Friday, August 5, 2016

உருமாற்றம்

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் புனேவிற்கு வகுப்பிற்குச் சென்றிருந்தபோது என் நண்பன் ஃபாத்தி, 'ஆறு வருடங்களுக்குப் பின் புனே போயிருக்கிறாய். அங்கே என்ன மாற்றம் இருக்கிறது?' என்று கேட்டான்.

'சாலைகள் எல்லாம் பெரிதாயிருக்கின்றன.
பொண்ணுங்களின் ஆடைகள் எல்லாம் சிறிதாயிருக்கின்றன' என்றேன்.

இன்று காலை திருப்பலிக்காக ஒரு லேடிஸ் ஹாஸ்டலின் உள்ளே சென்றேன்.

வராண்டாவில் மாட்டப்பட்டிருந்த பெரிய கண்ணாடியின் முன் சுடிதார் அணிந்த ஒரு இளவல் சிகை அலங்காரம் செய்து கொண்டிருந்தார்.

ஆறு வருடங்களுக்கு முன் நான் இதே வராண்டாவில் சென்றபோது அன்று சிகை அலங்காரம் செய்து கொண்டிருந்த பெண் வெட்கப்பட்டு (!), 'ஐயோ! ஃபாதர் வர்றார்!' என்று சொல்லிக்கொண்டே டார்மிடரிக்குள் ஓடியது நினைவிற்கு வந்தது.

ஆனால் இந்த அதிகாலை இளவல் ஓடவில்லை. அப்படியே சீப்புடன் தலையைச் சாய்த்து ஓரக்கண்ணால் ஒரு பார்வை உதித்துவிட்டு, தன் சிகை அலங்காரத்தைத் தொடர்ந்தார்.

ஆறு ஆண்டுகளில் நிறைய மாற்றங்கள் இங்கே நடந்தேறியிருக்கின்றன என்பதற்கு இந்த ஒரு சான்று போதும்.

நிற்க.

நாளை ஆண்டவரின் உருமாற்ற அல்லது தோற்ற மாற்றப் பெருவிழாவைக் கொண்டாடுகிறோம்.

இந்த நாளில் ஆண்டவரின் முகம் அல்லது தோற்றம் மாறவில்லை.

ஒருவேளை மாறியிருக்கலாம்.

தன் முகத்தை அல்லது தோற்றத்தை மாற்றிக் காட்டும் மாயவித்தைக்காரர் அல்ல இயேசு.

இந்த நாளில் சீடர்களின் புரிதல்தான் மாறுகிறது.

ஆக, மாற்றம் என்பது நாம் எப்படி மற்றவர்களைப் பார்க்கிறோம் என்பதிலும் இருக்கிறது.

புனே சாலையின் இளவலோ,

சிகை அலங்கார இளவலோ,

அவர்களில் மாற்றம் இருந்தாலும்

நான் பார்க்கும் பார்வையிலும் மாற்றம் இருக்கிறது.

ஆக, இயேசுவின் தோற்ற மாற்றம் அவரின் மாற்றம் மட்டும் அல்ல. சீடர்களின் மாற்றமும்கூட.

1 comment:

  1. பொதுவாக இந்த ஆண்களுக்கு ஒரு எண்ணம்.அவர்கள் மாற வேண்டும்; அவர்களைச் சுற்றியுள்ளவை மாற வேண்டும்.ஆனால் இந்தப் பொண்ணுங்க மட்டும் பழைய பஞ்சாங்கங்களாகவே இருக்க வேண்டும்.ஃ பாதர் தாங்களும் அன்றைய மாதிரி 'அந்த'அழகான அங்கியில் இருந்திருந்தால் ஒருவேளை அந்த இளவலும் வெட்கப்பட்டு ஓடியிருக்கலாம்.ஆனால் தங்களின் இன்றையத் தோற்றம் அவளை 'நம்ம ஃபாதர் தானே' என நினைக்க வைத்திருக்கலாம்.ஆக, யார் மீதும் தப்பில்லை.ஒன்று வளையும் போது அது தன்னுடன் இணைந்தவற்றையும் சேர்த்தே வளைக்கிறது.இது காலத்தின் கட்டாயம்.இதைத்தான் தங்களின் விவிலிய அறிவு " அடுத்தவரின் நடையுடையில் மாற்றம் இருப்பினும், நான் பார்க்கும் பார்வையிலும் மாற்றம் இருக்கிறது" எனக் கூறுகிறது.யார் கண்டது? ஒரு பெண்ணைக் கண்டதும் தாங்களே நாணி ஓடும் நாளும் கூட வரலாம்.கோபம் வேண்டாம் தந்தையே! இதற்குப் பெயர் தான் மாற்றம்... இன்றையப் பொழுது இனிதாக வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete