னாரென்று அறிவது என்பது நிறைவேறிவிட்ட ஒரு அனுபவம் என்று சொல்லிவிட முடியாது. அது ஏற்கனவே நிகழ்ந்திருந்தாலும் ஒவ்வொரு பொழுதும் நிறைவேறக்கூடியது.

ஓஷோ கடவுள் அனுபவம் பற்றிப் பேசும்போது இரண்டு உருவகங்களை பயன்படுத்துகின்றார்: (அ) மியூஸியத்தில் உள்ள எலும்புக்கூடு. இதை எவ்வளவு வருடங்களுக்கு விட்டாலும் அது அப்படியே, இருக்கின்ற இடத்தில்தான் இருக்கும். (ஆ) குழந்தை. இதன் ஓட்டத்தை, அமர்வை, எழுதலை நாம் எந்த நொடியும் கணிக்க முடியாது.

முதல்வகை இறையனுபவம்தான் மற்றவர்கள் நமக்குச் சொல்கின்ற, அல்லது சமயங்கள் நமக்குக் கற்பிக்கின்ற அனுபவம். இதை கூட்டவோ, குறைக்கவோ, மாற்றவோ முடியாது.

இரண்டாம் வகை அனுபவம்தான், நம் தனிப்பட்ட அனுபவம். இது எப்போதும் மாறக்கூடியது. சில நேரங்களில் நமக்கு கடவுள் நம்பிக்கை நிறைய இருக்கும். சில நேரங்களில் 'கடவுள் இருக்கிறாரா?' என்ற ஐயம் எழும். சில நேரங்களில் 'கடவுள் இல்லவே இல்லை' என்று நினைக்கத் தோன்றும். இந்தப் போராட்டத்தின் இறுதியில் அனுபவம் பிறக்கும் என்று சொல்லக்கூடாது. இந்த போராட்டமே அனுபவம்தான்.

மேலும், எப்படியாவது இயேசுவைக் காண வேண்டும் என்ற தேடல் வெறியோடு இருக்கிறார்கள் கெனசரேத் மக்கள்.

என்னிடம் வெறி இல்லை என்றாலும், கொஞ்சம் ஆர்வமாவது இருக்கிறதா?

'தேடுங்கள். கண்டடைவீர்கள்' என்பது விவிலிய வாக்கு.


Saturday, February 3, 2018

அக்கறையும், பரிவும்

நாளைய (3 பிப்ரவரி 2018) நற்செய்தி வாசகம் (மாற்கு 6:30-34)

1. நற்செய்தி வாசகத்தின் மையக்கருத்து என்ன?

'பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப் பரிந்து' என்னும் மாணிக்கவாசகரின் திருவாசக வரிகள்தாம் என் நினைவிற்கு வருகின்றன இன்றைய நற்செய்தியை வாசிக்கும்போது. கடந்த வார நற்செய்திப் பகுதியில் இருவர் இருவராக பணிக்கு அனுப்பப்பட்ட திருத்தூதர்கள், தங்கள் பணிகளை முடித்துவிட்டு, இயேசுவிடம் திரும்புகின்றனர். அப்படித் திரும்பிய அவர்களை ஓய்விற்கு அனுப்புகின்றார் இயேசு. ஆனால், ஓய்வு என்று ஓடியவர்களுக்கு இன்னும் அதிக வேலை வந்து சேர்கிறது. இயேசுவின் தாயுள்ளம் அக்கறையாக தன் சீடர்கள்மேலும், பரிவாக மக்கள்மேலும் விரிகிறது.


2. அக்கறையும், பரிவும்

இன்றைய நற்செய்தியை இரண்டு உட்பிரிவுகளாகப் பிரிக்கலாம்:

அ. இயேசுவுக்கும், சீடர்களுக்கும் உள்ள உறவு

ஆ. இயேசுவுக்கும், மக்களுக்கும் உள்ள உறவு


அ. இயேசுவுக்கும், சீடர்களுக்கும் உள்ள உறவு

பன்னிருவரை 'திருத்தூதர்கள்' (மாற்கு 6:30) என்று மாற்கு இந்த இடத்தில் மட்டுமே குறிப்பிடுகிறார். 'அப்போஸ்தல்லோ' என்ற வினைச்சொல்லில், அனுப்புபவரும், அனுப்பப்படுபவரும் இருக்கின்றனர். ஒருவர் இல்லாமல் மற்றவர் இருக்க முடியாது. ஆக, அனுப்பப்படுபவர், தன்னை அனுப்பியவரிடம் தன் பணி நிறைவுற்றது அல்லது நிறைவுறவில்லை என்று சொல்வது அவசியம். இது இயேசுவின் திருத்தூதர்களுக்கு மட்டுமல்ல. மாற்கு தன் நற்செய்தியை எழுதியபோது, எண்ணற்ற பேர் தங்களைத் 'திருத்தூதர்கள்' என அழைத்துக்கொண்டு யாருக்கும் 'கணக்குக் கொடுக்காமலேயே' இருந்தனர். தாங்களாகவே, தங்களை திருத்தூதர்கள் என அழைத்துக்கொண்டவர்கள் இவர்கள். இன்று அருட்பணிநிலையில் ஒருவர் அருட்பணியாளராக இருக்கிறார் என்றால், அது அவராகவே ஏற்படுத்திக்கொண்ட ஒன்றல்ல. தன்னை அருட்பணிநிலைக்கு உயர்த்திய ஆயருக்கும், அதற்குச் சான்றாக நின்ற இறைமக்களுக்கும், அவர் கணக்குக்கொடுக்கக் கடமைப்பட்டவர்தானே!

திருத்தூதர்கள் தன்னிடம் திரும்பி வந்தவுடன், அவர்களை ஓய்வெடுங்கள் என பாலைநிலத்திற்கு அனுப்புகிறார் இயேசு. ஓய்வெடுக்க ஒரு கடற்கரைக்கு, அல்லது ஏரிக்கு, அல்லது பழமுதிர்ச்சோலைக்கு அனுப்பினால் பரவாயில்லை. பாலைநிலத்தில் போய் என்ன ஓய்வெடுக்க முடியும்? வெயிலும், மணல்காற்றும், பசியும், வறட்சியும்தான் ஓய்வா? இயேசுவின் பணித்தொடக்கத்தில் அவர் இரண்டுமுறை பாலைநிலத்திற்குச் செல்வதாக மாற்கு எழுதுகின்றார். முதலில், திருமுழுக்கு பெற்றவுடன் (மாற்கு 1:12). இரண்டாவதாக, தன் பணிகள் முடிந்தவுடன் (1:35). இரண்டிலுமே, இவர் மக்களின் குரலைக் கேட்பதிலிருந்து விடுதலை பெற்று, கடவுளின் குரலைக் கேட்கும் ஒரு இடத்திற்குச் செல்கின்றார். ஆக, இயேசு விரும்பும் ஓய்வு என்பது, மக்களின் குரலைக் கேட்பதை விடுத்து, இறைவனின் குரலைக் கேட்பது. 'கேளுங்க! கேளுங்க! கேட்டுகிட்டே இருங்க!' என்ற பண்பலை விளம்பரமாய் இன்று நம்மைச் சுற்றிலும் ஒரே சத்தம், கூச்சல், அமளி. அமைதியாக இருக்கவும், சத்தங்களைக் கேட்காமல் இருக்கவும் நமக்குப் பயமாக இருக்கிறது. இவ்வளவு நாட்கள் தங்கள் பணியிடங்களில் பிணியாளர்களின் சத்தங்களையும், பேய்பிடித்தவர்களின் சத்தங்களையும் கேட்ட திருத்தூதர்கள் இன்று கடவுளின் குரலைக் கேட்க வேண்டும் என்று சொல்லி அவர்களை பாலைநிலத்திற்கு அனுப்புகின்றார் இயேசு.

'உண்பதற்குக் கூட அவர்களுக்கு நேரமில்லை' என்ற வாக்கியம் திருத்தூதர்கள் எவ்வளவு 'பிஸியாக' இருந்தார்கள் என்பதைக் குறிக்கிறது.

இயேசுவின் தாய்மையுள்ளம், ஒரு சகோதரனுக்கு உரிய அக்கறையாக வெளிப்படுகிறது. தன் திருத்தூதர்களை மட்டும் அனுப்பாமல் தானும் உடன் செல்கின்றார் இயேசு.

ஆ. இயேசுவுக்கும், மக்களுக்கும் உள்ள உறவு

இயேசுவும், அவருடைய சீடர்களும் 'அதிகம் தேடப்படுபவர்களாக' இருக்கின்றனர். அவர்களை தூரத்திலேயே அடையாளம் காண்கின்றனர் மக்கள். அடையாளம் காணும் மக்கள், கால்நடையாகவே ஓடி அவர்களுக்கு முன் செல்கின்றனர். அவர்களுக்காக காத்திருக்கின்றனர். இந்த மக்களுக்கு வேறு வேலை இல்லையா? என்று கேட்கத் தோன்றுகிறது என் 21ஆம் நூற்றாண்டு மூளை. இவர்கள் இன்று என்னைப் பார்த்து, 'வேறு என்ன வேலை ஐயா இருக்கிறது?' என்று கேட்பார்கள். ஆக, இயேசுவைத் தேடுவதை மட்டுமே தங்கள் முழுநேர வேலையாக வைத்திருக்கின்றனர் இந்தச் சாதாரண மக்கள். ஏன் இயேசுவைத் தேடுகிறார்கள்? அவர்களுக்கு ஏரோது அரசன் இல்லையா? அல்லது பலி செலுத்தி பாவ மன்னிப்பு வழங்கும் தலைமைக்குரு இல்லையா? வேறு என்னதான் இல்லை? எல்லாம் இருந்தது. ஆனால் ஒன்றும் சரியாக இல்லை. உழைத்ததை எல்லாம் வரியாகக் கொடுத்துவிட்டனர் ஏரோதுக்கு. எஞ்சியதை 'காணிக்கை' என பிடுங்கிக் கொண்டார் தலைமைக்குரு. இனி தங்களிடம் இருந்ததது தங்கள் நிர்வாணமும், அந்த நிர்வாணத்தில் அவர்கள் மறைத்து வைத்திருந்த நம்பிக்கையும்தான். அந்த வெளிச்சத்தில் இயேசுவைத் தேடுகின்றனர். 

இயேசுவும் அவர்களின் நிலையை நன்கு புரிந்து கொள்கின்றார். அரசியல் ஆயன் ஏரோதும் அவர்களுக்கு இல்லை, சமயத்தின் ஆயன் தலைமைக்குருவும் அவர்களுக்கு இல்லை என்று அவருக்குத் தெரிந்ததால்தான் 'ஆயனில்லா ஆடுகள்போல' அவர்கள் நிற்பதைக் கண்டு அவர்கள்மேல் பரிவு கொள்கின்றார்.

நான் அடுத்தவரைப் பார்க்கும்போது, இப்படிப் பார்க்கும் மனநிலை எனக்கும் இருந்தது என்றால் எத்துணை நலம்!

3. இன்றைய நற்செய்தி நமக்குச் சொல்வது என்ன?

அ. ஓய்வு என்பது தனிமைத்தவம். இயேசு தரும் ஓய்வு என்பது தனிமை. 'உணவு என்பது எப்படி உடலுக்கோ, தனிமை என்பது அப்படி உள்ளத்துக்கு' என்பார் அரிஸ்டாட்டில். இயேசு காட்டுகின்ற ஓய்வு என்பது தனிமைத்தவம். கூட்டத்தின் மத்தியில் நாம் இருக்கும்போது நம்மைப் பற்றி நாம் நினைப்பதில்லை. கூட்டத்தின் இரைச்சலில் நம் மனம் பேசும் மெல்லிய வார்த்தைகள் நமக்குக் கேட்பதில்லை, நாம் கேட்கவும் விரும்புவதில்லை. ஆனால் தனிமையில்தான் நாம் நம்மையே பார்;க்கின்றோம். தனிமை நம்மைப் பார்த்து 'ஏன் இப்படி இருக்கிறாய்?' என்று கேள்வி கேட்கின்றது. நம்மால் பதில்சொல்ல முடிவதில்லை. ஆகையால் இந்தத் தனிமையை நமக்குப் பிடிப்பதில்லை. ஓய்வு என்பது நம்மை நாமே ஆய்வு செய்து பார்க்கின்ற ஒரு நிலை. தனிமைத்தவத்தில்தான் இது சாத்தியமாகின்றது.

இயேசு குறிப்பிடும் தனிமை, தனிமைப்படுத்தப்பட்ட உணர்வு (டழநெடiநௌள) அன்று. மாறாக, நாம் தேர்ந்துகொள்கின்ற தனிமை (யடழநெநௌள). நாம் யார்? நம் வாழ்வின் குறிக்கோள் என்ன? நம் உறவுகளின் அர்த்தம் என்ன? என்ற கேள்விகளை நாம் தனிமையில் கேட்டால்தான் மக்கள்கூட்டத்தோடு, உலகத்தோடு, உறவுகளோடு நம்மால் வாழ முடியும். தனிமையை அனுபவித்த மனிதனால் மட்டுமே வாழ்வை எதிர்கொள்ள முடியும்.

விக்டர் பிராங்கிள் என்ற யூத எழுத்தாளர் இந்த உலகமே வியக்கின்ற 'ஆயn'ள ளுநயசஉh கழச ஆநயniபெ' என்ற நூலைப் படைக்கின்றார். இந்தப் படைப்பு முழுவதுமே அவர் குறிப்பிடுவது என்னவென்றால் ஹிட்லரின் வதைமுகாமிற்குள் இருந்த தனிமையில்தான் என் வாழ்வின் அர்த்தம் நான் கண்டேன் என்பதுதான். தனிமையில்தான் நாம் ஓய்ந்திருக்கின்றோம். நாம் நாமாக இருக்கின்றோம்.

ஆ. ஆயனில்லா ஆடுகள்போல

உணவு இல்லாமல், பாதுகாப்பு இல்லாமல், வழிநடத்துதல் இல்லாமல் (காண். திபா 23) யாரெல்லாம் இருக்கிறார்களோ, அவர்களெல்லாம் ஆயனில்லா ஆடுகள்போல இருப்பவர்கள். ஒருசிலர் பிறப்பிலேயே அப்படிப்பட்ட நிலையில் இருக்கிறார்கள். மற்றும் சிலர் இயற்கைச் சீற்றம் மற்றும் பேரழிவால் இந்த நிலைக்கு ஆளாகின்றனர். இன்னும் சிலர் சமூகத்தின் அநீதியால், தங்கள் சக உதரங்களின் தவறான அணுகுமுறையால், சுயநலத்தால் இந்த நிலைக்கு ஆளாகின்றனர். மேலும் சிலர் தங்களுக்கு எந்த ஆயனும் தேவையில்லை என்று தாங்களாகவே முடிவெடுத்துக்கொண்டு, ஆயனில்லா நிலையை தங்கள் உரிமையாகவும், சுதந்திரமாகவும் அறிக்கையிடுகின்றனர். இவற்றில் எந்த நிலையிலும் ஆபத்து என்னவோ ஆடுகளுக்குத்தான்.

இ. பரிவு

பரிவு என்பதை சில நேரங்களில் இரக்கம் என நாம் மொழிபெயர்த்துவிடுகிறோம். இரண்டும் வேறு வேறு. இரக்கம் என்பது வெறும் உணர்வு. ஆனால் பரிவு என்பது செயல்பாடுடன் கூடிய உணர்வு. எனக்கு அடுத்திருப்பவரின் வீட்டில் இருக்கும் மாணவன் மேற்படிப்பிற்கு பணமில்லாமல், கூலி வேலைக்குப் போவதைக் கேள்விப்பட்டு, 'ஐயோ! பாவம்!' என்று நான் சொன்னால், நான் அவன்மேல் இரக்கம் காட்டுகிறேன். ஆனால், அவனுக்குப் பணம் கொடுத்து அவனை நான் கல்லூரிக்கு அனுப்பினால் நான் அவன்மேல் பரிவுகொள்கிறேன் என அர்த்தம். இயேசுவின் பரிவு அவர் மக்களுக்குக் கற்பித்தலிலும் (6:34), அவர்களுக்கு உணவு கொடுத்தலிலும் (6:35-43) அடங்கியிருக்கிறது.


இன்று வாழ்க்கை ஓட்டத்தை கொஞ்சம் நிறுத்திப் பார்ப்போம். நமது கனவு, நமது குழந்தைகள், நமது குடும்பம். இவைகளுக்காகத்தானே இந்த ஓட்டம். 
திடீரென்று ஒருநாள் நாமே நிறுத்தப்பட்டாலன்றி ஓடிக்கொண்டேயிருந்தால் அது 'வேகமாகப் போகவேண்டும் என்பதற்காக பெட்ரோல் கூட போடாமல் வண்டி ஓட்டத் துணிவது' போன்றது.


Thursday, February 1, 2018

ஒவ்வொரு குழந்தையும்

ஒவ்வொரு குழந்தையும்

நாளைய தினம் ஆண்டவர் எருசலேம் ஆலயத்தில் காணிக்கையாக ஒப்புக்கொடுக்கப்பட்ட விழாவைக் கொண்டாடுகின்றோம்.

குழந்தையைக் கைகளில் ஏந்தியிருக்கிறீர்களா? அதற்கு ஒரு தனித் திறமை வேண்டும். கழுத்து நிற்காத குழந்தையைக் கைகளில் தூக்க மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இந்தத் தலைப்பு என்னில் எழுப்பிய சிந்தனைகள் தாம் இன்றைய பகிர்வு.

இன்றைய நாளின் மையம் குழந்தையா? முதியவரா? இரண்டு பேரும் தாம். ஒரு முதியவர் ஒரு குழந்தையைக் கையில் ஏந்துகின்றார். ஒரு அஸ்தமனம் ஒரு உதயத்தைத் தாங்குகிறது. வாழ்வின் முடிவும் வாழ்வின் தொடக்கமும் ஒன்றையொன்று சந்திக்கிறது.

எருசலேம் கோவிலுக்குள் தினமும் எத்தனையோ குழந்தைகள் கொண்டுவரப்படுவார்கள். அவர்களில் இவர்தான் 'நான் எதிர்பார்த்த குழந்தை!' என எப்படி முதியவர் சிமியோனால் கண்டுபிடிக்க முடிந்தது? நிலக்கரி சுரங்கத்தில் வேலை பார்க்கும் தன் தந்தைக்காக சிறுவன் ஒருவன் வாசலில் காத்திருந்தான். மாலை மங்கும் நேரம். பணியாளர்கள் வரிசையாக வெளியே வந்து கொண்டிருக்கிறார்கள். சுரங்கத்தில் வேலை பார்த்ததால் எல்லார் முகமும் கறுப்பாக இருக்கின்றது. சிறுவன் நின்று கொண்டிருப்பதைப் பார்த்த வாயில் காப்போன் கேட்கின்றார்: 'தம்பி, ஏறக்குறைய 700 பேர் இந்தச் சுரங்கத்தில் வேலை செய்கிறார்கள். எல்லாரும் வேலை முடிந்து வரும்போது கரி பிடித்துத்தான் வருவார்கள். எல்லாரும் ஹெல்மெட்டும் அணிந்திருப்பார்கள். இவர்களில் உன் அப்பாவை எப்படிக் கண்டுபிடிப்பாய்?' சிறுவன் சொல்கிறான்: 'என்னால் அவரைக் கண்டுபிடிப்பது வேண்டுமானால் கடினமாக இருக்கலாம். ஆனால் அவர் என்னை எளிதாகக் கண்டுபிடித்துவிடுவார். ஆகையால் தான் நான் இங்கே நிற்கிறேன்.'

சிமியோனுக்கும் இயேசுவுக்கும் உள்ள நெருக்கம் இதுதான். அவரால் கண்டுபிடிக்க முடிந்தது. குழந்தையை ஏந்தியவுடன் அவர் சொல்லும் சொற்களுக்கு மிகுந்த வாழ்வியல் அர்த்தம் உண்டு:

'ஆண்டவரே, உமது சொற்படி உம் அடியான் என்னை இப்போது அமைதியுடன் போகச் செய்கிறீர்.
ஏனெனில் மக்கள் அனைவரும் காணுமாறு நீர் ஏற்பாடு செய்துள்ள உமது மீட்பை என் கண்கள் கண்டுகொண்டன'.

தன் வாழ்க்கை முடிவுற்றது. இனி தான் அமைதியாகச் செல்லலாம் என்று மொழிகின்றார் முதியவர். வாழ்வில் நமக்கு மிகவும் கஷ்டமாக இருப்பது 'விடைபெறுவது'. எதற்காக மரணம் அல்லது பிரிவு பயத்தைத் தருகின்றது? 'பிடிமானம்'. நாம் 'இதுதான் எல்லாம்' என எதையாவது பிடித்துக் கொள்கின்றோம். அதை விட மனம் வரவில்லை. அது கண்டிப்பாக நம்மிடமிருந்து எடுக்கப்படும் என்று தெரியும். இருந்தாலும் நாம் அதை எளிதாக விடுவதில்லை. இது வாழ்வில் மட்டுமல்ல. அனைத்துப் பணிநிலைகளிலும் இருக்கலாம். குறி;ப்பாக, அரசியலில் தலைமைத்துவத்தில் இருப்பவர்களும், மற்ற நிறுவனங்களில் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களும், ஏன் குடும்பத்தில் தலைமைப்பொறுப்பில் இருப்பவர்களும் ஒரு கட்டத்தில் அதை விட்டுத்தாங்கள் செல்ல வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்வதில்லை. 'என்ன ஆனாலும் பரவாயில்லை' என்று பிடித்துக் கொண்டேயிருப்பது அவர்கள் மேல் மற்றவர்களுக்கு வெறுப்பையே கொண்டு வருகின்றது. 'முகமலர்ச்சியுடன் விடைபெற' இன்று நமக்குக் கற்றுக்கொடுக்கின்றார் சிமியோன். சிமியோனின் மனநிலை நமக்கு இருந்தால் இறப்பைக் கண்டும், பிரிவைக் கண்டும் பயப்படவே தேவையில்லை.

என் குடும்பத்தில், என் பணியில், என் படிப்பில், என் பயணத்தில், என் நண்பரில் நான் மீட்பைக் கண்டுகொண்டேன். என்னால் அமைதியாகப் போகமுடியும் என்று நம்மால் சொல்ல முடிந்தால் நாமும் சிமியோன்களே.

பல நேரங்களில் இவர்களில் நாம் மீட்பiயும் மகிழ்வையும் காண்பதில்லை. ஆகையால் தான் நம்மால் மகிழ்ச்சியோடு விடைபெற முடிவதில்லை. நம் வாழ்வின் உதயம் எந்த அளவிற்கு எதார்த்தமானதோ அந்த அளவிற்கு அஸ்தமனமும் எதார்த்தமானது. அஸ்தமனம் கூட அழகுதான் என்பதற்கு அடையாளம் சிமியோன்.

நாம் சந்திக்கும் ஒவ்வொருவருமே ஒரு குழந்தை. ஒவ்வொரு பொழுதும் ஒரு உதயம். ஒவ்வொரு பொழுதும் ஒரு அஸ்தமனம். திறக்கின்ற கதவுகள் எல்லாம் அடைக்கப்பட வேண்டும். நாம் சந்திக்கும் உறவுகள் எல்லாம் பிரிய வேண்டும். சில நேரங்களில் பிரியம் வளர பிரிந்துதான் இருக்க வேண்டும். சந்திப்பிற்கும், பிரிவிற்கும் இடையே ஏன் கண்ணீர் வடிக்க வேண்டும்?

இன்று, வாழ்வின் நாள் என்றும் கொண்டாடப்படுகிறது. அதாவது கருத்தடைச் சாதனங்கள், கருக்கலைப்பு போன்றவற்றிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நாள். நம் விருப்பு வெறுப்புக்கேற்ப குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள நினைப்பது நம் வியாபார உலகின் தாக்கத்தையே காட்டுகின்றது. உயிர்களில் மனிதர்கள் மட்டும்தான் கருத்தடைச் சாதனங்களைப் பயன்படுத்துகின்றனர். கருக்கலைப்பு செய்கின்றனர். ஏதோ ஒரு சூழலில் கருக்கலைப்பு செய்துவிட்டு அதற்காக வாழ்நாள் முழுவதும் அழுதுகொண்டிருப்பவர்களின் கண்ணீரை நான் நிறைய முறை பார்த்திருக்கிறேன்.

குழந்தைகளைப் பற்றிய எண்ணம் நமக்கு இரண்டு நிலைகளில் இருக்கிறது: ஒன்று, குழந்தை பெற்றுக்கொள்ளவோ, வேண்டாம் என்று சொல்லவோ எனக்கு அதிகாரம் இருக்கிறது என்ற தன்னல உணர்வு. என் நலன், என் மகிழ்ச்சி, என் வரவு, என் சௌகரியம்தான் முக்கியம் என நினைக்கும் முதல் வகையினர் குழந்தை பிறப்பையே விரும்புவதில்லை. அவர்களின் பெற்றோர்கள் அப்படி நினைத்திருந்தால் இவர்கள் பிறந்திருப்பார்களோ? அருட்பணி நிலையில் மேற்கொள்ளும் கன்னிமை அல்லது கற்பு என்ற வார்த்தைப்பாடும் ஒரு வகையான 'செயற்கை கருத்தடை' என்றே பல நேரங்களில் நான் நினைத்திருக்கிறேன். என்னதான் 'எல்லாரும் என் குழந்தைகள்' என்றும் 'எல்லாரையும் அன்பு செய்வதற்காக நான் கற்பு காக்கிறேன்' என்று சொன்னாலும் தனிமையில் இருக்கும் போது 'இயற்கையின் வடிகாலுக்குக் குறுக்கே அணை கட்டுவது போலவும், அது பல நேரங்களில் அறவியல் பிறழ்வுகளாக வெளிப்படுகிறது' என்பதும் தான் கன்னத்தில் அறையும் உண்மை. 'கற்பும்' 'கன்னிமையும்' ஒரு ஸொபிஸ்டிகேடட் சுயநலம்.

இரண்டாவது வகையினர், இதற்கு எதிர்ப்பதம். குழந்தைகள் பிறந்துவிட்டார்கள். அவர்கள் என் சொற்படிதான் கேட்க வேண்டும். நான் டாக்டர் ஆக முடியவில்லை. ஆகையால் என் குழந்தை டாக்டராக வேண்டும். நாம் வாழ்வில் அடைய முடியாத இலக்குகளையெல்லாம் நம் குழந்தைகள் மேல் திணிக்கிறோம். குழந்தைகளை நாம் கொண்டாடுவதில்லை. அவர்கள் கஷ்டத்தில் நாம் இன்பம் காண்கிறோம். 'நான் செய்வதெல்லாம் என் குழந்தைகளுக்காக!' என்று சொல்வதே ஒரு பெரிய சுயநலம்தான். அவர்களுக்காக நான் செய்கிறேன் என்றால் எனக்காக அவர்கள் செய்வார்கள் என்ற எண்ணமும், செய்ய வேண்டும் என்ற எண்ணமும் அங்கே ஒளிந்துதான் இருக்கின்றது. 'இப்படித்தான் ஒருவர் இருக்க வேண்டும் என்று ஒரு பெட்டி செய்து' நாம் அதற்குள் அந்தக் குழந்தையைத் திணிக்க நினைக்கின்றோம். அதில் பல நேரங்களில் குழந்தை மூச்சுத் திணறி விடுகின்றது. உடனே நாம் சொல்வது, 'இன்றைக்குக் கஷ்டப்பட்டால் தான் நாளைக்கு நீ நல்லா இருக்க முடியும்'. இப்படியே ஒவ்வொரு நாளும் கஷ்டப்படுகிறோமே நாம் என்று நல்லா இருக்கப் போகிறோம். எதற்காக நாளைய மகிழ்ச்சிக்காக இன்றைய நாளை விலை பேச வேண்டும். இன்றே நல்லா இருந்துவிட்டுப் போகலாமே. இந்த இரண்டு நிலையும் ஆபத்துதான்.

மணிகண்டன் என்ற எழுத்தாளர் ஒரு நிகழ்வை தன் வலைப்பக்கத்தில எழுதுகிறார்: 'என் வீட்டிற்கு அருகில் ஒரு சிறுவன் இருந்தான். அவன் என் வீட்டிற்கு வரும்போதெல்லாம் சுவற்றில் ஏதாவது கிறுக்கிக் கொண்டேயிருப்பான். எனக்குக் கோபம் வரும். ஒருநாள் அவனை அடித்தும் விட்டேன். இரண்டு வாரங்கள் கழித்து நான் வேலை முடித்து வரும் ஒரு மாலை நேரம் அந்தச் சிறுவனின் வீட்டிற்கு வெளியே ஒரே கூட்டம். என்னவென்று விசாரித்தேன். பள்ளி சென்ற சிறுவனைக் காணவில்லையாம். வீட்டில் ஒரே அழுகைச் சத்தம். காவல்துறையினர் விசாரித்துக் கொண்டிருந்தனர். அந்தச் சிறுவன் கிடைத்துவிடுவான். கிடைத்தவுடன் அவன் கைகள் நிறைய பென்சில்கள் கொடுத்து என் வீடு முழுவதும் கிறுக்கச் சொல்வேன்.'

குழந்தைகளைப் பற்றி கலீல் கிப்ரான் அழகாகக் கூறுவார்:

'உங்கள் குழந்தைகள் உங்கள் குழந்தைகள் அல்லர்.
அவர்கள் உங்கள் வழியாக வருகிறார்கள்.
ஆனால் அவர்கள் உங்களுக்குச் சொந்தமானவர்கள் அல்லர்.
அவர்கள் கடவுளுக்குச் சொந்தமானவர்கள்.
உங்கள் வழியாக வந்தாலும் அவர்கள் உங்களிடமிருந்து வருவதில்லை.
உங்களோடு இருந்தாலும் அவர்கள் உங்களுடையவர்கள் அல்லர்.
உங்கள் அன்பை அவர்களுக்குக் கொடுங்கள். உங்கள் சிந்தனைகளை அல்ல.
ஏனெனில் அவர்களுக்கென்று சிந்தனைகள் உண்டு.
அவர்களின் உடலை நீங்கள் வீட்டில் அடைக்கலாம். அவர்களின் ஆன்மாக்களை அல்ல.
அவர்களின் ஆன்மாக்கள் என்றும் எதிர்காலத்தில் பறக்கும்.
அது அவர்களுக்கு உரியது. அவர்களின் கனவுகளைப் பின்பற்ற உங்களால் முடியாது.
நீங்கள் இறந்தகாலத்தவர்கள்.
அவர்களை உங்கள் காலத்திற்கு இழுக்காதீர்கள்.
முடிந்தால் நீங்கள் அவர்கள் காலத்திற்குச் செல்லுங்கள்.
உங்களைப் போல அவர்களை மாற்றி விடாதீர்கள்.
நீங்கள் வெறும் வில்தான். அவர்கள் அம்புகள். நீங்கள் ஒரே இடத்தில் இருப்பீர்கள்.
அவர்கள் முன்னேறிச் செல்வார்கள்.
எய்தவர்கள் நீங்கள் அல்லர் இறைவன்.
அவருக்குத் தெரியும் அம்பு எங்கு செல்ல வேண்டுமென்று.'

ஒவ்வொரு குழந்தையும் வளராத முதியவர். ஒவ்வொரு முதியவரும் வளர்ந்த குழந்தை. இரண்டு பேரையும் பத்திரமாகப் பார்த்துக்கொள்வோம். எப்போதும் கைகளில் ஏந்திக் கொள்வோம்.

'நீர் ஏற்பாடு செய்துள்ள உமது மீட்பை என் கண்கள் கண்டுகொண்டன!'

இருவர் இருவராக

நாளைய (1 பிப்ரவரி 2018) நற்செய்தி (மாற்கு 6:7-13)

இருவர் இருவராக

இயேசு பன்னிரு திருத்தூதர்களை அனுப்பும் நிகழ்வில் அவர் இருவர் இருவராக திருத்தூதர்களை அனுப்புவது ஏன் என்பது உறுதியிட்டுக்கூற முடியாத ஒன்றாக இருக்கிறது.

இதைப் புரிந்துகொள்ள சபை உரையாளராய் நாம் துணைக்கு அழைத்துக்கொள்வோம்:

'தனிமனிதராய் இருப்பதைவிட இருவராய் இருப்பது மேல். ஏனெனில், அவர்கள் சேர்ந்து உழைப்பதால் அவர்களுக்கு மிகுந்த பயன் கிடைக்கும். ஒருவர் விழுந்தால் அடுத்தவர் அவரைத் தூக்கிவிடுவார். தனிமனிதராய் இருப்பவர் விழுந்தால் அவரது நிலைமை வருந்தத்தக்கதாகும் ... ... தனிமனிதரை வீழ்த்தக்கூடிய எதிரியை இருவரால் எதிர்த்து நிற்க முடியும். முப்புரிக் கயிறு அறுவது கடினம்.' (சஉ 4:9-12)

இன்று நாம் அடுத்தவரோடு இருப்பதைவிட தனிமையாய் இருக்கவே விரும்புகிறோம் என்பது ஏற்றுக்கொள்ள வேண்டிய எதார்த்தம். 'அடுத்தவர் ஓர் நரகம்' என்கிறார் சார்த்தர்.

திருத்தூதுப்பணி செல்லும் இடத்தில் மட்டுமல்ல. மாறாக, செல்லும் வழியில் உள்ள உடனிருப்பிலும் வெளிப்பட வேண்டும் என்பதே இயேசுவின் படிப்பினை. இந்த இருவர் இருவர் தங்கள் ஜோடிகளை தாங்களே தேர்ந்துகொண்டார்களா அல்லது இயேசுவே ஜோடியை அமைத்துக் கொடுத்தாரா? - இந்தக் கேள்விக்கும் விடையில்லை.

இன்று இரண்டு கேள்விகளைக் கேட்போம்:

அ. இருவர் இருவராய் சேர்ந்து செல்லும் போது என்னுடைய இலக்கு இறையரசுப்பணியாக இருக்கிறதா?

ஆ. என்னுடன் உடன்வரும் அடுத்தவரை நான் எப்படி ஏற்றுக்கொள்கிறேன்?